Advertisment

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை; இது ஊரறிந்த உண்மை! - பூவை செங்குட்டுவன் விடைபெற்றார்!

poovai

ந்தச் சிறுவனின் பெயர் முருகவேல் காந்தி. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி எனும் கிராமத்தில் பிறந்த அந்தச் சிறுவனுக்குத் தமிழின் மீது மிகுந்த பற்றும், கவிதை எழுதுவதில் அளவிலா ஆர்வமும் உண்டானது. 

Advertisment

      எங்கிருந்தோ கேட்கும் ஓர் இசையை அப்படியே காதில் வாங்கிக்கொண்டு, மெல்ல அதை மனசுக்குள்ளேயே முணுமுணுப்பான். பின்னர் அப்படியே அந்த இசைக்கு இயைந்த பாடல் வரிகளாக எழுதும் ஆற்றல் அந்தச் சிறுவனுக்கு இளமையிலேயே இருந்தது.

Advertisment

      இளைஞனாக இருந்த காலத்தில் ‘சேரன் செங்குட்டுவன்’ எனும் வரலாற்று நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகம் தந்த தாக்கத்தினால் தனது பெயரைச் செங்குட்டுவனாக்கிக் கொண்டதோடு, தனது ஊரின் மீது கொண்ட நேசத்தின் பொருட்டு அதனையும் சேர்த்து ‘பூவை செங்குட்டுவன்’ எனும் பெயரில் திரைப்பாடல் எழுதும் ஆர்வத்தில் சென்னைக்குப் பயணமானார்.  

      இளம் வயது முதலே கவிஞருக்கு நெருக்கமான நண்பராகயிருந்த வயலின் இசைக் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதனைச் சென்று சந்தித்தார். இளவயதிலேயே பகுத்தறிவுக் கொள்கைகளின் மீது பற்றுக்கொண்ட கவிஞரான பூவை செங்குட்டுவனை, பக்திப் பாடல்களை எழுதித் தருமாறு குன்னக்குடி வைத்தியநாதன் கேட்டார். குன்னக்குடியாரின் மீதான அன்பாலும், அவருடனான நட்பின் காரணமாகவும் மறுக்க மனமின்றி, பக்திப் பாடல்களை எழுதிக்கொடுத்தார் கவிஞர். மேலும், கவிஞரை, கதை -வசனத்தோடு, பாடல்களையும் எழுத வைத்து, பல நாடகங்களை தயாரித்து இசையமைத்து இயக்கினார் குன்னக்குடி வைத்தியநாதன்.

      தொடக்கக் காலத்தில் திரைப்படப் பாடல் வாய்ப்புகள் ஏதும் பூவை செங்குட்டுவனுக்குக் கிட்டவில்லை. குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் பூவை செங்குட்டுவன் எழுதிய பக்திப் பாடல்கள், பல ஒலிநாடாக்களாக வெளிவந்தன. ஒருகட்டத்தில் மனம் உடைந்துபோன கவிஞர், தானெழுதிய நாடகங்கள், பாடல்களைத் தீயிட்டுக் கொளுத்தும் செயலில் ஈடுபடப் போனார். 

      அச்சமயத்தில் ஒருவர் வந்து, "கவிஞர் செங்குட்டுவனா நீங்கள்? உடனே உங்களை கல்யாணம் ஐயர் அழைத்துவரச் சொன்னார்" என்று அழைத்துக்கொண்டு போனார். அங்கே, "கவிஞரே! நீங்கள் எங்களுக்காக எழுதித் தந்த எட்டு நாடகங்களையும் ரிக்க

ந்தச் சிறுவனின் பெயர் முருகவேல் காந்தி. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி எனும் கிராமத்தில் பிறந்த அந்தச் சிறுவனுக்குத் தமிழின் மீது மிகுந்த பற்றும், கவிதை எழுதுவதில் அளவிலா ஆர்வமும் உண்டானது. 

Advertisment

      எங்கிருந்தோ கேட்கும் ஓர் இசையை அப்படியே காதில் வாங்கிக்கொண்டு, மெல்ல அதை மனசுக்குள்ளேயே முணுமுணுப்பான். பின்னர் அப்படியே அந்த இசைக்கு இயைந்த பாடல் வரிகளாக எழுதும் ஆற்றல் அந்தச் சிறுவனுக்கு இளமையிலேயே இருந்தது.

Advertisment

      இளைஞனாக இருந்த காலத்தில் ‘சேரன் செங்குட்டுவன்’ எனும் வரலாற்று நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகம் தந்த தாக்கத்தினால் தனது பெயரைச் செங்குட்டுவனாக்கிக் கொண்டதோடு, தனது ஊரின் மீது கொண்ட நேசத்தின் பொருட்டு அதனையும் சேர்த்து ‘பூவை செங்குட்டுவன்’ எனும் பெயரில் திரைப்பாடல் எழுதும் ஆர்வத்தில் சென்னைக்குப் பயணமானார்.  

      இளம் வயது முதலே கவிஞருக்கு நெருக்கமான நண்பராகயிருந்த வயலின் இசைக் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதனைச் சென்று சந்தித்தார். இளவயதிலேயே பகுத்தறிவுக் கொள்கைகளின் மீது பற்றுக்கொண்ட கவிஞரான பூவை செங்குட்டுவனை, பக்திப் பாடல்களை எழுதித் தருமாறு குன்னக்குடி வைத்தியநாதன் கேட்டார். குன்னக்குடியாரின் மீதான அன்பாலும், அவருடனான நட்பின் காரணமாகவும் மறுக்க மனமின்றி, பக்திப் பாடல்களை எழுதிக்கொடுத்தார் கவிஞர். மேலும், கவிஞரை, கதை -வசனத்தோடு, பாடல்களையும் எழுத வைத்து, பல நாடகங்களை தயாரித்து இசையமைத்து இயக்கினார் குன்னக்குடி வைத்தியநாதன்.

      தொடக்கக் காலத்தில் திரைப்படப் பாடல் வாய்ப்புகள் ஏதும் பூவை செங்குட்டுவனுக்குக் கிட்டவில்லை. குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் பூவை செங்குட்டுவன் எழுதிய பக்திப் பாடல்கள், பல ஒலிநாடாக்களாக வெளிவந்தன. ஒருகட்டத்தில் மனம் உடைந்துபோன கவிஞர், தானெழுதிய நாடகங்கள், பாடல்களைத் தீயிட்டுக் கொளுத்தும் செயலில் ஈடுபடப் போனார். 

      அச்சமயத்தில் ஒருவர் வந்து, "கவிஞர் செங்குட்டுவனா நீங்கள்? உடனே உங்களை கல்யாணம் ஐயர் அழைத்துவரச் சொன்னார்" என்று அழைத்துக்கொண்டு போனார். அங்கே, "கவிஞரே! நீங்கள் எங்களுக்காக எழுதித் தந்த எட்டு நாடகங்களையும் ரிக்கார்டிங் செய்துவிட்டோம்" என்று கூறியதோடு, கவிஞரின் கையில் அதற்கான சன்மானத்தையும் கொடுத்தார் கல்யாணம் ஐயர். இச்சம்பவம் கவிஞரது வாழ்வில் பெரியதொரு திருப்புமுனையாக அமைந்தது.

      கவிஞரது தொடர் முயற்சியின் விளைவாக, 1966-இல் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் ஜெய்சங்கர், ஜெ.ஜெயலலிதா நடித்த ‘கௌரி கல்யாணம்’ எனும் திரைப்படத்தில் தான் முதல் பாடல் எழுதும் வாய்ப்பு கிட்டியது. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தனது முதல் திரைப்பாடலை எழுதிய போது கவிஞருக்கு வயது 25.

      திராவிட இயக்கச் சிந்தனைகளையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் தனக்கான வழிகாட்டிகளாக வரித்துக்கொண்ட பூவை செங்குட்டுவன், ஒலிநாடாக்களில் ஏராளமான பக்திப் பாடல்களை எழுதினார். அதனாலேயே அவருக்குத் திரைப்படத்தில் எழுத வாய்த்த முதல் பாடலே, ‘திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்…’ எனும் பக்திப் பாடலாகும்.

      முதல் பாடலே, ‘யாரிந்த கவிஞர்?’ என்று கேட்க வைத்தாலும், பாடல் வாய்ப்புகள் பெரிதாக ஏதும் கிடைக்காத நிலையே தொடர்ந்தது.

      1967-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசனின் மூத்த சகோதாரர் ஏ.எல்.சீனிவாசன், ‘கந்தன் கருணை’ எனும் படத்தினைத் தயாரித்துக்கொண்டிருந்தார். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், அன்றைய முன்னணி நடிகர்களாக விளங்கிய சிவாஜிகணேசன், சிவகுமார், ஜெமினி கணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா, ஜெ.ஜெயலலிதா எனும் நட்சத்திரப் பட்டாளமே அப்படத்தில் நடித்தார்கள்.

      திரையுலகில் கவியரசர் கண்ணதாசன் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது. ‘கந்தன் கருணை’ படத்திற்கான பாடல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசர் கண்ணதாசன் மூவரும் சென்றிருந்தனர்.

      அந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் சூலமங்கலம் சகோதரிகள், “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்…” எனும் பாடலை இறைவணக்கப் பாடலாகப் பாடினர். அந்தப் பாடலை ஏ.பி.நாகராஜன், ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ?ஆகிய மூவருமே மிகவும் ரசித்துக் கேட்டனர். பிறகு, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், “இதே மாதிரி ஒரு பக்திப் பாடல் நம் படத்திலும் நீங்கள் எழுதவேண்டும்…” எனும் கோரிக்கையைக் கவியரசரிடம் வைத்தார்.

      “இந்தப் பாடலே நன்றாக இருக்கிறதே..! இதையே பயன்படுத்திக் கொள்ளலாமே..!” என்று கவியரசர் சொல்லவே, அந்தப் பாடலே இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இசையில் ‘கந்தன் கருணை’ படத்தில் இடம்பெற்று, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தது. 

அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பூவை செங்குட்டுவன்.

      படமும் வெற்றிப்படமாக அமையவே, “நானே எழுதியிருந்தால்கூட பாடல் இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா என்று தெரியாது. 

அந்தளவுக்கு இந்தப் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது” என்று பின்னாளில் கவியரசர் கண்ணதாசனே மனம்விட்டுப் பாராட்டிய பாடலாசிரியராகத் திரையுலகை வலம்வந்தார் பூவை செங்குட்டுவன்.

     “படத்தில் பக்திப் பாடல் வேண்டுமா… உடனே கூப்பிடு கவிஞர் பூவை செங்குட்டுவனை…” என்று சொல்லுமளவுக்கு மிகச் சிறப்பான பக்திப் பாடல்களை எழுதும் கவிஞராக அறியப்பட்டார்.

   எப்போதும் நெற்றியில் திருநீறுடன் காணப்பட்டாலும், சமூகச் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் பகுத்தறிவுப் பாடல்களையும், தத்துவப் பாடல்களையும் எழுதியவராகவே அறியப்பட்டார் பூவை செங்குட்டுவன்.

     ‘வணங்கிடும் கைகளின் வடிவத்தை…’ (கற்பூரம் - 1967), ‘இறைவன் படைத்த உலகை…’ (வா ராஜா வா - 1969), ‘குருவாயூரப்பா திருவருள் தருவாய்…’ (திருமலை தென்குமரி - 1970), ‘ஏடு தந்தானடி தில்லையிலே…’ (ராஜ ராஜ சோழன் - 1973), ‘முத்தமிழில் பாட வந்தேன், முருகனையே வணங்கி நின்றேன்…’ (மேல்நாட்டு மருமகள் - 1975) என பல புகழ்பெற்ற பக்திப் பாடல்களை எழுதினார்.

     ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை…’ (புதிய பூமி - 1968), ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல்மிக்க மந்திரமில்லை…’ (அகத்தியர் - 1972), ‘காலம் நமக்குத் தோழன், காற்றும் மழையும் நண்பன்…’ (பெத்த மனம் பித்து - 1973), ‘காலம் செய்யும் விளையாட்டு, இது கண்ணாமூச்சி விளையாட்டு…’ (குமாஸ்தாவின் மகள் - 1974) என சமூகச் சிந்தனைகளையும், தத்துவங்களையும் உள்ளடக்கிய பாடல்களையும் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார்.

     1967-இல் தொடங்கிய கவிஞரது திரைப்படப் பாடல் பயணமானது, 1990 வரையிலும் ஓடும் ஆற்றின் தடையில்லா போக்கினைப்போல நிதானமாகவும் தெளிவாகவும் தொடர்ந்தது.

     ஒலிநாடாக்கலில் தனிப் பாடல்களாகவும், திரையிசைப் பாடல்களாகவும் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களை இலக்கிய நயத்தோடும், கவித்துவ அழகோடும் எழுதிய பெருமைக்குச் சொந்தக்காரர் பூவை செங்குட்டுவன்.

     1969-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று காலை 9.32 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரிலிருந்து அப்போலோ 11 எனும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நான்கே நாளில் அந்த விண்கலம் நிலவைச் சென்றடைந்தது. ஜூலை 20 அன்று விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங், விண்ணில் கால் பதித்தார். உலகமே கொண்டாடிய அந்நாளில், கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய ‘நாலும் தெரிந்தவன் நிலவுக்கே போகலாம்…’ எனும் பாடலை, இலங்கை வானொலி அன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து ஒலிபரப்பியது ஒரு சிறப்புக்குரிய நிகழ்வாகும்.

     ஒரு பாடலாசிரியராகப் பூவை செங்குட்டுவனுக்குப் பல சிறப்புகள் உண்டென்றாலும் தமிழகத்தின் ஐந்து முதல்வர்களது திரைப்படம், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்குப் பாடல்களை எழுதியவர் என்பது வேறு எவருக்குமில்லாத தனிச் சிறப்பாகும்.

    1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றது. பேரறிஞர் அண்ணா, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அண்ணா பொறுப்பேற்றதும் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, “அறிஞர் அண்ணா ஆட்சிதானிது…” எனும் பாடல் ஒலித்தது, பொதுக்கூட்டம் முடிவுபெற்றதும் அதே பாடல் மறுபடியும் ஒலித்தது. அப்பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன். 

    முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதிக்காக,”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும்…” என தி.மு.க. மேடைகள்தோறும் இன்றைக்கும் முழங்கிவரும் பாடலையும், ‘புதிய பூமி’ (1968) படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை; இது ஊரறிந்த உண்மை…’ எனும் பாடலையும் எழுதியவரும் நம் கவிஞரே.

     மேனாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா நடித்த ‘கௌரி கல்யாணம்’ படத்தில், ஜெயலலிதா பாடுவதுபோல் இடம்பெற்ற ‘திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்…’ பாடலையும் எழுதினார். இன்றைக்குத் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடித்த பல நாடகங்களுக்கான பாடல்களையும் எழுதியுள்ளார் கவிஞர் பூவை செங்குட்டுவன்.

     திரைப்பாடல்கள், நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் என பலவற்றிற்கும் பாடல்களை எழுதிய கவிஞர், கல்யாண கனவுகள், இதய தாகம், வெற்றித்திருமகள் ஆகிய படங்களுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      ’உலகப் பொதுமறை’யாக விளங்கும் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் எளிய நடையில் இசைப்பாடலாக எழுதி, மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு அனுப்பி வைத்தார் பூவை செங்குட்டுவன். அதனைப் பாராட்டி ஒரு கடிதமும் எழுதினார் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம். பின்னர் இசைஞானி இளையராஜா, ‘குறள் தரும் பொருள்’ எனும் தலைப்பில் அவற்றை இசைப்பேழையாக்கி வெளியிட்டார்.

   சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கான பாராட்டு விழாவில், தனது உடல் நலன் சரியில்லாத போதும், ஆர்வத்துடன் பங்கேற்ற கவிஞர், அந்த விழாவிலேயே ‘வாழ்க்கை எனும் நேர்கோடு’ எனும் தனது நூலையும் வெளியிட்டார்.

      கவிஞர் பூவை செங்குட்டுவனின் கவித்திறனைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் கலைமாமணி விருது (1980), மகாகவி பாரதியார் விருது (2020) ஆகிய விருதுகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

     கவிஞர் பூவை செங்குட்டுவனின் மனைவி முன்னரே காலமாகிவிட்டார். மனைவியின் தங்கையின் கணவர்தான் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் என்பதும், அவர்களது மகன்களே நடிகர் உதயா மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் என்பதும் பலரும் அறிந்திராதது. தனது இரு மகன்களான பூவை தயா, இரவிச்சந்திரன், மகள்கள் விஜயலட்சுமி, கலைச்செல்வி மற்றும் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன், தனது 90-ஆவது அகவையில் கடந்த செப்டம்பர் 5 அன்று மாலை, நம்மிடமிருந்து விடைபெற்றார்.

     காற்றின் மீதேறிப் பயணிக்கும் திரைப்பாடல்களில் கவிஞர் பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளும் என்றென்றுமாக அவரது பெயரைச் சொல்லியபடி ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe