நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம், கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவி வேட்டி, தோளில் காவித்துண்டு, வெள்ளைச் சட்டை தோற்றத்துடன் சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னை அலுவலகத்திற்கு நாடியில் பலன் கேட்க வந்திருந்தார். அவரை அமரச் சொன்னேன். அவர் "நமச்சிவாயம்' என்று ஈசன் நாமத்தைக் கூறியவாறு அமர்ந்தார்.

Advertisment

அவரிடம் நான் எதுவும் கேட்காமலேயே அவர் தன்னைப் பற்றிய விவரங்களையும், "எதற்காக நாடியில் பலனறிய வந்துள்ளேன்' என்று கூறத் தொடங்கினார்.

Advertisment

"ஐயா, எனது வம்ச முன்னோர்கள், பரம்பரை பரம்பரையாக ஜோதிடத் தொழில் செய்து வாழ்ந்தார்கள். 

இப்போது நானும் ஜோதிட தொழில் செய்துவருகின்றேன். என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு பலன்கூறி, பரிகாரங்களும் செய்து வைப்பேன். மேலும், நான் ஒரு சிவ உபாசகன். இதுவரை லட்சத்திற்குமேல் "ருத்ரம்' ஜெபித்துள்ளேன். எனது மகள் திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது. அவளுக்கு முப்பத்தாறு வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. அவளின் திருமணத் தடைக்கு காரணத்தையும் திருமணம் நடக்க வழி கேட்டுதான் அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

"ஐயா, தங்கள் தோற்றமே நீங்கள் சிவபக்தர் என்று காட்டுகின்றது.  மேலும் சிவ உபாசகர் என்று கூறுகின்றீர்கள். ஜோதிடராக தொழில் செய்து வருகின்றேன், என்றும் கூறுகின்றீர்கள். உங்கள் மகள் ஜாதகம்மூலம், அவள் திருமணத் தடைக்கு காரணம் அறிந்து, பரிகாரங்களைச் செய்து அவள் திருமணத் தடை விலகி திருமணம் நடைபெற முயற்சி செய்தீர்களா?'' என்றேன்.

மகளின் ஜாதகத்தை வேத ஜோதிட முறையில் கணித்துப் பலன் பார்த்து தடைக்கான கிரக அமைப்புகளை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தேன். மேலும் பல பெரிய ஜோதிடர்களிடம் மகளின் ஜாதகத்தை கொடுத்து பார்த்து அவர்கள் கூறும் பரிகார பூஜைகளையும் செய்தேன். ஆனால் செய்த பரிகாரங்களால் எந்தப் பலனும் இல்லை. திருமணமும் நடைபெறவில்லை.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். 

ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

 இவன் மகள் தன் முற்பிறவியில் கட்டிய கணவனுக்கு செய்த துரோகம் இப்பிறவியில், தாமதத்தை தந்துவருகின்றது. இவளை மணம் புரிந்த கணவன் இவளுக்கு விட்ட சாபம், கல்யாணத்தை தடை செய்கின்றது, இவளின் முற்பிறவியில் கணவனுக்குச் செய்த பாவத்தைக் கூறுகிறேன் அறிந்துகொள்.

முன்னோர்கள் காலத்தில், இவன் தந்தையின் வம்சத்தில் பாட்டனுக்கு பிறந்த ஒரு பெண், அதாவது இவன் தந்தையின் அத்தை. அவளை தங்கள் உறவிலேயே ஒருவனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். அவன் நல்ல உழைப்பாளி. 

ஆனாலும் அப்பாவி, கபடு, சூது, வாது இல்லாத நல்லவன். ஆனால் அவளோ, அகங்காரம், ஆணவம், அலட்சிய குணம் கொண்டவள்.

அவளின் திருமணத்திற்குப்பின்பு கணவனை அவள் மதிப்பதில்லை அவன் வீட்டில் சென்று, அவனுடன் சேர்ந்துவாழ மறுத்துவிட்டாள். அதனால் அவன் இவள் வீட்டிலேயே வந்து வசிக்கத் தொடங்கினான். வீட்டிற்கு மாப்பிள்ளையாக வந்துவிட்டான்.

கணவனுக்கு ஒரு மனைவி தரக்கூடிய பாசம், அன்பு, சந்தோஷம் என எதையும் அவனுக்கு தரவில்லை. அவனை ஒரு அடிமைபோல் நினைத்து செயல்பட்டு வாழ்ந்தாள். இவள் கணவன்மீது பாராமுகமாக இருப்பதை அறிந்து, இவளின் தாய்- தந்தையர் அறிவுரை, கூறி ஒரு மனைவி கணவனிடம் எவ்வாறு வாழ்ந்து குடும்ப நிர்வாகம் செய்யவேண்டும் என்ற வழிமுறைகளையும், அறிவுரைகளையும் கூறி கண்டிக்கவில்லை, இவளை திருந்தச் சொல்லவும் இல்லை. தான் விரும்பியதைச் செய்து, தன் விருப்பம் போல் வாழ்ந்தாள்.

இவளை மணம்புரிந்த கணவன், மனைவியால் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல், மரியாதையின்றி வாழ்ந்து இறந்தான். அவன் வாழ்க்கை அர்த்தமில்லாததாக முடிந்தது.  அவன் மனம் நொந்து, வெந்து சாபமிட்டான்.  இந்த பிறவியில் மனைவியின் அன்பு, பாசம் கிடைக்காமல் ஒரு துறவிபோல் வாழ்ந்து, என் வாழ்க்கையை அழித்த இவள், இனி அடுத்து அவள் பிறக்கும் பிறவிகளில், ஒரு ஆண் மகனை மணந்து, ஒரு குடும்பத்தின் தலைவியாக, வாழக்கூடாது,   இவள் கன்னியாகவே, ஆண் சுகமின்றி, சந்நியாசிபோல் வாழ்ந்து இந்த பிறவியில் எனக்கு செய்த பாவத்திற்கு தண்டனையாக அனுபவித்து தீர்க்க வேண்டும் என்று சாபமிட்டு இறந்தான்.

முற்பிறவியில் சுகமும், மரியாதையும் அடையமுடியாத கணவன் விட்ட சாபம், இவன் மகளுக்கு தொடர்ந்து. இந்த பிறவியில் கணவனின் பாசமும், அன்பும் அடைய விடாமல் திருமணத்தடையைத் தந்துவருகிறது. இந்த பிறவியில் சாபத்தின் பிடியில் சிக்கி, அனுபவித்து, வாழவேண்டும் என்பது இவள் விதிப் பலன்.

முற்பிறவியில் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்விட்ட சாபத்தை தடுக்க நிவர்த்தி, பிரார்த்தனை வழிமுறைகள் உண்டு.  ஆனால் மனைவியின் அலட்சியம், அகங்காரம், ஆனவத்தால், துரோக செயல்களால் பாதிக்கப்பட்ட கணவன்- மனைவிக்கு விட்ட சாபத்தை தடுக்க நிவர்த்தி முறைகள் கிடையாது.

இவன் தன்னை ஜோதிடன் எனக் கூறுகின்றான். 

தன் மகளுக்கு தோஷம் நீங்க பரிகாரம் செய்தும் பலனில்லை என்கின்றான்.  இவன் எதையாவது செய்து மகளுக்கு ஒரு ஆணுடன் திருமணம் செய்துவைத்தாலும், இவளை கட்டிய கணவனுக்கு ஆண்மை குறைவு, நோய் தாக்கம் உண்டாகி, உழைத்து சம்பாதித்து உடல் பலம் இல்லாது போவான். அவன் நோயாளியாவான். இவள் அவனுக்கு பணிவிடை செய்து ஒரு தாதிபோல் வாழ்வாள், அவனுக்கு அற்பாயுள் உண்டாகும். 

இவள் சுமங்கலியாக மரணம் அடையமுடியாது.  ஒரு கன்னியாக வாழ்ந்து கர்மவினையைத் தீர்த்து முடிப்பாள் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

இல்வாழ்க்கையில் கணவன்- மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பாசம், அன்புகொண்டு, மதித்து குடும்பத்தில் அமைதி நிலவும்படி வாழ்ந்தால், வம்ச வாரிசுகளுக்கு எந்தவிதமான பாதிப்பையும் தராமல் நல்ல வாழ்க்கையைத் தரும் என்பதையும், கணவன்- மனைவி இருவரும் யார்? பெரியவர் என்ற எண்ணத்தில் அகங்காரம், ஆணவம், அலட்சிய போக்குடன் வாழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் நொந்து பேசும் பேச்சு, வார்த்தைகள் வலிமைபெற்று, வம்சவாரிசுகளின் வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை நானும் புரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267