ஒரு ஜோதிடரை சந்திக்கும் பலர் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் இந்த ஐந்து விஷயங்களை கேட்காமல் செல்வது இல்லை. பூர்வஜென்ம புண்ணிய பலப்படி ஒரு ஜாதகரின் வாழ்வில் நடைபெறவேண்டிய அனைத்து சம்பவங்களும் 5-ஆம் பாவகத்தில்தான் பதிவாகி இருக்கும். சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பது நிதர்சனமான உண்மை. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப்போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. அந்த விட்டுப்போன சம்பவங்களை தொடரும்போது புதிய சம்பவங்கள் பதிவாகும். அந்த சம்பவங்களில் மேலே கூறிய இந்த ஐந்து விஷயங்களும் ஒரு ஜாதகரின் வாழ்வில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. நான் பூர்விகத்தில் வாழ்வேனா, எனக்கு பூர்வீகம் தெரியாது, என்னுடைய குலதெய்வம் என்ன? எனக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? எனக்கு என்ன குழந்தை பிறக்கும்? எனக்கும் என் குழந்தைக்குள்ள தொடர்பு எப்படியிருக்கும்? நான் காதல் திருமணம் செய்வேனா? பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் செய்வேனா.
இதுவே ஒருவரின் பிரதானமான கேள்வியாக இருக்கும். நான் ஏற்கெனவே நமது "பாலஜோதிட'த்தில் ஐந்தாம் பாவகம் பற்றி இரண்டுமுறை கட்டுரை எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் சந்திக்கும் வாடிக்கை யாளர்களின் கருத்துக்களை மனதில் பதிவுசெய்து புதுப்பொலிவுடன் இந்த கட்டுரையை மீண்டும் எழுதுகிறேன்.
ஒரு பாவக அதிபதி எந்த பாவத்தில் நிற்கிறாரோ- எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறார்களோ அது தொடர்பான பலன்களே ஜாதகருக்கு நடக்கும்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் நிற்கும் கிரகங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஐந்தாம் அதிபதியுடன் அசுப கிரகங்கள் இருந்தாலும் 50 சதவிகிதம் நன்மை நிச்சயமாக உண்டு. அந்தவகையில் ஐந்தாம் அதிபதி- அதாவது பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி 12 பாவகங்களில் நிற்பதால் உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.
ஐந்தாம் அதிபதி ஒன்றாம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது வலுவான பூர்வஜென்ம தொடர்புண்டு. சென்ற ஜென்மத்தில் அனுபவித்த அனைத்து நற்பலன்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கௌரவம் உண்டு. தற்பெருமை பேசுவார்கள். கடந்துவந்த ஜென்மத்தின் வாசனை அவர்கள் ஆழ் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
உள்ளுணர்வு நிரம்பியர்கள். தனது உள்ளுணர்வால் நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் முன்னரே அறியும் சக்தி படைத்தவர் கள். தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல பிறரின் வாழ்க்கைக்கும் நடப்பதை- நடக்கப்போவதை முன் கூட்டியே அறிந்து சொல்வார்கள். பூர்வீகத்தில் பிறந்து பூர்விகத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றவர்கள். குலகௌரவம் நிரம்பியவர்கள். தனது குலத்தை கட்டிகாப்பதிலும் குல கௌரவத்தை நிலை நிறுத்துவதிலும் ஆர்வமிருக்கும்.
எந்த சூழ்நிலையிலும் தன்னைச் சார்ந்தவர்களை உயர்த்துவதில் ஆர்வ மிருக்கும். தனது குழந்தைகளுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணிப் பார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தனைகளும் மிகைப்படுத்தலாக இருக்கும். எந்தப் பிரச்சினை வந்தாலும் பூர்வீகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற எண்ணம் கூடுதலாக உள்ளவர்கள். ஆண் வாரிசு கிடைக்கும்வரை சிலர் குழந்தை பெற்றுக்கொண்டே இருப்பார்கள். ஆண் வாரிசை நினைத்து மனம் ஏங்கிக்கொண்டே இருக்கும். பாரம்பரியத்தை கட்டிக் காப்பதில் வல்லவர்கள். பூர்வீக சொத்து நிரம்பியவர்கள். வம்சாவழியாக பூர்வீக சொத்தை பராமரிப்பார்கள். எளிதில் பூர்வீக சொத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதிர்ஷ்டத்தை இவர்கள் தேடிச் செல்ல வேண்டியது இல்லை. அதிர்ஷ்டம் இவர்களை தேடிவரும்.
இவர்கள் காதலில் கௌரவம் நிரம்பி இருக்கும். அதிகப்படியாக உறவுகளிலேயே திருமணம் நடக்கும். ஐந்தாம் அதிபதி இரண்டில் இருப்பது மிக உன்னதமான அமைப்பாகும்.
பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் வல்லவர்களாக இருப்பார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், புரோகிதம், ஜோதிடம், மார்க்கெட்டிங், கன்சல்டிங் நிறுவனம் இவற்றின்மூலமாக வாழ்வாதாரம் உண்டாகும். குல தெய்வம் இவர்களின் நாக்கில் வந்து குறிசொல்லும். சிலர் வாக்கு சொல்லி பிழைப்பார்கள்.
முதல் குழந்தை பிறந்த பிறகு இவர்களுக்கு வருமானம் உயரும். சிறிய உழைப்பில் மிகப்பெரிய அதிர்ஷ்ட வருமானம் உண்டு.
குடும்பத்துடன் இணைந்து குலத்தொழிலை செய்வார்கள்.நல்ல தரமான வார்த்தைகளை உபயோகம் செய்வார்கள். மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் பேசமாட்டார்கள்
சித்தப்பா, பெரியப்பா, அங்காளி, மாமன், மச்சான் என்று கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் இருப்பார்கள். குடும்ப உறவுகள் ஒருவருடன் ஒருவர் அக்கறையாக ஆதரவாக இருப்பார்கள். பூர்வீகத்திலேயே தொழில் செய்வார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழியில் வருமானம் உண்டு.
அடிப்படைக்கல்வி முதல் பட்டப்படிப்பு முடிக்கும்வரை கல்வியில் தனக்கென்று தனி முத்திரை பதிப்பார்கள். கற்ற கல்விக்கு தகுந்த தொழில், உத்தியோகம் உண்டு. பூர்வீக சொத்து மூலமாகவும் முன்னோர்கள் சேர்த்துவைத்த பொருட்கள் மூலமாகவும் வருமானம் அமையும். குடும்ப நகைகள் பூர்வீக, நகைகள் இவர்களிடம் அதிகப்படியாக இருக்கும். பழமைவாய்ந்த ஆடைகள், அணிகலன்கள் இவர்கள் குடும்பத்தில் முறையாகப் பாகப் பிரிவினை செய்யப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும். அந்திம காலத்தில் பிள்ளைகளின் உதவியுடன் பிள்ளைகளின் ஆதரவுடன் வாழ்வார்கள். உரிய வயதில் திருமணம் நடந்து பருவ வயதில் பிள்ளை பேறு உண்டாகும். குடும்பச் சொத்து, பரம்பரைச் சொத்து வெளியில் செல்லக்கூடாது என்ற காரணத்தினால் உறவு களிலேயே திருமணம் செய்துகொள்வார்கள். காதல் நிச்சயம் வெற்றியில் முடியும்.
ஐந்தாம் அதிபதி மூன்றில் இருந்தால் பூர்வீகத்திற்கு மிக அருகில் வசிப்பார்கள். பூர்வீகம் அடிக்கடி சென்றுவரும் தூரத்தில் இருக்கும். தொழில், உத்தியோகத்திற்காக காலையில் சொந்த ஊரைவிட்டு பக்கத்து ஊருக்கு கிளம்பி செல்வார்கள். மாலையில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள். வெளியூர் சென்றவர்கள் அந்திம காலத்தில் வயோதிகத்தில் பூர்வீகத்தில் செட்டிலாவார்கள்.
குலதெய்வம் இவர்களின் வீட்டிற்கு அருகிலேயே பூர்வீகத்தில் இருக்கும். ஆனாலும் சிலர் உறவினர்களின் குலதெய்வத்தையும் சேர்த்து கும்பிடுவார்கள். சிலர் பிடி மண் எடுத்து தமக்கென்று சொந்தமாக குலதெய்வக் கோவிலை அமைத்துக்கொள்வார்கள். இவர்களின் உழைப்பின் வருமானத்தில் வரும் பெருந்தொகை உடன்பிறந்தவர்களின் குடும்பத்திற்கு பயன்படும். அடிமைத் தொழிலை விரும்ப மாட்டார்கள் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலில் ஆர்வம் அதிகமுண்டு. ஹ்ர்ன்ற்ன்க்ஷங் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள்மூலமாக தங்கள் கலாச்சாரத்தை உலகிற்கு தெரிவிப்பார்கள். பங்குச்சந்தை ஆர்வம் அதிகமுண்டு. நல்ல ஆதாயம் தரக்கூடிய பங்குகளில் குறுகியகால முதலீடுசெய்து லாபம் கிடைத்தபிறகு விலை ஏறியவுடன் விற்றுவிடுவார்கள். வைத்தியம் செய்தபிறகு அவர்களுக்கு குழந்தை பிறக்கும். ஆண்- பெண் இருவருக்கும் வம்சத்தை உருவாக்கு வதில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்திற்கு முறையான ஆவணங்கள் இருக்கும்.
முறையான பாகப்பிரிவினை இருக்கும். நல்ல ஞாபக சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். அண்டை, அயலாருடன் ஒட்டி உறவாடுவார்கள்.
ஐந்தாம் அதிபதி நான்கில் இருந்தால் விவசாயம், கால்நடை வளர்ப்பது பண்ணை தொழில், கல்வி நிறுவனங்கள் நடத்துவது, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை போன்றவற்றில் ஆர்வமுண்டு. வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துகள் இருக்கும். மறைமுக சொத்துகள் குத்தகை எடுத்த சொத்துகள், குத்தகைக்கு கொடுத்த சொத்துகள் அதிகமிருக்கும்.
உணவு, உடை, இருப்பிடம் என அனைத்து தேவைகளும் நிறைந்த வாழ்க்கை இருக்கும். தாயின் அன்பும், அரவணைப்பையும் ஆசிர்வாதமும் பெற்றவராக இருப்பார்கள். பிறக்கும்போது மிக சாதாரண நிலையில் இருந்தால்கூட முதல் குழந்தை பிறந்தபிறகு பல மடங்கு முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.
பலர் குழந்தைக்கு குலதெய்வ அல்லது இஷ்டதெய்வ பெயரை சூட்டுவார்கள். குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைத்தபிறகே குழந்தை பிறக்கும் அல்லது மத்திம வயதில் குழந்தை பிறக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும். மறைமுக வருமானம் மறைவுகள் சேமிப்புகள் இருக்கும். அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை சேமிப்பார்கள். இவர்களின் செயல்பாட்டில் நியாயம் நேர்மை இருக்கும். தாய்வழி பூர்வீக சொத்தில் ஜாதகருக்கு நிச்சயம் பங்குண்டு. அவர்கள் ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் துணைவரும். கற்ற கல்விக்கு தகுந்த தொழில், உத்தியோகம் அமையும். ஒருவருக்கு இருக்கும் சொத்து சுக யோகங்களைப் பார்த்து காதல் வரும்.
நல்ல வசதி வாய்ப்புகளை பார்த்து காதலிக்க துவங்குவார்கள்.தெய்வ நம்பிக்கை குறைந்தவர்கள். உடலில் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியுண்டு. ஆனாலும் முன்னோர்களின் பரம்பரை வியாதிகளான சுகர், பிரஷர் கை- கால் மூட்டு வலி போன்ற பாதிப்புகளால் ஜாதகருக்கு அவஸ்தை இருக்கும்.
ஐந்தாம் அதிபதி ஐந்தில் இருப்பது பூர்வஜென்ம புண்ணியம் வாய்ந்தவர்களுக்கே கிடைக்கும்.
செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கௌரவம், அதிர்ஷ்டம், நுண்ணறிவு, மதிநுட்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஒரு தலை முறையினர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு செல்வம் இருக்கும். மகாலட்சுமி குடியிருக்கும் வீடாக இருக்கும். சகல ஐஸ்வர்யங்களும் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் தலைமுறை வம்சாவழியாக புண்ணிய காரியங்கள் செய்தவர்களாக இருப்பார்கள். பல தலைமுறைகளாக பூர்வீகத்திலேயே வசிப்பார்கள். எத்தகைய சோதனை வந்தாலும் பூர்வீகத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். பல தொழில் வித்தவர்களாக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் இருக்கும்.
சிறிய உழைப்பில் பெரிய லாபம் உண்டு. அதிர்ஷ்டம் சிந்தனை ஏற்படுத்தலாக இருக்கும்.
குலதெய்வத்தின் அருள் நிரம்பியவர்கள். ஒவ்வொரு முக்கிய பணியையும் குலதெய்வத் தின் நல்லாசி பெற்றே நடத்துவார்கள்குலதெய்வக் கோவிலில் அறநிலையத் துறை போன்றவற்றில் முக்கிய பதவி வகிப்பார்கள். கௌரவ பதவிகள் உண்டு.
அரசியல், அரசாங்கம் போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். உள்ளூர் பஞ்சாயத்து போர்டுமுதல் மத்திய அரசாங்கம்வரை அவரவர்களின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப ஒரு பதவி நிச்சயம் உண்டு. குலதெய்வமே குழந்தையாக வந்து பிறக்கும்.
பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் நன்மை உண்டு. கௌரவம் கட்டுப்பாடு, கண்ணியம் நிறைந்த காதலாக இருக்கும். சிலருக்கு ஒருதலை காதலாகவே இருக்கும். கண்ணியம் கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட்டு காதலை வெளிப்படுத்த மாட்டார்கள்.
தொடரும்....
செல்: 98652 20406