ஹவுஸ்டன் நகரத்திலுள்ள ஒரு சிறுவன் வில்லி ஃப்ளின்ட். அவனின் வயது ஆறு. அவன் அழகான பையன். நீளமான பொன் நிற சுருண்ட தலை முடியையும், ஆச்சரியப்படக்கூடிய கள்ளங்கபடமற்ற நீல நிற கண்களையும் கொண்டவன்.
அவனுடைய தந்தை மதிப்பிற்குரிய ஒரு மெலிந்த மனிதர். பிரதான சாலையிலேயே அவருக்குச் சொந்தமான நான்கோ ஐந்தோ வர்த்தகம் நடைபெறும் பெரிய கட்டிடங்கள் இருந்தன. தன் கட்டிடங்களில் வாடகைக்கு இருப்பவர்களுடன் நாள் முழுக்க திரு. ஃப்ளின்ட் போராடி, தனக்கு வரவேண்டிய பணத்தை வாங்குவார். உடைந்திருக்கும் சாளரத்தின் கண்ணாடிகளைச் சரி பண்ணுவார். ஒழுங்கற்றுத் தொங்கிக்கொண்டிருக்கும் பலகைகளைச் சீர்பண்ணுவார். வர்ணம் பெயர்ந்திருக்கும் இடங்களில் மராமத்து பணிகளைச் செய்வார்.
மதிய வேளையில் தன் கட்டடங்களில் ஒன்றின் படிக்கட்டில் அமர்ந்து, செய்தித்தாளில் சுற்றி தான் கொண்டு வந்திருக்கும் எளிய உணவைச் சாப்பிட்டவாறு தன் சிரமமான நாட்களை அசைபோட்டுக் கொண்டிருப்பார். கேய் மற்றும் அழகாக ஆடைகள் அணிந்திருக்கும் க்ளார்க்குகள், வர்த்தக மனிதர்கள் ஆகியோர் மேலேயும் கீழேயும் படிகளைக் கடந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால், திரு. ஃப்ளின்ட் அவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டார். ஹவுஸ்டன் நகரத்தின் மக்கள் வசிக்கும் முக்கிய தெருக்களில் ஒன்றில் "டொமாட்டோ கேன் ஹைட்ஸ்' என்ற பெயரில் அழைக்கப்படும் மிகப் பெரிய குப்பைக் குவியலுக்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்தார்.
தன் மனைவியுடனும், சிறுவன் வில்லி யுடனும் அங்கு வசிப்பதில் அவர் முழு திருப்தியுடன் இருந்தார்.
முழுமையான மன நிறைவுடன் தன் எளிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டு, தன் கட்டிடங்களின் மூலம் வரக்கூடிய மாத வாடகையான 1400 டாலர்களைப் பெற்றுக் கொண்டு அவரின் வாழ்க்கை நடந்தது. அவர் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் எப்போதும் காணப்பட்டார். தன் அலு வலகங்கள் சிலவற்றின் வாடகையை அவர் உயர்த்தாது, ஒரு நாள் கடப்பதே அரிது. ஒரு மழை நாளுக்காக மேலும் சில டாலர்களைச் சம்பாதித்து வைத்திருந்தார்.
ஒருநாள் இரவுப் பொழுதில் திரு. ஃப்ளின்ட் வீட்டிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார். வெறும் வயிற்றுடன் அவர் விலை குறைவான பச்சை வர்ண சுவர்த் தாள்களை ஒட்டியிருக்கிறார்.
எதுவுமே சாப்பிடாமல் தன் ஸ்டோர்களில் ஒன்றின் சுவரிலும் ஒட்டியிருக்கிறார். அது அவருக்கு ஒத்துப் போகாமல் ஆகிவிட்டிருக் கிறது. காய்ச்சலுடன் படுக்கைக்குச் சென்ற அவர் முனகினார்:
"என் மனைவியும் குழந்தையும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இப்போது அவர்களின் நிலைமை என்ன ஆகும்?''
வில்லியை திரு. ஃப்ளின்ட் அறையின் இன்னொரு பக்கத்திற்கு அனுப்பி விட்டு, தன் தலையணைக்கு அடியிலிருந்து ஒரு ரோல் பச்சைத் தாள்களை எடுத்தார்.
"இதை எடுத்துக் கொள்''- தன் மனைவியிடம் கூறினார்:
"வங்கிக்குச் சென்று இதைச்செலுத்து. அங்கு 900 டாலர்கள்தான் இருக்கின்றன.
வாடகைக்கு இருக்கும் என் மனிதர்களில் சிலர் இன்னும் எனக்கு பணம் தராமல் இருக்கிறார்கள்.
அவர்களில் ஐந்து பேர் சாளரங்களுக்கு 'சன் ஷேட்' வேண்டுமென கேட்டார்கள்.
எலிஜாவிற்கு உணவு அளிக்க அண்டங்காகத்தை அனுப்பி வைத்தவர், நம்மையும் பார்த்துக் கொள்வார். ரொட்டி சுடுபவரிடம் சென்று ஒரு துண்டு ரொட்டியை வாங்கிக் கொண்டு வேகமாக வந்து, பிரார்த்தனையில் ஈடுபடு.''
தன் நோவாவின் கப்பலில் விளையாடுவதைப் போல வில்லி நடித்துக் கொண்டிருந்தான். வாடகை, நீர் ஆகிய கணக்கில் தொகைகளை அவன் தன் சிலேட்டில் எழுதிக் கொண்டிருந்தான்.
ஆனால், அவன் தன் தந்தை கூறுவதையும் கேட்டான்.
தன் தாய் வெளியே சென்றபோது, அவன் கேட்டான்: "அம்மா, வேலை செய்யும் அளவிற்கு அப்பாவின் உடல் நலம் சரியாக இல்லையா?''
"ஆமாடா, செல்லம்"- திருமதி. ஃப்ளின்ட் கூறினாள்:
"அவருக்கு காய்ச்சல் அதிகமா இருக்கு. அவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு விடுமோ என்று நான் பயப்படுகிறேன்.''
தன் தாய் சென்ற பிறகு, வில்லி தன் தொப்பியை அணிந்து கொண்டு முன் கதவு வழியாக நகர்ந்தான்.
"உடல் நலம் பாதிக்கப்பட்ட என் நல்ல, கருணை மனம் கொண்ட தந்தைக்கு உதவும் வகையில் நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன்.''- அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
"மேன் தெரு' வரை அவன் நடந்தான்.
நோயின் பாதிப்பிற்கு ஆளான தன் தந்தைக்குச் சொந்தமான உயர்ந்த கட்டிடங்களை அவன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். வெளிர் மஞ்சள் நிற தலைமுடியுடன் காட்சியளித்த சிறுவனைப் பார்த்ததும், பாதையில் சென்றவர்கள் புன்னகைத்தார்கள். அவனின் கள்ளங்கபடமற்ற நீல விழிகளைப் பார்த்ததும், பல முரட்டுத்தனமான முகங்களும் மென்மைத் தன்மை கொண்டவையாக மாறின.
சிறுவனான வில்லி...
மிகப் பெரிய, சுறுசுறுப்பான அந்த நகரத்தில் நோய் வாய்ப்பட்டிருக்கும் தன் தந்தைக்கு உதவும் வகையில் அவன் என்ன செய்ய முடியும்?
"நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக் குத் தெரியும்''- அவன் தனக்குத் தானே தெளிவாக கூறிக் கொண்டான்: "நான் மேலே சென்று, பல அலுவலகங்களின் வாடகையை உயர்த்தப் போகிறேன். அது என் தந்தையை மேலும் சந்தோஷமடையச் செய்யும்.''
தன் தந்தைக்குச் சொந்தமான பெரிய கட்டிடங்களில் ஒன்றின் மூன்று அடுக்கு படிக்கட்டுகளில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறிச் சென்றான் வில்லி. அவ்வப்போது அவன் அமர்ந்து ஓய்வெடுத்தான். காற்று மேலே வீசுவதற்கு அவன் குள்ளமாக இருந்தான்.
மூன்றாவது மாடியில் இரண்டு இளைஞர்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு அலுவலகம் இருந்தது.
அவர்கள் தற்போதுதான் சட்டப் பயிற்சி பெற ஆரம்பித்திருந்தனர். முதல் மாத வாடகைக்கான குறிப்பில் திரு. ஃப்ளின்டிற்கு அவர்கள் கையெழுத்து போட்டிருந்தனர்.
வில்லி படிகளில் ஏறி வந்தபோது, அந்த இளம் வக்கீல்கள் வெண்ணெய்யையும் ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களின் பாதங்கள் டெஸ்க்குகளின் மீது இருந்தன. ஒரு மேஜையின் மீது ஆறு காலி பீர் புட்டிகள் இருந்தன. அவர்கள் மிகவும் சிரமப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் செண்பக மலரைத் தன் பொத்தான் துளையில் வைத்திருந்த ஒருவன் ஒரு இளம்பெண்ணைப் பற்றிய ஒரு தமாஷான கதையைக் கூறிக் கொண்டிருந்தான்.
அப்போது அவர்களில் ஒருவன் தன் காலை டெஸ்க்கிலிருந்து எடுத்தவாறு, தன் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு கூறினான்:
"பாப்... அந்த அழகான ஆடைகள் அணிந்த சிறிய உருவத்தை உள்ளே விடு...''
பாப் என்று அழைக்கப்பட்ட அந்த இளைஞனும் தன் பாதத்தைக் கீழே வைத்தான். வெண்ணெய்யை வெட்டிக் கொண்டிருந்த தன் கத்தியை அவன் தன் தலைமுடியில் தேய்த்தவாறு, சுற்றிலும் பார்த்தான்.
நீல நிற கண்களைக் கொண்ட, நீளமான சுருள்கள் விழுந்த பொன் நிற தலைமுடியைக் கொண்ட ஒரு சிறுவன் கதவிற்கு அருகில் நின்றிருந்தான்.
"உள்ளே வா... சிறுமி!''- அந்த இளைஞர்களில் ஒருவன் கூறினான்.
வில்லி தைரியமாக அறைக்குள் நடந்தான்.
"நான் ஒரு சிறுமி அல்ல.''- அவன் கூறினான்:
"என் பெயர் வில்லி ஃப்ளின்ட். வாடகையை உயர்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன்.''
"வில்லி.... இப்போது அமைதியாக கேள்....''- பாப் என்ற அந்த இளைஞன் கூறினான்: "நீ வந்து அதைச் செய்வதாக இருந்தால்....''
"மின்சாரம் எங்களைத் தாக்கிவிட்டால், நாங்கள் அதைச் செய்யவே முடியாது. வில்லி, இது உன் சொந்த முடியா? உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா?''
"கவலைப்படாதே, சிறுவனே!''- சாம் என்ற பெயரில் பாப் அழைத்த அந்த இன்னொரு இளைஞன் கூறினான்: "நீ ஒரு நல்ல சிறுவன் என்று நான் உறுதியாக கூறுகிறேன். நான் கேட்கிறேன்.... வில்லி, "கம்லிட்ராப்' என்ற இனிப்பு பதார்த்தத்தைப் பற்றி நீ எப்போதாவது கேள்விப்பட்டிருக்கியா?''
"அவனைக் கிண்டல் பண்ணாதே"- பாப் கறாராக கூறினான்: "இவன் எனக்கு யாரையோ ஞாபகப்படுத்துகிறான். என் கண்ணீரைப் பொருட்படுத் தாதே! இந்த சுருள் விழுந்த முடிகள்... இந்த கால் சட்டை... வில்லி, வேகமாக பேசு. என் குழந்தையே! இருநூற்று பத்து வருடங்களுக்கு முன்பு.... நீ நின்றுகொண்டிருந்தாய்..."
"ஓ.... அவனைத் தனியாக விடு...''- சாம் இன்னொருவனைப் பார்த்து முகத்தைச் சுளித்தவாறு கூறினான்.
"வில்லி, தனிப்பட்ட முறையில் கேட்கிறேன்....இந்த இடத்தில் சிறிது நேரம் அழுவதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே? நான் சலிப்பு நிலையைத் தாண்டி வந்திருக்கிறேன். சந்தோஷத்திற்கும் சென்றிருக்கிறேன்.''
"என் அப்பா மிகுந்த உடல்நல பாதிப்பில் இருக்கிறார்''- தன் கண்ணீரை தைரியமாக விரட்டியவாறு வில்லி கூறினான்: "அவருக்காக ஏதாவது செய்தாக வேண்டும். நல்ல மனிதர்களே.... தயவுசெய்து.... இந்த அலுவலகத்தின் வாடகையை நான் உயர்த்துகிறேன். நான் திரும்பச் சென்று, அவரிடம் கூறி, அவரை குணமடையச் செய்வேன்.''
"இவன் வயதான மனிதரான ஃப்ளின்டின் மகன்....'' - பாப் கூறினான்: "அவர் உன் முகத்தை மலரச் செய்வாரா? வில்லி, சொல்லு... வாடகையை எவ்வளவு உயர்த்த நீ நினைச்சிருக்கே?''
"இப்போது நீங்க எவ்வளவு கட்டுறீங்க?''- வில்லி கேட்டான்.
"மாதத்திற்கு பத்து டாலர்கள்''.
"நீங்கள் அதை பன்னிரண்டு என்று ஆக்கு வீர்களா?''
"அதை ஐம்பது என்று கூறு...''- சாம் ஒரு கருப்பு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு கூறினான்:
"90 நாட்களுக்கு.... வில்லி.... பீரைத் திற... இது ஒரு ஒப்பந்தம். "
"முட்டாள்தனமாக பேசாதே...'' - பாப் கூறினான்:
"நான் சொல்லுறேன்.... வில்லி, நீ விரும்பினால், வாடகையை இருபது டாலர்களுக்கு உயர்த்திக் கொள். ஓடி... உன் அப்பாவிடம் சொல்லு. அவருக்கு
இது நல்லதைச் செய்யும்.''
"ஓ.... உங்களுக்கு நன்றி''- உரத்த குரலில் கூறிய வில்லி, சாந்தமடைந்த மனதுடன் சந்தோஷமாக பாடியவாறு வீட்டிற்கு ஓடினான்.
வீட்டை அடைந்தபோது, அவனின் தந்தை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும், தன் மனைவியிடம் பத்து டாலர்களுக்கான ரசீதைக் கொடுத்தவாறு ஏதோ முனகுவதையும் அவன் பார்த்தான்.
"அவர் சுய உணர்வு இல்லாமல் இருக்கிறார்.''- கண்ணீர் விட்டவாறு திருமதி. ஃப்ளின்ட் கூறினாள்.
படுக்கைக்கு ஓடிய வில்லி, தன் தந்தையின் காதில் முணுமுணுத்தான்: "அப்பா, உங்களின் அலுவலகங்களில் ஒன்றின் வாடகையைப் பத்திலிருந்து பன்னிரண்டிற்கு நான் உயர்த்திவிட்டேன்.''
"நீ... என் குழந்தையே!''- வில்லியின் தலையில் தன்
கையை வைத்தவாறு அவனின் தந்தை கூறினார்:
"கடவுள் என் தைரியசாலியான மகனை ஆசீர்வதிக் கட்டும்!''
திரு. ஃப்ளின்ட் ஒரு அமைதியான தூக்கத்தில் மூழ்கினார். அவரின் காய்ச்சல் அவரிடமிருந்து நீங்கிவிட்டது. மறுநாள் அவரால் எழுந்து உட்கார முடிந்தது. தான் வாடகையை உயர்த்தியதாக வில்லி
அவரிடம் கூறியபோது, அதிக சக்தியுடன் இருப் பதைப்போல அவர் உணர்ந்தார்.
அதற்குப் பிறகு.... திரு. ஃப்ளின்ட் இறந்துவிட்டார்.
அட கடவுளே! கனவான்களே... வாழ்க்கை முழுவதுமே ஏமாற்றங்கள்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/villi-2026-02-06-16-43-45.jpg)