ரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது. அதாவது நோய் என்றால் அதற்குப் பரிகாரம் நோயை விலக்கும் மருந்து என்பதனைப் போன்று, ஒரு தோஷம் விலகப் பயன்படும் மந்திரப் பிரயோகம் அல்லது பூஜை இவற்றையே பரிகாரம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இன்றெல்லாம் பரிகாரம் என்பது பொய், மக்களை ஏமாற்றுவது என்ற கருத்தை பலரும் வலைத் தளங்களில் பதிவு செய்கின்றனர். அது தவறானதா என்றால் தவறு என்பதனைவிட பரிகாரங்களின் உண்மை தன்மையை ஜோதிடர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. பரிகாரம் குறித்து, கர்க்கர், பராசரர் போன்ற முனிவர்களின் நூல்களில் தொகுத்து வைத்தியநாத சூரி என்பவரால் வடமொழியில் ஜாதக பாரிஜாதம் என்னும் நூலாக எழுதப்பட்டுள்ளது. அந்த நூலில் அதன் ஆசிரியர் கீழ் வருமாறு கூறுகின்றார்.

"யத்தாது கோப ஜனி தாகில ரோக சாந்தியா
தன்னாதமாசு ஜெப தர்ப்பண கோமதனை:
ஸம்பூஜ்ய ரோகா பய சோக விஹீன சித்தா
ஸர்வே ஜனாஸ்ஸு கயசோ பலஸாலின ஸ்யு.''

ஒருவர் உடலில் எந்த தாதுவால் வியாதி ஏற்படுகின்றதோ அந்த தாதுவிற்குரிய கிரகத்திற்கு கூறப்பட்ட மந்திரத்தால் ஓமம், தர்ப்பணம் தானம் இவற்றைச் செய்து பக்தியோடு அந்த கிரகத்தை வணங்கினால் நோய் விலகி சுகம், பலம், புகழ், தீர்க்காயுள் இவை ஏற்படும் என்பதாகும்.

Advertisment

இவ்விதமாக கிரகங்களுக்குரிய பரிகாரமாக கிரகசாந்தி, கிரகங்களுக்குரிய மூலிகைகளால் குளியல், தானம், ஜெபம், தர்ப்பணம் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறே கடுமையான நோய்களுக்கும் சில சாந்திகளை சாத்திரங்கள் சொல்லுகின்றன. எடுத்துக்காட்டாக மன நோய் ஏற்பட்டால் அந்த நோய் எதனால் ஏற்படுகின்றது என்பதனை கண்டறிந்து, அந்த நோய் விலக அதற்கு சில பரிகாரங்களை பிரசன்னம் மார்க்க நூல் கூறுவதோடு, பொதுவாக உன்மத்த பிரயாசித்தம் என்னும் பரிகார பூஜையையும், கர்ம ரோக பிராயசித்தம் என்னும் நூலாகிய, சாயானீயம் என்னும் நூல் கூறுகின்றது. இதனைக் கற்றறிந்த வேத விற்பனர்கள்மூலமாக பிராய சித்தமாக செய்துகொண்டு நலமுடன் வாழ்வோரும் காணப்படுகின்றனர்.

 ஒரு ஜாதகத்தில் ஏற்படும் வியாதி அல்லது தீமையான பலன்களை எந்த கிரகம் சுட்டிக் காட்டுகின்றதோ அந்த கிரகத்திற்குரிய சில குளியல் பரிகாரத்தையும் வீரசிங்க அவலோகனம் மற்றும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றது. தற்போது நாம் ஒரு ஜாதகத்தில் சூரியன் தீமைத்தரும் வண்ணமாக அமைந்து காணப்பட்டால் அதற்கு எத்தகைய குளியல் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை வீரசிங்க அவலோகனம் என்னும் நூலிலிருந்து காணலாம்.

ஒருவர் ஜாதகத்தில் நோயைத் தரும் கிரகமாக சூரியன் கண்டறியப்பட்டால் அதன்மூலம் வரும் வியாதிகள் என்பவை உஷ்ண ஜுரம், உடலில் அதிகமான சூடு, அபஸ்மாரம் என்னும் வியாதி, இருதய நோய்வயிற்று வலி, கண்களில் ஏற்படும் நோய், எதிரிகளால் பயம், தோலின்மீது ஏற்படுகின்ற நோய், எலும்பு சம்பந்தமான வியாதிகள், நாற்கால் விலங்குகள், மன்னன் இவர்களால் ஏற்படும் அச்சம், குல தேவதை தோஷம், அதுபோன்று சிவகோபம், பூதங்களில் இருந்து ஏற்படுகின்ற அச்சம் இவையெல்லாம் சூரியன்மூலமாக உணர்ந்து கொள்ளவேண்டிய வியாதிகளாகும். ஒருவருக்கு ஏழாம் வீட்டில் சூரியன் இருக்க , சனி பார்த்தால் விவாகரத்து ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது போன்று கர்கடக ராசியிலே சூரியன் மதுபானத்தின்மீது அதிக ஆவல் தரும் கோளாக சாத்திரங்கள் சொல்கின்றன. அவ்வாறே கும்ப ராசியில் சூரியன் இதய நோயை தருவதாக சாராவளி ஆசிரியர் கூறுகின்றார். எனவே ஒருவருக்கு நோயை அல்லது தீமையை தரும் அமைப்பாக சூரியன் காணப்பட்டால் அதற்கு பரிகாரமாக வீரசிங்க அவலோகனம் என்னும் நூலில் சொல்லப்பட்ட குளியல் பரிகாரத்தை குறித்து காண்போம்.

Advertisment

"மனோசிலை லாஸு ஸுரதாரு 
குங்குமை ருசிரயஷ்டி மதுபத்ம கான் விதை
ஸதாம்ரபுஷ்பைர் விஷமஸ்திதே ராவள 
ஸு பாவ ஹம் ஸ்நானமுதாஹிர்தம் புதை:''

மனோ சிலை, ஏலக்காய் விதை, தேவதாரம், குங்குமம், ராமச்சம். இரட்டி மதுரம், பதிமுகம், செம்பருத்திப் பூ இவை நன்கு பொடித்து தீயில்  கொதிக்கவைத்து குளிரச்செய்த நீரை குளிக்க செய்வது, ஆறு, எட்டு, பன்னிரண்டு என்னும் ராசிகளில் அனிஷ்ட ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் மற்றும் வலு குறைந்த சூரியன், பிரச்சினைகள், நோய் இவற்றை வழங்கும் சூரியன் தரும் தாக்கத்தை விலக்கும் பரிகாரம் எனக் கற்றறிந்த பண்டிதர்கள் கூறுகின்றார்கள். இங்கு கூறப்பட்ட மருந்து களை அரைத்து உடலில் பூசி குளிப்பதும் சூரிய தோஷத்தை விலக்கும் பரிகாரமாகும். 

அது மட்டுமல்லாமல் சூரிய தோஷப் பரிகார மாக பவிளம், பத்ம ராகம் மாணிக்கம் இவற்றை அணிவதும் சூரிய தோஷத்தை விலக்கும் பரிகாரமாகும்.

ஆகவே சூரியனால் ஏற்படும் தாக்கங் களுக்கு இத்தகைய மூலிகை குளியல் நீரை தயார்செய்து அந்த நீரில் வேத மந்திரங்கள் சூரியனுக்குரிய சாந்தி மந்திரங்களை ஜெபம் செய்து அவற்றை குளிப்பதன்மூலமாக சூரியன் தரும் அனைத்து தோஷங்களும் விலகி ஒருவர் நலமடைவார். 

செல்: 94438 08596