ப்போதுதான் ஏசு ஒலிவ மலையில் இருந்து அந்த தேவாலயத்திற்கு திரும்பியிருந்தார். அவரிடத்தில் ஒரு பெண்ணை இழுத்துவருகிறார்கள்.

அவள் ஒரு பாலியல் தொழிலாளி. கையும்களவுமாக சிக்கி இருக்கிறாள். ஆகவே அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதற்கான தீர்ப்பினைப் பெறுவதற்காக அவரிடத்திலே வந்திருக்கிறார்கள்.

அந்த சமூகத்தில் மோசேயின் கட்டளைகள் தான் சட்டம். பாலியல் தொழிலில் உள்ளவளை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்பது மோசே யின் கட்டளை. அது அவர்களுக்குத் தெரியும். கல்லெறிந்து அவளைக் கொல்வதற்கு ஏசுவின் அனுமதியெல்லாம் அவர்களுக்குத் தேவை இல்லை. ஆனாலும் அவளை அவரிடம் அழைத்து வருவதற்கு அவர்களுக்கு வேறு ஒரு காரணம் இருந்தது.

Advertisment

அவர்கள் மூடத்தனமான செயல்பாடுகளில் சமயத்தின் பெயரால் ஈடுபடுபவர்கள். ஏசு மூடத்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்துவருகிறார். 

மக்கள் அவர் பக்கம் சாய்கிறார்கள். அது அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போடுகிறது. ஆகவே எப்படியாவது அவரைக் குற்றப்படுத்திவிடவேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள்.

அவரைக் குற்றப்படுத்துவதற்கும் அவளை அவரிடத்தில் அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தம்?

Advertisment

நிச்சயமாக அந்தப் பெண்ணை ஏசு மன்னித்துவிடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படி அவர் இவளை மன்னித்து விட்டால் அது மோசேயின் கட்டளைகளுக்கு எதிராக அமையும். மோசேயின் கட்டளைக்கு எதிராகத் தீர்ப்பளிப்பதென்பது தெய்வ நிந்தனையாக மாறும். இப்படியாக ஏசுவை குற்றப்படுத்திவிடலாம் என்பதற்காகத்தான் அவளை அவரிடத்தில் அழைத்துவந்திருக்கிறார்கள்.   

“உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் அவள்மீது முதல் கல்லை எறியலாம்’ என்று ஏசு கூறுகிறார்.

ஏசு அப்படியாக சொன்னதும் அவர்கள் ஒரு கணம் தங்களைத் தாங்களே சுயமதிப்பீடு செய்கிறார்கள். அவர்களது பாவத்தின் பட்டியல் அவர்கள்முன் நீள்கிறது.

எந்தப் பக்கம் போனாலும் இந்த மனிதன் வழியை மறிக்கிறாரே என்று நொந்தபடியே எல்லோரும் போய்விடுகிறார்கள். யாரும் அவள்மீது எறிவதற்காக கொண்டுவந்த கற்களை திரும்பவும் எடுத்துச்செல்லவில்லை.

இப்படிச் சொன்னதன் மூலம் ஒரே கல்லில் கீழுள்ள இரண்டு மாங்காய்களை அவர் சாய்த்துவிடுகிறார்.

மோசேயை மீறிய குற்றத்தில் அவர் சிக்கவில்லை.

அந்தப் பெண்ணை தண்டனையில் இருந்து காப்பாற்றிவிடுகிறார்.

இப்படியாக இந்த சம்பவம் பைபிளில் நிறைவுபெறுகிறது. நமக்கு என்னவோ இதற்குப் பிறகும் ஏசுவோடு அந்தப் பெண்ணிற்கான ஒரு உரையாடல் மிச்சம் இருப்பதாகப் படுகிறது.

அப்படி ஒரு உரையாடல் நிகழ்ந்திருப்பின் அது எப்படி நீண்டிருக்கும்?

அவர்கள் கிடாசிய கற்கள் குவிந்து ஒரு சிறிய மேடுபோல காட்சி அளிக்கிறது. 

யாரும் அவள்மீது தீர்ப்பிடவில்லை.

நிமிர்ந்து பார்க்காமலே ஏசுவும் சொல்கிறார்,
"போய் வா மகளே, நானும் உன்னை தீர்ப்பிடப் போவதில்லை"”
சொல்லிவிட்டு நிமிர்ந்துபார்க்கிறார். குவிந்து கிடக்கும் கற்களில் எதையோ அவள் தேடிக் கொண்டிருக்கிறாள்.

உன் மீது எறிய அவர்கள் எடுத்துவந்த கற்களாயிற்றே அவை. அவற்றில் இருந்து எதைத் தேடிக்கொண்டிருக்கிறாய் மாதே? என்று கேட்கிறார்.

புன்னகைத்தபடியே சொல்கிறாள்,

வெறும் கற்களா பிதாவே இவை?”

இந்த நான்கும் வெறும் சொற்கள் அல்ல என்று உணர்கிறார். இது அவர் சற்றும் எதிர்பார்க்காத பதில். இதை வெறும் பதில் என்றும் அவரால் சுருக்கிவிட முடியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு கேள்வியை தனது கேள்விக்கான பதிலாக அந்தப் பெண் தந்திருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. இவை வெறும் கற்களாகவா உமக்குத் தோன்றுகிறது? நீங்களும் அவ்வளவுதானா என்ற அவள் ஆதங்கப்படுவதை உணர்கிறார். தன்னையே அந்த நான்கு சொற்களும் கொஞ்சம் சுருக்கிப்போட்டிருப்பதாக உணர்கிறார். கைகளை விரித்து அவளை அழைக்கிறார்.

ஓடி வந்து அவர் அருகே மண்டியிருகிறாள். சாந்தமான புன்னகையோடே கற்கள் இல்லை என்றால் அவை என்ன என்று கேட்கிறார். 

இப்போது கொஞ்சம் இறுகிக் கெட்டிப் பட்டவளாக சொல்கிறாள்,விதிகள், கற்பிதங்கள் சட்டங்கள்”

சிரித்தபடியே கும்பிட்ட ஏசுவைப் பார்த்து பயந்துபோனவளாய் அவர் பாதங்களில் தனது முகத்தை பதிக்கிறாள். தவறாக ஏதேனும் பேசியிருந்தால் மன்னித்து அருளுமாறு இறைஞ் சுகிறாள்.

பிதாவின் பிள்ளைக்கும் முனுஷியிடம் இருந்து படிப்பதற்கு இருக்கும் என்பதை தான் இப்போதுதான் உணர்ந்துகொண்டதாக ஏசு சொல்கிறார்.

நானும் பிதாவின் பிள்ளைதானே சேசப்பா என்கிறாள். அவளை இறுக அணைத்துக்கொள்கிறார்.

“"ஆமாம் மகளே, ஆமாம் மகளே"’ என்றபடி அவரது உதடுகள் துடிக்க ஆரம்பிக்கின்றன.

அந்தக் குவியலுக்குள் அவள் எதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள்?

சொல்கிறாள்,

”அவனது கையிலும் ஒரு கல் இருந்தது தகப்பனே.”

”எவன் கையில்?”

”அவனும் ஒருநாள் என்னிடம் வந்திருந்தான் தந்தையே. பார்ப்பதற்கு அச்சு அசல் என் மகனைப்போலவே இருந்தான்.”

“ஆனால் உன் கர்ப்பத்தின் வாயில் இதுவரை திறக்கவே இல்லையே பெண்ணே.”

“ஆமாம் தந்தையே. ஆனாலும் எனக்கான ஒரு பிள்ளையை நான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். அவனது முப்பது வயதில் அவன் அச்சு அசல் இவனைப்போலவே இருந்திருப்பான் தந்தையே”

மகன் சாயலில் இருப்பவனை எப்படி? மறிக்கிறாள்.

”சொன்னேன் கடவுளே, அழுதபடியே தடுக்க முயற்சித்தேன். வேசி என்று அறியப்பட்டவளின் நியாயம் காசோடும் ஆதிக்கத் திமிரோடும் வந்திருப்பவனிடம் எப்படி எடுபடும் தந்தையே. 

அனுமதிக்கவும் நிராகரிக்கவும் எனக்கேது கடவுளே அதிகாரம்?

ஒன்று தெரியுமா தகப்பனே, என்னை இங்கு இழுத்து வந்தவர்களில் பதினேழுபேர் பலமுறை என்னிடம் வந்துபோனவர்கள்.

அவர்கள் என்னைத்தானே உம்மிடம் தீர்ப்பிடுவதற்காக இழுத்து வந்தார்கள். நான் வேசி என்றால் என்னிடம் வந்தவர்களை என்னவென்று அழைப்பது தந்தையே? போக, நீங்களே என் தரப்பு நியாயத்தைக் கேட்கவே இல்லையே ஆண்டவரே.

தான் சொல்வது தவறென்றால் தன்னை மன்னிக்க வேண்டுமென்றும் ஆனாலும் தான் பேசுவதை முழுமையாகக் கேட்கவேண்டும் என்றும் அவரை இறைஞ்சுகிறாள். 

தீர்ப்பிடலாம், தீர்ப்பிடாமல் நகரலாம் ஆனால் அதற்கும் இருசாராரையும் விசாரிக்கவேண்டுமல்லவா தகப்பனே. நீங்கள் தீர்ப்பிட மறுத்ததன் மூலம் என்னை மன்னித்து தீர்ப்பளித்திருக்கிறீர்கள்.

இது உங்கள் கருணையாக இருக்கலாம். ஆனால் நியாயம் அல்ல பிதாவே.

என் அன்புப் பிதாவே, எல்லோருக்கும் உடம்பைக் கொடுத்தவள்தான் நான். 

ஆனால் அவன் வந்த அந்த  இரவில் என் உடம்பையே தாய்ப் பாலாக்கி அவனுக்கு பருகக் கொடுத்தேன்.

அந்த ஒரு ராத்திரி நான் தாயாகவே என்னை உணர்ந்தேன் கடவுளே.

இன்று அவன் கையிலும் ஒரு கல் இருந்தது பிதாவே”

“அவன் கொண்டுவந்த கல்லைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாயா?”

“ஆமாம் தந்தையே. என்னைப் பொறுத்தவரை அது என் மகனது கல்லாயிற்றே”

கொஞ்சம் அழுது ஓய்கிறாள். ஏசுவின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டபடியே  விரக்தியாக சிரித்தவாறு நகர்ந்து போகிறாள்.

“தாயே” என்றபடி அழுதவாறே எதிர்புறமாக நகர்கிறார் ஏசு.

கல்வாரிக்குப் போகும்போது “இதோ உன் தாய்” என்று அவர் சுட்டிய பெண்ணில், ஏசு இந்தத் தாயின் சாயலையும் பார்த்திருக்கக் கூடும்.