தொன்மையும் நீண்டநெடிய வரலாற்றுச் சிறப்பையும் உடையது நம் செம்மொழியாம் தமிழ் மொழி. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழ் மொழியில், சங்க காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் யாவும் கவிதை நடையிலேயே அமைந்திருந்தன. சங்க இலக்கிய நூல்கள் காப்பிய வடிவில், செய்யுள்களாகவும் வெண்பாக்களுமாகவே எழுதப்பட்டன. அதன் காரணமாகவே தமிழ் மொழிக்கு "கவிதை மொழி' என்றொரு சிறப்பும் உண்டு.

Advertisment

ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரே, ஆங்கிலம் கற்றறிந்த தமிழறிஞர்கள் ஆங்கில இலக்கியங்களையும் படித்தனர். அதன் தாக்கத்தினால் தான் உரைநடை, சிறுகதை, புதினம் ஆகிய வடிவங்களிலான படைப்புகளையும் தமிழில் எழுதத் தொடங்கினர்.

Advertisment

"தமிழ் உரைநடையின் தந்தை' எனப் போற்றப்படும் வீரமாமுனிவரும் (கான்ஸ்டன்டைன் பெஸ்கி, 1680-1747), "தமிழின் முதல் புதின ஆசிரியர்' என அழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் (1826-1889), "தமிழின் முதல் சிறுகதையாளர்' என்று சொல்லப்படும் வ.வே.சு.ஐயரும் (குளத்தங்கரை அரசமரம், 1881-1925), "தமிழ்ப் புதுக்கவிதைகளின் முன்னோடி' என்று அறியப்படும் ந. பிச்சமூர்த்தியும் (1900-1976) தமிழில் புதுவகை இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்திய ஆளுமைகள் ஆவர்.

தமிழில் இன்றைக்குப் பலராலும் விரும்பி எழுதப்படும், படிக்கப்படும் இலக்கிய வடிவமாக விளங்கிவரும் புதுக்கவிதை வடிவத்தை முதன்முதலாக அறிமுகம் செய்தவர் பாரதியார். ஆங்கிலக் கவிஞர் பெர்சி பைஸ்சி ஷெல்லி எழுதிய கவிதைகளை வாசித்த பாரதி, அக்கவிதைகள் உண்டாக்கிய தாக்கத்தினால் தமிழின் கவிதை மரபிலிருந்து விலகி, இலக்கணத் தளைகளில்லா கவிதைகளை "ஷெல்லி தாசன்' எனும் புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 

Advertisment

பின்னாளில் "வசன கவிதை' என்றழைக்கப்பட்ட இக்கவிதைகளே, புதுக்கவிதையின் வரவிற்கான வரவேற்புக் கம்பளத்தை விரித்துவைத்த பெருமைக் குரியவை.

மேலைநாடுகளிலிருந்து தமிழுக்கு அறிமுகமான புதுவகை இலக்கிய வடிவங்களையெல்லாம் ஆழமும் செறிவுமிக்க தமிழ் மொழி, தனக்கான இலக்கிய வடிவங்களாகச் சுவீகரித்துக்கொண்டது. அதன் விளைவாகவே, இன்று உலகெங்கும் எழுதப்படும் இலக்கியப் படைப்புகளுக்கு நிகராகவும், ஏன் அதை விட சற்றே உயர்ந்த தரத்திலும் தமிழில் உரைநடை, நாவல், சிறுகதை, கவிதை ஆகியன எழுதப்படுகின்றன என்பதே இலக்கிய ஆய்வறிஞர்களின் தீர்மானமாக உள்ளது.

கீழ்த்திசைப் பூமியான ஜப்பானில், ஜென் புத்திஸ பார்வையோடு இயற்கையையும் இணைத்து எழுதப்பட்ட 5-7-5 எனும் 17 அசைகளையுடைய மூவரி மரபுக்கவிதையே ஹைக்கூ (ஐஹண்ந்ன்). இக்கவிதை "ரென்கா' என்கிற நீள்கவிதை வடிவத்தின் தொடக்க மூன்று வரிகளாக அமைந்தவையே.

சங்கக் காலத் தமிழர்களின் வாழ்வையொத்ததே ஜப்பானியர்களின் வாழ்க்கை முறைகளும். "ஹனாமி' எனப்படும் "பூப்பார்த்தல்' என்பது, ஒவ்வொரு ஆண்டின் இளவேனிற்காலத்தின் தொடக்கத்திலும் ஜப்பானில் நடைபெறும் ஒரு கலாச்சார செயலாகும். பூத்துக்குலுங்கும் செர்ரிப் பூக்களைக் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிப்பது ஜப்பானியர்களின் வழக்கம். ஜப்பானிய இலக்கியத்தின் மறுமலர்ச்சி காலத்தில் உருவான கவிதை வடிவமான ஹைக்கூ எனும் சொல்லுக்கு "ஒரு கோப்பைத் தேநீர்' என்பது பொருளாகும்.

"அழகு நிலையற்றது; ஆனால் இயற்கையின் அழகு எனும் தத்துவம் என்றைக்கும் நிரந்தரமானது' எனும் ஜென்னின் தத்துவப் பின்புலத்தில் பூத்துக்குலுங்கின ஹைக்கூ மலர்கள்.

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் மோரிடாகே (1473-1549), சோகன் (1465-1553) இருவரும்தான். என்றாலும், மட்சூவோ பாஷோவே, "ஹைக்கூவின் தந்தை' என்றழைக்கப்படுகிறார். 

16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடுத்தர மக்களின் கவிதையாக விளங்கிய "ரென்கா' கவிதையின் ஆரம்ப வரிகளைச் சற்றே மாற்றி, "ஹொக்கு' எனும் தனிப் பாடல்களாக எழுதினார் பாஷோ. "ஹொக்கு' என்றால் "தொடக்கப் பாடல்' என்று பொருள். இந்த மூவரி ஹொக்குப் பாடல்களே, பின்னாளில் ஹைக்கூ கவிதைகள் என்றழைக்கப்படலாயின.   

"ஹைக்கூ எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழைகூட இடைவெளி இருக்கக் கூடாது. உள்மனதை நேரடியாகப் பேசு; எண்ணங்களை கலைய விடாமல் நேராகச் சொல்' என்று வலியுறுத்திய ஜப்பானிய மகாகவி பாஷோ எழுதிய புகழ்பெற்ற ஹைக்கூ ஒன்று:

பழைய குளத்தில்
தவளை குதித்தது
நீரில் சத்தம்.

பாஷோவைத் தொடர்ந்து பூஸன், இஸ்ஸா, ஷிகி ஆகியோர் ஹைக்கூ கவிதைகளை அடுத்தடுத்த தளங்களை நோக்கி முன்னெடுத்துச் சென்றனர்.  

ஜப்பானிய மண்ணில் பிறந்த ஹைக்கூ கவிதைகள் ஆங்கில மொழியாக்கத்தின் வழியாக, உலகின் திசையெங்கிலும் பரவியது.  ரெஜினோல்ட் ஹோரேஸ் பிளித் (ஆர்.ஹெச். பிளித்-1898-1964) மற்றும் ஹரோல்ட் கோல்ட் ஹெண்டர்சன் (ஹரோல்ட் ஜி.ஹெண்டர்சன்-1889-1974) இருவரும் ஆங்கிலத்தில் ஹைக்கூவை மொழிபெயர்த்து உலகக் கவிஞர்களின் கவனத்திற்கு கொண்டுபோயினர்.

சரியாய் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முதன்முதலாக இந்தியாவிற்குள் அறிமுகமானது ஹைக்கூ. 1916-ஆம் ஆண்டில் வங்கத்திலும் தமிழகத்திலும் சமகாலத்தில் அறிமுகமானது. வடஇந்தியாவில் தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூராலும், தென்னிந்தியாவில் மகாகவி பாரதியாராலும் அறிமுகமானது.

மேற்கு வங்கத்திலிருந்து 1907-ஆம் ஆண்டு முதல் மாத இதழாக வெளிவந்த "மாடர்ன் ரிவ்யூ' எனும் ஆங்கில இதழில் வந்த ஜப்பானிய ஹைக்கூ கவிதையை வாசித்த பாரதி, அது குறித்த கட்டுரை ஒன்றினை எழுதினார். "பிற நாட்டுக் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று சொன்ன பாரதியே, 16.10.1916 தேதியிட்ட "சுதேசமித்திரன்' இதழில், "ஜப்பானியக் கவிதை' எனும் கட்டுரையை எழுதினார்.


அக்கட்டுரையில், "இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும், ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன? மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை... ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்றுகூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாக செய்தோன் அவனே கவி என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

பாரதியின் கட்டுரை வெளியாகி, சரியாய் 50 ஆண்டுகள் கடந்தோடிய நிலையில், எழுத்தாளர் சுஜாதா, "கணையாழி' (1967) இதழிலும், சி.மணி "நடை' (1968 அக்டோபர்) இதழிலும் சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டனர். பேராசிரியர் சி.சந்திரலேகாவும் சில ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்தார்.

உருது இலக்கியங்களை அதிலும் குறிப்பாக, கஜல் கவிதையைத் தமிழுக்கு அறிமுகம் செய்த கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழில் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை வெகுசன இதழ்களில் தொடர்ந்து எழுதி, ஹைக்கூவைப் பரவலாகக் கொண்டுசேர்த்தார். 

முதன்முதலாக நேரடியான தமிழ் ஹைக்கூ கவிதைகளை 1973-இல் கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதினார். கவிக்கோ எழுதிய 5 ஹைக்கூ கவிதைகள், 1974-இல் வெளியான அவரது "பால்வீதி' கவிதை நூலில் "சிந்தர்' எனும்  தலைப்பின்கீழ் இடம்பெற்றன. அதிலொரு ஹைக்கூ;   

மயான வாயிலில்
பழுதாகி நின்றது
ஈனில் ஊர்தி.

தமிழ் நிலத்தில் ஹைக்கூ மெல்ல மெல்ல வேரிறக்கித் துளிர்த்தது. "தமிழில் முதன்முதலாக வெளிவரும் ஹைக்கூ கவிதை நூல்' எனும் அறிவிப்போடு, 1984 ஆகஸ்டில் ஓவியக்கவிஞர் அமுதபாரதியின் "புள்ளிப்பூக்கள்' நூலும், அதே ஆண்டு நவம்பரில் கவிஞர் அறிவுமதியின் "புல்லின் நுனியில் பனித்துளி' நூலும் வெளியாகின. 1985 பிப்ரவரி மாதத்தில் நம் காலத்து மகாகவி ஈரோடு தமிழன்பனின் "சூரியப் பிறைகள்', 1990 மார்ச்சில் கவிஞர் மித்ராவின் "ஹைகூ கவிதைகள்' நூல்களும் வெளிவந்து, ஹைக்கூ கவிதைகளைப் பலரும் அறியச் செய்ததோடு, சிலரை எழுதவும் தூண்டின.

நீண்ட அலகு நாரை
நீரைக் குத்திக் கிழித்தாலும்
நீங்காதிருக்கும் நிலா. 
                                                        -அமுதபாரதி
உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்
அடடா! எத்தனை வளையல்கள்.
                                                       -அறிவுமதி
பயம்
ஊர்ந்து கொண்டேயிருக்கிறது - இது
பாம்பு போன தடம்.
                                                -ஈரோடு தமிழன்பன்
அணில்களே
நகங்களை வெட்டுங்கள்
பூவின் முகத்தில் காயங்கள். 
                                                           -மித்ரா

தமிழில் ஹைக்கூ கவிதை அறிமுகமான ஆரம்பக் காலங்களில் துணுக்குக் கவிதை, குட்டிக்கவிதை என்று அதன் மூவரி வடிவத்தை மனதில்கொண்டே பலரும் கேலியாக விமர்சித்தனர். மேலும், ஓரிருவர் "ஹைக்கூ எழுதுவது அந்நிய கவிதை மோகம்' என்றும் கிண்டலடித்தனர். 

ஹைக்கூ என்பது வெறும் மூன்று வரிகளையுடைய கவிதை மட்டுமல்ல; அதையும் தாண்டி, அதன் செறிவான மொழி, காட்சியழகு, வாசிக்கிற வாசகனையும் தன் கூட்டுப் படைப்பாளியாக்கிக்கொள்ளும் அதன் சமூகப் பயன்பாடு என எதைப் பற்றியும் அறிந்துகொள்ளாமல் மேம்போக்கான பார்வையிலேயே ஹைக்கூவை அணுகிய பலரும் இன்றைக்கு அமைதியாகிவிட்டனர்.

தமிழில் ஜப்பானிய மரபுப்படி 17 அசைகளுடன் ஹைக்கூ எழுத முடியாது. மேலும், ஜப்பானில் தொடக்க காலத்தில் ஹைக்கூவில் காதலோ, சமூக விமர்சனமோ கூடாது என்றும் சொல்லப்பட்டது. அத்தோடு மூன்று வரி எனும் வரையறையையும் கடந்து 6, 7 வரிகளில் கூட ஹைக்கூ எழுதப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஹைக்கூ தனக்கான வடிவச் செறிவை வரித்துக்கொண்டது. அவ்வாறே இன்றைக்குத் தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளும் சிலவற்றை அடிப்படைக் கூறாகக் கொண்டுள்ளன. அவை;

1. நேரடியான காட்சியின் அனுபவத் தாக்கம்
2. செறிவான - கவித்துவமான மூன்று வரிகள்
3. மூன்றாவது வரியில் எதிர்பாரா மின்தூண்டல்

இத்தகைய உள்ளடக்கத்தை முன்வைத்தே இன்றைக்குத் தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்படுகின்றன.

"சின்னதாய் இருக்கும் பெரிய அற்புதம்; சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழியால் ஹைக்கூ எழுதப்பட வேண்டும்' என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொன்னதையும், "கவிதை புறமனம் தீட்டும் ஓவியம்; ஹைக்கூ அடிமனதின் வெடிப்பு' என்று கவிஞர் சேலம் தமிழ்நாடன் சொன்னதையும் மனதிலிறுத்தியே இன்று தமிழில் ஹைக்கூ கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. தமிழில் ஹைக்கூ எழுதும் எல்லாக் கவிஞர்களுமே ஹைக்கூ குறித்த சரியான புரிதலோடும் தெளிவோடும் எழுதுவதில்லை என்றாலும், தமிழில் அறிமுகமாகி வளர்ந்துவரும் ஒரு புதிய வடிவம் எனும் வகையில் பலரும் ஆர்வத்தோடும், தேடலோடும் ஹைக்கூவை எழுதி வருகின்றனர். 

அவர்களை முதலில் திறந்த மனதோடு வரவேற்க வேண்டும்.  

தமிழில் எழுதப்பட்ட சில ஹைக்கூ கவிதைகளைக் காண்போம்.

திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச்சாவி.
                   -ராஜமுருகுபாண்டியன்   


அய்யனார் கை அரிவாள் மீது
சிட்டுக் குருவியொன்று
இயல்பாக அமர்கிறது.
 -மணி சண்முகம்  
திடீர் மழை
சுள்ளி பொறுக்கும் சிறுமிக்கு
குடை பிடிக்கும் மரம்.
                   -ஆரூர் தமிழ்நாடன்


செருப்பில் ஏறிப் பார்த்து
காலுக்குப் பொருந்தாமல் இறங்கிச்செல்கிறது
எறும்பு.
-என்.லிங்குசாமி   
விண்மீன்கள் ரசித்தபடியே
உறங்கும் குழந்தைகள்
பழுதடைந்த தொலைக்காட்சி.
   -பாரதி ஜிப்ரான் 


மெழுகோடு இருளையும்
சேர்த்துண்ணும் சுடர்
சுடரையுண்ணும் இருள்
-ஸ்ரீரசா     


நண்பனின் மரணம்
இடுகாட்டில் நுழைகையில்
நெற்றியில் முதல் தூறல்.
   -மு.முருகேஷ்


சோளக்காட்டுப் பொம்மை காவல்
அறுவடைக் காலம்
பயமின்றி நெல்லறுக்கிறது எலி.
  -கோ.லீலா

தமிழின் தொன்மைச் சிறப்பையும் செழுமையையும் உலகிற்குச் சொல்லும் வகையிலான செறிவான ஹைக்கூ கவிதைகள் இன்று தமிழில் ஆயிரமாயிரமாய்ப் படைக்கப்பட்டு வருகின்றன என்பதை தொடர்ந்து  அதனை வாசித்து வருபவர்களால் கண்டுணர முடியும்.

தமிழில் ஹைக்கூ அறிமுகமாகி, தற்போது சரியாய் 41 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம். தற்போது, இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில் மட்டுமே மிகவும் அதிகமாக சுமார் 1100-க்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவந்துள்ளதாக அறிய முடிகிறது. அவை முழுக்கவும் ஹைக்கூ கவிதை நூல்களாக மட்டுமல்லாமல், ஹைக்கூ சார்ந்த பிற கிளை வடிவங்களான சென்ரியூ, -மரைக்கூ, -மர்புன், ஹைபுன் ஆகிய வடிவங்களிலும் வெளியாகியுள்ளன என்பது சிறப்புக்குரியது.

சென்ரியூ எனும் சிரிப்பு மத்தாப்புகள்:

தமிழுக்கு ஹைக்கூ கவிதைகள் அறிமுகமானபோதே, அதனோடு சேர்ந்துவந்த, ஹைக்கூவோடு ஒட்டிப்பிறந்த இன்னொரு கவிதை வடிவம் சென்ரியூ (நங்ய்ழ்ஹ்ன்). 

தொடக்கக் காலத்தில் ஹைக்கூ, சென்ரியூ எனப் பிரித்துணரத் தெரியாமல் அல்லது முடியாமல் எல்லோரும் ஹைக்கூ என்ற பெயரிலேயே சென்ரியூவையும் எழுதிவந்தனர்.  

இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் சென்ரியூவை தனியே பிரித்தறிய வேண்டும் என்கிற புரிதல் பலரிடத்தும் உண்டானது. எது ஹைக்கூ, எது சென்ரியூ எனும் கேள்விகளுக்கும் விடைதேடத் தலைப்பட்டனர்.

ஹைக்கூ என்பது இயற்கையை அடிப்படையாகக் கொண்டது. எதையும் அதிர்ந்து சொல்லாது. மௌனமாக அதே நேரத்தில் வீர்யத்துடன் சொல்லும் செறிவான மொழியைக் கொண்டிருக்கும்.

சென்ரியூ என்பது நகைச்சுவையைப் பிரதானமாகக் கொண்டது. எதையும் எவ்வித மறைவுமின்றி உரத்த குரலில் சொல்லும். ஹைக்கூவில் நேரடியாகச் சொல்ல முடியாத சமூகச் சீர்கேடுகளையும், அரசியல் விமர்சனங்களையும் தயங்காமல் சொல்லிவிடும். கேலியும், கிண்டலுமாகப் படித்ததும் நம்மைச் சிரிக்க வைக்கும் கவித்தெறிப்பே சென்ரியூ. 

ஹைக்கூ ஆய்வறிஞர் ஆர்.ஹெச்.பிளித் கூறுகையில், "கவித்துவம் அதிகமாக இருந்தால் அது ஹைக்கூ எனப்படும். நகைச்சுவை அதிகமெனில் அது சென்ரியூ ஆகும்' என்கிறார் 

"ஹைக்கூவில் நீதி கூறுதல், கொள்கை பரப்புதல் ஆகியவை இல்லையெனும் குற்றச்சாட்டை சென்ரியூ நீக்குகிறது. சென்ரியூவில் அங்கதச் சுவை கொண்ட நகை (நஹற்ண்ழ்ண்ஸ்ரீஹப் ட்ன்ம்ர்ன்ழ்), அரசியல், சமுதாயம், இயக்கம் சார்ந்ததாயுள்ளது. ஹைக்கூவின் வழித் தோன்றலாயுள்ள சென்ரியூவின் மூலம் "கலை வாழ்வுக்காக' எனும் நோக்கம் நிறைவேறும்' என்று கவிஞரும் ஹைக்கூ ஆய்வாளருமான நிர்மலா சுரேஷ் தனது கருத்தாகக் கூறியுள்ளார்.

தமிழில் ஹைக்கூ, சென்ரியூ கவிதைகள் எல்லாம் ஒன்றாகக் கலந்து, ஒரே நூலாகவே வெளியாகி வந்தன. இச்சூழலில் 2001 ஏப்ரலில், தமிழின் முதல் சென்ரியூ நூலினைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட்டார். நூலின் பெயர்; "ஒரு வண்டி சென்ரியு.'

எல்லோர் வீட்டிலும்
இரவல் குழம்பு கேட்கிறாள்
காணாமல்போனது கோழி.
சிலைக்கு வெளியே போய்வந்த
கடவுள் நிலையாய் நின்றார்
சிலையைக் காணோம்.

அந்நூலிலுள்ள இவ்விரு சென்ரியூ கவிதைகளும், மூன்று வரிகளில் இருந்தாலும் இவை ஹைக்கூ அல்ல; 

படிக்கையிலேயே நமக்குள் வெடிச்சிரிப்பை உண்டாக்குமெனில் அது சென்ரியூ என்பதை உணர வேண்டும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் முன்னெடுப்பைத் தொடர்ந்து, சில சென்ரியூ கவிதை நூல்களும் தமிழில் வந்தன. பின்னர் ஹைக்கூ கவிதை நூலுக்குள்ளேயே சென்ரியூ கவிதைகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டும் வகையிலும் சில நூல்கள் வெளியாகின. தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளில் பாதி கவிதைகள் சென்ரியூவாகவே உள்ளன என்பதையும் அறிய முடிகிறது. 

தற்காலத்தில் எழுதப்பட்ட சில சென்ரியூ கவிதைகள் இவை;

இருக்காது சும்மா
ஆடிய காலும் பாடிய வாயும்
ஊழல்வாதி கையும்.
                                                   -இரா.இரவி    

உடைந்த நிலையில்
மாரியம்மன் வாய்
பூசாரி தங்கப் பல்லில்.
                                                 -பா.சிவா

ராஜாஜியைத் தூக்கு அண்ணாவை வை
வரலாறு புரண்டு கொண்டிருந்தது
புத்தகக் கண்காட்சியில்.
    -ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம்

எல்லை மீறல்
நடந்துகொண்டே இருக்கிறது
பேச்சுவார்த்தைகளில்.
-புதுகை ஆதிரா
கவனமான தேர்வு
கலந்துகொண்டோர் குறைவு தான்
ஹைக்கூ மாநாடு.
                                     -சகா

ஹைக்கூ கவிதைகள் இயற்கை மீது கூடுதல் நேசம் கொள்வதைப் போலவே, சமூகச் சாடல்களைச் சொடுக்குவதில் சென்ரியூ கவிதைகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ஹைக்கூ, சென்ரியூ இரண்டுமே மூவரி எனும் வரையறைக்குள் இருந்தாலும், நகைச்சுவை உணர்வையூட்டும் கவிதைகளை, நேரடியான கருத்துகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை இனியேனும் சென்ரியூ என நாம் இனம் பிரித்து அறிய வேண்டும்.

"கீழ்த்திசை பௌத்தச் சிந்தனையில் அரும்பி, சீனத்துப் பண்பாட்டில் போதாகி, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மணம் பரப்பும் மலர் ஹைக்கூ. 

இந்திய, சீன, ஜப்பானிய பௌத்தக் கூறுகள், தாவோயி சம், கன்பூஷியனிசம், சீனக் கலை, ஜப்பானிய ஓவியம், இகபானா மலர்க் கலை என்று இவையெல்லாம் சங்கமித்துக் கலந்து புதிய பரிமாணம் பெற்ற வடிவம் ஹைக்கூ' என்று பேராசிரியர் தி.லீலாவதி (பக்கம்: 14, ஜப்பானிய ஹைக்கூ - டிசம்பர்-1987) கூறியதற்கேற்ப, தமிழ் மொழிக்குப் புதிய செறிவையும் இறுக்கத்தையும் தரும் வகையில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்படுகின்றன.

ஒரு கவிதையானது மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, சென்ரியூ கவிதை என எவ்வகை வடிவம் கொண்டதாக இருந்தபோதிலும், அது தான் எழுதப்படும் காலத்தைப் பிரதிபலிக்கிறதா, அக் காலத்தில் வாழும் மக்களின் குரலை எதிரொலிக்கிறதா என்பதே மிகவும் முக்கியமாகும்.

"வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா;
சூழும் பகைவர்க்குச் சொல்' என்றெழுதினார்
-கவிப்பேரரரசு வைரமுத்து.

"காலமாற்றத்தை உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டு எழுதப்படும் கவிதைகளே காலத்தை வென்று நிற்கும்' என்பதே வரலாறு. இந்த வரலாற்று உண்மையைச் சரியான அர்த்தத்தில் உள்வாங்கிக்கொண்ட ஹைக்கூ மற்றும் சென்ரியூ கவிதைகள் தமிழில் இன்னும் இன்னுமாகச் செழித்தோங்கி வளரும். இன்னும் பல்லாயிரம் இளைய கவிஞர்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தரும் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.