இந்த பூமியில் பிறக்கும் மனிதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதும் செல்வம், செல்வாக்குடன் சுகமாக வாழ்கின்றார்கள். இன்னும் பலர் வாழ்நாள் முழுவதும் சிரமம், கஷ்டம், வறுமையுடன் வாழ்கின்றார்கள். இதற்கு ஜோதிடத்தில் பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவன் முன்ஜென்மங்களில் செய்த பாவ- புண்ணியங்களைப் பொறுத்தே அமைகிறது. இப்பிறவி வாழ்க்கையில் நன்மை- தீமை பலன்களை அனுபவிப்பது எல்லாம் அவனுடைய முன்பிறவி கர்மவினை பலன்களேயாகும் என்று புராண வேதங்களும், சித்தர்களின் சைவத்தமிழ் சித்தாந்தமும் கூறுகின்றது.
ஒருசிலர் நான் நினைப்பது ஒன்று, வாழ்வில் நடப்பது ஒன்றாக உள்ளதே, நான் நினைப்பதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர் ஒருவன் நினைப்பதுபோல்தான் எல்லாம் நடக்கும். நமக்கு நல்லது எதுவோ? அதையே நினைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். நடைமுறை வாழ்க்கையில் இவை இரண்டுமே சரியாக இல்லை என்பதே உண்மை. இதைத்தான் நமது முன்னோர்கள் "நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும்' என்று கூறியுள்ளார்கள்.
ஒருவரின் இப்பிறவி வாழ்க்கையில் அவரவர் கர்மவினைகளின்படியே வாழ்க்கை அமைந்துள்ளது. நம் வாழ்க்கையில் கஷ்டம் சிரமம் அடைவதற்கு காரணம் என்ன? வாழ்வில் உயர்வைத் தரும் கர்மவினைகள் என்ன? நாம் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது? எது நன்மை? எது தீமை? என்பதை சப்தரிஷி நாடியில் ரிஷிகள் ஏழு பேரும் அவரவர் பிறப்பு ஜாதகம்மூலம் கிரக அமைப்பினைக்கொண்டு தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
செல்வம், செல்வாக்குடன் கோடீஸ் வரனாக வாழும் ஜாதக கிரக அமைப்பினை அறிந்துகொள்வோம். பொதுவாக எல்லா வகை நாடி ஜோதிடமும் ஒருவரின் கர்மவினைகளை அடிப்படையாகக் கொண்டே பலன்களை கூறுகின்றது.
ஒருவர் வாழ்க்கையில் அவர் விருப்பமும் அனுபவிக்கப் போகும் கர்ம வினைகளும், வெவ்வேறாக இருந்தால், அவர் நினைப்பது போல் எதுவும் நடக்காது. வாழ்வில் பொருளாதார வசதி, உயர்வு, தொழில் மூலம்தான் அடையமுடியும். தொழிலைக் குறிக்கும் கர்ம கிரகம் சனியாகும். ஒருவரின் விருப்பத்தை, எண்ணத்தைக் குறிக்கும் கிரகம் குருவாகும். இந்த குருவும், சனியும் இணைந்து, ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்தால் அதனையே தர்ம "கர்மாதிபதி யோகம்' என்று ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. குரு, சனியுடன், ராகுவும் இணைந்திருந்தால் அதனை "கோடீஸ்வர யோக' அமைப்பு என்று கூறப்படுகின்றது. எந்த ராசி லக்னத்தில் பிறந்தவர் ஆனாலும் இந்த பலன் தப்பாமல் நடக்கும். மூன்று கிரக சேர்க்கையே முக்கியம்.
குரு ஒருவரின் முற்பிறவி வினைகளுக்கு தீர்வை தரும் சரியான எண்ணத்தை உருவாக்குவார். சனி அந்த எண்ணத்தை முழுமையாக செயல்படுத்தி செய்யும் காரியம், செயல்களில் வெற்றியையும், செய்யும் தொழிலில் லாபத்தையும் தந்து உயர்த்துவார். இந்த இரண்டு கிரகங்களுடன் ராகு சேரும்போது யோகப் பலன்களை அதிகமாக்கி ஏராளமாக பணம், பொருளை சாம்பாதிக்க வைத்து விடுவார். இவர்கள் இளமையில் தன் வாழ்க்கை உயர்வு பற்றி எண்ணியது போலவே நடக்கும்.
ஒருவன் பிறருக்கு தீமை புரிவான், பிறர் வாழ்க்கையை கெடுப்பான், திருடுதல், பொய் சொல்வது, ஏமாற்றுவது, சட்டத்திற்குப் புறம்பான அனைத்து செயல்களையும் செய்வான். நல்லவன்போல், பெரிய பக்திமான்போல் நடிப்பான். சமுதாயத்தில் அவனைக் கெட்டவன் என்றே எல்லாரும் கூறுவார்கள். ஆனால் வாழ்க்கையில் அவன் தேடாதது எல்லாம் அவனுக்கு கிடைக்கும். ஈடுபடும் காரியம், செயல்களில் தொழில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும், அவன் வாழ்க்கைத் தரம் உயர்ந்துகொண்டே போகும்.
அவன் கர்ம வினைப்படி அவன் வாழ்க்கை அமைந்து அனுபவிக்க செய்கின்றது. இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. சட்டமும் அவனை தண்டிக்க முடியாது.
ஒருவரின் ஜாதகத்தில் குரு, சனி, ராகு இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் இருந்தால், இந்த யோகப் பலன்களைத் தங்கள் வாழ்வில் அனுபவிப்பார்கள். இந்த ஜாதகர்களில் பெரும்பாலோர் பிறக்கும்போது சாதாரண எளிமையான, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். பெற்றவர்களாலும், பூர்வீக சொத்துக்களாலும் நன்மை அடையமுடியாதவர்களாக இருப்பார்கள். இளம்வயதில் மிகவும் சிரமப்பட்டு வாழ்வார்கள். ஆனால் 30 வயதிற்குமேல் தாங்கள் செய்யும் தொழிலில், ஆரம்பத்தில் சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக உயர்வு பெற்று நிர்வாகப் பொறுப்பேற்கும் நிலைக்கு உயர்ந்து வாழ்வார்கள். தொழிலாளியாக, வேலைக்காரனாக, வாழ்க்கையை தொடங்கி, தன் வாழ்வில் பலருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாகிவிடுவான். பல குடும்பத்தைக் காப்பற்றும் நிலைக்கு உயர்வான்.
இதுபோன்று கிரக அமைப்புள்ள ஜாதகனை எந்த தசை, புக்தி நடந்தாலும் பாதிக் காது, உயர்வை தடுக்கமுடியாது. குரு, சனிப்பெயர்ச்சி காலங்களில் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 11-ஆவது ராசிகளில் சனி வரும் காலத்திலும், சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் குரு வரும் காலத்தில் அதிர்ஷ்டமும், நண்மையும் அதிகமாகவே நடக்கும். பிறப்பு ஜாதகத்தில் குரு, சனி, ராகு முறையாக இருந்தால் பூரணமாக பலனை அடைந்து அனுபவிப்பார்கள்.
ஜாதகத்தில் குரு, சனி, ராகு 1, 5, 9, 7, 2, 12-ல் அமர்ந்து குரு சனி கிரகங்களுக்கு எதாவது ஒரு நிலையில் சாபக் கிரகமான கேது சம்பந்தப்பட்டு இருந்தால், அந்த ஜாதகன் நிறைய பணம், பொருள், சொத்துகளை சம்பாதிப்பான். ஆனால் அவன் அனுபவிக்க மாட்டான். எளிமையாக வாழ்வான். அவன் குடும்பத்தினர் அனைத்தையும் அனுபவித்து வாழ்வார்கள்.
மனிதர்களில் சிலர் நல்லவர்களாக, பக்திமானாக, தானம் தர்மம் செய்து வாழ்வார்கள்.
நல்லதையே நினைப்பார்கள். ஆனால் அவர்கள் நினைப்பதுபோல் எதுவும் நடக்காது.
வாழ்வில் உயர்வை அடையமுடியாது. தங்கள் வாழ்வில் மூன்றில், இரண்டு பங்கு வாழ்க்கையை சிரமம், கஷ்டங்களை அனுபவித்தே வாழ்வார்கள். இதற்கு காரணம் தங்களின் கர்மவினை பற்றி அறியாமல் மனதில் நினைப்பதும், செயல்படுவதுமே ஆகும்.
அவரவர் கர்மவினை நிலையை ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள நிலையைக்கொண்டு அறிந்து செயல்பட வேண்டிய முறையில் செயல்பட்டால் இவர்களும் தங்கள் வினையை தடுத்து, நல்ல உயர்வான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.
அதற்கு சப்த ரிஷி நாடியில் பல வழி முறைகளை ரிஷிகள் கூறியுள்ளார்கள்.
குரு, சனி, ராகு கிரக சேர்க்கைபெற்ற ஜாதகர்கள் சில சமயங்களில் வீழ்வதுபோல், வீழ்ந்ததுபோல் தெரியும். ஆனால் மறுபடியும் வாழ்வில் எழுந்து, உயர்ந்து விடுவார்கள். பூர்வஜென்ம புண்ணியம் இப்பிறவியில் பொருளையும் புகழையும் தந்துவிடும்.
செல்: 93847 66742