ப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எ64) போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் சுமித் அன்டில் கலந்து கொண்டார்.

Advertisment

அவர் போட்டியில் மிக அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

aa

இதுவரை பாராலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் யாரும் எறியாத தூரம் இது என்பதால், சுமித் அன்டில் உலக சாதனை படைத்தார்.

இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா எஸ்எச்1 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் 249.6 புள்ளிகளைக் குவித்துத் தங்கத்தை வென்றார். இதேபோல எஸ்எச்1 50 மீ. ஏர் ரைபிள் பிரிவிலும் அவனி லெகாரா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதன் மூலம் பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவனி பெற்றுள்ளார்.

ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2015-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி 63) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலு இந்த முறை வெள்ளி வென்றுள்ளார்.

பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும்.

ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் அவர் 2.07 மீட்டர் உயரம் தாண்டியது ஆசிய அளவில் புதிய சாதனை ஆகும்.

விவசாய குடும்பத்தின் பின்னணியில் இருந்து விளையாட்டு வீரராக மாறியுள்ள பிரவீன் குமார், மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளார்.

2003-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி பிறந்த பிரவீன் குமார் தான் இந்தியாவிற்காக இளம் வயதில் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

50மீ கலப்பு துப்பாக்கிச் சுடுதல் பிஸ்டல் பிரிவில் (நஐ1) இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் மனிஷ் நர்வாலும், சிங்ராஜ் அதானாவும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினர்.

மனிஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீரரான சிங்ராஜ் அதானா 216.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஒரே பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியர்கள் வரலாறு படைத்துள்ளனர்.

பாட்மிண்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் பிரிட்டன் வீரரை இறுதி போட்டியில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கிச் சுடுதலுக்குப் பிறகு பாட்மிண்டனில் ஒரே நேரத்தில் இந்தியர்கள் பதக்கம் வென்று சாதித்தனர்.

12 நாட்கள் நடந்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன.

போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளின் அணிகளும், தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன.

இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்ற இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.

பின், பாராலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, வரும் 2024-இல் நடக்கவுள்ள பாரீஸ் நகர நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்து வரும் 2024-இல், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17-வது பாராலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.

பதக்கப் பட்டியலில் 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்கள் குவித்து சீனா முதலிடம் பிடித்தது.

2016 ரியோவில் நடைபெற்ற போட்டியில் சீனா 107 தங்கம், 81 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 239 பதக்கங்களை வென்றிருந்தது.

41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2-வது இடத்தை பிடித்தது.

பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 24-வது இடத்தைப் பிடித்தது.

பாராலிம்பிக் வரலாற்றில் 1968 முதல் இந்தியா பங்கேற்று வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு பாராலிம்பிக் வரை மொத்தமாக 12 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்தது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 1984-ஆம் ஆண்டு நியூயார்க் பாராலிம்பிக் மற்றும் 2016-ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தலா 4 பதக்கங்கள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

ஆனால், முதல்முறையாக டோக்கியோ வில் 19 பதக்கங்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.