டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் 2021 ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது.
17 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழாவில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் 113 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.
88 பதக்கங்களுடன் சீனா 2வது இடத்தையும், 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தையும் பிடித்தன. இந்தியா 7 பதக்கங்களுடன் 48வது இடத்தை பெற்றது.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி அதிகப் பதக்கங்கள் (7) பெற்ற போட்டி இது. இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் பெற்றதே முந்தைய சாதனையாக இருந்தது.
ஒலிம்பிக்கின் இறுதிக் கட்டத்தில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார்.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை இந்தியா தோற்கடித்து.
இந்திய சார்பில் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள பட்டியலில் மீராபாய், சிந்து மற்றும் லவ்லினா மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
முதலில் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.
பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் தோல்வியை தழுவிய பி.வி. சிந்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிங்ஜியாவோவை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் எனும் சாதனையை பி.வி. சிந்து படைத்துள்ளார்.
பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப் பிரிவில் அரையிறுதிப் போட்டியில், துருக்கியின் புசெனாஸ் சர்மெனேலி 50 என்ற கணக்கில் லவ்லினாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இருப்பினும் அரையிறுதி வரை முன்னேறியதால் லவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இதன் மூலம் ஒலிம்பிக் குத்துச் சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை லவ்லினா படைத்துள்ளார்.
மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.
ஆண்கள் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
தொடர்ச்சியாக நான்கு ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் பங்கேற்று, அதில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் மல்யுத்த வீரர் என்ற உலக சாதனையை கியூபா நாட்டின் மிஜியன் லோபஸ் படைத்தார்.
பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 25 ஆண்டுகள் நீடித்த உலக சாதனையை முறியடித்து வெனிசுவேலா வீராங்கனை யுலிமர் ரொஜர்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியின் முதல் வாய்ப்பில் 15.39 மீட்டர் தூரம் பாய்ந்த இவர், மூன்றாவதும், இறுதியுமான வாய்ப்பில் 15.67 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய உலக சாதனை படைத்தார்.
ஒரே ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வென்ற முதலாவது நீச்சல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் படைத்தார்.
ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் வார்ஹோல்ம் புதிய உலக சாதனை படைத்தார்.
ஸ்கேட்போர்டிங் ஸ்ட்ரீட் பிரிவில் பதக்கம் வென்று அசத்திய அனைவரும் பள்ளியில் பயிலும் சிறுமிகள் ஆவர். அதிலும் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பான் சிறுமி மோம்ஜி நிஷியாவுக்கு வயது வெறும் 13 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான ஆண்ட்ரூ ஹோய் குதிரையேற்றத்தில் வெண்கலப் பதக்கம் வென்று, வரலாறு படைத்தார்.
பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி
ஓட்டத்தில் பெட்ரே ரிகோ நாட்டைச் சேர்ந்த ஜேஸ்மின் கமாசோ குயின் தங்கப் பதக்கம் வென்றார்.
பந்தய தூரத்தை 12.37 வினாடிகளில் கடந்த அவர், முன்னதாக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியை 12.26 வினாடிகளில் நிறைவு செய்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது தங்கப் பதக்கத்தை பெட்ரோ ரிகோ நாடு வென்று புதிய சாதனை படைத்தது.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 33 ஆண்டுகள் இருந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்த ஜமைக்காவின் எலெய்ன் தோம்சன் ஹேரா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இம்முறை ஒலிம்பிக்கில் முதல் தடவை யாக அறிமுகம் செய்யப்பட்ட 4ல400 கலப்பு அஞ்சலோட்டத்தில் போலந்து அணி தங்கப் பதக்கத்தை வென்றது. பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 09.87 வினாடிகளில் அந்த அணி நிறைவு செய்தது. இதன் மூலம் புதிய ஒலிம்பிக் சாதனையையும் போலந்து அணி படைத்தது.
நீரஜ் சோப்ரா
ஹரியானாவின் கண்ட்ரா கிராமத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா.
பானிபட்டில் உள்ள உடற்பயிற்சி நிலையத் துக்குச் சென்றபோது அருகில் உள்ள விளையாட்டு மையத்துக்கும் செல்வார்.
அங்கே, ஈட்டி எறிதல் வீரர் ஜெய்வீர் சிங்கின் அறிமுகம் நீரஜுக்குக் கிடைத்தது.
அவர் நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதலில் பயிற்சியளித்தார். 19 வயதில் நீரஜ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
2016இல் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் ஆனது மட்டுமல்லாமல், 86.48 மீட்டர் எறிந்து 20 வயதுக்கு உட்பட்டோ ருக்கான உலக சாதனை புரிந்தார்.
தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் எறிந்திருக்கிறார். தனிநபர் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர் என்ற சாதனையோடு, நீரஜ் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார்.