நீர் வரும் நேரம் - பிரகாஷ் பர்யேக்கர் தமிழில் : சுரா (கொங்கணி மொழிக் கதை)

/idhalgal/general-knowledge/time-water-come

நீர் தினமும் வரும். சுமார் பத்து மணியாகும். ஆனால், இன்று இதுவரை நீர் வரவில்லை. எங்களுடைய காப்ஸேம் கிராமத்திலிருக்கும் குழாயை நீர் மறந்துவிட்ட மாதிரிதான். பெண்கள் அனைவரும் நீரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். இணைப்புக் குழாய் உடைந்துவிட்டதுதான் காரணம். இனி நீர் வருவதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாகும். நீரைத் திறந்துவிடும் பொறுப்பி லுள்ள சங்கர் வந்து பார்த்தார். எதுவுமே கூறாமல் போய்விட்டார்.

ஒரு துளி நீரில்லை. என்ன செய்வது? எல்லாரும் ஒருவரோடொருவர் அதை மட்டுமே பேசிக்கொண்டார்கள். முன்பு இரண்டு பொதுக் குழாய்கள் இருந்தன. மேல்பகுதியிலும் கீழேயும் வசிப்பவர்களுக்காக வெவ்வேறு குழாய்கள்... நீர் வந்தவுடன் கூட்டம் கூடிவிடும். எல்லாருக்கும் நீர் வேண்டும். பெண்களின் வாக்குவாதமும் சண்டை யும் மோசமான வார்த்தைகளால் பேசிக்கொள் வதும் வழக்கமான விஷயங்களாகிவிட, சிலர் வீட்டிற்கு குழாய் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்கு முடியாதவர்கள் வழக்கம்போல பொதுக்குழாய்க்கு முன்னால் கூடினார்கள். சண்டையும் ஆரவாரமும்... இடையில் அவ்வப்போது குழாய் இணைப்பு உடையும். அதுதான் நடந்திருக்கிறதென்று தோன்றுகிறது.

மேய்...! ஹோ...! கடுமையான வெப்பம்! பொசுக்கித் தாக்குகிறது. கோவிலுக்கு அருகிலிருக்கும் வாய்க்காலில் மழைக்காலத்தில் என்ன நீர்! அது நிறைந்து ஓடிக்கொண்டிடேயிருக்கும். சலவை செய்வதும் குளிப்பதும் பாத்திரம் கழுவுவதும்... அனைத்துமே இந்த வாய்க்காலில் தான். தீபாவளி வரும்போது வாய்க்கால் வற்ற ஆரம்பித்துவிடும். காப்ஸேம் கிராமத்தில் வாய்க் காலைத்தவிர நீருக்கு வேறொரு வழியுமில்லை. இங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் கல்ட்டி நதி இருக்கிறது. ஆனால், அங்குவரை போய் வருவதற்கு ஒரு மணிநேரமாகும்.

ஸஹாராம், உதய், கோகுல்தாஸ், பாது, ஸாப்லோலி எல்லாரும் தங்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களில் இருக்கிறார்கள். மற்ற ஆண்கள் பிளாஸ்டிக் கேலன்களையும், பெண்கள் பெரிய குடங்களையும், சிறுமிகள் சிறிய பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். கடுமையான வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு... மூன்று பேர் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். இறுதியில் நீருடன் திரும்பி வந்தபோது, சிறுமிகள் வியர்த்துக் குளித்தார்கள். ஆண்களும் பெண் களும் களைத்து சோர்ந்துபோய் காணப்பட்டார் கள்.

மறுநாள் சங்கர் சைக்கிளில் எங்கோ போய்க்கொண்டிருந்தார். எதிர்பாராதவகையில் கிராமத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தார். பெண்கள் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். எல்லாரும் சேர்ந்து அவரை நோக்கித் திரும்பினார்கள். "ஏன் தண்ணிய திறந்துவிடல? நாங்க எவ்வளவு நாளா காத்திருக்கணும்? ஆத்துலயிருந்து தண்ணிக்குடம் தூக்கித் தூக்கி எங்களுக்கு முடியாமப் போச்சு.''

சங்கரும் கோபப்பட்டார்: "இது உங்க பிரச்சினை மட்டுமில்ல. கிராமத்திலிருக்குற எல்லாரோட பிரச்சினையும்... குழாய் சரியாகட் டும். அப்போ தண்ணிய திறந்துவிடுறேன்.''

பெண்கள் அவரை வெறுமனே விடுவதற்குத் தயாராக இல்லை. முழு சிரமங்களையும் அவரிடம் கூறினார்கள்: "எப்போ தண்ணி வரும்? உணவு சமைக்கறதுக்கோ, குளிக்குறதுக்கோ, நனைக்குறதுக்கோ இங்க ஒரு துளி தண்ணி இல்ல. எங்களோட கால்நடைகளுக்கும் தண்ணி இல்ல.'' அதைக் கேட்டு அவர் வினலிவினார்: "நீங்க ஏன் இதையெல்லாம் எங்கிட்ட சொல்றீங்க? எஞ்ஜினியரின் அலுவலகத்துக்குப் போய் புகார் செய்யக்கூடாதா?''

அவர் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர். கடந்த நான்கு வருடங்களாக அடுத்தடுத்து இருக்கும் கிராமங்களுக்கு நீர் திறந்துவிடும் வேலையைச் செய்கிறார். அந்த வழியாக வந்த தத்தா பெண்களிடம் கேட்டார்: "இல்ல... நீங்க ஏன் இந்த ஆள்மேல பாயறீங்க? உடைஞ்ச குழாயை சரி செய்யறதுக்கு இவரால முடியுமா? தண்ணி வந்தா, இவர் திறந்த

நீர் தினமும் வரும். சுமார் பத்து மணியாகும். ஆனால், இன்று இதுவரை நீர் வரவில்லை. எங்களுடைய காப்ஸேம் கிராமத்திலிருக்கும் குழாயை நீர் மறந்துவிட்ட மாதிரிதான். பெண்கள் அனைவரும் நீரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். இணைப்புக் குழாய் உடைந்துவிட்டதுதான் காரணம். இனி நீர் வருவதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாகும். நீரைத் திறந்துவிடும் பொறுப்பி லுள்ள சங்கர் வந்து பார்த்தார். எதுவுமே கூறாமல் போய்விட்டார்.

ஒரு துளி நீரில்லை. என்ன செய்வது? எல்லாரும் ஒருவரோடொருவர் அதை மட்டுமே பேசிக்கொண்டார்கள். முன்பு இரண்டு பொதுக் குழாய்கள் இருந்தன. மேல்பகுதியிலும் கீழேயும் வசிப்பவர்களுக்காக வெவ்வேறு குழாய்கள்... நீர் வந்தவுடன் கூட்டம் கூடிவிடும். எல்லாருக்கும் நீர் வேண்டும். பெண்களின் வாக்குவாதமும் சண்டை யும் மோசமான வார்த்தைகளால் பேசிக்கொள் வதும் வழக்கமான விஷயங்களாகிவிட, சிலர் வீட்டிற்கு குழாய் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்கு முடியாதவர்கள் வழக்கம்போல பொதுக்குழாய்க்கு முன்னால் கூடினார்கள். சண்டையும் ஆரவாரமும்... இடையில் அவ்வப்போது குழாய் இணைப்பு உடையும். அதுதான் நடந்திருக்கிறதென்று தோன்றுகிறது.

மேய்...! ஹோ...! கடுமையான வெப்பம்! பொசுக்கித் தாக்குகிறது. கோவிலுக்கு அருகிலிருக்கும் வாய்க்காலில் மழைக்காலத்தில் என்ன நீர்! அது நிறைந்து ஓடிக்கொண்டிடேயிருக்கும். சலவை செய்வதும் குளிப்பதும் பாத்திரம் கழுவுவதும்... அனைத்துமே இந்த வாய்க்காலில் தான். தீபாவளி வரும்போது வாய்க்கால் வற்ற ஆரம்பித்துவிடும். காப்ஸேம் கிராமத்தில் வாய்க் காலைத்தவிர நீருக்கு வேறொரு வழியுமில்லை. இங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் கல்ட்டி நதி இருக்கிறது. ஆனால், அங்குவரை போய் வருவதற்கு ஒரு மணிநேரமாகும்.

ஸஹாராம், உதய், கோகுல்தாஸ், பாது, ஸாப்லோலி எல்லாரும் தங்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களில் இருக்கிறார்கள். மற்ற ஆண்கள் பிளாஸ்டிக் கேலன்களையும், பெண்கள் பெரிய குடங்களையும், சிறுமிகள் சிறிய பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். கடுமையான வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு... மூன்று பேர் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். இறுதியில் நீருடன் திரும்பி வந்தபோது, சிறுமிகள் வியர்த்துக் குளித்தார்கள். ஆண்களும் பெண் களும் களைத்து சோர்ந்துபோய் காணப்பட்டார் கள்.

மறுநாள் சங்கர் சைக்கிளில் எங்கோ போய்க்கொண்டிருந்தார். எதிர்பாராதவகையில் கிராமத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தார். பெண்கள் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். எல்லாரும் சேர்ந்து அவரை நோக்கித் திரும்பினார்கள். "ஏன் தண்ணிய திறந்துவிடல? நாங்க எவ்வளவு நாளா காத்திருக்கணும்? ஆத்துலயிருந்து தண்ணிக்குடம் தூக்கித் தூக்கி எங்களுக்கு முடியாமப் போச்சு.''

சங்கரும் கோபப்பட்டார்: "இது உங்க பிரச்சினை மட்டுமில்ல. கிராமத்திலிருக்குற எல்லாரோட பிரச்சினையும்... குழாய் சரியாகட் டும். அப்போ தண்ணிய திறந்துவிடுறேன்.''

பெண்கள் அவரை வெறுமனே விடுவதற்குத் தயாராக இல்லை. முழு சிரமங்களையும் அவரிடம் கூறினார்கள்: "எப்போ தண்ணி வரும்? உணவு சமைக்கறதுக்கோ, குளிக்குறதுக்கோ, நனைக்குறதுக்கோ இங்க ஒரு துளி தண்ணி இல்ல. எங்களோட கால்நடைகளுக்கும் தண்ணி இல்ல.'' அதைக் கேட்டு அவர் வினலிவினார்: "நீங்க ஏன் இதையெல்லாம் எங்கிட்ட சொல்றீங்க? எஞ்ஜினியரின் அலுவலகத்துக்குப் போய் புகார் செய்யக்கூடாதா?''

அவர் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர். கடந்த நான்கு வருடங்களாக அடுத்தடுத்து இருக்கும் கிராமங்களுக்கு நீர் திறந்துவிடும் வேலையைச் செய்கிறார். அந்த வழியாக வந்த தத்தா பெண்களிடம் கேட்டார்: "இல்ல... நீங்க ஏன் இந்த ஆள்மேல பாயறீங்க? உடைஞ்ச குழாயை சரி செய்யறதுக்கு இவரால முடியுமா? தண்ணி வந்தா, இவர் திறந்துவிடுவாரு. அவ்வளவுதான்...''

அந்தவகையில் சங்கர் தப்பித்துக்கொண்டார். இதற்கிடையில் கிராமத்தைச் சேர்ந்த மற்றவர் களும் அங்குவந்து சேர்ந்தார்கள். துளஸிதாஸ் கூறினார்: "சங்கர் சொன்னதுபோல நாம செய்வோம். எஞ்ஜினியரைப் பார்ப்போம்.'' தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவரின்மீது குறைகூறும் வகையில் அவர் கூறினார்: "தலைவராம்! ஊர்ல இருக்கறவங்களைப் பத்தி அவருக்குக் கொஞ்சமாவது சிந்தனை இருந்திருந்தா இங்கவந்து விசாரிச்சிருப்பாரே?'

அதைக்கேட்டு கோபமடைந்த கஸ்தூரிபாயி கூறினாள்: "எஞ்ஜினியர் நம்மோட பிரச்சினை களை ஏன் கேட்கக்கூடாது? நாம் தண்ணிக்கான பில்லை ஒழுங்கா கட்டறோம் இல்லியா?'' இறுதியில் அங்கு ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. மறுநாளே எல்லாரும் சேர்ந்து எஞ்ஜினியரின் அலுவலகத்திற்குச் சென்றார்கள்...

கிராமத்து மக்களின் பிரச்சினையைக்கேட்டு, எஞ்ஜினியர் கூறினார்: "குழாயை சரிசெய்யறதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும். நாளை காலையிலேயே உங்களுக்கு டேங்கர் லாரியில தண்ணி வந்துசேர ஏற்பாடு செய்றேன்.'' அவர்களைத் திரும்பிச் செல்லும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

water

மறுநாள் பத்துமணிக்கு டேங்கர் வந்தது. குடங்கள், பக்கெட்கள், பெரியதும் சிறியதுமான பாத்திரங்கள் ஆகியவற்றுடன் முழு கிராமமும் டேங்கர் லாரியைச் சுற்றிநின்றது. நீர் பிடிக்கக் கூடிய அவசரத்தில் சிலர் ஒருவரோடொருவர் சண்டை போட்டார்கள். சிறிய குழந்தைகள் பாத்திரங்களுடன் டேங்கரைச் சுற்றி நடனமாடி னார்கள். பெண்களுக்கு மத்தியில் பாத்திரங்களை நிறைப்பதற்கு முட்டலும் மோதலும் நடந்தன. மற்ற கிராமங்களில் இருப்பவர்களுக்கும் நீர் வேண்டுமென்று கூறி வண்டிக்காரன் திடீரென்று புறப்பட்டான். மிகவும் சிறிய அளவிலேயே நீரைக் கொடுத்தான். பெரும்பாலான பாத்திரங்கள் நிறையவில்லை. பெண்கள் லாரிக்காரனை மோசமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித் தார்கள். "ஒரு குடம் தண்ணிய வச்சு என்ன செய்யமுடியும்?'' ராஜகம் கோபப்பட்டாள்.

"நாம அவனோட வண்டியைப் பஞ்சராக்கி யிருக்கணும். முழு தண்ணியும் கிடைச்சிருக்கும்.'' சில இளைஞர்கள் கூறினார்கள்.

கீழ்ப்பகுதியில் வசிக்கும் ஆவடு கோபத்தில் முணுமுணுத்தாள். "ஒரு குடம் தண்ணிக்கு மேலே ஒரு துளிகூட தராத இவனைப் புலி பிடிக்கட்டும்! நாளைக்கு இங்க வரட்டும். யாருன்னு காட்றேன்.''

மறுநாள் டேங்கர் வரவில்லை. மீண்டும் நீருக்கான தேடல்கள தொடர்ந்தன. ஆட்கள் மீண்டும் கல்ட்டி நதியின் கரையை நோக்கி ஓடினார்கள். இரண்டு நாட்களுக்குப்பிறகு நீர் வருமென்று எஞ்ஜினியர் கூறினார். ஆனால், ஐந்து நாட்கள் கடந்தபிறகும் நீர் வரவில்லை.

அடுத்த நாள் மாலை நீர் வருமென்றும், குழாய் சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் சங்கர் கிராமத்து மக்களுக்குத் தெரிவித்தார். எல்லாருக் கும் சந்தோஷம் உண்டானது. குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு அவர்கள் காத்திருந்தார்கள். நேரம் நள்ளிரவானது. சிறிய அளவில் நிலவின் வெளிச்சமும் இருந்தது. அன்று கிராமத்தில் யாரும் உறங்கவில்லை. கடுமையான வெப்ப மிருந்த காலமானதால், எல்லாரும் வாசலில் படுத்துக்கொண்டும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டும் இருந்தார்கள். இரவில் நீர் வந்தால், பிறகு காலையில் சங்கர் நீரைத் திறந்துவிட மாட்டார். அதனால்தான் அவர்கள் தூங்காமல் காத்திருந்தார்கள்.

கோகலேயின் வீடு கிராமத்தின் கீழ்ப்பகுதியில் இருந்தது. அவளுக்கு குழாய் இணைப்பு இல்லை. பொதுக் குழாயிலிருந்துதான் நீர் எடுப்பாள். பொதுக்குழாய் அவளுடைய வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருந்தது. அவளும் கண் விழித்து அமர்ந்திருந்தாள். மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். படுக்கையை எடுத்து கோகலே வாசலில் போட்டாள். மூன்று குழந்தைகளுக்கும் படுக்கையை விரித்தாள். அவள் வாசலில் அமர்ந்து வெற்றிலை போட ஆரம்பித்தாள். குழாயில் நீர் வராவிட்டாலும், முதலிலேயே பாத்திரத்தைக் கொண்டுபோய் வைப்பது நல்லதென்று கருதி குடத்தை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்தாள். அங்கு சென்றபோது பக்கத்து வீட்டுக்காரியான ஆவடுவும் மற்ற பெண்களும் வரிசை வரிசையாகப் பாத்திரங்கள் வைத்திருப்பதைப் பார்த்தாள்.

கோகலே வருவதைப் பார்த்து ஆவடு கூறினாள்: "ஒரு துளி தண்ணிய பார்த்து அஞ்சு நாளாயிடுச்சு இல்லியா? தண்ணி இல்லாம எப்படி வாழ்றது? இந்த அரசாங்கம் நாசமாப் போகட்டும். ஒரு நாள் கொஞ்சம் தண்ணிய கொடுத்துட்டு நம்ம கண்ணுல மண்ணைத் தூவிட்டாங்க. பிறகு ஒண்ணுமில்ல.''

அதைக்கேட்டு கோகலே இவ்வாறு பதில் கூறினாள்: "குழாயை குறை சொல்லி என்ன பிரயோஜனம்? தண்ணி வந்தா கிடைக்குமே! குற்றம் சுமத்த வேண்டியது நம்மமேலதான். குழாய்ல தண்ணி வர்றதுக்கு முன்ன நாம கிணத்து தண்ணியதானே குடிச்சுக்கிட்டு இருந்தோம்?''

"நீங்க சொல்து உண்மைதான். மார்கழி மாசத்துல மழை சரியா வரலைன்னா கிணறுங்க வத்திடும். ஆனா நம்மோட கடப்பிக்குளம் எந்தக் காலத்திலும் வந்தாது இல்லியா? வருஷம் முழுக்க அதுல தண்ணி இருந்தது. பக்கத்திலிருக்கற கிராமத்தைச் சேர்ந்த ஆட்கள்கூட வந்து அந்த குளத்திலிருந்து நீரை எடுத்துக்கிட்டிருந்தாங்க. இல்லியா?

கிராமத்துக்கான பாதையைப் போட்டபோது, அந்த குளம் மூடப்பட்டு, சாலைக்கு கீழே போய்ட்டது. இப்போ அதுக்கு மேலதான் வாகனங்கள் ஓடிக்கிட்டிருக்கு. அது இல்லாம போயிடக்கூடாதுன்னு எந்த அளவுக்கு கெஞ்சி வேண்டினேன்! யார் கேட்டது? அதுக்காக தன்னந்தனியா போராடினவ நான்.'' கோகலே தன் கவலையைக் கூறிக்கொண்டிருந்தாள்.

காப்ஸேம் கிராமத்திலிருக்கும் கடப்பிக்குளம் மிகவும் பழமையானது. கோடைகாலத்தில் கோவில் குளம்கூட வற்றிப்போய்விட்டாலும் கடப்பிக் குளத்தில் நீர் இருந்தது. கிராமத்தில் வீடுகள் அதிகரித்துக்கொண்டு வந்தன. நீர் பற்றாக்குறை கடுமையானது. கிராம சபையைக் கூட்டினார்கள். குளத்தைத் தூய்மை செய்ய வேண்டுமென்ற தீர்மானம் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த குளத்தைத் தூய்மை செய்தார் கள். அதற்குப்பிறகும் நீர் பற்றாக்குறைக்குப் பரிகாரம் உண்டாகவில்லை. மீண்டும் கிராம சபை கூடியது. நீர் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதைப்பற்றி விவாதித்தார்கள். அப்போது கிராமத்தில் கால்நடைகளை மேய்க்கும் கிழவரான சோமா கூறினார். "கோசாலைக்குப் பக்கத்தில ஒரு பெரிய ஆலமரம் இருக்கு. அதுக்குப் பக்கத்துல கிணறு தோண்டினா தண்ணி கிடைக்கும்.'' எல்லாரும் அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். மண்வெட்டி, கோடரி, அலவாங்கு ஆகியவற்றுடன் கிராமத் தைச் சேர்ந்த அனைவரும் அங்கு வந்தார்கள். இடத்தைப் பார்த்தார்கள். கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தார்கள். சுமார் பதினைந்து... இருபது அடிகள் கீழே சென்றபோது, கீழே பாறை இருப்பதைத் தெரிந்துகொண்டார்கள். எல்லாரும் ஏமாற்றமடைந்து விட்டார்கள். அனைவரும் கிழவர் சோமாவின்மீது குற்றம் சுமத்தினார்கள். தோண்டப்பட்ட கிணற்றுக்குள் சோமாவே இறங்கினார். தோண்டும் கருவியைக்கொண்டு பாறையை உடைத்தார். பாறை உடைந்தவுடன், ஊற்று தெரிந்தது. நீர் வர ஆரம்பித்தது. கடப்பிக் குளத்திலிருந்துதான் நீர் வந்தது. சோமாவின் வாக்கு பலித்துவிட்டது. எல்லாருக்கும் சந்தோஷம்...

ஆலமரத்திற்கு அருகில் இரண்டு... மூன்று பலா மரங்களும் இருந்தன. அங்கிருந்து பார்த்தால் ஸாதேரி தேவியின் ஆலயம் தெரியும். அந்த கிணற்றுக்கருகில் அந்த கோவில்வரை சிறிய ஒரு நடைபாதையும் இருந்தது. மழைக்காலத்தில் கிணறு நிறைந்து ததும்பியது. ஆனால், கோடைகாலத்தில் கடம்பிக்குளத்தில் நீர் குறைவதன் காரணமாக கிணற்றின் நீரும் கீழே இருந்தது. எனினும், அந்த கிணற்றின் நீருக்கு நல்ல குளிர்ச்சி இருந்தது. வழிப்போக்கர்களும் அந்த கிணற்றின் நீரை மொண்டு பருகி திருப்தியடைந் தார்கள். கிராமத்து ஆட்கள் அங்குவந்து குளிப்பதும் வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. கிணற்றுடன் ஒட்டியிருந்த பலாமரத்திற்கு அடியில் கால்நடைகள் ஓய்வெடுத்துக்கொண்டி ருந்தன. கால்நடைகளை மேய்ப்பவர்கள் அவற் றுக்கு கிணற்றின் நீரை மொண்டு கொடுத்தார்கள். கால்நடைகளின் திருவிழா வரும்போது, கிணற்றைச் சுற்றி பெருக்கி சுத்தப்படுத்துவார்கள். தென்னை ஓலையைக்கொண்டு தோரணங்கள் உண்டாக்கி அலங்கரிப்பார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி, கொம்புகளில் சாயம் பூசி, கழுத்தில் செவ்வந்திப்பூ மாலையை அணிவிப்பார்கள். கிணற்றிற்கருகிலிருக்கும் மண்டபத்திலுள்ள கிருஷ்ணரின் சிலைக்கு பூஜை செய்வார்கள். அந்த பகுதியெங்கும் சுறுசுறுப்புடன் இருக்கும். அது ஒரு காலம்!

காலம் கடந்ததும் கிராமத்திற்கு குழாய் வந்தது. ஆரம்பத்தில் குழாய் நீருக்கு மருந்தின் சுவையும் வாசனையும் இருப்பதாக பெண்கள் புகார் கூறி, சமையலுக்கும் பருகுவதற்கும் எடுக்காமல் இருந்தார்கள். துணி துவைப்பதற்குத் தவிர, வேறு எந்த விஷயத்திற்கும் குழாய் நீரைப் பயன்படுத் தாமல் இருந்தார்கள். இப்படியே இரண்டு வருடங்கள் கடந்துசென்றுவிட்டன.

பிறகுதான் பெரிய மாறுதல்கள் உண்டாயின. கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றுக்கருகில் யாருமே போகாத நிலை உண்டானது. கிணற்றில் ஆலமரத்தின் இலைகள் விழுகின்றன; தவளைகள் இறந்து கிடக்கின்றன என்றெல்லாம் கூறி பெண்கள் அங்கு போகாமல் இருப்பதற்கு ஒவ்வொரு காரணத்தைக் கண்டுபிடித்தார்கள்.

ஆனால், கோகலே மட்டும் அந்த கிணற்றையும் குளத்தையும் துறப்பதற்குத் தயாராக இல்லாமலிருந்தாள். சமையல் செய்வதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், சலவை செய்வதற்கும்... அனைத்திற் கும் அவள் அந்த நீரையே பயன்படுத்தினாள். குளத்திற்கருகில் செல்வதென்பதே அவளுக்கு அதிக உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருந் தது. ஒருநாள் கிணற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, மேல்பகுதியில் வசிக்கும் கஸ்தூரி அவளை அழைத்துக் கூறினாள்: "நீ ஒருநாள் இந்த கிணத்தில விழுவே. குழாய் வந்த பிறகும் ஏன் இவ்வளவு கஷ்டப்படுறே?''

அப்போது கோகலே கூறினாள்: "ஆமா... குழாய் தண்ணி இல்லாத நிலை வர்றப்போ, நம்மோட கிணத்து தண்ணிதான் நல்லதுன்னு புரியும்.'' அதற்குப் பிறகு கஸ்தூரி எதுவும் கூறவில்லை.

மேலும் சில வருடங்கள் கடந்தபிறகு, கிணற் றுக்குள்ளேயும் வெளியேவும் சிறிய செடிகள் வளர ஆரம்பித்தன. அதன் இலைகள் நீரில் விழுந்து அழுக ஆரம்பித்தன. கிணற்றின் ஒரு பகுதி இடிந்தது. கற்கள் கிணற்றுக்குள் விழுந்தன. கற்கள் பலவற்றையும் ஆட்கள் தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கிணறு முழுவதும் இடிந்தது. சிதிலமடைந்த கிணற்றில் கால்நடைகளோ குழந்தைகளோ விழுந்துவிடக்கூடிய நிலை உண்டானது. இடிந்த கிணறைக் கட்டவேண்டு மென்றும், நீரைச் சுத்தப்படுத்தவேண்டுமென்றும் கிராமத்து மக்களிடம் கோகலே கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

தசரா, ஹோலி ஆகிய திருவிழா காலத்தில் கோவில்வரைக்கும் வாகனங்கள் வரவேண்டு மென்று ஊரைச் சேர்ந்தவர்கள் விரும்பினார்கள். அதைத் தொடர்ந்து கோவில்வரை வரும் சாலையை உண்டாக்கும் பணியை பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டது. பஞ்சாயத்து தலைவரின் மகன் கூறினான்: "கோவில் வரைக்கும் நல்ல அகலமான பாதை வேணும்.'' கான்ட்ராக்டர் கூறினார்: "அந்த சிதிலமடைஞ்ச கிணறு வழியில் நடுவுல இருக்கு. அங்க ஏராளமா வளர்ந்திருக்கற சிறிய செடிங்க வழியின் அகலத்தை பாதியாக்கிவிட்டிருக்கு. அதனால கிணத்தை மூடிடணும்.''

அதைத் தொடர்ந்து கிணறை மூடுவதற்கும், செடிகளை அகற்றுவதற்குமான தீர்மானம் எடுக்கப்பட்டது. வழி அகலமானது. வாகனங்கள் தேவியின் ஆலயம்வரை வர ஆரம்பித்தன.

கோகலேயின் கண்களுக்கு முன்னால் கடந்தகால சம்வங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. பத்து பதின்மூன்று வருடங்களுக்குமுன் நடைபெற்றதை அவள் நினைத்துப் பார்த்தாள். என்ன செய்யவேண்டு மென்று தெரியாமல் அவள் குழப்பத்தில் இருந்தாள். குழாயிலிருந்து நீர் வருவதற்கு முன்னர் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. "இன்னிக்கு இனிமேல் தண்ணி வருமுன்னு தோணல ஆவடு. நாம வீட்டுக்குப் போவோம். ராத்திரி எவ்வளவோ நேரமாச்சு! எவ்வளவு நேரம்தான் கண் விழிச்சிருக்கறது?'' கோகலே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"எல்லாரும் போயிட்டாங்க. நான் இங்க உட்கார்ந்து என்ன செய்றது? எனக்கும் தூக்கம் வருது'' என்று கூறிவிட்டு ஆவடுவும் வீட்டிற்குத் திரும்பினாள்.

அந்த இரவு வேளையில் குழாயில் நீர் வரவில்லை. காலை வந்ததும், கிராமத்திற்கு இரண்டு டேங்கர்களில் நீர் வந்தது. சிறிது நேரம் கழித்து, எம்.எல்.ஏ. காரில் வந்தார். பஞ்சாயத் துத் தலைவர் ஸ்கூட்டரில் வந்தார். பஞ்சாயத்தின் மற்ற அதிகாரிகளும் வந்தார்கள். பெண்கள் பாத்திரங்களு டன் டேங்கரின் அருகில் ஓடினார்கள்.

எம்.எல்.ஏ. காரிலிருந்து இறங்கினார். ஆண்களும் குழந்தைகளும் அவரைச் சுற்றி கூட்டமாக நின்றார் கள். கூட்டத்தில் யாரோ "எம்.எல்.ஏ. ஸிந்தாபாத்!' என்று முழங்கினார். மக்கள் கூட்டம் அதை திரும்பக் கூறியது. கோடைகாலம் முடிந்து, இடி முழக்கத்துடன் மழை வருவதைப் போல கோஷம் பெரிய அளவில் முழங்கியது. டேங்கரிலிருந்து நிறைய... நிறைய நீர் கிடைத்த சந்தோஷத்தில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப வந்து பாத்திரங்கள் அனைத்தையும் நிறைந்தார்கள்.

ஆனால், இந்த கொண்டாட்டங்கள் எதுவுமே கோகலேயை பாதிக்க வில்லை. அவள் மண்வெட்டியையும் அலவாங்கு என்ற மண்ணைத் தோண்டக் கூடிய கருவியையும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினாள். வழியிலிருந்த கடப்பிக் குளத்தைநோக்கி நடந்தாள். பெரிய ஆலமரத்திற்கு அருகில் சென்றாள். நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். கிணறு இருந்த இடத்தை மனதில் நினைத்துப் பார்த்தாள். புடவைத் தலைப்பை இடுப்பில் இறுகச் சுற்றினாள்.

"இதுதான் என் கடப்பிக்குளம் இருந்த இடம்!' அவள் யாரிடம் என் றில்லாமல் உரத்த குரலில் கூறினாள்.

கோகலே அலவாங்கால் தோண்டி னாள். வெயில் கடுமையானதையோ வியர்வை உண்டானதையோ... எதை யுமே அவள் பொருட்படுத்தவில்லை. ஒவ்வொரு அடி மண்ணை அகற்றிய போதும், அவளுடைய உற்சாகம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

கோகலேவுக்கு ஓய்வில்லை. இறுதியில் நீர் இல்லாமை இருக்காது.

===

மொழிபெயர்ப்பாளரின் உரை!

வணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று வெவ்வேறு மொழிக் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். மூன்றும் மாறுபட்ட கதைக் கருக்களைக் கொண்டவை.

"நீர் வரும் நேரம்' என்ற கொங்கணி மொழிக் கதையை எழுதியவர் பிரகாஷ் பர்யேக்கர். கோவா பல்கலைக் கழகத்தில் கொங்கணி பிரிவின் தலைவரான இவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர். நீர் பிரச்சினையை மையமாக வைத்து உயிரோட்டத்துடன் கதையை எழுதியிருக்கிறார். நீருக்காக சிரமப்படும் மக்களைப் பார்க்கும்போது, நம் மனம் கனப்பதென்னவோ உண்மை.

"தீர்மானம்' என்ற டோக்ரி மொழிக் கதையை எழுதியவர் க்ருஷன் சர்மா. தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர் இவர். பூர்வீக சொத்தினை விற்று நகரத்தில் வீடு கட்டலாம் என்ற ஆசையுடன், கிராமத்திலிருக்கும் தன் தந்தையைச் சந்திக்கச் செல்லும் ஒரு மனிதரின் கதை... இறுதியில் என்ன நடக்கிறது? கதையின் இறுதிப் பகுதி நம்மைப் பரவச நிலையில் நிச்சயம் ஆழ்த்தும்.

"டாக்டர் ஜவஹரின் காதல்' என்ற மலையாள மொழிக் கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மாதவிக்குட்டி. டாக்டர் ஜவஹரின் காதல்லி உண்மையிலேயே ஒரு புதுமையான காதல்தான்!

இந்த மூன்று மாறுபட்ட கதைகளும் உங்களுக்குள் மூன்று மாறுபட்ட அனுபவங்களை நிச்சயம் உண்டாக்கும்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா

uday010521
இதையும் படியுங்கள்
Subscribe