தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டா-லின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதேபோல் பள்ளிக் கல்விமுடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்க விழா கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த திட்டத்தின்கீழ், அரசு பள்ளியில் படித்து, கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்க இத்திட்டம் உதவும். மாணவர்களை, சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ்வழி கல்வியில் படித்து, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தின்கீழ் பயன் அடையலாம்.
கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, சட்டம் சார்ந்த படிப்புகள், அதற்கு இணையான படிப்பு, தொழிற்பயிற்சி படிப்பு என பல்வேறு கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.
உயர்கல்வியில் சேரும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக, இந்த ஆண்டு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழா முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டா-லின் உக்கடம் சென்றார். அங்கு கோவை ஆத்துப்பாலம் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை ரூ.481 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார்.