மிழக பட்ஜெட் 2019-2020 மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் சமர்பித்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் இதர சுகாதார குறியீடுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

மொத்தக் கருவுறு விகிதம் 1.6 ஆக தமிழகத்தில் உள்ளது. இது நாட்டிலேயே குறைவான அளவாகும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு 2012-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப் பட்ட 2011-12-ஆம் ஆண்டு முதல் இதுவரை 28.34 லட்சம் பேர் ரூ.5,527 கோடி அளவிலான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். இத்திட்டம் மத்திய அரசின் முன்னோடித் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய போஜனா திட்டத் துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கான காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

2019-20-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்துக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகைக்காக ரூ.1,363 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் முன்னோடித் திட்டமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம், தகுதி வாய்ந்த அனைத்து கர்ப்பிணிகளுக்கும் முதல் பிரசவத்துக்கு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisment

பள்ளிக்கல்வியை எளிதாக பெறுவதற்கும், தரத்தை மேம்படுத்தவும் 2011-ஆம் ஆண்டு முதல் அரசு 247 தொடக்கப் பள்ளிகளை புதிதாக தொடங்கியுள்ளது. 116 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 1,079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியுள்ளது.

தொடக்கநிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை 99.8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-12-ஆம் ஆண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19-ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந் துள்ளது.

புத்தகப் பைகள், காலணிகள், நோட்டு மற்றும் பாடப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க 10, 11, 12-ஆம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவி களும் ரூ.5 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகையாக இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

இதற்காக வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.313.58 கோடியும், மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,362.27 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு போதுமான உட்கட்டமைப்பை வழங்க நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில் வகுப்பறை கட்டுதல், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்.

கஜா புயல்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி

தமிழக பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ரூ.100 கோடி வழங்கப்படுகிறது.

தமிழக அரசு 2018-19-ஆம் ஆண்டில் 3 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளை நிறுவியுள்ளது.

29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி களை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.

2019-20-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.

பிரதம மந்திரி திறன் வளர்ப்பு திட்டம் போன்ற மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்களில் பெறப் படும் நிதியையும் ஒருங்கிணைத்து கடந்த நிதி ஆண்டில் இதுவரையில் 82,064 இளைஞர்கள் திறன் பயிற்சியை பெற்றுள்ளனர்.

tnbudget

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்துக்கு 2019-20-ஆம் ஆண்டு வரவுச்-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.248.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பசுமை எரிசக்தியை மேம்படுத்தும் நோக்கத்தில் தேனி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.1,125 கோடியில் 250 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்களும் ரூ.2,350 கோடியில் மதிப்பீட்டில் 500 மெகாவாட் திறன் கொண்ட கடலாடி சூரிய மின்னழுத்தப் பூங்கா திட்டமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும்.

சாகுபடிக்கு பயன்படாத சமுதாய மற்றும் பட்டா நிலங்களில், புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பசுமைச் சூழல் நிதியத்தின் கீழ் உள்ள நிதியிலிருந்து 5 மெகாவாட் திறன் கொண்ட சிறிய அளவிலான ஊரக புதுப்பிக்கத்தக்க மின் பூங்காவுடன், அம்மா பசுமை கிராமம் என்ற நிலையான மின் கிராமங்களை தமிழ்நாடு மின்மேம்பாட்டு முகமை ஏற்படுத்தும்.

சமீபத்தில் முதல்வரால் வெளியிடப்பட்ட 2019 சூரியஒளி மின்சக்தி கொள்கை, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தித் திறனை வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்யும்.

சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு களை ஈர்ப்பதற்கான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 10.45 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் 3,123 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி முனையங்கள் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த பட்ஜெட்டில் தொழில் துறைக்கு ரூ.2,747 கோடிய 96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ. 5,890 கோடி செலவில் பிஎஸ்-6 தரத்தில் 12 ஆயிரம் புதிய பேருந்துகளும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 19.50 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம், நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளது.

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும். 2019 - 2020-இல் தமிழக அரசின் கடன் ரூ.3,97,495 கோடியாக இருக்கும். 2019-20-ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.16,315 கோடியாக குறையும். வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது அறிவித்தார்.

வரும் நிதியாண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வருவாய்

மாநில ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 96177.14 கோடி

மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப் படும் எக்சைஸ் வரி: ரூ. 7262.33 கோடி

பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 13122.81 கோடி

வாகனங்கள் விற்பனை, பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 6510.70 கோடி

மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் பங்கு: ரூ. 30638.87 கோடி

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசின் பங்குத் தொகை: ரூ. 25602.74 கோடி

தமிழக அரசின் முக்கிய செலவுகள்:

அனைத்து வகையான மானியங்களுக்கும் செலவு செய்யும் தொகை: ரூ. 82673.32 கோடி

அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவு செய்யும் தொகை: ரூ. 55399.74

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக செலவு செய்யும் தொகை: ரூ. 29627.11 கோடி

வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை: ரூ. 33226.27 கோடி

அரசு நிறுவனங்கள் பராமரிப்புச் செலவு:

ரூ. 11083.42 கோடி

மொத்த வரவும் செலவும்

தமிழக அரசின் மொத்த வருவாய் : ரூ. 197721.17 கோடி

தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி

பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி

தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள்:

உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.169.81 கோடி ஒதுக்கீடு

வருவாய் துறைக்கு ரூ.6,106.9 கோடி ஒதுக்கீடு

தமிழ்மொழி வளர்ச்சி துறைக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு

காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்திற்கு ரூ.8,084.80 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறைக்கு ரூ.407.76 கோடி ஒதுக்கீடு

சிறைச்சாலை துறைக்கு ரூ.319.92 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகம் துறைக்கு ரூ.1,265.64 கோடி ஒதுக்கீடு

வேளாண்மை துறை : மொத்தமாக ரூ.10,550.85 கோடி ஒதுக்கீடு

நுண்நீர் பாசன திட்டத்தில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர்பரப்பளவுக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு

சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் அமைக்க ரூ.84.09 கோடி ஒதுக்கீடு

நிலையான மானாவரி வேளாண்மை திட்டத்திற்கு ரூ.292 கோடி ஒதுக்கீடுv ஒருங்கிணைந்த பண்ணை முறை திட்டத்தில் மேலும் 5,000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் 25 மாவட்டங்களில் ரூ.101.62 கோடி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

கூட்டு பண்ணை திட்டத்திற்கு ரூ.100.42 கோடி ஒதுக்கீட்டில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் அமைக்கப்படும்.

நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு

கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகைக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு வேளாண்மை இயந்திரமய மாக்கல் திட்டத்திற்கு ரூ.172.06 கோடி ஒதுக்கீடு

பயிர்கள் மற்றும் காய்கறிகளை பயிர்விக்கும் முதலமைச்சரின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்திக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

நீடித்த, நிலையான தேசிய வேளாண் இயக்கத்திற்காக ரூ.87.22 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு துறை ரூ.10,000 கோடி ரூபாய் அளவில் வேளாண் கடன் வழங்க உத்தேசம்

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் துறைக்கு மொத்தமாக ரூ.1,252.41 கோடி ஒதுக்கீடு

விலையில்லா கறவை மாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.198.75 கோடி ஒதுக்கீடு

ஜீவன அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

கால்நடை நிலைய கட்டடங்கள் கட்டுமானத்திற்கு ரூ.60.27 கோடி ஒதுக்கீடு

பால் வளத்துறைக்கு ரூ.258.45 கோடி ஒதுக்கீடு

ஆவின் பால் நிலையம் மற்றும் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.237.27 கோடி ஒதுக்கீடு

பால் பதப்படுத்துதல் ரூ.200 கோடி ஒதுக்கீடு

புதிய உறைவிந்து நிலையம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறை - 927.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்திற்காக ரூ.170.13 கோடி ஒதுக்கீடு

நீர்வள ஆதாரங்கள் மற்றும் பாசனம் - ரூ.5,983.98 கோடி ஒதுக்கீடு

குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ரூ.235.02 கோடி ஒதுக்கீடு

பருவநிலை மாற்றத்தை தடுக்கும் திட்டத்திற்காக ரூ.478.73 கோடி ஒதுக்கீடு

அணைகள் புணரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.43 கோடி ஒதுக்கீடு

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு முறையே

ரூ. 445.05 கோடி, ரூ.31.78 கோடி ஒதுக்கீடு

சென்னையை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களை பாதுகாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு

அடையாறு மற்றும் கூவம் நதிகளை சீரமைக்க முறையே ரூ.555.46 கோடி, ரூ.604.77 கோடி ஒதுக்கீடு

பொது விநியோக திட்டத்தின்கீழ் உணவு மானியத்திற்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொது விநியோக திட்டத்தை செயல்படுத்த ரூ.333.81 கோடி ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி பகிர்வு

ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையே ரூ.6,573.61 கோடி, ரூ.5,164.98 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்திற்காக ரூ. 5,178.5 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273.96 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700.64 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கு ரூ.6,265.52 கோடி ஒதுக்கீடு

வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1031.53 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கிடு

உயர்கல்வி துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,958 கோடி ஒதுக்கீடு.