* தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
* ஏற்கெனவே 7 முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், துணை முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
* அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* உலக வங்கி நிதியுடன், ரூ.920 கோடியே 63 லட்சத்தில் தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சர்வதேச அளவில் தமிழ்மொழி, பண்பாட்டை பாதுகாத்து பரப்ப, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும்.
* நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.1,500-இல் இருந்து ரூ.2000- மாக உயர்த்தி வழங்கப்படும்.
* மக்கள் தங்களுக்கு தொடர்பான தரவுத் தகவல்களை தாங்களே திருத்தம் செய்ய, ஒருங்கிணைந்த தமிழ்நாடு மக்கள் இணையதளம் விரைவில் தொடங்கப்படும்.
* அரசின் திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்யும், தமிழ்நாடு மாநில ஆதார சட்டம் முன்வடிவு அறிமுகம் செய்யப்படும்.
* நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு திட்டப்பணிக்கு ரூ.11,073 கோடி ஒதுக்கீடு.
* இந்த ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கீடு.
* நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும்.
* நீர்வழிப்பாதை போன்ற ஆட்சேபத்துக் குரிய புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்க, வருவாய்த் துறை மூலம் தனியார் நிலங்களை கையகப்படுத்தி, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும்.
* விவசாயிகளிடம் இருந்து துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை இந்த ஆண்டு முதல் அரசே நேரடியாக கொள்முதல் செய்யும்.
* சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை உருவாக்கப்படும். விவசாய உற்பத்தியை பெருக்க, ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு உரிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.
* விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.
* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
* அடர்த்தி குறைவாக உள்ள காப்புக் காடுகளில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரம் நடும் பணிகள் ரூ.21 கோடியே 43 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
* சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மீட்புத் திட்டம் ரூ.165 கோடியே 68 லட்சத்தில் செயல்படுத்தப் படும்.
* அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திட்டத்தை ரூ.1,768 கோடியில் செயல்படுத்த அரசு விரை வில் அனுமதி வழங்கும். இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* கைத்தறி நெசவுக்கு நிதியுதவி அளிக்கும் கைத்தறி உதவித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில்களை மேம்படுத்த, புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
*ஏழைகளுக்கான பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில், இந்த ஆண்டில் ரூ.2,276 கோடியில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
* பிரதமரின் வீட்டுவசதி - நகர்ப்புறம் திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் குடியிருப்புகள் ரூ.2,301 கோடியில் கட்டப்படும்.
* முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகபட்ச கடன் வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.
* கர்ப்பிணிகளுக்கு பரவலாக உள்ள ரத்த சோகையை போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள அம்மா தாய் -சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
* பள்ளி மாணவர்களுக்கான 16 வகையான இலவச பொருட்கள் திட்டத்துக்கு ரூ.1,653 கோடியே 89 லட்சமும் மடிக்கணினி வழங்க ரூ.758 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சமூக பாதுகாப்பு உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை 29 லட்சத்து 18 ஆயிரத்தில் இருந்து 29 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* சென்னை வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கான மகளிர் விடுதி இந்த ஆண்டில் அமைக்கப்படும்.
பற்றாக்குறை
* 2018-19 நிதியாண்டில் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடியே 48 லட்சமாகவும், வருவாய் செலவினங்கள் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 742 கோடியே 6 லட்சமாகவும் இருக்கும். இதனால், வருவாய் பற்றாக்குறை ரூ.17,490 கோடியே 58 லட்சமாக இருக்கும். அதேபோல, மூலதன செலவினம் ரூ.28,282 கோடியே 76 லட்சமாகவும், நிதி பற்றாக்குறை ரூ.44,480 கோடியே 73 லட்சமாகவும் இருக்கும்.
* அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி மாநிலத்தின் மொத்தநிலுவைக்கடன் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடியே 84 லட்சமாக இருக்கும். இது அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்துக்கு உட்பட்டு 22.29 சதவீதமாக இருக்கும்.
* தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு:
* வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி
* குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி
* நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி
* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி
* பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி
* உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி
* ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி
*வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு
* மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ. 724 கோடி
* ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்க ரூ.20 கோடி
* தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு ரூ. 347.59 கோடி
* பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ. 786 கோடி
* காவல்துறைக்கு ரூ. 7877 கோடி ஒதுக்கீடு
* மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250 கோடி
* மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி
* சுகாதாரத் துறைக்கு ரூ.11,638.44 கோடி
* உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.172 கோடி
* வேளாண்மைத் துறைக்கு ரூ. 8,916 கோடி
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ. 972.86 கோடி
* தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி
* இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி
* உள்ளாட்சித் துறைக்கு ரூ.17,869 கோடி
* குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி
* முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி
* அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி
* பழங்குடியினர் நலனுக்கு ரூ. 333.82 கோடி
* முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ. 1,336 கோடி
* இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ. 71.01 கோடி
* பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க ரூ. 758 கோடி
* கட்டாயக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி
* சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி
என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.