தமிழ்நாட்டில் வேளாண்மைக்கென முதல்முறையாக தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்கள்:
2021-22ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு ரூ. 34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத் துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் போன்ற துறைகள் அடங்கும்.
ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” அறிமுகம் செய்யப்படும். நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப் பணிகளுக்காக ரூ. 250 கோடி மாநில நிதியி-லிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
நெல்லுக்கான கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 2,015-ம், சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 2,060-ம் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது.
விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ. ரூ.114.68 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை 'நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' என பெயர் மாற்றம் செய்யப்படும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கி யமான உணவை மக்களுக்கு வழங்குவ தற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ. 33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.
பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப் படும்.
மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம். தேவையில்லாமல் பனை மரத்தினை வெட்டும் நடைமுறை நெறிமுறைப் படுத்தப்படும்.
வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் துவக்கப்படும். வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
12. தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடியும் புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை, கிண்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம் உருவாக்கப் படும்.
முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங் களை உள்ளடக்கிய பகுதிகள் 'முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக' அறிவிக்கப்படுகிறது.
மதுரையில் முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திகள் (Driers), இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள் (Pulveriser), தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
கொல்-லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.
மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில் கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதியதாக துவங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
காவேரி டெல்டா பகுதியில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க திருச்சி- நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தட மாக (Agro Industrial Corridor) அறிவிக்கப்படும்.