மிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூகநீதிக்கு உழைத்திட்ட பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாளில் வழங்கப் படுகிறது.

இவ்விருதுகளை பெறுவோர் தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

அந்தவகையில் 2024-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது முனைவர் பாலமுருகனடிமை சுவாமிகள்; தந்தை பெரியார் விருது சுப. வீரபாண்டியன்; அண்ணல் அம்பேத்கர் விருது பி.சண்முகம்; பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவம்; பெருந்தலைவர் காமராசர் விருது உ. பலராமன் ; மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழனி பாரதி; பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் ம. முத்தரசு; தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன்; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் முனைவர் இரா. கருணாநிதி ஆகியோருக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.

Advertisment

ss

அய்யன் திருவள்ளுவர் விருது

தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் முதல் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது.

அந்த வகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

2024-ஆம் ஆண்டு அய்யன் திருவள்ளுவர் விருது பெற்றவர்:

பாலமுருகனடிமை சுவாமிகள்

கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதை தமிழக அரசு வழங்கியது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது

திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல் களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப் படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றவர்:

கவிஞர் ம. முத்தரசு

முத்தமிழறிஞர் கலைஞரால் முத்தரசனின் கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன் என்று பாராட்டை பெற்றவரும் தமது 92-வது வயதிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப் பணியாற்றி வரும் எழுச்சி கவிஞர் ம. முத்தரசுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதை தமிழக அரசு வழங்கியது.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது.

2023-ஆம் ஆண்டு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றவர்:

பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன்

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை தமிழக அரசு வழங்கியது.

மகாகவி பாரதியார் விருது

தேச விடுதலை, பெண் விடுதலைக்காக பாடல் இயற்றிய பாரதியார் பெயரில் பாரதியார் விருது 1979-ஆம் ஆண்டு முதல் வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார் பற்றித் திறனாய்வு செய்வோர், பாரதியார் புகழை பரப்பும் வகையில் கவிதை- உரைநடை நூல் தொண்டு செய்வோர் ஆகியோர் இவ்விருதினை பெறத் தகுதி படைத்தவர்களாவர்.

2023 -ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது பெற்றவர்:

கவிஞர் பழனி பாரதி

தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதை தமிழக அரசு வழங்கியது.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

தமிழ்நாடு அரசு முத்தமிழ்க் காவலர்

கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2000-ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. இவ்விருது ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்:

முனைவர் இரா. கருணாநிதி

தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா. கருணாநிதிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை தமிழக அரசு வழங்கியது.

தந்தை பெரியார் விருது

தமிழக மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கை களை அகற்றவும், சாதி ஒழிக்க, பெண் அடிமைத் தனத்தை எதிர்க்க, திராவிட இனத்தை மேம்படுத்த பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துகளை பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப் படுகிறது.

2023-ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை பெற்றவர்: சுப. வீரபாண்டியன்

பேரறிஞர் அண்ணா விருது

பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1967-1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர். இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

2023-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்: பத்தமடை பரமசிவம்

பேரறிஞர் அண்ணா அவர்களின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான திரு. பத்தமடை பரமசிவத்துக்கு 2023-ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதை தமிழக அரசு வழங்கியது.

அண்ணல் அம்பேத்கர் விருது

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூகநீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

2023 -ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்: பி.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

பெருந்தலைவர் காமராஜர் விருது

தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந் தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது

2023 -ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றோர்:

உ. பலராமன்

தேசிய தமிழ்க் கவிஞர் பேராயம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களைக் கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளை தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உ. பலராமனுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதை தமிழக அரசு வழங்கியது.

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் விருது பெற்ற விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பித்தார்.