தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூகநீதிக்கு உழைத்திட்ட பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படுகிறது.
இவ்விருதுகளை பெறுவோர் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் 2019-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது முனைவர் எம்.ஜி. அன்வர் பாட்சா; தந்தை பெரியார் விருது சி. பொன்னையன்; அண்ணல் அம்பேத்கர் விருது டாக்டர் மருத்துவர் சி. ராமகுரு; பேரறிஞர் அண்ணா விருது பேராசிரியர் மு. அய்க்கண்ணு; பெருந்தலைவர் காமராசர் விருது பழ. நெடுமாறன்; மகாகவி பாரதியார் விருது மா. பாரதி சுகுமாறன்; பாவேந்தர் விருது கவிஞர் தியாரூ; தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது கு. கணேசன்; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
அய்யன் திருவள்ளுவர் விருது
தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் முதல் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019 -ஆம் ஆண்டு அய்யன் திருவள்ளுவர் விருது பெற்றவர்:
எம். ஜி. அன்வர் பாட்சா பாவேந்தர் பாரதிதாசன் விருது
திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றவர்:
கவிஞர் தியாரூ தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது.
2018-ஆம் ஆண்டு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றவர்:
கு. கணேசன், மகாகவி பாரதியார் விருது
தேச விடுதலை, பெண் விடுதலைக்காக பாடல் இயற்றிய பாரதியார் பெயரில் பாரதியார் விருது 1979-ஆம் ஆண்டு முதல் வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார் பற்றித் திறனாய்வு செய்வோர், பாரதியார் புகழை பரப்பும் வகையில் கவிதை- உரைநடை நூல் தொண்டு செய்வோர் ஆகியோர் இவ்விருதினை பெறத் தகுதி படைத்தவர்களாவர்.
2018 -ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது பெற்றவர்:
மா. பாரதி சுகுமாறன் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
தமிழ்நாடு அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2000-ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. இவ்விருது ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்:
சூலூர் கலைப்பித்தன் தந்தை பெரியார் விருது
தமிழக மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கை களை அகற்றவும், சாதி ஒழிக்க, பெண் அடிமைத் தனத்தை எதிர்க்க, திராவிட இனத்தை மேம்படுத்த பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துகளை பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை பெற்றவர்:
சி. பொன்னையன் பேரறிஞர் அண்ணா விருது
பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1967-1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர்.
இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
2018-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்:
பேராசிரியர் மு. அய்க்கண்ணு அண்ணல் அம்பேத்கர் விருது
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கி யவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூகநீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.
2018 -ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்:
மருத்துவர் சி. ராமகுரு பெருந்தலைவர் காமராஜர் விருது
தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது
2018 -ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றோர்:
பழ. நெடுமாறன்
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் தங்கப்பதக்கத் தையும் அவர் அணிவித்தார்.
இதையடுத்து அகவை முதிர்ந்த 92 தமிழறிஞர் களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 ஆகியவற்றைப் பெறுவதற்கான அரசாணையை வழங்கினார்.