2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழ்நாடு அரசு எதிர் தமிழக ஆளுநர் மற்றும் இன்னொருவருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய வரலாற்றில் ஒரு பொன்னான நாளைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை யாக கூட்டாட்சியை - சட்டத்தில் பொதிந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்கள் எனும் அம்சத்தை வலியுறுத்துவதில் இது ஒரு முக்கிய மான தீர்ப்பாகும்.

நமது அரசியலமைப்பை உருவாக்கி யவர்கள் அதை ஒரு செயல்பாட்டுக் கையேடாக மட்டுமில்லாமல், நம்மை நாமே எவ்வாறு ஆளுகிறோம் என்பதற்கான தொலைநோக்கு அறிக்கையாக எழுதினார்கள். இது காலப்போக்கில் நிறைய விளக்கங் களுக்கும் மற்றும் செயல்பாட்டு முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது - கடந்த 75 ஆண்டுகளில் நாம் செய்த 100-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மற்றும் பல முக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவை இந்த உண்மைக்கு சான்றாகும்.

2014 முதல், அரசியலமைப்பிலுள்ள சில தெளிவில்லாத பகுதிகளைப் பயன்படுத்தி, மத்திய அரசு முன் எப்பொழுதும் இல்லாத விதத்தில் அதிகாரத்தை மையப்படுத்த முயற்சித்து வருகிறது - மற்றும் பல சமயங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பிடிவாதமான ஆளுநர்களை நியமித்து - ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் செயல்பாட்டில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது.

Advertisment

gg

இத்தகைய நடவடிக்கைகள் பல மாநிலங்கள் தங்கள் ஆளுநர்களின் நடவடிக்கைகளில் இருந்து நீதி கோரி அல்லது குறைந்தபட்சம் விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு வழிவகுத்தன. உதாரணமாக, கேரள ஆளுநர் நடவடிக்கை காரணமாக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறே பஞ்சாப் அரசும் நீதிமன்றம் சென்று வெற்றியும் பெற்றது, இதில் சட்டசபை கூட்டத் தொடரைக் கூட்டும் ஒரு சாதாரண விஷயத்தில் கூட ஆளுநர் குறுக்கிடுவது சம்பந்தப்பட்ட வழக்கும் அடங்கும். பல ஆண்டுகளாக ஆளுநர் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பான தமிழகத்தின் இதேபோன்ற வழக்கை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தீர்ப்பு, மாநிலச் சட்டங்களைத் தடுக்கும் ஆளுநர்களின் திறனைப் பெரிதும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் அரசியலமைப்பை செயல்படுத்துவதில் சிக்கலாக இருந்த ஒரு இடைவெளியை அகற்றுகிறது, இதை வைத்துத் தான் கடந்த காலங்களில் நேர்மையற்ற முறையில் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தீர்ப்புகள் அரசியலமைப்பின் விளக்கங்களை செம்மைப்படுத்துவதோடு செயல்பாட்டு வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றன. ஒரு நிலையில், இது நவம்பர் 2023-இல் பஞ்சாப் மாநிலம் அதன் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் மற்றும் இன்னொருவர் எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஒரு நீட்டிப்பே ஆகும், இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் உள்ளது, மேலும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தனது ஒப்புதலை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது மற்றும் சட்டமியற்றும் செயல்களில் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஆனால் மற்றொரு நிலையில், இந்த மைல்கல் வழக்கின் பல அம்சங்கள், விரிவான கவனம் செலுத்த தகுதியானதாகும். முதலாவதாக, 10 மசோதாக்கள் நிலுவையில் வைக்கப்பட்ட காலம் ஜனநாயகத்தின் மீதான மோசமான தாக்குதலாகும். முதன்முதலில் நிறுத்தி வைக்கப்பட்ட மசோதா 2020-ஆம் ஆண்டு, அப்போதைய அ.தி.மு.க நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் என்ற பெயரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் மாற்றியது. அனைத்தும் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்டவை, அவைகளின் செயல்பாடுகள் கோவிட் நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் இதிலிருந்து மீளும் முயற்சிகளில் முக்கியமாகத் தேவைப்படுவது உறுதியான ஆளுமையும் உடனடி நிர்வாகமும் தான், ஆளுநரின் செயலற்ற தன்மையால் ஏற்பட்ட ஆழ்ந்த முடக்கம் அல்ல.

Advertisment

gr

இரண்டாவதாக, 10 மசோதாக்களையும், அவற்றின் உள்ளடக்கம் அல்லது முதலில் அறிமுகப்படுத்திய அரசு (அ.தி.மு.க அல்லது தி.மு.க) என்று பாராமல், வார்த்தைகள் மாறாது மீண்டும் நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பெருந்தன்மையையும் விவேகத்தையும் நாம் பாராட்ட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது: எந்த மாற்றமும் இன்றி ஒரே மாதிரியான மசோதா ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டால், ஒப்புதலை நிறுத்தி வைப்பது அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாததாகிறது; இருப்பினும், ஒரு திருத்தப்பட்ட மசோதா மீண்டும் நிராகரிக்கப்படுவதற்கு உட்பட்டது. இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை தமிழக முதலமைச்சர் அங்கீகரித்துள்ளார், இது மாநிலங்களின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி முறைக்கு முக்கியமானது.

அவரது கொள்கை ரீதியான அணுகுமுறை ஒரு தீர்க்கமான சட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது, ஏனெனில் அனைத்து 10 மசோதாக்களும் மொத்தமாக மறு-நிறைவேற்றம் மற்றும் மறு சமர்ப்பிப்பு செய்யப்பட்டது வழக்கை வலுப்படுத்தியது.

Advertisment

இந்தத் தீர்ப்பின் மூன்றாவது குறிப்பிடத் தக்க அம்சம், அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகும். இந்த மசோதாக்கள் சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் வந்த அன்றே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்று அறிவித்ததன் மூலம், நிர்வாகத் தடையில் இருந்து சட்டமியற்றும் செயல்முறைகளைப் பாதுகாக்க நீதிமன்றம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சில தூய்மைவாதிகள், நீதிமன்றத்தின் இந்த அரிய முயற்சி அரசாங்க நிர்வாக நடவடிக்கையில் தலையிடுவதாகும் என்று புலம்பினாலும், வழக்கு நடைபெற்ற காலம் முழுவதும் ஆளுநர் அலுவலகத்தின் அசாதாரண நடவடிக்கைகளால் இது கட்டாயப் படுத்தப்பட்டதேயாகும். அவை நடைமுறை சாமர்த்திய வித்தையின் கவலையளிக்கும் ஒரு வடிவத்தை வெளிப்படுத்தின, ஆகவே இங்கே எந்த விவாதத்திற்கும் இடமேயில்லை. நீதித்துறை ஆய்வு பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த மசோதாக்களால் ஈர்க்கப்பட்டபோது, விசாரணையை பயனற்றதாக மாற்றுவதற்கான வெளிப்படையான முயற்சியாக, ஒப்புதல் நிறுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டு சட்டசபைக்கு மசோதாக்களை அவசரமாக திருப்பி அனுப்பினார். மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப் பட்ட போது, அசல் பிரதிகள் ராஜ் பவனில் இருக்கிறது, நகல் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டது, எனவே அவற்றை மீண்டும் நிறைவேற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு இல்லை என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.

அத்தகைய மசோதாக்களில் தாமதப்படுத்தும் வரம்பற்ற அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கின்றபோது, மீண்டும் நிறைவேற்றப் பட்ட மசோதாக்கள் திடீரென குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. ஒவ்வொரு திருப்பத் திலும், ஆளுநர் தனது நடவடிக்கைகளின் மூலம் சட்டமன்றத்தின் நோக்கம் மற்றும் நீதித்துறை மறுஆய்வு இரண்டையும் சிதைக்க முயன்றார். இது தீர்ப்பின் 432-வது பத்தியில் ஆளுநரின் நடத்தை, நேர்மை குறைந்த தாகவே காணப்படுகிறது என்று வெளிப்படையாகக் கூறுவதற்கு நீதிமன்றத்தை நிர்பந்தித்துள்ளது.

gr

அரசியலமைப்பின் 200 மற்றும் 201 -வது பிரிவின் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி யின் சாத்தியமான நடவடிக்கைகளுக்கு தெளிவான காலக்கெடுவை ஏற்படுத்துவது மிகப்பெரிய தாக்கமாக இருக்கலாம், இது எப்போதும் இல்லாத ஒரு தெளிவைத் தருகிறது. வெறும் 10 வரிகளை உள்ளடக்கி இருந்தாலும், இந்தப் பகுதியின் விளக்கம் இந்தியாவின் 75 ஆண்டுகால அரசியலமைப்பு வரலாற்றில் பரவலாக வேறுபட்டிருக்கிறது, இது அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் எளிதாக இடமளிக்கிறது. 1950- இல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப் பட்டதிலிருந்து முதல்முறையாக வரையறுக்கப்பட்ட காலக்கெடுவின் இந்த கருத்து, இந்தத் தீர்ப்பை நமது குடியரசிற்கு இன்றியமையாததாக நிரூபித்துள்ள கேசவானந்த பாரதி (1973), மற்றும் எஸ்.ஆர் பொம்மை (1994) வழக்குகளின் தீர்ப்புகளின் தரவரிசையில் இடம்பெறச் செய்கிறது. இது தேர்தல் பத்திர வழக்கை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சட்ட ரீதியாக நேர்த்தியானதாகும். அந்த வழக்கில் பத்திரங்களை சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட்டாலும் கூட, தற்போது அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரங்களின் ஆயிரக்கணக்கான கோடிகளின் எதிர்மறையான விளைவுகளைக் தவிர்க்கவோ அல்லது அபராதம் விதிக்கவோ இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படாத எந்தவொரு பதவியிலிருப்பவர்களிடம் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாட்டை கட்டுப்படுத்த எல்லையற்ற அதிகாரம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு முழுமையான வீட்டோ அல்லது பாக்கெட் வீட்டோ (நடவடிக்கையின்றி காலவரையற்ற தாமதம்) அதிகாரங்கள் இல்லை என்றும், இருவரின் செயல்களும் நீதித்துறையின் மறு ஆய்வுக்கு உட்பட்டது என்றும் தெளிவாகக் கூறியதன் மூலம், எந்தவொரு நபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து குடிமக்கள் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.