விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், பத்திரமாக பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி மார்ச் 19-ஆம் தேதி அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், போயிங் நிறுவனத்தின், முதல் விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர்.

Advertisment

dd

அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.

இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. போயிங் நிறுவனத்துக் காக விருந்தாளியாக சென்ற அவர்கள், விண்வெளியில் சிக்கியதால் எப்போது பூமிக்கு திரும்புவர் என்ற கேள்வி எழுந்தது. அவர்களுடைய உடல்நிலை தொடர்பான கேள்விகளும் எழுந்தன. ஆனால், இருவரும், விண்வெளி மையத்தில் தங்கியிருந்தபோது, தங்களுடைய பணிகளை மேற்கொண்டனர்.

Advertisment

பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவர்களை பூமிக்கு அழைத்து வர முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்வெளி நிறுவனத் தின் வாயிலாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அந்த நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் உடன், 'டிராகன்' எனப்படும் வீரர்கள் பயணிக்கும் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சமீபத்தில் சென்றடைந்தது.

இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், மார்ச் 18-ஆம் தேதி புறப்பட்டனர். அவர்களுடன், கடந்த சில மாதங்களாக அங்கு பணியாற்றிய, அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டனர். டிராகன் விண்கலத்தில் சென்ற, நான்கு விண்வெளி வீரர்கள், அவர்களை வழியனுப்பி வைத்தனர். ஸ்பிளாஷ் டவுன் ஆகும் காட்சியை நாசா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தன.

Advertisment

இந்த விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பின், இந்திய நேரப்படி மார்ச் 19-ஆம் தேதி அதிகாலை 3:27 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா அருகே, கடலில் தரையிறங்கியது. கடலில் விழுந்ததும், பந்துபோல் மிதந்து வந்த விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ss

பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு எப்போது திரும்புவர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில் அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. அவர்கள் விண்வெளியில் 9 மாதங்கள் 13 நாட்கள் தங்கியிருந்தனர்.அவர்களது உடல்நிலை சீராக சுமார் 1 ஆண்டு ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தங்கியிருந்ததால் குறிப்பாக அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது.

அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக மாறியிருக்கும். கண்பார்வை திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். கதிரியக்க பாதிப்பு காரணமாக செல்கள், ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். எலும்பு, தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும் என்பதால் அவர்களால் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாது.

விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு திரும்ப நடைமுறை வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்வது பழக்கமாக பல நாட்கள் ஆகும். சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.

பூமிக்குத் திரும்பிய 4 பேரும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு 6 வாரங்கள் (45 நாட்கள்) தீவிர பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக தரையில் கால் ஊன்றி நடப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படும். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு தமது வீடுகளுக்கு செல்வார்கள்.