ரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் உரையாடினார்.

தொடர்ந்து, அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வரும் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்த தனலட்சுமி (மகளிர் உரிமை தொகை), திருவள்ளூர் மாவட்டம் சோரஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 2-ம் வகுப்பு மாணவன் பவனேஷின் தந்தை பிரபு (முதல்வரின் காலை உணவு), செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் கதிரவன் (நான் முதல்வன்), செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் நஸ்ரின் (புதுமைப்பெண்), பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியில் தங்கியுள்ள சீர்காழி ஸ்வாதி முரளி, காணாமல்போன மகளை கண்டுபிடித்து தருமாறு முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்து பயன்பெற்ற திருத்தணி ஜெ.கே.குமார் ஆகியோரிடம் பயன்பெற்ற விவரங்களை தொலைபேசியில் முதல்வர் கேட்டறிந்தார்.

cc

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் நீங்கள் நலமா திட்டத்தின் முதன்மையான நோக்கம். தமிழகத்தில் மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், முதல்வரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் என திட்டங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வருகின்றன. இவை ஒவ்வொரு குடும்பத்தையும், தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்கள் ஆகும்.

அதேபோல, அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். பயனாளிகளின் கருத்துகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம், இந்த அரசின் நலம், தமிழகத்தின் நலம். அந்த நலனை காக்க நான் உழைப்பதன் மற்றும் ஒரு அடையாளம்தான் நீங்கள் நலமா திட்டம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உங்கள் அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் அறிவுறுத்தலின்படி, துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்து பயன் பெற்றவர்களிடம் தொலைபேசி, காணொலி மூலம் பேசி, கருத்துகளை கேட்டறிந்தனர்.