ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டங்களில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இவை அனைத்தும் சுமூகமாக முடிந்தால் 2029-இல் மக்களவைத் தேர்தலுடன் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும். அவ்வாறு நடைபெற்றால் ஏற்படும் தாக்கம் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு நடத்தியது- மக்களிடம் கருத்து கேட்டு ஜனாதிபதியிடம் அறிக்கை அளித்தது. தற்போது ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இவ்வாறு 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்கு வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்தப்படுவதால், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. வழக்கமான பணிகளை விட்டுவிட்டு, போலீசார், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குப்பதிவு வேலையிலும் ஈடுபட வேண்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் இருக்கும் என்பதால், அரசின் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது.
இதுபோன்ற நிலைகளை தவிர்க்க, ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தலை நடத்துவதே சாலச்சிறந்தது என்று 1999-ஆம் ஆண்டே சட்டக்கமிஷன் கருத்து தெரிவித்தது. அதன் பிறகு, பல கட்சி தலைவர்களால் பேசப்பட்டது. 2014-இல் பா.ஜனதா தேர்தல் அறிக்கையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்'' வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்து. ஆட்சிக்கு வந்த பிறகு, இதுகுறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு 191 நாட்களில் 65 கூட்டங்களை நடத்தி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள், தொழில் துறையினரிடம் கருத்து கேட்டது. மொத்தம் 21,588 கருத்துகள் பெறப்பட்டன. இதில் 80 சதவீத கருத்துகள், "ஒரே நாடு; ஒரே தேர்தல்'' நடைமுறைக்கு ஆதரவாக இருந்தன.
ராம்நாத் கோவிந்த் குழுவானது மொத்தம் 47 அரசியல் கட்சிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்றிருந்தது. இதில் 32 அரசியல் கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்திருந்தன. 15 அரசியல் கட்சிகள் எதிர்த்திருந்தன.
இந்த நிலையில், 18,626 பக்கங்களைக் கொண்ட இந்த குழுவின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கப்பட்டது. இப்போது இந்த அறிக்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆக, "ஒரே நாடு; ஒரே தேர்தல்'' என்ற தனது கொள்கையில் பா.ஜனதா அரசு முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.
இனி நாடாளுமன்றத்தில்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும். அவை நிறைவேற்றப் பட்டால், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்தி முடிப்பதுடன், அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல்களையும் நடத்த முடியும் கடந்த வருடம் 2023-இல் சுமார் பத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலங்களில் வரும் 2028-இல் ஆட்சி முடிவுக்கு வந்த பின் அவற்றுக்கு 2029-இல் புதிய திட்டத்தின் கீழ் தேர்தல் நடைபெறும்.
அதுவரை அந்த மாநிலங்களில் காபந்து அரசுகள் தொடரவும் அல்லது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அடுத்து வரும் 2026-இல் தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2027-இல் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளிலும் அமையும் ஆட்சிகள் மூன்று அல்லது அதற்கும் குறைவான வருடங்கள் மட்டுமே தொடரும் நிலை ஏற்படும்.
டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இங்கு அமையும் ஆட்சி, நான்கு ஆண்டுகளில் முடியும் சூழல் உள்ளது. எனினும், ஒரே நாடு ஒரு தேர்தலால் சுமார் 12 மாநிலங்களில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இவை நடப்பு ஆண்டில் தேர்தல் முடித்த ஒடிசா, ஆந்திரா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம், தற்போது தேர்தல் நடைபெறும்.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர், இனி தேர்தல் நடைபெற உள்ள மகராஷ்டிரா, பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஆகும். இந்த 12 மாநிலங்களுக்கு 2029-ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தலால் பெரிய பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் மூலமாக மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் மாநிலங்களவையில் 2029-க்கு சற்றுமுன்பாக காலியாகும் இடங்களில் புதிய எம்.பி.க்கள் தேர்வுசெய்யப்படுவது சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. இந்த ஒரே தேர்தல் முறையால் அரசியல் கட்சிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இது, ஆளும் கட்சிகளுக்கா அல்லது எதிர்க்கட்சிகளுக்கா என்பது 2029 நெருங்கும் சமயத்தில் தெரியவரும்.
இதனால் ஏற்படும் நன்மைகள்
இத்திட்டத்தின் பலனாக முக்கியமானதாக கருதப்படும் சாராம்சம், தேர்தல் செலவு பற்றியே. மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதால் பெருமளவில் செலவுகள் குறையும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இவ்வாறு 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்கு வெவ்வேறு சமயத்தில் தேர்தல் அதுமட்டுமின்றி மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என இரண்டுக்கும் தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இது தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமல்லாது அதில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் நேரமிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவுகள் குறையும், தலைவர்களும் தனித்தனியாக பரப்புரையில் ஈடுபடவேண்டிய சூழல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் மக்களுக்கான பல சேவைகள் தடைபடாது.
இதனால் ஏற்படும் சிக்கல்கள்
இவை எல்லாம் நன்மைகள் எனக் கூறப்படும் நிலையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தால் சிக்கல்கள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, இந்த திட்டம் பெரும்பாலும் தேசிய கட்சிகளுக்கே அதிக பலன் தரும் என விமர்சனம் எழுந்துள்ளது. மாநில அல்லது பிராந்திய கட்சிகள் தங்களது கொள்கை ரீதியாக கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் கருதப்படுகிறது.
சுயாட்சி உரிமை பறிபோய்விடும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சமும் இத்திட்டத் தால் எழுந்துள்ளது.
அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்பட்டு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் நிலைமையும் ஏற்படும் என கூறப்படுகிறது.
மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என கருதப்படுகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் ஏற்படும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும் நாடாளுமன்ற, சட்டசபை, உள்ளாட்சி இந்த 3 தேர்தல்களுக்கும் வாக்காளர் பட்டியல் ஒன்றுதான். தேர்தல் நடத்துவதில் இதுவொரு நல்ல முறை என்றாலும், அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்து நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது எளிதல்ல. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்ற வேண்டும். அதாவது, மக்களவையில் 362 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 156 உறுப்பினர் களும் ஆதரவு தெரிவிக்கவேண்டும். ஆனால், இப்போது மக்களவையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர் களும், காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கு 240 உறுப்பினர் களும் உள்ளனர். இதுபோல, மாநிலங்களவையில் பா.ஜனதா கூட்டணிக்கு 126 உறுப்பினர்களும், 'இந்தியா' கூட்டணிக்கு 108 உறுப்பினர் களும் உள்ளனர்.
அந்த வகையில், மாநிலங்களில் 50 சதவீத ஆதரவை பெறுவது என்பது பா.ஜனதாவுக்கு எளிதானது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த திருத்தங் களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும். எனவே, "ஒரே நாடு; ஒரே தேர்தல்'' என்னும் பாதைக்கு இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.
அதுவும் கடினமான பாதையாகவே தெரிகிறது. அப்படியே நிறைவேறி 2029-ல் "ஒரே நாடு; ஒரே தேர்தல்'' நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டும், மீண்டும் 2029-ஆம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடக்கும்.