நவம்பர் 13-ஆம் தேதி இரவு சென்னையில் பெய்த கனமழை காரணமாக 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிகம் நடைபெறும் இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக பெய்த கனமழை 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு பெய்த அதீத கனமழையாக நவம்பர் 13-ஆம் தேதி இரவு பெய்த கனமழை பதிவாகியுள்ளது.
நவம்பர் 13-ஆம் தேதி இரவு மற்றும் ஞாயிறு அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக தியாகராயநகர், வியாசர்பாடி, அடையாறு, வேளச்சேரி, ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. ஜவஹர்லால் நேரு நகர், மாதவரம், தண்டையார்பேட்டை சாலை, வடக்கு ட்ரங்க் ரோடு, ராயபுரம், தேனாம்பேட்டை, காதர் நவாஸ் கான் சாலை, வேளச்சேரியின் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னைப் புறநகர் பகுதிகளில் சோழிங்கநல்லூரின் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
சென்னை புழல் ஏரியில் இருந்து நவம்பர் 14-ஆம் தேதி காலை 11 மணி அளவில் 500 கன அடி நீர் வெளியேற்றப் பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1.30 மணி அளவில் நீர் வெளியேற்றப் பட்டது. கரையின் இரு ஓரங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம் மற்றும் புறநகரில் மீனம்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் நவம்பர் 14-ஆம் தேதி காலை 08:30 மணி அளவில் முறையே 21.5 செ.மீ மற்றும் 11.3 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது.
2015-ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் பெய்த கனமழையின் ஒரு பகுதியாக சென்னையில் 24 மணி நேரத்தில் 24.6 செ.மீ கனமழை பதிவானது. இதற்கு முன்பு 2005-ஆம் ஆண்டு 14.2 செ.மீ மழை 2005-ஆம் ஆண்டு நவம்பரில் பதிவானது.
ஆனால் 1976-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் அதிகமாக 45.2 செ.மீ மழை பதிவானது. 1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ஆம் தேதி அன்று 25 செ.மீ கனமழையும், நவம்பர் 12-ஆம் தேதி அன்று 33 செ.மீ மழையும் சென்னையில் பதிவானது.
அதனை தொடர்ந்து அதிகமாக மழை பதிவானது 2005-ஆம் ஆண்டு தான்.
சென்னையின் பருவமழை பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையால் தான் கிடைக்கிறது. அக்டோபர் மத்தியில் துவங்கும் கிழக்கு காற்று மூலம் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே இந்த மழை பெய்யும். பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 10 முதல் 20 தேதிகளில் துவங்கும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் முதன்மை பருவமழை என்றும் அழைக்கப்படுகிறது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையை மற்ற அனைத்து மாநிலங்களும் நம்பியிருக்கும் போது, தமிழகத்திற்கு தேவையான மழையை வடகிழக்கு பருவமழையே வழங்குகிறது. தென்மேற்கு பருவமழை, நீண்ட கோடைகாலத்திற்குப் பிறகு, நிலத்தடி நீர்மட்டத்தை பராமரிக்க தமிழகத்திற்கு உதவுகிறது. வடகிழக்கு பருவமழை நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது.
தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் வருடாந்திர மழையில் 60% மழையையும், உள் தமிழக மாவட்டங்கள் 40 முதல் 50% மழையையும் வடகிழக்கு பருவமழை மூலம் பெருகின்றன.
2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம் மற்றும் இதர காலநிலை தொடர்பான நிகழ்வுகளின் போதும் மத்திய மற்றும் தென் சென்னையில் மட்டுமே அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழையால், உழைக்கும் வர்கத்தினர் அதிகம் கொண்ட, தொழிற்சாலைகளை நிறைய கொண்டிருக்கும் வடசென்னை பெரிய பாதிப்பிற்கு ஆளானது.
தாழ்நிலை புவியியல் அமைப்பு தான் இதற்கு காரணம். சென்னையில் மழை நீர் தேங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று கடல் மட்டத்தில் இருந்து குறைவான அளவே உயரத்தில் இருப்பது. பெரும்பாலான பகுதிகள் 6 மீட்டர் மட்டுமே உயரம் கொண்டுள்ளது. மழைநீர் வடிகால் வலையமைப்புகள் இல்லாதது மற்றும் கால்வாய்களை சரியாக தூர்வாராத நிலை ஆகியவை வடசென்னையின் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
தேங்கியுள்ள வெள்ள நீரை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், “கட்டுமானம் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளால் உருவாகும் குப்பைகள் தான் இந்த வெள்ளத்திற்கு முக்கியமான ஒரு காரணியாக அமைந்துள்ளது” என்று கூறினார்கள். இங்குள்ள புயல் நீர் வடிகால்கள் எண்ணிக்கையில் போதுமானதாக இல்லை மற்றும் தற்போதுள்ள நெட்வொர்க்குகள் மற்றும் கால்வாய்களும் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வடசென்னை பகுதியில் மொத்தம் 14 கால்வாய்கள் உள்ளன. பங்கிங்ஹாம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், எக்காங்கிபுரம் கால்வாய், எய்ன்ஸ்லே கால்வாய், மாதவரம் உபரி வாய்க்கால் மற்றும் இணைப்பு கால்வாய் போன்ற கால்வாய்கள் வெள்ளத்தை தணிக்க உதவிய முக்கிய நீர்வழிகளாகும்.
ஆனாலும், இம்முறை வெள்ளத்தில் மூழ்கிய பெரும்பாலான தெருக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில், தண்ணீர் வடிவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. வடிகால்கள் இல்லாததால் மட்டுமல்ல, தவறான சாலைத் திட்டமிடல் காரணமாகவும் இந்நிலை ஏற்பட்டது.
அங்கே அமைக்கப்பட்ட பல கான்க்ரீட் சாலைகள் இருபுறமும் அமைந்திருக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைக் காட்டிலும் அதிக உயரமாக இருக்கிறது.
வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொடுங்கையூர், பட்டாளம் ஆகிய பெரிய சந்தைகள் வடசென்னையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகும். வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதிகளில் வெறும் 10 செ.மீ மழைக்கே முழங்கால் அளவு நீர் சேர்ந்துவிட்டது. பட்டாளம் போன்ற பகுதிகளில் கடந்த சனிக்கிழமை 22 செ.மீ., மழை பெய்ததால் இம்முறை வெள்ள நீர் வெளியேற வழியே இல்லாமல் போய்விட்டது.
வட சென்னையின் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, அயனாவரம், ராயபுரம், திருவொற்றியூர், பெரியார் நகர், சிட்கோ நகர், எம்.கே.பி.நகர், ஜமாலியா, கொளத்தூர், ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்க வாய்ப்புகள் உள்ளது.
சென்னை நகரம் மழைக்கு மிகவும் உகந்த நகரம். மிகப்பெரிய அளவில் வெள்ளத் தடுப்புக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் நகரம். சென்னையில் மூன்று பெரிய ஆறுகள் இருக்கின்றன. வடக்கே கொசஸ்தலை ஆறு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதை எண்ணூர் அருகே கடலில் கொண்டுசேர்த்துவிடும். மத்திய சென்னையில் கூவம் ஆறு, தென் சென்னையில் அடையாறு ஆகியவையும் மழைநீரைக் கடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. சென்னை முழுக்க 16 கால்வாய்கள் இருக்கின்றன. இவை தவிர, பக்கிங்ஹாம் கால்வாய் இருக்கிறது. இத்தனையையும் வைத்துக்கொண்டு மழை பெய்தால் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால், இந்தக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். ஆற்றின் இரண்டு பக்கமும் இருக்கும் வெள்ளச் சமவெளிகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள், தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆற்றுக்கு உண்டான அகலமும் இல்லை... ஆழமும் இல்லை.
பருவநிலை மாற்றத்தை இனியும் நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. சென்னை கடலோர மாநகரம். இங்கு கடல் மட்டத்தைவிட பத்து மீட்டர் உயரத்துக்குக் கீழே இருக்கும் பகுதிகள் அதிகமாக உள்ளன. வரும் காலங் களில் மழை, வறட்சி ஆகியவற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகுமே தவிரக் குறையாது. இவற்றால் விளையக்கூடிய பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற நீண்டகால நடவடிக்கைகள் பல எடுக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.
கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகளில் இரண்டு பக்கமும் கரைகளை வலுப்படுத்தி, எங்கெல்லாம் தடுப்பணை கட்ட முடியுமோ அங்கெல்லாம் கட்ட வேண்டும். அத்துடன் கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் பாதையில் அமைந்துள்ள எண்ணூர் கழிமுகப் பகுதி மிகவும் பாழடைந்து கிடக்கிறது. அந்தக் கழிமுகத்தைச் சீரமைக்க வேண்டும்.
2015-இல் 9,70,000 கன அடி தண்ணீர் கூவத்தில் கலந்தது அடையாறில் 1,07,000 கன அடி தண்ணீர் கலந்தது. இதனால்தான் அப்போது மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் 120-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் வந்து கலக்கிறது. அந்த ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தி, அகலப்படுத்தி அவற்றின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். அதைச் செய்யாததால் பெருமழை நேரத்தில் ஏரிகளில் தேங்க முடியாத நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே நேரத்தில் வந்து நிரம்புகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, வெள்ளம் வருமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. தண்ணீரையும் வீணடிக்க வேண்டியிருக்கிறது. கூவம் ஆற்றுக்கும் 70-80 ஏரிகளின் உபரிநீர் வந்து கலக்கிறது. அது தவிர, பாலாற்றிலிருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீர் வருகிறது.
அந்த ஏரி கிட்டத்தட்ட ஐந்தரை டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அது நிரம்பிய பின் பெரிய ஆறு மாதிரி அடித்துக்கொண்டு வரும் தண்ணீர் கேசவரம் அணைக்கட்டுக்கு வந்து, அங்கிருந்து கூவம் ஆற்றில் கலக்கிறது.
அதனால்தான் கூவத்தில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. மழைநீரை அந்தந்த ஏரிகளிலேயே சேகரிப்பதற்கான வழிகளைச் செய்துவிட்டால், நமக்கு வெள்ள அபாயமும் கிடையாது. குடிநீர்ப் பிரச்சினையும் வராது.
பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடிகளில் நதிநீர் இணைப்புத் திட்டங்களைத் தீட்டுவதற்குப் பதிலாக ஏரிகளைச் சீரமைத்தாலே நாம் வெள்ளம், வறட்சி இரண்டிலிருந்தும் தப்பிக்கலாம். சுற்றுச்சூழலையும் வளமாக்கலாம்.