நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்து கிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப் பதற்காக ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்புகளால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும்.
1. இயற்பியல் (Physics)
2. வேதியியல் (Chemistry)
3. இலக்கியம் (Literature)
4. மருத்துவம் (Medicine)
5. அமைதி(Peace)
6. பொருளாதார அறிவியல் (Economic Science)
ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.
டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நோபல் பரிசு வழங்கும் இடங்கள்
அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக் கான நோபல் பரிசுகள்-சுவீடன் நாட்டில் வழங்கப் படுகின்றன.
சுவீடன் நடுவண் வங்கி
பொருளாதார அறிவியல் நோபல் பரிசு பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
அமைதி நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோபலின் உயிலின் படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.
நோபல் பரிசு 2020
பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் முக்கியமாக உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.
பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக் குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத் தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர் களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப் படுவார்கள்.
பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப் படும்.
பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.
இயற்பியல்
அண்டவெளியின் கருந்துளை உருவாக்கம் என்பது பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான முன்கணிப்பு என்பதை கண்டுபிடித் ததற்காக ரோஜர் பென்ரோஸ், இந்த ஆண்டு இயற்பியல் நோபல் பரிசின் பாதியை (50 சதவீதம்) பெறுகிறார். எஞ்சிய பாதியை, நமது நட்சத்திர மண்டலத்தின் மத்தியில் இருக்கும் ஒரு அதிசயமான சிறிய பொருளை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் ரெயின்ஹார்டு ஜென்சல்லும், ஆண்ட்ரியா கெஸ்சும் (தலா 25 சதவீதம்) பெறுகிறார்கள்.
விஞ்ஞானி ரோஜர் பென்ரோஸ், ஆங்கில கணித இயற்பியலாளர், கணிதவியலாளர், அறிவியல் தத்துவஞானியும் ஆவார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியராக உள்ளார்.
விஞ்ஞானி ரெயின்ஹார்டு ஜென்சல், ஜெர்மனியின் வானியற்பியல் துறை விஞ்ஞானி ஆவார். பெண் விஞ்ஞானி ஆண்ட்ரியா கெஸ், கலிபோர்னியா- லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறை பேராசிரியர் ஆவார். 3 பேர் இயற்பியல் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டாலும், மூவருக்கும் தலா ஒரு தங்க பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். பரிசுப்பணத்தை மட்டும் அறிவித்தபடி 3 பேரும் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம்
2020-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்ட்டர், சார்லஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாவ்டன் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெபடைடிஸ் சி வைரஸ்
ஹெபடைடிஸ் வைரஸைப் பொறுத்த வரை, அதில் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகைகள் உள்ளன. நோபல் பரிசு பெற்ற இந்த அறிவியலாளர்கள் மூவரும் ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டறிவதற்கு முன்புவரை ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி ஆகிய வைரஸ் குறித்த கண்டுபிடிப்பே முக்கியமானதாகக் கருதப்பட்டது.
உலக அளவில் ஹெபடைடிஸ் சி நோய்ப் பாதிப்பால் ஏழுகோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. சத்தமின்றி மனித உயிர்களைப் பறிக்கும் உயிர்க்கொல்லியாக ஹெபடைடிஸ் சி பல ஆண்டுகளாக இருந்துள்ளது. எதிரி யார் என்று தெரிந்தால்தானே, அதற்கு எதிராகப் போராட முடியும்? அந்த வகையில் இதுதான் எதிரி, கல்லீரலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸ் இதுதான் என்பதைக் கண்டுபிடித்த இந்த விஞ்ஞானிகள், பல கோடி மனிதர்களின் உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இன்றைக்கு 8-12 வாரங்களுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இந்த வைரஸை முற்றிலும் ஒழித்துவிடலாம்.அந்த வகையில் ஹெபடைடிஸ் சி வைரஸை ஒட்டுமொத்தமாக வென்றுவிட்டோம். இந்தக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்குக் காரணமும் இதுதான்.
ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் இ ஆகியவை உணவு, நீர் ஆகியவற்றில் கலக்கும் மனிதக் கழிவால் பரவுகின்றன. இவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. இவற்றால் ஏற்படும் காய்ச்சல், கண் மஞ்சள் நிறத்தில் மாறுவது போன்ற அறிகுறி களைக் கொண்ட காமாலை நோய்கள் விரைவில் தானாகவே சரியாகிவிடும்.
ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற வைரஸ் வகைகள் நாள்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் அழற்சி, கல்லீரல் சுருக்கம் (சிரோஸிஸ்), ரத்த வாந்தி போன்ற பாதிப்புகளை இந்த வைரஸ் வகைகள் ஏற்படுத்துகின்றன. எந்த அறிகுறியுமின்றி மனிதர்களை இவை மரணத்துக்கு இட்டுச் சென்று விடும். இந்தியாவில் இன்றும் மூன்று சதவீதத் தினர் ஹெபடைடிஸ் பி வைரஸாலும், ஒரு சதவீதத்தினர் ஹெபடைடிஸ் சி வைரஸாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வைரஸ்களை முறியடிப்பதற்கு முதலில் வித்திட்டவர் அமெரிக்க மருத்துவர் பேரி புளூம்பெர்க்.
அவர்தான் ஹெபடைடிஸ் பி வைரஸைக் கண்டறிந்தார். அவருடைய பிறந்த நாள்தான் ஹெபடைடிஸ் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது. இதற்குப் பிறகு, 1970-இல் ஹார்வி ஜே. ஆல்ட்டர், ஹெபடைடிஸ் பி அல்லாத ஒன்று ரத்தம் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். மேலும் அதை நான் ஏ, நான் பி (சர்ய்-ஆ சர்ய்-இ) என்று சொன்னார்.
அதேநேரம் அது எந்த வகை என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. அது எது என்பதை 1980லிகளில் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஹாவ்டன். அவர் மிகவும் வித்தியாசமான முறையில், உடலின் நோய் எதிரணுக்களை (ஆன்டி பாடிகளை) ஆராய்ந்து, எதிரிக்கு எதிரி யார் எனும் முறையில், அது ஒரு வைரஸ்தான் என்று கண்டறிந்தார். அது என்ன வைரஸ் என்பதை, அதாவது ஹெபடைடிஸ் சி வைரஸை சார்லஸ் எம். ரைஸ் கண்டறிந்தார்.
வேதியியல்
வேதியியலுக்கான 2020லிஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டோடுனா, ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டர் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் இமானுல் சார்பென்டர், ஜெனிபர் டோடுனா ஆகிய இரு விஞ்ஞானிகளும் சேர்ந்து மரபணுத் தொழில்நுட்பத்தில் சிஏஎஸ்9 எனும் மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் ஆகிய வற்றின் டிஎன்ஏக்களை மாற்ற முடியும். லைஃப் சயின்ஸ் பிரிவில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். புற்றுநோய்க்குப் புதிய மருத்துவத்தையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும், நீண்டகாலமாக தீர்வு இல்லாத நோய்களையும் தீர்க்க உதவும். இதுகுறித்து வேதியியல் நோபல் பரிசுக் குழுவின் தலைவர் கிளாஸ் கஸ்டாப்ஸன் கூறுகையில், வழக்கமாக செல்களில் இருக்கும் ஜீன்களை மாற்றி அமைக்கும் ஆய்வு நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் சாத்தியமில்லாமல்கூட போகலாம்.
ஆனால், இமானுல் சார்பென்டர், ஜெனிபர் டோடுனா கண்டுபிடித்த சிஏஎஸ் 9 ஜெனிடிக் ஸர் எனும் கருவி மூலம் சில வாரங்களில் மரபணுவில் மாற்றம் செய்ய முடியும்.
மரபணுக் கருவியில் ஏராளமான சக்தி இருக்கிறது. அடிப்படை அறிவியலில் மட்டும் புரட்சி ஏற்படுத்தாமல், புதிய மருத்துவ சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றத்துக்கு தலைமை ஏற்றுச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டிர் பெர்லின் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங் பிரிவின் பேதோஜென்ஸ் அறிவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 1968-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஜூவி சர் ஓர்கேவில் சார்பென்டிர் பிறந்தார். பாரீஸில் உள்ள பாஸ்டியர் பல்கலைக்கழகத்தில் 1995-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார் சார்பென்டிர்.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெனிபர் டோடுனா கடந்த 1964-ஆம் ஆண்டு வாஷிங்டனில் பிறந்தவர். பாஸ்டனில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தலில் 1989-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற ஜெனிபர், பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், ஹாவார்ட் ஹக்ஸ் மருத்துவ நிறுவனத் தின் ஆய்வாளராகவும் ஜெனிபர் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு பதக்கமும், சான்றும் 11 லட்சம் அமெரிக்க டாலர்களும் சம அளவில் பிரித்துத் தரப்படும்.
வேதியியலில் பெண்களுக்கு இதுவரை 5 நோபல் பரிசுகள்தான் வழங்கப் பட்டுள்ளன. இதில் விஞ்ஞானி மேரி கியூரிதான் முதன்முதலாக வேதியியலில் பெண்களுக்கான நோபல் பரிசை வென்றார். இருமுறை நோபல் பரிசையும் மேரி பெற்றுள்ளார். அதில் ஒன்று இயற்பியலில் பெற்றதாகும்.
பொருளாதார அறிவியல்
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை ஸ்டாக்ஹோமில் உள்ள கோரன் ஹேன்ஸன் தலைமையிலான நோபல் பரிசுக் குழுவினர் அறிவித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இரு பொருளாதார நிபுணர்களுக்கு 2020லிஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளித்து அறிவிக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்துதல், மற்றும் ஏலம் விடுதலில் புதிய முறையைக் கண்டறிதலுக்காக இரு பொருளாதார நிபுணர்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் மில்க்ரோம், ராபர்ட் வில்ஸன் இருவரும் சேர்ந்து பொருளாதாரத் தில் ஏலம் விடும் நடைமுறை எவ்வாறு நடக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பண்டங்கள், பணிகளைப் பாரம்பரிய முறையில் விற்பனை செய்வது கடினமாக இருக்கும் நிலையில் அதை ஏலம் விடுவதற்குப் புதிய முறைகளைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக ரேடியோ அலைவரிசைகளை விற்பனை செய்வது கடினமாக இருக்கும் நிலையில் அதை ஏலம் விடும் முறையில் புதிய முறையைக் கண்டறிந்தனர். இருவரின் கண்டுபிடிப்பு உலகமெங்கும் இருக்கும் வாங்குவோருக்கும், விற்போருக்கும், வரிசெலுத்துவோருக்கும் நன்மையளிக்கிறது. இதில் பொருளாதார வல்லுநர் ராபர்ட் வில்ஸன், கண்டறிந்த ஏலக் கோட்பாட்டில் பொதுவான மதிப்பை அடிப்படையாக வைத்து புதிய ஏலக் கோட்பாட்டைக் கண்டுபிடித்துள்ளார். அந்த பொது வான மதிப்பு தொடக்கத்தில் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், இறுதியில் பொதுவானதாக இருக்கும்.
பால் மில்க்ரோம் கண்டறிந்த ஏலக் கோட்பாட்டில் பொதுவான மதிப்புகளை மட்டும் அனுமதிக்காமல், தனிப்பட்ட மதிப்புகளையும் அனுமதிக்கிறார். ஏலம் கேட்க வரும் ஒவ்வொருவருக்கும் இடையே இது மாறுபடும். அதுமட்டுமல்லாமல் ஏலம் கேட்கவருவோர் கையாளும் முறைகள், ஏலம் முறைகள், ஏலம் விடுவோருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும், வாங்குவோருக்கும் நியாய மான விலையில் இருக்க வேண்டும் என்பதையும் பால் மில்க்ரோம் ஆய்வு செய்துள்ளார்.
பால் மில்க்ரோம், வில்ஸன் இருவரும் கண்டறிந்த ஏல முறையின் அடிப்படையில்தான் கடந்த 1994-ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகள், ரேடியோ அலைவரிசையைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தனர். இதே முறையைத்தான் மற்ற நாடுகளும் பின்னர் பின்பற்றத் தொடங்கின.
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் கடந்த 1948-ஆம் ஆண்டு பிறந்த பால் ஆர் மில்க்ரோம். கடந்த 1979-ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத் தில் ஹியுமானிட்டிஸ் அன்ட் சயின்ஸ் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராபர்ட் பி வில்ஸன் கடந்த 1937-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் உள்ள ஜெனிவாவில் பிறந்தார். கடந்த 1963-இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டிபிஏ முடித்து, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இலக்கியம்
2020லிஆம் ஆண்டுக்கான இலக்கியத் துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப் புகழ்வாய்ந்த சமகால இலக்கியத்தில் முக்கியமானவ ராகக் கருதப்படும் லூயி க்ளுக் இலக்கியத் துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
நோபல் பரிசுக் கமிட்டி கூறுகையில், தெளிவான, எளிமையான, அழகான கவிதையின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் தனது இருப்பை லூயி வெளிப்படுத்தி யுள்ளார். பழங்காலப் புராணங்கள், பழமையான கருப்பொருளை உத்வேக மாக எடுத்துக்கொண்டு, தனது பெரும்பாலான படைப்புகளில் அதை லூயி வெளிப்படுத்தியுள்ளார். குழந்தைப் பருவம், குடும்ப வாழ்க்கை, பெற்றோர், நண்பர்களுடன் நெருங்கிய உறவுகள் போன்றவை லூயிக்கு மையமாக இருந்த கருப்பொருளாக இருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1943-ஆம் ஆண்டு அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் பிறந்த லூயி, தற்போது யேழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 1968-ஆம் ஆண்டு முதன்முதலில் ஃபர்ஸ்ட் பார்ன் எனும் கவிதையை எழுதினார். அதன்பின் அமெரிக்காவில் மிக விரைவில் புகழ்பெற்ற கவிஞராகவும், சமகால இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளராகவும் லூயி மாறினார். லூயி இதற்குமுன் பெருமைமிகு புலிட்சர் விருதை கடந்த 1993-ஆம் ஆண்டும், 2014-ஆம் ஆண்டு தேசிய புத்தக விருதையும் பெற்றார். இதுவரை லூயி க்ளுக் கவிதை மற்றும் பல கட்டுரைகள் அடங்கிய 12 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஃப்ர்ஸ்ட் பார்ன், தி ஹவுஸ் ஆஃப் மார்ஸ்லாண்ட், தி கார்டன், டிசென்டிங் ஃபிகர், தி டிரம்ப் ஆப் அச்சிலிஸ் உள்ளிட்டவை லூயி க்ளூக்கின் புகழ்பெற்ற படைப்பாகும். கடைசியாக 2017-ஆம் ஆண்டு அமெரிக்கன் ஒரிஜினாலிட்டி எனும் கட்டுரைத் தொகுப்பை லூயி வெளியிட்டிருந்தார். பல்வேறு சர்ச்சைகள் காரணமாக கடந்த 2018, 2019-ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல்பரிசு அறிவிக்கப்படாத நிலையில் இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் லூயி க்ளூக்கிற்கு 10 மில்லியன் ஸ்வீடன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி
உலக உணவுத் திட்டம் (World Food Programme#WFP) என்ற அமைப்பு இவ்வருடத்துக்குரிய அமைதிக்கான நோபல் பரிசைப் பெறவுள்ளது.
1962-இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், அல்ஜீரியாவில் தவித்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு 1963-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உலக உணவுத் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நிலநடுக்கம், சுனாமி போன்ற இக்கட்டான காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அமைப்பின் வழியே உணவளிக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் பட்டினி யால் வாடி வதங்கும் 83 நாடுகளில் உள்ள 91 மில்லியன் மக்களுக்கு உணவளித்து வருகிறது இந்த அமைப்பு.
உணவானது ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை மையக் கருத்தாகக் கொண்டு சேவையாற்றி வரும் உலக உணவுத் திட்டத்துக்கு 2020-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.