ஒரு புதிரான வைரஸ் (Corona viruses-Cov)- அறிவியலில் முன்பு அறியப்படாத வைரஸ் - சீனாவில் வுஹான் நகரில் தீவிர நுரையீரல் நோயை (Severe Acute Respiratory Syndrome) உருவாக்கி வருகிறது.
இந்த நோயால் 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பல பேர் நிலைமை இப்போது கவலைக்கிடமாக உள்ளது.v நோயாளிகளுக்கு நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய, புதியதொரு வைரஸ் இப்போது பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் கவலையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. உலகெங்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
இது இன்று வந்துவிட்டு நாளை போய்விடும் வகையைச் சேர்ந்த வைரஸ் தாக்குதலா அல்லது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் நோயின் அறிகுறியா என்று கேள்வி எழுந்துள்ளது.
இது என்ன வைரஸ்?
கரோனா வைரஸ் என்பது பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றாகும்.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் அந்த பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது.
எனவே, கரோனா வைரஸ் பாதிப்புக்குள் ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். ஒருவேளை அந்நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாதபட்சத்தில் தீவிர சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.
அப்போது அந்த வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர் அங்கு உயிரிழந்தனர். இதையடுத்து, தீவிர மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமாக அந்த வகை வைரஸ் தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது.
அதன் காரணமாக மக்களிடையே பிடித்திருந்த அச்சம் சற்று விலகியிருந்தது.
2002-இல் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய, சார்ஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறால் 8,098 பேர் பாதிக்கப்பட்டதில் 774 பேர் உயிரிழந் தனர்.
கரோனா வைரஸ்கள் லேசான சளியில் தொடங்கி மரணத்தை ஏற்படுத்துவது வரையிலான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
""இந்தப் புதிய வைரஸ், இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வகையைச் சேர்ந்ததாகத் தோன்றுகிறது. புதிய கரோனா வைரஸை பார்க்கும் போது, அறிகுறிகள் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றன என்பதைக் காண நாங்கள் விரும்புகிறோம். இது சளி போன்றதைவிட தீவிரமான அறிகுறியாக இருக்கலாம், கவலை ஏற்படுத்துவதாக இருக்கலாம், ஆனால் சார்ஸ் போல அதி தீவிரமானதாக இல்லாமல் இருக்கலாம்'' என்று எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் வுல்ஹவுஸ் கூறியுள்ளார்.
""புதிய வைரஸ்கள் எப்போதும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன. கவனிக்கப்படாமல் இருந்த ஒரு கிருமி தொகுப்பில் இருந்து அவை மனிதர்களுக்குப் பரவுகின்றன. கடந்த காலத்தில் தொற்றுநோய் பரவியதை நாம் பார்த்தால், அது கரோனா வைரஸாக இருந்தால், விலங்குகள் காப்பகப் பகுதியில் இருந்து தான் வந்திருக்கும்'' என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நச்சுயிரியல் வல்லுநராக இருக்கும் பேராசிரியர் ஜொனாதன் பால் கூறுகிறார்.
சார்ஸ் கிருமி புனுகுப் பூனையிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது.
2012-இல் உருவாகிய மெர்ஸ் நோயால் 2,494 பேர் பாதிக்கப்பட்டதில் 858 பேர் உயிரிழந்தனர். இது ஒற்றைத் திமில் கொண்ட ஒட்டகங்களிடம் இருந்து பரவியது.
இந்த நோயாளிகளுக்கு வுஹானில் உள்ள தெற்கு சீனா கடல் உணவு மொத்த விற்பனை அங்காடியுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கடலுக்குச் செல்பவர்கள் (துருவப் பகுதி திமிங்கலம் போன்ற) கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவது உண்டு. அங்காடியில் கோழி, வௌவால், முயல், பாம்பு போன்ற உயிரினங்களும் வைத்திருக்கிறார்கள்.
அவையும் வைரஸ்கள் உருவாக வாய்ப்பை ஏற்படுத்தும்.
சீனாவில் ஏன் பரவுகிறது ?
மக்கள்தொகை நெருக்கத்தின் காரணமாகவும், இந்த வைரஸ் உள்ள பிராணிகளுடன் அதிக தொடர்பில் இருப்பதாலும் சீனாவில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்று பேராசிரியர் வுல்ஹவுஸ் கூறினார்.
அடுத்த நோய்க் கிருமி சீனாவிலோ அல்லது அந்தப் பகுதியிலோ இருந்தால் யாரும் ஆச்சர்யப்படப் போவதில்லை'' என்றார்.
பரவும் விதம்
ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு வருக்கு பரவக் கூடியதாக இந்த வைரஸ் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
நுரையீரல்களை கிருமித் தொற்று தாக்கினால், இருமல், சளி போன்ற வற்றாலும், அந்த நோயாளிக்கு அருகில் சென்றாலும் பாதிப்பு ஏற்படுவது கவலைக்குரிய பெரிய விஷயம்.
மனிதர்களுக்கு இடையில் இது பரவக் கூடியதாக இருந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது நெருங்கிச் செல்லும் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
இருந்தபோதிலும், மனிதர்களுக்கு இடையில் இது பரவுமா என்பதை தீர்மானிக்க இந்த அவகாசம் போதுமானதல்ல என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
59 நோயாளிகளில் அனைவருக்கும் 2019 டிசம்பர் 12 முதல் 29-ஆம் தேதிக்குள் அறிகுறிகள் தோன்றியுள்ளன.
அதன்பிறகு புதிய நோயாளிகள் யாருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தப் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.