மிழக முதல்வரின் 5 முக்கிய அரசாணைகள் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, தலைமை செயலகத் திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் 5 முக்கிய அரசாணை களைப் பிறப்பித்தார். அவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகை யிலும், கொரோனா பெருந்தொற்றை பொதுமக்கள் எதிர்கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

அவற்றின் விவரம் பின்வருமாறு:

1) கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்துவரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார், 2,07,67000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.

2) தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லி-ட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.05.2021 அன்று முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்தார்.

Advertisment

3) தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பினை செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும், கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

4) முதலமைச்சர் தேர்தல் பரப்புரை யின்போது மாவட்டந்தோறும் மக்களின் பிரச்சினை தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக் களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப் பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

5) கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன்படி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவு களையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.

Advertisment

மு.க. ஸ்டாலின்

1953-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி கலைஞர் மு.கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க. ஸ்டா-லின். ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் அவரது தந்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி. சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட் டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி மேலாண்மை மறுத்தது.

இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி யில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார். 1967-1968 ஆண்டுகளில் மு.க. ஸ்டா-லின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு 'கோபாலபுரம் இளைஞர் திமுக' என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு சமூகப்பணிகளை செய்து வந்தார். 1973-ஆம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பின ரானார். தந்தையின் அரசியல்-கலை ஆளுமை காரணமாக, ஸ்டா-லினுக்கும் இளம் வயதிலேயே நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. அவர் நடித்த முதல் நாடகம் திருவல்லி-க்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு” என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது. இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலி-ன். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும். ஸ்டா-லின் சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஒரே ரத்தம் (1988), மக்கள் ஆணையிட்டால் (1988), குறிஞ்சி மலர் (நெடுந்தொடர்) ஆகிய படைப்புகளில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1975-இல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். தேசிய அளவிலும், மாநிலங்களிலும் அதை எதிர்த்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அன்றைய தி.மு.க. அரசு நெருக்கடி நிலையை அடியோடு எதிர்த்ததால் மத்திய அரசால் சர்வாதிகார முறையில் கலைக்கப்பட்டது. இதையடுத்து முரசொ-லி மாறன், மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 25,000க்கும் மேற்பட்டோர் 'மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலை ஒடுக்குமுறையால் ஸ்டா-லின் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். 2003-இல் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், துணை பொதுச்செயலாளராக ஸ்டா-லின் அறிவிக்கப்பட்டார்.​​ 2008-ஆம் ஆண்டு திமுகவின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநகராட்சி மன்ற சட்டம் திருத்தப் பட்ட பின்னர், 1996-ஆம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலி-ல் முதல்முறையாக நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை மு.க. ஸ்டா-லின் பெற்றார். துப்புரவுப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து சென்னை நகரத்தின் குப்பை அள்ளும் முறைகளை நவீனப்படுத் தினார். சுகாதாரம், பொது கட்டுமானம், பள்ளிகள் என ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி சென்னை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த் தினார். மேயராக செய்த சாதனைகளுக்காக "நவீன சென்னை நகரத்தின் தந்தை” என்று போற்றப்பட்டார். சிங்கார சென்னை என்ற முழக்கத்தை முன்னெடுத்து அதை மக்களிடையே பரவலாக்கினார். சென்னை நகரத்தின் சாலைகள் புதுப்பொலி-வு பெற்றன. மிகப்பெரிய மேம்பாலங்களை கட்டி சென்னை நகரத்தின் நெரிசலுக்கு தீர்வு கண்டார். இவரது ஆட்சியில், 9 பெரிய மேம்பாலங்களும், 49 குறும்பாலங்களும் கட்டப்பட்டது. இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப் பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப் பட்டு முறையாகப் பராமரிக்கப் பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆட்சி நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டு பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம், மு. க. ஸ்டா-லினுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அமெரிக்காவிலுள்ள கெண்டக்கி மாகாணத்தின் காமன்வெல்த் அளிக்கும் மிக உயரிய விருதான கெண்டக்கி கொலேனல் (ஃங்ய்ற்ன்ஸ்ரீந்ஹ் ஈர்ப்ர்ய்ங்ப்) விருது ஸ்டாலி-னின் பொது சேவைக்காக வழங்கப்பட்டது. கெண்டக்கியின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவருக்கு கவுரவம் அளிக்கப்பட்டது. இந்த கவுரவத்தை இதற்கு முன் அமெரிக்க அதிபர் களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் ரொனால்ட் ரீகன், நோபல் பரிசு பெற்றவரும் முன்னாள் இங்கிலாந்து பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அ-லி போன்ற உலகப் புகழ் வாய்ந்த நபர்கள் பெற்றுள்ளனர்.

2006-இல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கலைஞர் மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல்முறையாக மு.க.ஸ்டாலி-ன் தமிழகத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.

அமைச்சர் பதவியில் திறம்பட செயலாற்றி தமிழகத்துக்கு பல முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்தார்.

1984-ஆம் ஆண்டு முதல் 2016 வரை, 8 சட்டமன்ற தேர்தலி-ல் போட்டியிட்டு அதில் 6 முறை வெற்றி பெற்று முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மக்கள் பணியில் கவனமும், சரியான திட்ட மிடலும் அவரின் சட்டமன்ற வெற்றி களுக்கு முழுமுதற் காரணம். பல்வேறு பதவிகளை வகித்தாலும், வாக்களித்த தொகுதி மக்களின் நலனை எந்த வித குறைகளுமின்றி நிறைவேற்றுவதில் மிகுந்த கவனமெடுத்து செயல்படுவார். கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை மு.க. ஸ்டாலி-ன் வகித்தார். 2016-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலி-ல் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மு. க. ஸ்டா-லின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழகத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக மக்கள் திமுகவை தேர்வு செய்தனர்.

cm

cm

cm

cm

அமைச்சகங்களின் பெயர் மாற்றம்

தமிழ்நாட்டில் புதிய அமைச்சரவையில் சில துறைகளின் பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகிய வற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங் களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் 'நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்கு தடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்ற துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.

வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் 'வேளாண்மை - உழவர் நலத்துறை' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின் நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக்காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.

சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத் தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் 'மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை' என்று பெயர் சூட்டப்படுகிறது.

மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை 'மீன்வளம் - மீனவர் நலத்துறை' என்று அழைக்கப்படுகிறது.

தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை 'தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை' என்று பெயரிடப்படுகிறது.

செய்தி - மக்கள் தொடர்புத் துறை 'செய்தித் துறை'யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கள் தொடர்பும் அடங்கியிருக்கிறது.

சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை' என்று வழங்கப்படவுள்ளது.

பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை 'மனித வள மேலாண்மைத் துறை' என்று அழைக்கப்பட உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுசேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.

உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்' என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப் படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட் டிலும் மிகப்பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.

புதிய தலைமைச் செயலாளர் மற்றும் தனிச் செயலாளர் ஆட்சி மாறும்போதும் முதல்வர்கள் மாறும்போதும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். முதல்வரின் தனிச் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இறையன்பு ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் புதிய அரசின் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது.

புதிய தலைமைச் செயலாளர்

இறையன்பு ஐஏஎஸ் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐஏஎஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், மேடைப் பேச்சாளராகவும், தன்னம்பிக்கை யூட்டும் நூல்களின் எழுத்தாளராகவும் நாடறிந்தவர். தமிழக அரசில் இவரைவிட 11 சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் இறையன்பு ஐஏஎஸ்-க்கு தலைமைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இறையன்பு ஐஏஎஸ் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 15-வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக தனது ஐஏஎஸ் பணியைத் தொடங்கிய இறையன்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் செயல்பட்டார். கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். நன்றி மறக்காத அந்த மக்கள் அந்த பகுதிக்கு இறையன்பு நகர் என்று பெயர் சூட்டி அழைத்து வருகின்றனர். இளங்கலை வேளாண்மை படித்திருந்த இறையன்பு ஐஏஎஸ் இதுவரை படித்து பல பட்டங்களைப் பெற்றுள்ளார். உளவியலி-ல் முதுகலைப் பட்டம் , வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். மேடைப் பேச்சுகளில் ஆற்றொழுக்காக உரை யாற்றி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார். வள்ளுவரையும் ஷேக்ஸ்பியரையும் ஒப்பீடு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இறையன்பு, ஐஏஎஸ் ஆவது எப்படி என்ற நூ-லின் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு ஐஏஎஸ் ஆவதற்கான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் அளித்துவருகிறார். இலக்கியத்தில் ஆர்வம் மிக்க இறையன்புவை, 1995-ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த ஜெயல-லிதா தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு அதிகாரியாக நியமித்தார். இறையன்பு உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல, 2010-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினார். 2006 -2007 ஆண்டு பொது அறிவு உலகம் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மிக சிறப்பாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முதன்மை தனி செயலாளர்

முதலமைச்சரின் முதன்மை தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், இதற்கு முன்பு தொல்லி-யல் துறை இயக்குனராகப் பதவி வகித்து வந்தார். உதயச்சந்திரன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 35-வது இடத்தை பிடித்தார். இவர் ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, தொழில்நுட்பப் பூங்கா, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள உதயச்சந்திரன் அந்த துறைகளுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். உதயச்சந்திரன் மாணவர்கள் மதிப்பெண்களில் தரவரிசையை ஒழித்த தரமான ஐஏஎஸ். உதயச்சந்திரன் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்தபோது சமச்சீர் கல்வி பாடத்திட்ட வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றினார்.

அதைவிட முக்கியமானது தேர்வில் இருந்து வந்த தர மதிப்பீட்டு முறையை முற்றிலும் மாற்றினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்தபோது, இணையம் வழியாக விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட் பதிவிறக்கம், கணினி சார் தேர்வுகள் போன்ற புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தினார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள ஏழைப்பெண்களுக்கான கடன் உதவி பெற நடவடிக்கை எடுத்தார்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராக இருந்துபோது, வீடுகட்டும் திட்டத்தில் ஏழை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினார்.

மேலும், தமிழ்நாடு மின்னணுக் கழத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, ஐடி துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் பெற நடவடிக்கை எடுத்தார். அதுமட்டு மில்லாமல், தமிழ் இணையக்கல்வி கழகத்தின் இயக்குநராக இருந்தபோது பல ஆயிரக்கணக்கான அரிய நூல்களை பிடிஎஃப் மின்னணு முறையில் உருவாக்க நடவடிக்கை எடுத்தார். தொல்-லியல் துறை இயக்குநராக இருந்த உதயச்சந்திரன், கீழடி அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்தினர். இப்படி உதயச்சந்திரன், தான் பொறுப்பேற்ற எல்லா துறைகளிலும் தனி முத்திரை பதித்தார்.