நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தை அதிநவீன வசதிகளுடன் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டி முடித்துள்ளது.

இதில் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான அரசியல்சாசன அரங்கம், எம்.பி.க்கள் ஓய்விடம், நூலகம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், கேன்டீன் மற்றும் பார்க்கிங் பகுதிகள் உள்ளன. இந்த கட்டிடம் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களவையில் 888 உறுப்பினர்கள் சவுகரியமாக அமர முடியும், மாநிலங்களவையில் 300 பேர் அமர முடியும். கூட்டுக் கூட்டம் நடந்தால், மக்களவையில் 1,280 உறுப்பினர்கள் அமர முடியும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத் தில், மின்சாரம், நீர்பயன்பாட்டை குறைக்கும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு 5 நட்சத்திர அந்தஸ்து பசுமை கட்டிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் வெப்ப நிலையை குறிப்பிட்ட அளவில் பராமரிக்க அல்ட்ரா சோனிக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் பல நவீன வசதிகளுடன் 5 ஸ்டார் அந்தஸ்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுதந்திரத்தின் போது இந்தியர்களிடம் ஆட்சி மாறியதற்கு அடையாளமாக, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க செங்கோலை, நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே பிரதமர் நிறுவினார்.

Advertisment

dd

தொகுதி மறுசீரமைப்பு

தற்போது மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 543 ஆகவும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 245 ஆகவும் உள்ளது. இந்நிலையில் புதிய கட்டிடத்தில் இரு அவைகளிலும் இருக்கைகள் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன. இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இதன்படி, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு எழுந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. மாறாக பாஜக ஆதிக்கம் உள்ள உத்தரபிரதேசம், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதேபோல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் பாஜக அரசு கையில் எடுக்கும் திட்டமும் உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சி வருகின்றனர்.

இதுவும் மகளிர் மசோதாவுக்கு ஒரு தடையாக உள்ளது. இந்நிலையில் மறுசீரமைப்பில் கூடும் தொகுதிகளை மகளிருக்கு ஒதுக்கவும் ஒருதிட்டம் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், அம்மசோதாவை நிறைவேற்றிய பெருமையும் தங்களுக்கு கிடைக்கும் என பாஜக கருதுகிறது. மேலும் இதை எதிர்க்கும் கட்சிகளின் மகளிர் வாக்குகளும் தங்கள் பக்கம் திரும்பும் என பாஜக கருதுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் திருத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்கென 1952-ஆம் ஆண்டில் Delimitation Commission Act இயற்றப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு முறை Delimitaion Commission அமைக்கப்பட்டு, தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.

1952-இல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவில் 494 தொகுதிகள் இருந்தன. இதற்குப் பிறகு, 1963-இல் தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. 1973 இந்த எண்ணிக்கை 543ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, சட்டமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது.

1975-இல் இந்தியாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.

அப்போதுதான் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2001-இல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, 2002-இல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84-வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. இந்த 25 ஆண்டு 2026-இல் முடிவுக்கு வருகிறது.

2000-வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள்தொகைக் கொள்கையின்படி, 2026-க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள்தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டிற்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

மக்களவைத் தொகுதிகள் எப்படி அதிகரிக்கப்படவில்லையோ, அதேபோல, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, அரசியமைப்புச் சட்டப் பிரிவு 170-ன்படி ஒரு மாநிலத்தில் குறைந்தது 60 இடங்களும் அதிகபட்சமாக 500 இடங்களும் இருக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள்தொகைக் கட்டுப்பாடு 1970-களில் ஒரு தேசியக் கொள்கையாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் விடப்பட்டது. எல்லா கொள்கைகளையும் போலவே இந்தக் கொள்கையும் இந்தியா முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் அமலாக்கப்பட்டது.

Advertisment

dd

இதனால் சில மாநிலங்களில் அதீதமான மக்கள்தொகை பெருக்கமும் சில மாநிலங்களில் மிகக் குறைவான அதிகரிப்பும் இருந்தது. உதாரணமாக, இந்தியாவில் 1971-க்கும் 2011-க்கும் மத்தியில் ராஜஸ்தானில் 166 சதவீத அதிகரிப்பும் உத்தரப்பிரதேத்தில் 138 சதவீத அதிகரிப்பும் இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75 சதவீதமும் கேரளாவில் வெறும் 56 சதவீதமும்தான் அதிகரித்தது. அதாவது ராஜஸ்தானில் 1971-இல் 2.57 கோடியாக இருந்த மக்கள்தொகை 2011-இல் 6.86 கோடியாக உயர்ந்தது. கங்கைச் சமவெளி மாநிலங்கள் முழுக்கவே இந்த நாற்பதாண்டுகளில் மக்கள்தொகை பெருக்கம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.

ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற விகிதம் வந்துவிட்டால் மக்கள்தொகை நிலைபெற ஆரம்பித்துவிட்டதாக அர்த்தம். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த நிலை வந்துவிட்டது. ஆனால், பீஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கருவுறும் விகிதம் இரு மடங்காக இருக்கிறது. பீஹாரில் 3.2ஆகவும் உத்தரப்பிரதேசத்தில் 3 ஆகவும் இது இருக்கிறது.

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டும் சேர்ந்து இந்திய மக்கள்தொகையின் பாதி பேரை, அதாவது 48.6 சதவீதம் பேரைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, மக்கள்தொகை அடிப்படையில் இடங்களை அதிகரித்தால், இந்த ஐந்து மாநிலங்களிலேயே இந்தியாவின் பாதி மக்களவை இடங்கள் இடம்பெறும்.

1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 54.8 கோடி என்றும் வாக்காளர்கள் எண்ணிக்கை 27.4 கோடி என்றும் கணக்கிடப்பட்டு அதற்கேற்றபடி தொகுதிகள் தற்போது பிரிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 81-வது பிரிவின் 2-வது விதி, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் அந்த மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிறது. ஆகவே, கூடுதல் மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்கள் கூடுதலான எம்.பிக்களைப் பெற்றிருக்கும். ஆனால், 60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட சிறிய மாநிலங்களுக்கு இது பொருந்தாது.

பிரிவு 81-ன் படி, 6,50,000 முதல் 8,50,000 பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும். ஆனால், பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரையெல்லாம் இருக்கிறது. ஆந்திராவில் உள்ள மல்கஜ்கிரி தொகுதியில் சுமார் 29,50,000 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரித்தாலோ, குறைத்தாலோ தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

மக்கள்தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்.

"தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்து, எண்ணிக்கையை அதிகப்படுத் துவது குறித்து வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்திலேயே விவாதிக்கப்பட்டது. ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் செய்தால், அது தென் மாநிலங்களைப் பாதிக்கும் என பலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் கைவிடப்பட்டது. இப்போது பிரதமர் மீண்டும் பேசியிருக்கிறார். தற்போதைய சூழ-லிலேயே தென்னிந்தியாவில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாமல் ஆட்சியமைக்க முடியும் என்கிறார்கள்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் உத்தரப்பிரதேசத்தின் தொகுதிகள் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிடும். ஆனால், தமிழ்நாட்டிற்கு நான்கில் ஒரு பகுதிதான் அதிகரிக்கும். இந்தியாவின் முக்கிய விவகாரங்கள் எதிலும் தென்னிந்திய மக்களின் விருப்பங்களுக்கு பங்கிருக்காது. என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

ஆனால், இந்த விவகாரத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகச் சொல்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான என். கோபாலசுவாமி. "மறுவரையறை செய்வது என்பது வேறு, இடங்களை அதிகரிப்பதென்பது வேறு. பிரதமர் இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மட்டும்தான் சொல்லி-யிருக்கிறார். ஒட்டுமொத்தமாக பத்து சதவீத இடங்களை அதிகரிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பத்து சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும். அதில் வடக்கு - தெற்கு என்ற பாரபட்சமே இருக்காது” என்கிறார் அவர்.

"இது தொடர்பான சட்டப்பிரிவை யாரும் முழுமையாகவோ, சரியாகவோ படிப்பதில்லை. தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, 2026-க்குப் பிறகு வரும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, மறுவரையறை செய்ய வேண்டுமென கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடக்குமெனப் பார்க்க வேண்டும். 2021-இல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பே இப்போது நடந்து முடிவுகள் 2024-இல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு கணக்கெடுப்பு நடந்தால் 2034-இல்தான் முடிவுகள் வெளியாகும். அப்படியே 2031-இல் வெளியானால்கூட, மறுவரையறை கமிஷனை அமைத்து, அதனைச் செய்து முடிக்க 2033 - 34 ஆகிவிடும். ஆக, 2024, 2029, 2034 ஆகிய தேர்தல்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது. அதற்குப் பிறகும்கூட, மக்கள்தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு அதிகமாகவும் தென் மாநிலங்களுக்கு குறைவாகவும் தொகுதிகளை அதிகரிப்பது அவ்வளவு சுலபமானதாக இருக்காது. இந்த விவகாரம் தேவையில்லாமல் எழுப்பப்படுகிறது” என்கிறார் கோபாலசுவாமி.

ஆனால், ஆனந்த் ஸ்ரீநிவாஸன் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. 2021-இல் எடுக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பே இதுவரை முழுமையாக முடியாத நிலையில், அதன் முடிவுகள் வெளியாவது தள்ளிப்போனால், அந்தக் கணக்கெடுப்பையேகூட 2026-க்குப் பிந்தைய கணக்கெடுப்பாகக் கூறி தொகுதி மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த முடியும் என்கிறார் அவர்.

எண்ணிக்கை அதிகரிப்பதில் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. தற்போது 543 உறுப்பினர்கள் உள்ள மக்களவை யிலேயே, உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்று தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த உறுப்பின ருக்கும் மிகக் குறைந்தஅளவு நேரமே கிடைக்கிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக்கினால், வாய்ப்புகள் இன்னும் குறையும்.

மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான கோபால கிருஷ்ணகாந்தி Delimitation fallout needs no political forecasting என்ற தனது கட்டுரையில், ஒரு தீர்வை முன்வைக்கிறார். அதாவது, எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை நிலைபெறும்வரை, தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பதை நிறுத்திவைக்க வேண்டும். அதற்குப் பிறகு அதிகரிக்கும்போது, மக்கள் தொகை மட்டுமல்லாமல், வேறு சில கணக்கீடுகளையும் உள்ளடக்கி தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்கிறார் அவர். ஆனால், இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருக்கும்.