இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு அண்மையில் முக்கிய வட்டி விகித கொள்கையில் மாற்றமின்றி ரெப்போ வட்டி விகிதம் – 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 3.35 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி அதன் இணக்கக் கொள்கை நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், பணவீக்க அளவு அதிகரிப்பை அடுத்து அதற்கு குறைவான இடமளிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியது.
நிதிக் கொள்கைக் குழு ஜி.டி.பி வளர்ச்சியை 7.2 சதவீதமாகக் குறைத்தும், 2022-23 நிதியாண்டில் பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றாமல் 4 சதவீதமாக வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவு, வங்கிகள் நிதி அமைப்பில் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க உதவும். இது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவும். கடன் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் தற்போதைக்கு கூடுதலாக இ.எம்.ஐ மற்றும் கூடுதலாக கடனைத் திருப்பிச் செலுத்த வேண்யதில்லை.
வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன் விகிதமான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை, 3.35 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்கிறது.
ஒரு நிலையான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மூலம் வங்கி அமைப்பில் பணத்தை அல்லது பணப்புழக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மத்திய வங்கி விரும்புகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருந்தால் நிதிக் கொள்கை சுழற்சி தலைகீழாகி இருக்கும். அது இறுதியில் வட்டி விகிதங்களில் உயர்வுக்கு வழிவகுக்கும்.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் கருவித்தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும். அதன் செயல்பாடு அவ்வப்போது குறிப்பிடப்படும் நோக்கங்களுக்காக ரிசர்வ் வங்கியின் விருப்பப்படி அமைந்திருக்கும்” என்று நிதிக் கொள்கைக் குழு கூறியது.
எஸ்.டி.எஃப் என்பது எந்தவிதமான பிணையும் இல்லாமல் பணப்புழக்கத்தை ஈர்ப்பதற்கான கூடுதல் கருவியாக இருக்கும். அதன்படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 3.75 சதவீத வட்டி விகிதத்தில் எஸ்டிஎஃப்-ஐ நிறுவ ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எஃப் 3.75 சதவீத வட்டி விகிதத்துடன், நிலையான விகித ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை எல்.ஏ.எஃப்-ன் கீழ் மாற்றும். எம்.எஸ்.எஃப் மற்றும் எஸ்.டி.எஃப் – இந்த இரண்டு நிலையான வசதிகளும் ஆண்டு முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.
வளர்ச்சிக்குத் தேவையான- அத்தியாவ சியம் – வளர்ச்சிக்கான புத்துயிர்ப்பு இடவசதிக் கொள்கை” என்ற தற்போதைய நிலைப்பாடு மறுஆய்வில் உள்ள நிலையில், பொருளாதார மீட்சி தொடர, ரிசர்வ் வங்கி இன்னும் சில காலம் காத்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். .
“வளர்ச்சியை ஆதரிக்கும் அதே நேரத்தில், பணவீக்கம் முன்னோக்கி செல்லும் இலக்கிற்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கான இடத்தை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்துவதில் ஒருமனதாக நிதிக் கொள்கைக் குழு முடிவு செய்தது” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலை உயர்வு மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் விளைவு ஆகியவற்றின் பின்னணியில், மத்திய வங்கி 2022-23 நிதியாண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பை 7.8 சதவீதத் திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைத் துள்ளது. 2022-23-இல் சில்லறை பணவீக்கத்தை 4.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
“அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் நமது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சூழ்நிலையை மோசமாக்கியுள்ளன. பொருட்களின் விலை உயர்வு மற்றும் பதட்ட சூழ்நிலை உலக அளவில் பரவுவதன் மூலம் பொருளாதார மீட்சிக்கு போர் தடையாக இருக்கலாம்” என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் ஒரு புதிய மற்றும் பெரும் சவாலாக உள்ளது. இது ஏற்கனவே நிச்சயமற்றதாக உள்ள உலகளாவிய கண்ணோட்டத்தை சிக்கலாக்குகிறது என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
“புவிசார் அரசியல் சூழ்நிலையின் அச்சுறுத்தலான போக்கு நமக்கு சவாலாக இருப்பதால், இந்தியப் பொருளாதாரத்தை அனைத்து கருவிகளையும் கொண்டு பாதுகாக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் நிரூபித்தபடி, நாங்கள் எந்த விதிகளுக்கும் பணயக்கைதிகள் அல்ல, பொருளாதாரத்தைப் பாதுகாப்பது காலத்தின் தேவையாக இருக்கும்போது எந்த நடவடிக்கையும் பொருட்படுத்தும்படியாக இல்லை” என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
“நம்முடைய இலக்குகளான விலை நிலைத்தன்மை, நீடித்த வளர்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவை பரஸ்பரம் வலுவூட்டுகின்றன. மேலும், இந்த அணுகுமுறையால் நாங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறோம்” என்றூ சக்திகாந்த தாஸ் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி
இந்தியாவின் பொருளாதாரம் 2022-ஆம் நிதியாண்டில் 7.5% வளர்ச்சியடையும் என்றும், அடுத்த 2023-ஆம் நிதியாண்டில் 8% வளர்ச்சியடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. 2022-ஆம் நிதியாண்டு என்பது மார்ச் மாதம் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலத்தை கணக்கில் கொள்ளப்பட்டது.
இந்தியாவில் வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியானது, அதன் உள்கட்டமைப்பில் பொது முதலீட்டை அதிகரிப்பதால் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும். மேலும், தனியார் முதலீடு அதிகரிப்பதன் மூலமும் பொருளாதாரம் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு. அதனால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளப்பட்டு இந்த கணிப்பு உள்ளது. இந்த கண்ணோட்டம், கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசிகளால் ஏற்பட்ட நீடித்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்டுள்ளது. புதுவகை கொரோனா தொற்றால் அதிக பாதிப்பு ஏற்படாது என்பதை கண்ணோட்டமாக கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.
"இந்தியா நிலையான பொருளாதார மீட்சிக்கான பாதையில் உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் கொள்கை, தொழில்துறை உற்பத்தியை எளிதாக்குவதற்கான ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை நாட்டின் விரைவான மீட்சிக்கு துணைபுரியும்.
அடுத்த 2 ஆண்டுகளில், நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள பெரிய பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் காரணமாக, அதிக அளவில் தனியார் முதலீட்டை இது ஊக்குவிக்கும்.
பிரதம மந்திரி கதி சக்தி முயற்சி
யால், இந்தியாவின் தளவாட உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அதிகரிக்கப் பட்டது.
அதன்மூலம் மாநிலங்கள் முதலீட்டை விரிவடைய செய்தது. இது உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். அரசாங்கத்தின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம், உற்பத்தித் துறைக்கு உத்வேகத்தை அளிக்கும்.
அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளுக்கு மத்தியில் பணவீக்கம் 2022-ஆம் நிதியாண்டில் 5.8% ஆக அதிகரிக்கும். எண்ணெய் விலை உயர்வு காரணமாக மத்திய வங்கி, அதன் பா-லிசிகளின் விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.
2022-23 காலகட்டத்தில் ஏற்பட்ட நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தற்போதைய நிதிப் பற்றாக்குறை 2.8 சதவீதம் ஆக விரிவடையும். எண்ணெய் இறக்குமதி விலை அதிகரிப்பு இதன் காரணமாக உள்ளது. 2023-24-இல் இது 1.9 சதவீதமாக குறையும். ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிப்பு இதற்கு காரணமாக இருக்கும்.
வெளிநாட்டிலி-ருந்து நேரடி முதலீடு மந்தமாகவே இருக்கும். சர்வதேச நிலைத்தன்மையற்ற நிலை மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி நிலைமை ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.
தொழிலாளர்களின் சந்தை நிலைமை யானது மேம்படும் போது, தனியார் நுகர்வு அதிகரிக்கும்.
நாட்டில் பருவநிலை சீராக இருக்கும்பட்சத்தில், விவசாய உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளின் வருமானம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளை கொண்ட தெற்காசியாவில் பொருளாதார மேம்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். கொரோனா தாக்குதலுக்கு பிறகு தற்போது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
கிரிப்டோகரன்சி பயன்பாடு
கிரிப்டோகரன்சி பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கு சர்வதேச அளவில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) கூட்டத்தில் வ-லியுறுத்தியுள்ளார்.
கிரிப்டோகரன்சியை அரசுசாரா அமைப்புகள் சட்டவிரோதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் கடினமாகும். கிரிப்டோகரன்சியானது பல்வேறு நாடுகளுக்கிடையே பயன்படுத்தப்பட்டு வருவதால், தனியொரு நாடாக அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த முடியாது.
ஒரு நாட்டின் தொழில்நுட்பம் சார்ந்த சட்டம், மற்றொரு நாட்டுக்குப் பொருந்தாது. நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும் கிரிப்டோகரன்சியின் தாக்கம் மாறுபடும். எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து, சர்வதேச அளவிலான ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
இல்லை என்றால் கிரிப்டோகரன்சி களைப் பயன்படுத்தி பண மோசடி சம்பவங்கள் அதிகமாக நிகழும். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கவும் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ செலாவணி என இந்தியா ஏற்கவில்லை. கிரிப்டோகரன்சிகளின் உருவாக்கம், பயன்பாடு உள்ளிட்டவை குறித்து கண்காணிக்கும் நோக்கிலேயே அவற்றின் பயன்பாட்டுக்கு இந்தியாவில் வரி விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிப்பதன் வாயிலாக, அதை யாரெல்லாம் விற்கிறார்கள், யாரெல்லாம் வாங்கு கிறார்கள் என்பது தொடர்பாக அறிந்து கொள்ள முடியும்.
கிரிப்டோகரன்சிகளுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்கும் திட்டம் ஏதுமில்லை. நாட்டின் மத்திய வங்கி மூலமாக வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சிகளை வெவ்வேறு நாடுகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு உகந்ததாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடப்பாண்டு இறுதிக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.