நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ்தலால் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய 542 தொகுதிகளில் பாஜக 240 தொகுதிகளைப் பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், ஆட்சியமைக்கும் அளவுக்கு அந்த கட்சி தனிப்பெரும்பான்மையை (272 தொகுதிகள்) பெறவில்லை.
ஆனால், பாஜக கடந்த 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களையும், 2019 தேர்தலில் 303 இடங்களையும் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது.
இந்த முறை கருத்து கணிப்புகள் பொய்த்துப்போய் குறைவான எண்ணிக்கை பெற்றதையடுத்து பாஜக ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு (16 தொகுதிகள்), நிதிஷ் குமாரின் (12 தொகுதிகள்) ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், இந்த முறை 99 இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி 37 இடங்களையும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 7-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் என்டிஏ எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய தினமே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 9-ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) 36 இணையமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மத்திய அமைச்சரவை
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் ஆகியோர் மோடி 3.0 மத்திய அமைச்சரவையில் இடம்பிடித் துள்ளனர்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் இளம் அமைச்சர்.
மத்திய அமைச்சரவையில் இளம் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராம்மோகன், இளம் வயதில் மத்திய அமைச்சரான தனது தந்தையின் சாதனையை முறியடித்திருப்பதுடன் அந்தப் பாரம்பரியத்தையும் தொடர் கிறார். ராம்மோகனின் தந்தை எர்ரான் நாயுடு 1996-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக தனது 39 வயதில் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரசேகர பெம்மசானியும் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.5700 கோடி. இவர் தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் பணக்கார அமைச்சராக அறியப்படுகிறார்.
அமைச்சர்களில் 27 பேர் ஓபிசி, 10 பேர் எஸ்சி, 5 பேர் எஸ்டி, 5 பேர் சிறுபான்மை யினர் ஆவர். 24 மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவை யில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பதவி ஏற்பு விழா
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் பிரசண்டா, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மைப் பணியாளர்கள், 3-ஆம் பாலின பிரதிநிதிகள், புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பெண் ரயில் ஓட்டுநர்கள் உட்பட 8,000 சிறப்பு விருந்தினர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
4 முறை முதல்வர், 3-வது முறை பிரதமர் கடந்த 2001-ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி யேற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 3 முறை குஜராத் முதல்வராக பதவியேற்றார். ஒட்டுமொத்தமாக 4 முறை முதல்வராக அவர் இருந்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல்முறையாக பதவியேற்றார். 2019-ஆம் ஆண்டில் 2-வது முறையாக அவர் பதவியேற்றார். தற்போது 3-வது முறையாக அவர் பிரதமர் பதவியேற்றுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் நேரு கடந்த 1952, 1957, 1962 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 3 முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவியை வகித்தார். அந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்துள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டுள்ளார். 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
மோடியின் வாக்குறுதிகளில் ஒன்றான, விவசாயிகளுக்கு நிதி வழங்கும் இந்த திட்டத்தின்கீழ், 17-வது தவணையாக இந்த தொகை விடுவிக்கப்படுகிறது.