ருகருகே அமைந்திருக்கும் கர்நாடகமும் தமிழகமும் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும், காவிரி ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வதில் நீண்ட காலமாகவே கசப்புணர்வை எதிர்கொண்டுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை பலனளிக்காததால், காவிரி நடுவர் மன்றம் முதல் உச்சநீதிமன்றம் சட்டப் போராட்டம் நடந்தது. பின்னர், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு பிறகு, 150 ஆண்டு காலமாக நிலவி வந்த காவிரிப் பிரச்சினை ஓய்ந்து, இரு மாநில மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர்.

இந்த நிலையில், அதற்கு உலை வைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதாக கர்நாடகமும் அறிவித் துள்ள தகவல், இரு மாநிலங் களுக்கும் இடையே காவிரி பதற்றம் மீண்டும் படப்படப்பை ஏற்படுத்தி யுள்ளது.

காவிரி ஆறு, கர்நாடகத்தை கடந்து தமிழகத்தில் நுழையும் மேக்கேதாட்டு என்ற மலைப் பகுதியில் இந்த அணை அமைக்க உத்தேசித்துள்ளது கர்நாடக அரசு.

மேக்கேதாட்டு அணை

Advertisment

காவிரி நடுவர்மன்றத்தில் 465 டி.எம்.சி தண்ணீரை ஒதுக்கும்படி கேட்டிருந்த கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி வழங்கப் பட்டிருந்தது. சாதாரண ஆண்டுகளில் கர்நாடகத்தில் 450 டி.எம்.சி தண்ணீர் காவிரி ஆற்றில் கிடைக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை அளித்துவிட்டால், எஞ்சியுள்ள 272.75 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்தி கொள்ளலாம்.

5 ஆண்டு களுக்கு ஒருமுறை, 2018-ஆம் ஆண்டில் நடந்ததுபோல, கர்நாடகத்தில் பெருவெள்ளம் ஏற்படும் போது கூடுதலாக 200 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கிறது. இத்தண்ணீரைச் சேகரித்து வைக்க அணைகள் இல்லை என கர்நாடகம் கூறிவருகிறது.

Advertisment

இதனால், 177.25 டி.எம்.சி தண்ணீர் போக கூடுதலாக கிடைக்கும் 200 டி.எம்.சி தண்ணீரை உபரியாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளதாக கர்நாடகம் குறைபட்டுக் கொள்கிறது. இந்த தண்ணீரை முழுமையாக பயன்படுத்தி கொள்ள கர்நாடகம் விரும்பியது.

இதன் வெளிப்பாடுதான், ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தின் மேக்கேதாட்டு பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் அணை கட்டுவதென 1980-களில் கர்நாடகம் தீர்மானித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்நிலையில், திட்ட மதிப்பீட்டை ஈடுசெய்ய முடியாத நிலையில், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007-ஆம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரைத் தவிர, கூடுதலாகக் கிடைக்கும் உபரி நீரை பயன்படுத்திக் கொள்வதற்கு சட்டத்தடை எதுவுமில்லாததை உணர்ந்த கர்நாடகம், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை மீண்டும் யோசிக்கத் தொடங்கியது.

2013-ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்ததும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படை வேலையில் இறங்கியது. இந்த திட்டத்திற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

dam

இவற்றை பொருட்படுத்தாத கர்நாடக அரசு, சாத்தியக்கூறு அறிக்கையைத் தயார் செய்து மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததுடன், 2017 பிப்ரவரியில் அமைச்சரவையில் கொள்கை ரீதியான ஒப்புதலையும் கர்நாடக அரசு பெற்றது.

ரூ.5,912 கோடி மதிப்பில் தயாரிக்கப் பட்டுள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய நீர் ஆணையம், விரிவான வரைவுத் திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப் பதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே , மேக்கேதாட்டு அணையின் வரைவுத் திட்ட அறிக்கையைத் தயாரிக்க காவிரி நீர் ஆணையத்தின் அனுமதிக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் மேக்கேதாட்டு அணையின் விரிவான வரைவு திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு தற்போது மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளது.

உண்மையான காரணம்

கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு காவிரி ஆற்று நீரில் காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்துள்ள தண்ணீர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அப்படியானால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர்ப் பங்கீட்டு அளவை மறுபரிசீலனை செய்யும் போது குடிநீர் வரம்பைப் பெருக்கிக் கொள்வதோடு நீர்ப்பாசனப் பரப்பையும் விரிவாக்கிக் கொண்டால், நீர்ப்பங்கீடு உயரும் என்று கர்நாடக அரசு கணக்குப் போடுகிறது. மேக்கேதாட்டு அணை குடிநீர், மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கூறினாலும், அதன் உள்நோக்கம் ராமநகரம், பெங்களூரு ஊரகம், கோலார் ஆகிய மாவட்டங்களில் நீர்ப்பாசனத் திற்கு பயன்படுத்தவதே மறைமுகத் திட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூருக்கு குடிநீர்

2018, மே 23-ஆம் தேதி கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை பல முறை சந்தித்த முதல்வர் குமாரசாமி, நீர்வளத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

காவிரி நதியின் பயணம்

கர்நாடக மாநிலத்தின் குடகில் உள்ள தலைக்காவிரி பகுதியில் பிறக்கும் காவிரி, குடகு, ஹாசன், மைசூரு, மண்டியா, பெங்களூரு ஊரகம், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சுமார் 320 கி.மீ சென்று, தருமபுரி மாவட்டத்தின் பிலிகுண்டலு வழியாக தமிழகத்தில் நுழைகிறது.

சுமார் 64 கி.மீ தொலைவு வரை கர்நாடக எல்லையுடன் பகிர்ந்துகொண்டு தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் வழியாக மொத்தம் 416 கி.மீ பயணித்து பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கர்நாடகத்தில் ஹாரங்கி, ஹேமாவதி, சிம்சா, அர்க்காவதி, லட்சுமணதீர்த்தா, கபினி, தமிழகத்தில் பவானி, நொய்யல், அமராவதி, திருமணிமுத்தாறு, மோயாறு போன்ற 21 கிளை ஆறுகள் காவிரி ஆற்றில் சேருகின்றன.

1896-ஆம் ஆண்டு முதல் காவிரி ஆறு மற்றும் கிளை ஆறுகளின் குறுக்கே சுமார் 101 அணைகள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த அணைகள் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, மேட்டூர், கல்லணை, மேலணை ஆகியவற்றில் அமைந்துள்ளன. இவற்றில் 58 அணைகள் கர்நாடகத்திலும், 39 அணைகள் தமிழகத்திலும், 4 அணைகள் கேரளத்திலும் அமைந்துள்ளன.

1896-ஆம் ஆண்டு அர்க்காவதி ஆற்றின் குறுக்கே குனிகல் பகுதியில் முதல் தடுப்பணை கட்டப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே 80 குறுக்கு அணைகள், 59 பெரிய-நடுத்தர நீர்ப்பாசன திட்டங்கள், 17 ஏற்ற நீர்ப்பாசன திட்டங்கள், 14 நீர்மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

காவிரி ஆற்றில் மொத்தம் 740 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாவதாகவும் இதில் தமிழகத் திற்கு 419 டி.எம்.சி. கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி, கேரளத்திற்கு 30 டி.எம்சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.

பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனவும் காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த இறுதித் தீர்ப்பில் கூறியிருந்தது.

தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி தண்ணீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரை குறைத்து, 177.25 டி.எம்.சி தண்ணீர் அளிக்க வேண்டும் எனக் கூறியது.