முனைவர் இரா. காமராசு மார்க்சிய ஆய்வாளர். கவிஞர்: சிறுகதையாளர்; திறனாய்வாளர்; பண்பாட்டுச் செயற்பாட்டாளர். படைப்பிலக்கியத்திலும் இலக்கியத் திறனாய்விலும் பல நூல்களைப் படைத்துள்ளார்.
பல நூல்களின் ஆசிரியர். 1997 முதல் 2022 வரை 45 நூல்களைத் தந்துள்ளார். கருத்தரங்குகள் வாயிலாக 300 கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். மன்னார்குடி அருகிலுள்ள மேலவாசல் இவரது ஊர். நா. வானமாமலை குறித்த முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவராகவும்,பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் இவரின் படைப்புகள் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளன. பரிசுகள், விருதுகள் என ஏராளம் பெற்றுள்ளார். தோழர் என அன்புடன் அழைக்கப்படும் முனைவர் இரா. காமராசுவிடம் ஒரு நேர்காணல்.
இலக்கியம் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறீர்கள். தங்களின் குடும்பச்சூழல், பின்புலம் எப்படி?
நான் கீழ்த்தஞ்சையில், காவிரியின் கடைமடைப் பகுதியில் பிறந்து வாழ்ந்து வருகிறேன். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் மேலவாசல் என் ஊர். எனது தாய், தந்தையர் கல்வியறிவற்றவர்கள். வேளாண் சிறுகுடி. என் அண்ணன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார். வேளாண்மை உட்பட பல்வேறு பணிகள் செய்தார், கடுமையாகப் போராடி ஓர் அரசுப் பணியில் சேர்ந்தார். அவர்தான் என்னை உருவாக்கினார். குடும்பச் சூழல் காரணமாக நானும் எஸ்.எஸ்.எல்.சி.யோடு ஆசிரியப் பயிற்சிக்குப் போய்விட்டேன். நான் படித்த பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன். பதினெட்டு வயதில் அரசுப் பள்ளியில் பணி கிடைத்தது. நான் பள்ளியில் படிக்கும்போதே கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றேன். வார இதழ்கள், நாளிதழ்கள், கதைப் புத்தகங்கள் வாசிப்பேன். ஒரு கவிதை (துணுக்கு மாதிரி) எழுதி வாராந்தரி ராணிக்கு அஞ்சல் அட்டையில் அனுப்பினேன், அப்போது ஆசிரியர் என்பதற்கு பங்ஹஸ்ரீட்ங்ழ் என்று முகவரியில் எழுத, ஊக்ண்ற்ர்ழ் என அஞ்சல் காரர் திருத்தினார். அவ்வளவு அறியாமை. ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டம் எங்கும் நடந்தது. கலைஞர், வை.கோ. போன்றவர்கள் மீது ஈர்ப்பு வந்தது. ஒரு முறை சிறை செல்லும் அளவுக்குத் தீவிரம். மாணவன், பதினெட்டு வயது ஆகவில்லை என விட்டுவிட்டார்கள். அப்புறம் இன்குலாப், தணிகைச்செல்வன் கவிதைகள், பகத்சிங் வரலாறு, ஆர். பி. தத்தின் இன்றைய இந்தியா, மார்ச்சிம் கார்க்கி, ஷோலகவ், ஜெயகாந்தன் என வாசிப்பு அகலப்பட்டது.
எழுதப் படிக்கத் தெரியாத அப்பா, "நான்தான் வண்டிமசப் புரட்டுற ஆளாப் போயிட்டேன். நீயாவது நாலு எழுத்துப் படிச்சிக்கோ' என அடிக்கடிச் சொல்வார். என் எல்லா பணிகளுக்கும் உந்துசக்தியாக இருந்தார். படிப்பில் தீராத வெறி போன்ற உணர்வு. தன் முயற்சியில் +2 தொடங்கி பி.லிட்., பி.எட்., எம்.ஏ., எம்.பில் எல்லாம் பயின்றேன். செட் எனும் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றேன். அறிஞர் இராம. சுந்தரம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் பெ. மாதையனிடம் முனைவர் பட்டத்துக்கு ஆற்றுப்படுத்தி னார். 2007-ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் உதவிப் பேராசிரியர் ஆனேன்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்துடன் தொடர்பு எப்போது ஏற்பட்டது? ஏன் பெருமன்றத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தீர்?
திராவிட இயக்கம், ஆசிரியர் அமைப்பு, தீவிர இடதுசாரி இயக்கம் ஆகியவை என்முன் நின்றன. அப்போது உடனிருந்த நண்பர்கள் என் சூழல் காரணமாக, பணியில் இருந்து கொண்டே செயல்பட ஏற்ற அமைப்பாக தமிழ்நாடு கலை இலக்கியம் பெருமன்றத்தைக் காட்டினார்கள். தொலைதொடர்புத் துறையில் பணி செய்த தோழர் எம். சின்னக்கண்ணு வழியாக மார்க்சியச்சிந்தனையாளரும் தொழிற்சங்கத் தலைவருமான தோழர் டி.ஞானையா என்னை அமைப்பில் சேர்த்தார். எங்கள் வட்டாரத்தில் பொதுவுடைமை இயக்கம் வலுவாக காலூன்றி இருந்தது, தோழர் வெ.வீரசேனன் மிகச் சிறந்த படிப்பாளி, சிந்தனையாளர், செயல்வீரர். அவரோடு இரட்டையர் போல திகழ்ந்தவர்தான் விவசாயத் தொழிலாளர் சங்க முன்னோடியும் இன்றைய மாநில சி.பி.ஐ. செயலாளருமான தோழர் இரா. முத்தரசன். இவர்களுடன் இருந்த எல்லா தோழர்களும் அன்று ஒரே குடும்பமாக, கம்யூனாக வாழ்ந்தோம். வயதில் இளையவனான என்னை இவர்கள் அரவணைத்துக் கொண்டார்கள். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் 35 ஆண்டுகளாக தொடர் பயணியாக இருக்கிறேன். கிளைச் செயலாளர் தொடங்கி, மாவட்ட, மாநிலப் பொறுப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளேன். தோழர்கள் தா.பாண்டியன், கே.சி.எஸ். அருணாச்சலம், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, இரவீந்திரபாரதி வரிசையில் நானும் இருமுறை பொதுச் செயலாளராக கடமையாற்றி உள்ளேன்.
கலை இலக்கியப் பெரு மன்றம் தொடங்கப் பட்ட நோக்கம் நிறைவேறியுள்ளதா?
கலை இலக்கியப் பெருமன்றத்தை 1961-ல் பேராசான் ஜீவா பெருங்கனவோடு உருவாக்கினார்.
அது தமிழின், தமிழர்களின் பண்பாட்டுக் களமாக இருக்க வேண்டும் என்பது அவர் அவா. தமிழில் முற்போக்கு இலக்கியப் பார்வையை உருவாக்குதல், யதார்த்தவாதப் படைப்பிலக்கிய வளர்ச்சி, மார்க்சியத் திறனாய்வு முறைமையைக் கல்விப் புலத்தில் வளர்த்தெடுத்தல், புதிய அறிவுத்துறைகளை அறிமுகப்படுத்தல், அடித்தள விளிம்புநிலை உழைக்கும் மக்களைக் கலை இலக்கியங்கள் வழிதிரட்டுதல், மனிதநேய, சனநாயகப் படைப்பாளிகளைத் திரட்டுதல் ஆகியவற்றில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம். செல்ல வேண்டிய தூரம் அதிகம்.
கலை இலக்கியப் பெருமன்றம் படைப்பாளிகளை எந்தளவிற்கு ஊக்குவித்து வருகிறது?
கலை இலக்கியப் பெருமன்றம் படைப்பாளிகளை தொடக்கம் முதலே கொண்டாடி வருகிறது. தொ.மு.சி, தி.க.சி, கே.சி.எஸ், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, சிற்பி, எச். ஜி. ரசூல் போன்ற பல படைப்பாளிகள் சக படைப்பாளிகளுக்கு ஊக்கம் தந்துள்ளார்கள். இளம் படைப்பாளிகள் வளர கவிதை, சிறுகதை, நாடகம், குறும்படம் ஆகியன குறித்த பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுகின்றன. திறனாய்வு, ஆராய்ச்சி, தத்துவம் ஆகியன குறித்து முகாம்கள் நடைபெறுகின்றன. தாமரை, திணை, நா.வா.வின் ஆராய்ச்சி, உங்கள் நூலகம், சமூக விஞ்ஞானம் ஆகிய இதழ்கள் படைப்பு, ஆய்வுகளை வெளியிடுகின்றன. நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து 32 ஆண்டுகளாக இலக்கியப் பரிசளிப்பு நடைபெற்று வருகிறது. இது பெரிய அளவில் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது கவிதை எழுதிய நீங்கள் சிறுகதை, நாவல் முயற்சிகளில் ஏன் ஈடுபடவில்லை?
நான் தொடக்கத்தில் இதழ்களுக்கு செய்தி விமர்சனங்கள் எழுதினேன். தினமணி, ஜூனியர் விகடன் ஆகியவற்றில் வந்தது. தொடர்ந்து சிற்றிதழ்களுக்கு கவிதைகள், சிறுகதைகள் எழுதினேன்.
இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. பாரத ஸ்டேட் வங்கி, திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் பரிசுகள் கிடைத்தன. நானும் நா. முத்துக்குமாரும் திருப்பூரில் நடிகர் சிவகுமார் கைகளில் விருது பெற்றோம். டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் ‘கதா‘வுக்காக மொழிபெயர்த்த கவிதைகளில் என் கவிதைகளும் இடம்பெற்றன. என் சிறுகதைத் தொகுப்பும் வரவேற்பு பெற்றது. அதே நேரத்தில் சாதி குறித்த ஊர்ப் பார்வையை விமர்சித்த சில கதைகளால் சொந்த ஊரில் ஊர் விலக்கம் அளவுக்குச் சென்றது. கல்லூரி பல்கலைக்கழகங்களில் சில கவிதைகள், கதைகள் பாடத் திட்டத்திலும் இடம்பெற்றன. ஆய்வுத்துறையில் ஈடுபட்டவுடன் படைப்பு சுணங்கியது. ஆனால் தொடர்ந்து நவீன இலக்கியங்களை வாசிக்கிறேன். திறனாய்வு செய்கிறேன்.. எம் வட்டாரம் குறித்து நாவல் எழுத வேண்டும் என்பது என் ஆசை.
எழுதுவதுடன் தொகுப்புப் பணியினையும் செய்து வருகிறீர்... தொகுப்பது தங்களுக்கு பிடித்தமானதா? தாங்களே விரும்பிச் செய்வதா?
பல தொகுப்புகள் கொண்டுவந்துள்ளேன். இவற்றில் சாகித்திய அகாதெமியில் வந்தவை முக்கியமானவை. நா.வானமாமலை, தனிநாயகம் அடிகள், வ.சுப.மாணிக்கம். சுப்புரெட்டியார் ஆகியோரின் நூற்றாண்டுகள், கால்டுவெல் இருநூறு ஆண்டுகள் ஆகியவற்றையொட்டி தொகுப்புகள் வந்துள்ளன. கடித இலக்கியத்தொகுப்பு, நாவல் இலக்கியப் போக்குகள், திறனாய்வுப் போக்குகள் குறித்த தொகுப்புகள், பாலபுரஷ்கார் விருதுபெற்ற கிருங்கைசேதுபதியுடன் இணைந்து கொண்டுவந்த சிறுவர் கதைக் களஞ்சியம் போன்றவை முக்கிய மானவை. சொந்தமாக நூல் எழுதுவது எளிது. பலரிடம் படைப்புகள் பெற்று நூல் தொகுப்பது மிகமிகக் கடினம்.
ஒரு படைப்பை ஆய்வு செய்யும்போது படைப்பாளனை மனத்தில் கொண்டு ஆய்வு செய்யலாமா?
படைப்பு வேறு, படைப்பாளி வேறு. ‘ஆன்ற்ட்ர்ழ் ண்ள் க்ங்ஹக்’ படைப்பைத் தந்ததும் படைப்பாளி இறந்து விட்டான் என்றெல்லாம் பேசினாலும் ஓர் படைப்புக்கும் படைப்பாளிக்குமான தொடர்புறவு முக்கியமானது. ஓர் படைப்பைத் திறனாயும்போது படைப்பாளியையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்றே கருதுகிறேன். முதல் தலைமுறையாக எழுதப் படிக்க வருகிறவர்கள், சமூக நிலையில் இதுவரை விளிம்பில் இருந்தவர்கள் போன்றவர்களைத் தந்த அளவுகோல்களால் அடித்து நொறுக்கிவிடக் கூடாது,
கலை மக்களுக்காக என்றாலும் மக்கள் கலையை பெரும்பாலும் வரவேற்பதில்லையே.. ஏன்..?
மக்கள் கலையை எப்போதும் வரவேற்கவே செய்கிறார்கள். நாங்கள் பெரிய அளவில் இரவு விடிய விடிய மக்கள் கலைவிழாக்களை பல ஊர்களில் நடத்தி உள்ளோம். நிதி தருவார்கள். கூடி வந்து பார்ப்பார்கள். கலைகளில் மட்டுமல்ல திரைப்படம், கவிதை, கதை எல்லாவற்றுக்கும்தான். இன்று பவாசெல்லதுரை போன்றவர்கள் கதை சொல்லும்போது நேரடியாகவும், இணையத்திலும் அவ்வளவு கூட்டம், ஆதரவு, மக்கள் மொழியில் பேசவேண்டும். மக்கள் மனதை மொழிய, பொழிய வேண்டும். அவ்வளவுதான்.
விருதுகள் என்றாலே விமர்சனங்களும் தொடர்கிறதே... குறிப்பாக சாகித்ய அகாதெமி விருது...?
இன்று விருதுகள் பெரிய விமர்சனங்களாகி விட்டன. முன்பு இலக்கியச் சிந்தனை, பாரத ஸ்டேட் வங்கி, திருப்பூர்த் தமிழ்ச்சங்கம், லில்லி தெய்வசிவகாமணி போன்ற ஒரு சில அமைப்புகள் இலக்கிய விருதுகளை வழங்கின. அப்போது இவற்றைப் பெறுவது பெரும் அங்கீகாரமாக இருந்தது. ஆனால் இன்று விருது தருவதும், பெறுவதும் வணிகமாக, விளம்பரமாக தற்புகழ்ச்சியாக மாறிவிட்டது. யாரும் மனச்சங்கடப் படுவதில்லை. சாகித்திய அகாதெமி விருது சிறந்த நூலுக்கு என்பதுதான் அடிப்படை, இது விண்ணப் பித்துப் பெறுவதல்ல. பல நிலைகளில் பரிந்துரைகள் பெற்று வழங்குவது. காலப்போக்கில் நூலை விட நூலாசிரியர் கவனம் பெறுவது என்றாகி விட்டது.
அதே போல தமிழ்போன்ற வளமான படைப்பிலக்கிய மொழிகளில் ஆண்டுக்கு ஒரு விருது என்பது போதாது.
பேராசிரியர் நா. வானமாமலை குறித்து நிறைய எழுதியுள்ளீர்... அவர் அளவிற்கு நாட்டார் பாடல்கள் குறித்து ஆய்வு செய்பவர் இன்று உள்ளனரா?
பேராசிரியர் நா. வானமாமலை குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தேன். அவர் படைப்புகளை யெல்லாம் தேடித் தொகுத்தேன். அவர் நடத்திய ஆராய்ச்சி இதழ்த்தொகுப்பு விரைவில் வெளிவர விருக்கிறது. அவரின் முக்கியப் பணி நாட்டார் வழக்காற்றியல். சேகரிப்பு, தொகுப்பு, கள ஆய்வு, சமூகவியல் ஆய்வு என அது அமைந்தது. அவரைப் போலவே இத்துறையில் பலரைச் சுட்டமுடியும். ஆ.சிவசுப்பிரமணியன், ஆறு. இராமநாதன், தே.லூர்து எனப் பெரிய வரிசை உண்டு. இன்று பல இளையவர்கள் நாட்டுப்புறவியலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் ஆய்வுகளை நிகழ்த்திவருகின்றனர்.
தஞ்சையில் எழுத்தாளர்கள் அதிகமிருந்தும் நெல்லை எழுத்தாளர்கள் அளவிற்கு பேசப்படுவதில்லையே ஏன்?
பொன்னிக்கரையின் தஞ்சையும் பொருநைக் கரையின் நெல்லையும் நவீன இலக்கியத்தின் தாய்மடிகள். தமிழின் நவீனத்துவம் இங்கிருந்தே தொடங்குகிறது என்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. தொடக்கக் கால மணிக்கொடி எழுத்தாளர்கள் கவனம் பெற்ற அளவுக்கு தற்காலத் தஞ்சை எழுத்தாளர்கள் கவனம்பெறாதது கவலையே. தற்போது எழுதும் இளைஞர்களும், பெண்களும் தஞ்சையின் அடையாளத்தை மீண்டும் தக்கவைப்பார்கள்.
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தனுஷ்கோடி ராமசாமி, தி. க. சிவசங்கரன், சு. சமுத்திரம் குறித்தி எழுதியுள்ளீர். அவர்களின் தனிச்சிறப்பு என்ன?
சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மூன்று நூல்களை எழுதியுள்ளேன். தி,க.சிவசங்கரன்- முற்போக்கு இலக்கியத்தின் முன்னத்தி ஏர், பல எழுத்தாளர்களை உருவாக்கியவர் இவரின் இலக்கியப் பஞ்சசீலக் கொள்கை இன்றும் முக்கியமானது. சு.சமுத்திரம் - வெள்ளந்தியான மனிதர், நம் கால சமூகக் கேடுகளை, இலஞ்ச ஊழல் கொடுமைகளை எழுதியவர், திருநங்கையர், பால் புதுமையினர், எயிட்ஸ் நோயாளிகள் பற்றியெல்லாம் படைப்பு வெளியில் கவனப்படுத்தியவர். தனுஷ்கோடி ராமசாமி - தோழமை என்ற உணர்வின் உச்சம். ஆண்-பெண் நட்பை எழுதியவர். உழைக்கும் மக்களின் அவலங்களை மட்டுமல்ல அழகியலையும் கலையாக வெளிப்படுத்தியவர். தற்போது நாட்டுப்புற மக்கள் கலைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன் பற்றி எழுதி வருகிறேன்.
ஓர் இலக்கியவாதியாக நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளீர்.... தங்கள் படைப்புகளின் தாக்கம் இலக்கிய உலகிலும் பொது வெளியிலும் எப்படி உள்ளது?
என் நூல்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக இடம் பெற்றுள்ளன. நூலகங்களில் இருக்கின்றன. பல ஆண்டுகள் முன் வந்த நூலை வாசித்துக்கூட , முகம் அறியாத நபர்கள் பேசும்போது மன மகிழுச்சி உண்டாகிறது. சொந்த ஊரில், நட்பில், உறவில்கூட ‘எழுத்துக்காரன்‘ என்ற மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.
பல்கலைக் கழக பேராசிரியர்கள் பெரும் பாலும் இலக்கியப்பணியில் ஈடுபடுவதில்லையே.. ஏன்...?
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் அதிகம் இலக்கிய ஈடுபாடு கொள்வதில்லை என்ற மதிப்பீடு பொதுவாக உள்ளது. இப்போழுது இது மாறிவருகிறது. நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பேசவும், எழுதவும் வருகிறார்கள். பொதுச் சமூகத்தோடு ஒப்பிட இன்னும் அதிகம் படிக்கவும், எழுதவும் முன்வரவேண்டும்தான்.
" இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளனின் அளவுகோலால் மட்டும் வரையறுக்கப்படுதன்று" என்று நாவல் இலக்கியப்போக்குகள் முன்னுரையில் எழுதியுள்ளீர்.. ஆக.. இலக்கியம் என்பதின் அளவு கோல்தான் என்ன?
இலக்கியத்துக்கு அளவுகோல் என்று வரையறை சொல்ல இயலாது. வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட எல்லா உயிரிகளையும் உயிர்ப்போடு இலக்கியம் அணுகவேண்டும். மனித உறவை மேம்படுத்த வேண்டும். ‘மென்மையும் மேன்மையும் தான் இலக்கியம் ‘ எனச் சொல்லுவேன். மனித மனங்களை குறித்த கலையியல் அறிவுதான் இலக்கியம்.
சிறுவர் இலக்கியத்தில் தற்போது படைப்பாளிகள் சிலர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனரே..?
சிறுவர் இலக்கியம் குறித்து ‘குழந்தைமையாக குழந்தை இலக்கியம்’ என்றுதான் சொல்லவேண்டும். தோழர் உதயசங்கர் பாலபுரஷ்கார் விருது பெற்றுள்ளார். இன்று விஷ்ணுபுரம் சரவணன், ஆதி.வள்ளியப்பன், நாணற்காடன், கொ.ம.கோ. இளங்கோ, சுகுமாறன், கண்ணிக்கோவில் ராஜா, உமையவன், நான்சிகோமகன், சாலை செல்வம், நீதிமணி போன்ற பலர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கதை சொல்லல், கலை நிகிழ்வுகள் நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது, குழந்தை இலக்கியம் வளர்வது இலக்கியவளர்ச்சிக்கு அடிப்படை.
வாசிப்பு குறைந்து வருகிறதா?
இன்று வாசிப்பு குறைந்து வருகிறது என்கிறார்கள் குறிப்பாக அச்சு ஊடகங்கள் பல மூடப்படுகின்றன. இணைய ஊடகங்களாக மாறுகின்றன. மொழிப் பயன்பாட்டுக்கு வாசிப்பு அவசியம். இதற்கு தாய்மொழி வழிக் கல்வி தமிழ்மொழி வழிக்கல்வி அடிப்படை. மொழியே சரிவரத் தெரியாமல் இலக்கியம் எதற்கு? எப்படி வாசிப்பது? ஆங்கிலமும் ஏன் தமிழும் ஒழுங்காகத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. மொழி வெறும் கருவி அல்ல. அது உணர்வு. உள்ளுணர்வு. பண்பாடு. அதை உள்வாங்கி வளராத சமூகம் தன் சாரத்தை இழந்துபோகும். நாம் செய்யவேண்டியது மொழிக்கல்விக்கு குரல்கொடுப்பது, பின் இலக்கியக்கல்விக்கு வழி அமைப்பது என்பதாக அமைய வேண்டும்.
புதியதாக எழுத வருபவர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது..?
புதிதாக எழுத வருகிறவர்கள் மொழியை முறையாகக் கற்க வேண்டும். தான் எழுதப்புகும் வகைமை குறித்த கலையறிவு அவசியம்.
அத்துறையில் என்ன நடந்திருக்கிறது? நடக்கிறது? என்ற உள்வாங்கல் அவசியம். தன் சாமர்த்தியத்தை வெளிப்படுத்துவதைவிட படைப்புச் சாதுரியத்தை வெளிப்படுத்த முயலவேண்டும். புகழ்ச்சி, தன் ஏக்கம் இவற்றிலிருந்து விலகியிருக்க முயல வேண்டும். மெய்தான் அழகு. மனிதன் மேலானவன் . உலகம் இனிது. இவை போதும்!
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டியில் தெரு ஒன்றிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பெயர் சூட்டப் பட்டுள்ளது கவிஞர்களுக்கான வரவேற்பாக கொள்ளலாமா?
படைப்பாளிகள், கலைஞர்கள் மறைவுக்குப்பின் கொண்டாடுவதைவிட வாழும்போதே சிறப்பிப்பது பொருத்தமானது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு நூல் நாட்டுடமை என்பதை வாழும் படைப்பாளிகளுக்கும் தொடங்கி இருப்பது பாராட்டத்தக்கது. (முன்பு எழுத்தாளர் இராஜம்கிருஷ்ணனுக்கு விதிவிலக்காக செய்தார்கள்) கவிஞர் யவனிகாஸ்ரீராம் நம் காலத்தின் அற்புதக் கலைஞன். பின்காலனியக்க விஞன். நிகழ் அரசியலும் அழகியலும் கைகூடியக் கவிதைகளைப் படைத்து வருபவர். அவரின் பெயரை பெரியகுளம் - வடபுதுப்பட்டியில் தெருவிற்கு சூட்டியிருப்பது தமிழின் நற்பேறு. இம்மாதிரி முயற்சிகள் பரவலாக வேண்டும். படைப்பாளிகள் வாழும் சமூகத்தின் அடையாளங்கள்! இம்முயற்சியை முன்னெடுத்த இலக்கியச் செயற்பாட்டாளர் தேனி விசாகனுக்குப் பாராட்டுக்கள்!
சாகித்திய அகாதெமி குழுவிலும் இடம் பெற்று இருந்தீர்கள். அதன் அனுபவம் எப்படி?
ஆம். சாகித்திய அகாதெமி தேசியக்குழு உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் இருந்தேன். இதற்கு அன்றைய ஒருங்கிணைப்பாளராக இருந்த கவிஞர்களின் கவிஞர் சிற்பி அடிப்படைக் காரணம். அப்போதைய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் அறிஞர் ம. திருமலை என் பெயரை முன்மொழிந்து அனுப்பினார். பின்னர் சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் கி. நாச்சிமுத்து முழு சுதந்திரத்தோடு பணி செய்ய ஊக்குவித்தார். நிறைய நிகழ்வுகள் நடத்தினோம்.
நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பளித்தோம். இலக்கியம் வழியாக மனித இணைப்பு என்பதற்கு சாகித்திய அகாதெமியின் செயல்பாடுகள் சான்று. பிறமொழிகளின் இலக்கிய வளச்சியை அறியவும், பல இடங்களுக்குச் செல்லவும் இப்பணி உதவியது.
தாங்கள் ஆய்வாளர் என்பதுடன் பல ஆய்வாளர்களையும் உருவாக்கி உள்ளீர்கள். இன்றைய தமிழ் ஆய்வின் நிலை எப்படி உள்ளது?
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 26 பேர் என்னை நெறியாளராகக் கொண்டு (ஏன்ண்க்ங்) முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 77 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். எல்லாருமே எளிய பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். பெரும்பாலும் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்கள். ஆய்வாளர், வழிகாட்டி உறவை இனிய தோழமை உறவாகவே காண்கிறேன்.
எனக்கு நெறியாளராக அமைந்தவர் பேராசிரியர் பெ. மாதையன். இலக்கணத்தில் ஆராய்ச்சி செய்தவர். அறிஞர் பொற்கோவின் மாணவர். சங்க இலக்கியம், அகராதித் துறைகளில் பெரும் புலமையாளர். கண்டிப்பு மிக்கவர் எனப் பெயரெடுத்தவர். அவரிடம் பெற்ற பயிற்சி ஆய்வு முறையியலில் (தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஙங்ற்ட்ர்க்ர்ப்ர்ஞ்ஹ்) எனக்கு வழிகாட்டியாக அமைந்தது. இந்த ஆய்வு முறைமை நெறிகள்தான் ஆய்வுக்கு அடிப்படை. இன்று ஆய்வுலகில் போலச்செய்தல் பெருகி விட்டது. உழைப்பு அருகிவிட்டது. வேலையின்மை, குறைந்த ஊதியம் உள்ளிட்ட சமூக நிலைமைகளும் இதற்குக் காரணம். ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் எல்லோரின் கூட்டு முயற்சிகளால்தான் தமிழாய்வை மேம்படுத்த இயலும்.
தங்களின் குடும்பம் குறித்து?
என் துணைவியார் இராதா நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர். இரண்டு மகள்கள். மூத்தவர் ஞானக்குயில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் செய்கிறார். இளையவர் சித்தார்த்தி கட்டட எழிற்கலை (இ.ஆழ்ஸ்ரீட்) முடித்து உள்ளார். இவர்கள் என்னை முழு சுதந்திரத்தோடு இயங்க அனுமதிக்கிறார் கள். பயணங்கள், பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் தொடர்ந்து ஈடுபட இதுவே காரணம். நான் குடும்பத் துக்கு அதிகம் நேரம் ஒதுக்கவில்லை என்ற குறை உண்டு. மற்றபடி எளிய நிறைவான வாழ்வு.