தமிழக அரசு அமல்படுத்த உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ஆய்வுகள் செய்து, தரவுகள் அடிப்படையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அண்ணா பிறந்த நாளான செப். 15-ஆம் தேதி ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. எனினும், அரசு பொறுப்பேற்ற உடனேயே திட்டம் தொடங்கப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. தரவுகள் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்ததே தாமதத்துக்குக் காரணம்.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்க, ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செப். 15-ஆம் தேதி திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவிப்பும் வெளியானது. இந்த திட்டத்தில் சிறு பிசகு ஏற்பட்டாலும், அரசின் மீதான மக்கள் நம்பிக்கை சிதைந்துவிடும் என்பதால், முதல்வர் ஸ்டா-லின் முழு கவனத்துடன் இந்த திட்டத்தைக் கண்காணித்து வருகிறார்.
திட்டத்தின் பயனாளிகள், அவர்களுக்கான தகுதிகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், தகுதியானவர்களைக் கண்டறிய ஒரு கட்டமைப்பையும் அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக சேகரிக்கப்பட்ட தரவுகள், அடுத்தடுத்த அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவுக்குப் பயன்தரும். திட்டப் பயனாளி 21 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் 2, 3 பேர் இருந்தால், அவர்களே ஒரு பயனாளியை தேர்வு செய்யலாம்.
அதேபோல, திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகளை குடும்ப தலைவியாகக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேபோல, ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டுவருமானம், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய்அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் என பல்வேறு அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வைத்துள்ளோர், முதியோர், விதவை ஓய்வூதியம் பெறுவோர் இதில் பயனடைய முடியாது.
ஏற்கெனவே தமிழக நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், தரவுகள் அடிப்படையிலான நிர்வாகம் என்று வலி-யுறுத்தி வந்தார். அதன்படி, ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகளையும் அரசு தொகுத்துள்ளது. இதற்காக, அண்மையில் எந்த ஒரு மாநிலமும் மேற்கொள்ளாத வகையில், வருமான வரித் துறையுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும், ஆதார் அடிப்படையிலான தகவல்களையும் அரசால் பெற இயலும். இவையே பயனாளிகள் தேர்வில் முக்கிய விஷயங்களாக உள்ளன.
ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரத் துக்கும் குறைவான பயன்பாடு என நிர்ணயித்தது, வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள் அடிப்படையில் வாழ்க்கைத் தரத்தை எடைபோடத்தான். இந்த தரவுகள் மின்வாரியத்திடம் உள்ளன.
அதேபோல, தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 35 லட்சம் என்று தரவுகள் தெரிவிக்கும் நிலையில்,அவர்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ளவர்களில் தகுதியானவர்களைக் கண்டறிவது எளிதானது.
இதுதவிர, பல்வேறு தரவுகளின் அடிப்படையில், ஏழை மக்கள் யார் என்பதையும் அரசு தெளிவாகக் கண்டறிந்துள்ளது. இவ்வாறு, வருமான வரி செலுத்துவோர், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், ஓய்வூதியம் பெறுவோர் என பலரது வருவாய், வசதிகள் குறித்த தரவுகள் அரசிடம் உள்ளதால், தகுதியானவர்களைக் கண்டறிவது எளிதானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்தில் தகுதியில்லாதவர்கள் யாரும் பயனடையக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. அதற்காகத் தான், பெறப்படும் விண்ணப்பங்களை, அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு, பயனாளிகள் முடிவு செய்யப் படுகின்றனர். மேலும், சிலர் அளிக்கும் தகவல்கள், தரவுகளுடன் ஒத்துப் போகாமல் இருக்கும்பட்சத்தில், கள ஆய்வும் நடத்தப்படுகிறது.
அதேநேரத்தில், கள ஆய்வு அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் தவறான தகவலைப் பதிவு செய்தால், மேல்முறையீடு வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இ-சேவை மையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும்போது உடனடியாக அடுத்தகட்ட ஆய்வு செய்யப்பட்டு, உண்மையாகவே தகுதியானவர் என்றால், அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப் படுகிறது.
இதுதவிர, தகுதியான குடும்பமாக இருந்தும், அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கஇயலாத நிலை உருவானால், வேறு திட்டங்களின் மூலம் அக்குடும்பங்களைக் காப்பாற்றும் திட்டம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனினும், அங்கெல்லாம் தகுதியான பயனாளி களை தரவுகள் மூலம் கண்டறிந்து, உதவித்தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. தகுதியான பயனாளிகளை உரிய அளவுகோல்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையில் கண்டறிந்து வழங்குவது, மாநிலத்தின் மீதான மதிப்பீடுகளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தில் 2022-23-ஆம் ஆண்டு நிலவரப்படி 2.43 கோடி வீட்டு மின்இணைப்புகள் உள்ளன. இவற்றில் ஒராண்டில் 3,600 யூனிட்களுக்கு மேல்மின்சாரப் பயன்பாடு உள்ள இணைப்புகள் 9.93 லட்சம். அதாவது, மொத்தஇணைப்புகளில் 4.89 சதவீதம் மட்டுமே. மீதமுள்ளவர்கள் 3,600 யூனிட்களுக்கு கீழ் மின் பயன்பாடு கொண்டவர்கள். இதர நிபந்தனைகளின் கீழ் வருவோர் தவிர்த்து, இவர்களில் ஒரு கோடி குடும்பத்தைக் கண்டறிவது மிகவும் சுலபம்.
எனவே, ஒரு கோடிக்கும் அதிகமாகவே மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் எண்ணிக்கை இருக்கும் என்று அரசு கணித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலி-ன், இந்தத் திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி கூட்ட நெரிசல் இன்றி ஆவணங் களைப் பெற வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்திய முதல்வர், ஆவணங்களுக்காக காத்திருக்காமல், ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசி களுக்கும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
இந்த உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழே உள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங் களாக இருத்தல் வேண்டும்.
ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது.
சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கிடைக்காது.
ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி களுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
அதாவது, 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்னதாகப் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்துள்ள விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.