மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதி களுக்கு இடையேயான போர், கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் கடும் சேதமும், அதிக உயிர் பலியும் ஏற்பட்டுள்ளன. இந்த போரில், பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, சில மேற்காசிய நாடுகளும் களத்தில் குதித்தன. இந்த நாடுகள் நேரடியாக களத்தில் இறங்காமல் ஹவுதி, ஹொஸ்பெல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளை களத்தில் இறக்கின. யூதர்களின் நாடாக கருதப்படும் இஸ்ரேலுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் இடையேயான போராக, ஒரு கட்டத்தில் இது உருவெடுத்தது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து இயங்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹொஸ்பெல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது; இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது.
அந்த வகையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து, இஸ்ரேல் சமீபத்தில் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களின்போது, டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீதும் சில ஏவுகணைகள் விழுந்தன. இதில், ஈரான் ராணுவத்தின் உயரதிகாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது; கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியது. இதையடுத்து, மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் உருவானது.
இந்த சூழ்நிலையில், தன் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ''இஸ்ரேல் மீது ஈரான் எந்த நிமிடத்திலும் தாக்குதல்களை நடத்தலாம்,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவவும், அந்த பிராந்தியத்தில் உள்ள தன் படைகளை பாதுகாக்கவும், கூடுதலாக இரண்டு போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என ஈரானுக்கும் அமெரிக்கா அறிவுறுத்தியது. இதில் உதவும்படி சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடனும் அமெரிக்கா பேசியுள்ளது.
ஏவுகணைகள் வாயிலாகவும், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாகவும், ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாம் என, அமெரிக்க உளவு அமைப்பு தகவல்கள் தெரிவித்தன.
இஸ்ரேலும் தன் எல்லையை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க, தன் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், வளைகுடா பகுதியில் சென்ற, இஸ்ரேலுக்கு சொந்தமான 'எம்.சி.எஸ்.ஏரிஸ்' என்ற சரக்கு கப்பலை, ஈரான் படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பலில் இருப்பவர்களில், 17 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. 'இந்த பிராந்தியத்தில் தேவையில்லாத பதற்றத்தை ஈரான் உருவாக்கி வருகிறது. நிலைமை மோசமடைந்தால், அதற்காக ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, இஸ்ரேல் எச்சரித்திருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14-ஆம் தேதி தாக்குதலை தொடுத்தது.
அன்று இரவு மட்டும் சுமார் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் தனது ஐயன் டோம் பாதுகாப்பு அம்சத்தை கொண்டும், அமெரிக்கா போர் கப்பல், பிரிட்டன் போர் விமானத்தை கொண்டும் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சூழல் இப்படி இருக்கையில், திடீரென தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை கடந்த 17-ஆம் தேதி நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 150 ராக்கெட்கள் வீசப்பட்டுள்ளன, 2 கமாண்டர்கள் உட்பட மூன்று ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்தது.
ஈரான் தரப்பில் இருந்து முதல்முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்துகின்றன.
ஒருவேளை இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தால் ஈரான் நாட்டின் அணுமின் நிலையங்களை குறிவைக்கலாம் என கூறப்படுகிறது. ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாகவும், இதுகுறித்து கவலைப்படுவதாகவும் ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் குரோஷி கூறி உள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இஸ்ரேல் செய்த தவறுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இத்துடன் அந்த பிரச்சினை முடிந்துவிட்டதாகவும் ஈரான் கூறி உள்ளது. இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்தால், ஈரானின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. எனவே, இனி இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வைப் பொருத்து இரு நாடுகளுக்கிடையே நேரடி போர் மூளுமா? அல்லது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.