இலக்கியமும் இலக்கணமும் கூறாத வற்றை மக்களின் வாழ்விடங்கள் உணர்த்தும். அவ்வகையில் அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லிலியல் துறை இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் மிக முக்கியமான உலகளவில் சிறப்புப் பெற்ற அகழாய்வாக, கொடுமணல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வு கருதப்படுகிறது. இவ்விடத்தின் வரலாற்றுச் சிறப்புகளை முதன் முதலிலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்ற அறிக்கையின் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர் பேராசிரியர் செ. ராசு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் 1938-ஆம் ஆண்டு, சென்னிப்ப கவுண்டர் நல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் செ. ராசு. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், இவரின் முனைவர் பட்ட ஆய்வான ‘கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்’ இன்றளவும் செம்மையான சிறந்த ஆய்வாக ஆராய்ச்சியாளர்களால் போற்றப்பட்டு வருகின்றது.
ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, ஆட்சிக்குழு உறுப்பினர் வரை உயர்ந்த இவர், ‘நொய்யல் வழி ஆற்றுச் சமூகம்’ என்னும் புதிய பண்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். கொங்கு நாட்டு உ.வே.சா எனப் போற்றப்படும் தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் சுவடிப்பயிற்சி பெற்று, பல்வேறு சுவடிகள் மற்றும் பட்டயங்கள் வழி இருந்த வரலாற்றுத் தரவுகளை ஆய்ந்து நூல் வடிவில் மாற்றியவர்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லிலியல் துறைத் தலைவராக இருந்தபோது, இவரது தலைமையில் கொடுமணல் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. சங்க இலக்கியங்களில் கொடுமணல் பற்றிப் பல்வேறு செய்திகள் கிடைக்கப்பெற்றதை ஆய்வின் மூலம் வெளிப்படுத்தி மிகச்சிறந்த நாகரிகம் உடைய இடமாகக் கொடுமணல் திகழ்ந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ராசகேசரிப் பெருவழிப் பாதையின் நோக்கத்தையும் , சோழ நாட்டையும், சேர நாட்டுக் கடற்கரையையும் இணைக்கும் பெருவழிப் பாதையில் அமைந்த கொடுமணல் இடத்தை மிகச் சிறந்த ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியவராகத் திகழ்கிறார் செ. இராசு.
சேர நாட்டின் கரூர் மற்றும் முசிறி ஆகிய நகரங்களை இணைக்கும் வணிகப் பாதையில் அமைந்த கொடுமணல், சங்க காலத்தே அணிகலன் தொழிலால் சிறப்புற்றிருந்தமை அறிய முடிகின்றது. கொடுமணலில் நன்கலங்கள் செய்யப்பட்டன என்பதை ,
“கொடுமணம் பட்ட …… நன்கலம்” (பதிற்று; 67) எனக் கபிலரும்,
“கொடுமணம் பட்ட வினைமாண்
அருங்கலம் ” (பதிற்று ; 74)
என்று அரிசில் கிழாரும் குறிப்பிடு கின்றனர்.
தொல்லிலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை புலவர் செ. ராசு 1985, 1986, 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டதன் மூலம் , ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வைடூரியம், இலங்கையைச் சேர்ந்த பிளக்கேட் போன்ற அணிகலன்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டு இந்நகரின் வரலாற்றுப் பெருமை உலகுக்கு உணர்த்தப்பட்டது. ‘நொய்யல் நதி நாகரிகம்’ என்னும் இவரின் ஆய்வு சிறந்த கட்டுரையாக இன்றளவும் போற்றப்படுகிறது.
கொங்குநாடு மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ளூர் ஆவணங்களை இவர் அளவிற்கு யாரும் இதுவரை தொகுக்கவில்லை. சிறிய கிராமங்களின் வரலாறுகளைக் கூட அரிதின் முயன்று தொகுத்து, பழங்காலத்தில் அவ்வூரின் பெருமைகளைத் தேடி நூல் வடிவாக்கியவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள், நானூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட செப்பேடுகள், 850-க்கும் மேற்பட்ட கல்வெட்டு களையும் ஆய்ந்து அறிந்து வெளிப்படுத்தியவர். தொல்லியல் துறையில் மட்டுமின்றி புலவராகப் பாடல் இயற்றும் திறனையும் பெற்றவர்.
டாக்டர். பிரான்சிஸ் புக்கானன் 23 ஏப்ரல் 1800 முதல் 6 ஜூலை 1801 வரை பயணம் செய்து எழுதிய நூலின் ஒரு பகுதியைச் சுருக்கி, ‘1800 இல் கொங்குநாடு’ எனும் தலைப்பில் மொழிபெயர்த்து கொங்குநாட்டு வரலாற்றைத் தொகுத்திருக்கிறார்.
தமிழர்கள் இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் சிறந்து விளங்கினர்.
அவ்வகையில் இந்தியாவில் தொன்மை யான இசைக் கல்வெட்டை அரச்சலூரில் 1960-இல் கண்டுபிடித்தார். 1800 ஆண்டுகள் பழமையான இசைக் கல்வெட்டை முதன்முதலில் ஆய்ந்து வெளிப்படுத்தியவர். இந்தியாவிலுள்ள அருங்காட்சியகங்களில் ஈரோடு கலைமகள் அருங்காட்சியகம் சிறப்பு வாய்ந்தது. பல அரிய பொருட்களைத் தொகுத்து இந்த அருங்காட்சியகத்தை நிறுவியவர் செ. ராசு.
சேலம் மாவட்டம் பொன்சேரிமலையில் திருக்குறள் கல்வெட்டையும், ஈரோடு மாவட்டம் விசயமங்கலம் பெருங்கதைக் கல்வெட்டையும் கண்டறிந்தார். தமிழ் மொழியின் சிறப்புமிகு இலக்கண நூலாகத் திகழும் நன்னூல் அரங்கேற்றம் செய்யப்பட்ட இடம் விசயமங்கலம் என்பதையும், அதனைச் சுற்றியுள்ள சமணர் கோயில்களையும் ஆய்வு செய்து வெளிப்படுத்தினார்.
பெருங்கதை என்பது காப்பிய நூலாக தமிழறிஞர் உலகத்தில் கொண்டாடப் படும் நூலாகும். பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் பெருங்கதையின் சிறப்பையும் செ. ராசுவின் பணியையும் உலகுக்கு உணர்த்த 2004-ஆம் ஆண்டு மாபெரும் கருத்தரங்கை நடத்தினார். அந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்த செ. ராசுவுக்குப் பாராட்டு விழாவும் நடத்தினார். தமிழகத்தில் பாடல் வடிவில் பொறிக்கப்பட்ட பழமங்கலம் கல்வெட்டைக் கண்டறிந்து தமிழ் உலகம் அறியும் வகையில் நூல் வடிவாகவும் தொகுத்தார். தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் பாடல் வடிவில் கிடைத்த ஒரே கல்வெட்டு பழமங்கலம் கல்வெட்டு என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. அதேபோல சித்தோடு ‘குட்டுவன் சேய்’ என்ற பிராமி கல்வெட்டையும் இவர் ஆய்ந்து கண்டுபிடித்தார்.
தமிழகத்தின் பெரும்பாலான ஊர்ப் பெயர்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து, சங்க இலக்கியத்தில் ஊர்கள் பெற்ற சிறப்பினையும் ஆய்ந்து தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார். பேரூராதீனம் நடத்திய ‘கொங்கு மண்டல சதகம்’ மாநாட்டில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி சிறப்பு வாய்ந்த நூல் உருவாக்கத்திற்குக் காரணமாய்த் திகழ்ந்தார். இவரின் அரும்பணியினைப் பாராட்டி பேரூராதீனம் ‘கல்வெட்டறிஞர்’ எனும் விருதினை அளித்துச் சிறப்பித்தது.
செ. ராசு எழுதிய ‘தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்’ எனும் நூல் சிறந்த வரலாற்று ஆய்வு நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டு , தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறப்புப் பரிசினைப் பெற்றது.
தமிழகத்தில் தொல்லியல் கழகத்தை நிறுவியர்களில் செ. ராசுவின் பங்களிப்பு சிறப்பானது. தொல்லியல் கழகம் மூலம் பல்வேறு கோரிக்கை களைத் தமிழக அரசுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி பல்வேறு வரலாற்று ஆய்வுகள் வெளிவருவதற்குத் துணையாக இருந்தார். இன்றும் அவ்வாறே பணியாற்றி வருகிறார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இவரின் முயற்சியால்தான் பதிப்புத்துறைத் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் முதல் நூலாக இவரின் நூல் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் எல்லாக் கிராமங்களுக்கும் பயணம் செய்து ஊர்ப்பெயர்களை ஆராய்ந்து பல நூல்களாக உருவாக்கி வருகிறார்.
விருதுகள்
தமிழக அரசு உ.வே.சா விருதினை 2012-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய போது, முதன்முதலாக அவ்விருதினை செ. ராசுவுக்கு அளித்து பெருமை படுத்தியது. ஆதீனங்கள், தமிழ்ச் சங்கங்கள், நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் எனப் பல்வேறு அமைப்புகள் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை அளித்துள்ளன.
நூல்கள்
தமிழகத்தின் பல அரிய கல்வெட்டுச் சாசனங்களையும், செப்பேடுகளையும் ஆய்ந்து பல நூல்களைத் தொடர்ந்து எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும், நானூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்துள்ளார்.
கொங்குநாட்டு வரலாற்றை மயிலை சீனிவேங்கடசாமி, கோவைக்கிழார், புலவர் குழந்தை போன்றோர் தொகுத்துள்ளனர். ஆனால் பண்பாடு , சமயம், இலக்கண, இலக்கிய ஆய்வுகள் எனப் பன்முகத் திறனுடன் செ. ராசு எழுதிய கொங்கு நாட்டு வரலாறு சிறப்பான நூலாக ஆய்வாளர்களால் போற்றப்படுகிறது. இவர் இயற்றிய கச்சத் தீவு மற்றும் கண்ணகி கோட்டம் ஆகியன முக்கியமானவை. இந்நூலின் அச்சு வடிவத்தை எதிர்காலத்தினர் போற்றும் வண்ணம் பொள்ளாச்சி நசன் மின்வடிவம் கொடுத்துள்ளார்.
‘ஆவணம்’ என்ற இதழ் தொடங்கக் காரணமாகத் திகழ்ந்தவர். இவரின் வேண்டுகோளை ஏற்று பல கல்லூரிகளில் அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட்டன. 1981-ஆம் ஆண்டு இவர் இயற்றிய ‘கொடுமணல் இலக்கியங்கள்’ மூலம் சங்க காலத்தில் தமிழரின் அயல் நாட்டு வணிகத் தொடர்புகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. இவரின் ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலும் வரலாற்று ஆய்வாளர்களால் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது.
செ. ராசு ‘கொங்கு ஆய்வு மையம்’ ஒன்றை நிறுவினார். இது ‘வரலாற்றை அறிவோம்- அறிவிப்போம்’ என்பதாகும். இதுவரை 300-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தொடர்புடைய கட்டுரை களை இயற்றியுள்ளார். தமிழக அரசு செ. ராசுவின் நூல்களை நாட்டுடைமை யாக்கியது குறிப்பிடத்தக்கது.
செ. ராசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் விரிவுரையாளராக 1982-இல் இணைந்து கல்வெட்டு, தொல்லியல் துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.
கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும், 161 நூல்கள் மற்றும் 250 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர்.
சங்க கால கொடுமணம் (இன்றைய கொடுமணல்) ஊரைக் கண்டறிந்து, அகழாய்வு செய்து ரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம் குறித்த அரிய தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.