விண்வெளிக்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தை 2022-ஆம் ஆண்டில் அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது. இதனை செயல்படுத்தும் 4-வது நாடாக இந்தியா இருக்கும்.
இதுவரை, விண்வெளிக்கு மனிதர்களை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே அனுப்பியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு தேவையான சில தொழில்நுட்பங்கள், விண்கல மீட்பு சோதனை (Space Capsule Recovery Experiment – SRE 2007),, மனிதர்களுடன் கூடிய விண்கலத்தை சுற்றுச்சூழலுக்குள் மீண்டும் நுழைவதற்கான சோதனை(Crew module Atmospheric Reentry Experiment # CARE 2014) மற்றும் விண்கல ஏவுதல் திட்டத்தை கைவிட்டு பாதுகாப்பாக தரையிறக்குதல் சோதனை (Pad Abort Test # 2018) போன்றவற்றின் மூலம், வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்பங்கள், திட்டத்தின் நோக்கத்தை குறுகிய காலமான நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இஸ்ரோவுக்கு உதவும்.
2018-ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டுகள்
ஜனவரி 12, 2018-இல் இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் 42-வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி-சி40 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்களுடன் 710 கிலோ எடை கொண்ட தொலைஉணர் செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.
இந்தியாவின் புவிசுற்றுவட்ட செயற்கைக்கோள் ஏவுவாகனமான ஜிஎஸ்எல்வி-எஃப்08 (Geosynchronous Satellite Launch Vehicle # GSLV#F08) மூலம், மார்ச் 29, 2018-இல் புவி சுற்றுவட்டப் பாதைக்கு ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பிஎஸ்எல்வி-சி41 மூலம், ஏப்ரல் 12, 2018-இல் 1,425 கிலோ எடைகொண்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சதீஷ் தவான் விண்வெளி மையத் திலிருந்து 2018 செப்டம்பர் 16-இல் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பிஎஸ்எல்வி-சி42 மூலம், நோவாசார் (NovaSAR) மற்றும் எஸ்1-4 (S1-4) ஆகிய 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நவம்பர் 29, 2018-இல் இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனம் (பிஎஸ்எல்வி-சி43) மூலம், 31 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து புவி சுற்றுவட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட ராக்கெட்டான மார்க் 3 (ஜிஎஸ்எல்வி மார்க்3-டி2) மூலம், 2018 நவம்பர் 14-இல் இந்தியாவின் ஜிசாட்-29 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோவின் அதிக எடைகொண்ட மற்றும் அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-11, பிரெஞ்ச் கயானாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து 2018 டிசம்பர் 5 அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2018 டிசம்பர் 19-இல் இஸ்ரோவின் புவிசுற்றுவட்டப் பாதை செயற்கைக்கோள் ஏவுவாகனமான ஜிஎஸ்எல்வி-எஃப்11 மூலம், தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஏ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர், சனியின் துணை கோள் அல்லது சூப்பர் நெப்டியூன் அளவு கொண்ட கிரகத்தை கண்டுபிடித்தனர்.
(இது பூமியின் பருப்பொருளில் 27 மடங்கும், அளவில் 6 ஆரமும் கொண்டது). சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைப் போன்றது. இந்த கிரகம், EPIC 211945201b அல்லது K2-236b என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், நமது சூரிய குடும்பத்தைத் தாண்டி, நட்சத்திரத்தைப் போன்ற கிரகங்களை கண்டுபிடித்த குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு, விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதன்படி, விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தும் திட்டத்தை கைவிட்டு, அதனை பாதுகாப் பாக தரையிறக்கும் பரிசோதனை (Pad Abort Test) வெற்றிகரமாக நடத்தப் பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத் திலிருந்து, விண்வெளிக்கு மனிதர்களுக்கு அனுப்பும் திட்டத்துக்கு அவசியமான, விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான அமைப்புக்கு தகுதிபெறும் வகையில், விண்கலத் திட்டத்தை கைவிட்டு பாதுகாப்பாக தரையிறக்கும் பரிசோதனை (Pad Abort Test), 2018 ஜூலை 5-இல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்தப் பயணம் அதிகபட்சமாக 7 நாட்கள் இருக்கும். மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு தாங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்படும் விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் செலுத்தும். இந்த விண்வெளித் திட்டத்தில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள், விண்கல அமைப்புக்கள், தரைக் கட்டுப்பாடு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த திட்டம் தொடர்பாக, தேசிய அளவிலான அமைப்புகள், சோதனைக் கூடங்கள் மற்றும் தொழில் துறையினரோடு விரிவான அளவில் ஒத்துழைத்து விண்வெளி திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும்.
விண்வெளி திட்டச் செலவு
இந்த விண்வெளித் திட்டச் செலவு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் இருக்கும். தொழில்நுட்ப மேம்பாடு, விண்வெளித் திட்டத்திற்கு தேவையான வன்பொருள், மென்பொருள் மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகள் இதில் அடங்கும். இந்த விண்வெளித் திட்டத்தில் இரண்டு ஆளில்லா விண்வெளிப் பயணம் முதலில் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.
பயன்கள்
இந்த விண்வெளித் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திற்கும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தேசிய அமைப்புகள் மற்றும் பிற விஞ்ஞான ஆராய்ச்சி மையங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுக்கும். மாறுபட்ட தொழில்நுட்பங்கள், தொழில் நிறுவனங்களின் திறமைகள், விரிவான ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும்.
விண்வெளிப் பயணத்திற்கு தேவையான அமைப்புகள், தொழில் துறையினரிடம் இருந்து தருவிக்கப்படும்.
நவீன தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்பு களை உருவாக்குவதோடு, மனித வளத்தையும் பயிற்சி அளிக்க இந்த விண்வெளித் திட்டம் வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் மாணவர்கள் பெரும் எண்ணிக்கை யில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை எடுத்து படிக்க இந்த திட்டம் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, தேசிய வளர்ச்சிக்கும் இது உதவும்.
செயல்பாட்டு உத்தி மற்றும் இலக்கு
விண்வெளித் திட்டத்திற்கு தேவையான வன்பொருளைப் பெறுவது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பொறுப்பாகும். தேசிய அமைப்புகள், சோதனைக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மனித உயிர் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு முயற்சிகள் மற்றும் வடிவமைப்பு, மறுஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொள்ளும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட நாளிலிருந்து 40 நாட்களுக்குள் முதல் விண்வெளி வீரர்கள் பயணத்தை நிகழ்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இரண்டு ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பி விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் திட்ட நிர்வாக விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
தாக்கம்
இந்த விண்வெளித் திட்டத்தின் மூலம் நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அபிவிருத்தி அடையும்.
இந்த விண்வெளிப் பயணம் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப மேம்பாடு குறித்து முடிவெடுக்க உதவும்.
விண்வெளித் திட்டத்தின் மூலம் பெருமளவு வேலைவாய்ப்பு உருவாக்கப் படுவதோடு மனித வள மேம்பாடு, தொழில்துறையினரின் திறன் மேம்பாடு ஆகியவை மேம்படும்.
விண்வெளி வீரர்களை அனுப்பும் திறன் பெற்ற நாடு என்ற நிலையை இந்தியா அடைவதோடு, வருங்காலத்தில் உலகளாவிய விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட முடிவதோடு, அது நாட்டுக்கு நீண்ட கால பயன்களையும் அளிக்கும்.
______________
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் வீதம் 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.