திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதி மோதலை அடுத்து பள்ளி வளாகங்களில் சாதிய பாகுபாட்டை களைவது குறித்து ஆலோசிக்க தமிழக அரசு கமிட்டி அமைத்திருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிட்டி தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் சாதிய பாகுபாடுகளை களைவதற்கான பல்வேறு பரிந்துரைகளை வழங்கி யுள்ளது. அதில் முக்கியமான பத்து பரிந்துரைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சாதிப் பெயர்கள் நீக்கம்
"கள்ளர் மறுவாழ்வு’ "ஆதி திராவிடர் நல’ போன்ற சாதிய அடையாளம் கொண்ட சொற்களை பள்ளிப் பெயர்களிலிருந்து நீக்க வேண்டும். இந்தப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளுமே "அரசுப் பள்ளி’ என்றழைக்கப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து பள்ளி எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று குறிப்பிட வேண்டும்.
பள்ளிகளுக்கு நன்கொடை அளித்தவர் களின் சாதி பெயர்களை நீக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறைகளுக்கு கீழ் அல்லாமல் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வி துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
ஆசிரியர்களுக்கு என்ன சொல்லப்பட்டுள்ளது
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அவர்களின் பணியிடத்தை மாற்ற வேண்டும். மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் போது, அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை சாதி அல்லாதவரை நியமனம் செய்வது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவேட்டில் அவர்களின் சாதிப் பெயர்கள் குறிப்பிட்டிருக்கக் கூடாது. எந்த சூழலிலும் மாணவர்களை நேரடி யாகவோ, மறைமுகமாகவோ சாதி பெயர்களை குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைக்கவோ, பேசவோ கூடாது.
பள்ளிகளில் என்ன மாற்றங்கள் தேவை
வகுப்பறைகளில் மாணவர்கள் ஆங்கில எழுத்து வரிசையில் அமர்த்தப்பட வேண்டும். மாற்று திறனாளி மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு விதிவிலக்காக முன்வரிசையில் இடம் அளிக்கலாம்.
மாணவர்களின் கல்வி உதவித் தொகை குறித்த விவரங்களை பொதுவாக வகுப்பறையில் அனைத்து மாணவர்
களின் முன்பும் அறிவிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட மாணவரை தனது அறைக்கு தனியாக அழைத்து கூற வேண்டும்.
இவற்றை மீறினால் ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவரின் சாதி விவரம் கொண்ட ஆவணங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வு செய்யும் அதிகாரிகளின் பார்வைக்கு மட்டுமே இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சொல்லப்பட்டது என்ன?
சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கைகளில் கயிறுகள், நெற்றியில் பொட்டு ஆகியவை அணியக் கூடாது.
அவர்கள் பள்ளிக்கு வரும் சைக்கிள்களில் சாதி குறியீடுகள் இருக்கக் கூடாது.
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் மாணவர்களுக்கு இது குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகுப்புகள் நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சங்கங்கள் அமைக்கவும், மாணவர் சங்கத் தேர்தல் நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.
கைப்பேசிக்கு தடை
மாநில அரசும், பள்ளிக்கல்வி துறையும் ஏற்கெனவே அறிவுறுத்தியது போல, கைப்பேசிகளை பள்ளி வளாகங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், சி பி எஸ் இ, ஐ சி எஸ் இ போன்ற பிற பாடத்திட்டங்களை பயிலும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும்.
மாணவர் புகார் பெட்டிகள்
பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். அவை மாணவர் மனசு உட்பட எந்த பெயரிலும் அழைக்கப்படலாம். அதன் சாவி பள்ளி நல அலுவலரிடம் மட்டுமே இருக்க வேண்டும்.வாரத்துக்கு ஒரு முறை அதிலுள்ள புகார்களை பரிசீலிக்க வேண்டும். எந்த நேரத்திலும் மாணவரின் பெயர் வெளியே தெரியக் கூடாது.
இட ஒதுக்கீடு
ஆதி திராவிடர் மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்வு செய்யும் வண்ணம், மேல் நிலை வகுப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க அரசு வழி வகை செய்ய வேண்டும்.
மண்டல வாரியாக சமையலறைகள்
ஒவ்வொரு பள்ளியிலும் சமையலறைகள் இருப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சமையலறைக் கொண்டு அங்கிருந்து உணவை விநியோகம் செய்யும் வசதிகள் கொண்டிருக்க வேண்டும். மண்டல வாரியாக ஊழியர்களை நியமிக்கும் போது, சாதிவாரி இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.
சாதிய வன்முறைகள் அதிகம் நடைபெறும் பகுதிகள்
உரிய பரிசீலனைக்கு பிறகு, சில பகுதிகளை ‘சாதி வன்முறைகள் அதிகம் நடைபெறும் பகுதிகள்’ என வகைப்படுத்த அரசு முடிவு செய்யலாம். சிறப்பு உளவுத்துறை குழுவை அமைத்து, சாதி பாகுபாடுகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அமைப்புகளை கண்டறியலாம். கல்வி காவிமயமாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்கலாம்.
பாடத்திட்டங்களில் மாற்றம்
ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டம் சமூக நீதி பண்புகளை உள்ளடக்கியதாக மாற்றப்பட வேண்டும். மாணவர்களின் பாடத்திட்டங்களில் சாதிய பாகுபாடுகள் தூண்டும் வகையில் இல்லாததை கண்காணிக்க சமூக நீதி குழு அமைக்கப்பட வேண்டும். கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்ட அந்தக் குழு கூறும் பரிந்துரைகளை ஏற்று பாடப்புத்தகங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.