சமீப காலங்களில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தன.
அதைத் தொடர்ந்து வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் குறித்து விமர்சிக்கப் பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்களின் பணப்புழக்கம் சார்ந்து புதிய விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறது.
வங்கிசாரா நிறுவனங்களின் கடனாளிகள் மற்றும் வைப்புத்தொகையாளர்கள் பாதிப்படைவதை தடுப்பதற்கு, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
அரசு கடன்பத்திரங்களின் மீதான முதலீடு, நிதி நிறுவனங்கள் நிதிச் சிக்கலை எதிர்கொள்ளும் போது ஒரு மாதத்துக்கு தேவையான பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதியை அளிக்கிறது. இதனால் நிதி நிறுவனங்கள் நிதிச் சிக்கலை எதிர்கொள்ளும்போது அதன் கடனாளிகள் மற்றும் வைப்புத் தொகையாளர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த விதிகள் ரூ. 100 கோடி மதிப்புள்ள அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
அதேபோல், பணப்புழக்க விகிதமும் அதில் வரையறுக்கப்பட்டு உள்ளது. ரூ. 5,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள நிதி நிறுவனங்கள் இந்த வரையறையின்படி செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த வரையறை யின்படி, நிதி நிறுவனங்கள் அவர்கள் வாங்கும் நிதிகளின் அளவையும் அளிக்கும் கடன்களின் அளவையும் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த விதிகள், நிதி நிறுவனங்களின் பணப்புழக்கத்தில் கட்டுபாடுகளை கொண்டு வருகிறது. தேவையான அளவிற்கு மட்டுமே நிதியளிக்க முடியும் என்ற சூழலை உருவாக்குகிறது. இந்த விதிகளை உடனடியாக கடைபிடிப்பது நிதி நிறுவனங்களுக்கு கடினமான ஒன்றாகும். அதனால் அதுகுறித்த வழிகாட்டுதல்களையும் ஆர்பிஐ அளிக்கிறது.
ஏப்ரல் 2020-க்குள் 60 சதவீத பணப்புழக்க விகித அளவினை அடைய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பத்து சதவீத உயர்வை மேற்கொண்டு, 2024-ஆம் ஆண்டுக்குள் நூறு சதவீத அளவினை அடைந்திருக்க வேண்டும் என்று அது கூறுகிறது.
கடந்த காலங்களில் பெரும் அளவிலான நிதி, பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு இருந்தது. ஐஎல்&எஃப் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட போது அதன் விளைவாக மற்ற நிறுவனங் களும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய விதிகள், ஒரு நிதி நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்போது அதைச் சார்ந்த பிற நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக, வங்கிகள்தான் தங்கள் இருப்புகளில் குறிப்பிட்ட அளவினை அரசு கடன்பத்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும். பணப்புழக்க விகிதாச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீதும் கொண்டுவரப்படும் இந்த விதிகளால், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் வங்கிகளுக்கு ஒத்ததாக மாறும். இவையாவும் ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு அறிக்கையில் உள்ளன.
கடந்த நிதி ஆண்டில் (2018-19) ஏறக்குறைய 6,800 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. ரூ. 71,500 கோடி அளவுக்கு நிதி மோசடிகள் நடந்துள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2017-18-ஆம் ஆண்டில் மொத்தம் 5,916 வழக்குகள் பதிவாயின. இதில் ரூ. 41,167 கோடி அளவுக்கு மோசடி நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக மோசடி நிகழ்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கிகள் மற்றும் முக்கியமான நிதி நிறுவனங்களில் இந்த அளவுக்கு மோசடி நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 73 சதவீதம் அதிகம் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளித்த பதிலில் ஆர்பிஐ இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதன் பயன் வாடிக்கையாளர்களை சென்றடையும் வண்ணம் வர்த்தக வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப் பட்டு உள்ளது. இதன்மூலம் ரெப்போ 6.00 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு தற்போது வங்கிகள் வசூலித்து வரும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
இதன் பயன் வாடிக்கையாளர்கள் சென்றடையும் வண்ணம் வர்த்தக வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளின் ஏடிஎம் கட்டணங்களை வரன்முறைபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்க குழு ஒன்றையும் அமைக்க வுள்ளது. இந்தியன் வங்கியின் தலைவர் தலைமையிலான வர்த்தக வங்கிகள் கூட்டமைப்பு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிக்கும்.
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகித இலக்கை 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பணவீக்க விகிதம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3.0 சதவீதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 3.4 சதவீதம் முதல் 3.7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வங்கி பண பரிவர்த்தனைகளுக்கான நிப்ட் கட்டணமாக ரூ. 1 முதல் ரூ. 5 வரை வசூலிக்கிறது. அதுபோலவே ஆர்டிஜிஎஸ் கட்டணமாக ரூ. 5 முதல் ரூ. 50 வரை வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.