மெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் மொத்தம் 186 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 95 சதவீத இடங்களில் வாக்கு சீட்டு நடைமுறை யிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்திருந்தனர்.

அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.

மீதமுள்ள வாக்காளர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்கை செலுத்தினர்.

dd

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்கு பதிலாக 'எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) உறுப்பினர் களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்கா வின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்த மாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

Advertisment

டொனால்ட் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 312 எலக்டோரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 228 எலக்டோரல் வாக்குகளை பெற்றார். வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 50.5% கமலா 48% பெற்றுள்ளனர்.

பெரும்பான்மைக்கு தேவையான 270 எலக்டோரல் வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை தலைவர் மைக் ஜான்சன், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலமாக 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் டிரம்ப், இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார்.

Advertisment

அதிபர் தேர்தலுடன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் 435 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த அவையில் பெரும்பான்மையை எட்ட 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. டிரம்பின் குடியரசுக் கட்சி 200 தொகுதிகளை வென்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி 180+ தொகுதிகளை வசப்படுத்தியிருந்தது. செனட் சபையைப் பொறுத்தவரையில் 50 இடங்கள் தேவை எனும் நிலையில், டிரம்ப் கட்சி 52 இடங்களையும், கமலா ஹாரிஸ் கட்சி 42 இடங்களையும் பெற்றிருந்தது. ஆக, டிரம்ப் கூறியது போலவே இது குடியரசுக் கட்சிக்கு மகத்தான வெற்றியாகும்.

டிரம்ப் வென்றதன் பின்புலமும் தாக்கமும்

அமெரிக்க நாட்டில் வரி உயர்வை கட்டுப்படுத்துவது, நாட்டில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பது, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போர், ஜனநாயக உரிமை போன்றவை தேர்தலில் டிரம்பின் முக்கிய முழக்கங்களாக இருந்தன. தேர்தல் பரப்புரையின்போது இரண்டு முறை அவரை குறிவைத்து கொலை முயற்சி நடந்தது. இதில் பென்சில்வேனியாவில் துப்பாக்கி குண்டு அவரது காது பகுதியை துளைத்து காயம் ஆக்கியது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக, ஜூலை 13 அன்று பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில், 20 வயதேயான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்றார். உடனடியாகப் பாதுகாப்புப் படையினரால் க்ரூக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாகப் பேச்சு எழுந்ததும் இங்கே நினைவுகூரத் தக்கது. துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர் காதில் ரத்தம் வழிய, பின்னணியில் அமெரிக்க தேசியக் கொடி காற்றில் பறக்க, முஷ்டியை உயர்த்தி டிரம்ப் முழக்கமிட்டது ஒரு வீறார்ந்த காட்சியாகப் பதிவானது. அந்தப் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளும் அமெரிக்கச் சந்தையில் அமோகமாக விற்பனையாகின.

டொனால்ட் டிரம்ப் செய்த புதிய சாதனை

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெற்றுள்ள இந்த வெற்றி, வரலாற்றில் இடம்பெறுகிறது. இதற்கு முன்பும் பல தலைவர்கள் இரண்டு முறை அதிபர்களாக இருந்திருக்கிறார்கள் (ரீகன், புஷ், கிளிண்டன், ஒபாமா).

ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபராக இருந்தவர்கள். டிரம்ப் தேர்வானதன் மூலம், ஒரு முறை அதிபராக இருந்து, அடுத்த முறை தோற்று, மூன்றாவது முறை போட்டியிட்டு அதிபராவது என்பது வரலாற்றில் முதல்முறை. கடைசியாக இந்த சாதனை படைக்கப்பட்டது 132 ஆண்டுகளுக்கு முன்பு.

க்ரோவர் கிளெவ்லான்ட் அமெரிக்கா வின் 22-வது மற்றும் 24-வது அதிபராக பதவியேற்றார். அதாவது, 1885-ஆம் ஆண்டு முதல் 1889 வரையிலும், அடுத்து 1893 முதல் 1897-ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதுபோல, டிரம்ப் 2016-ஆம் ஆண்டு அதிபராகி, 2020-ஆம் ஆண்டு ஜோ பைடனிடம் தோற்று, 2024-ஆம் ஆண்டு கமலா ஹாரிஸை வென்று சாதனையை முறியடித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இருக்கும் அதிக வயதுடைய அதிபர் ஜோ பைடன் உள்ளார். அவருக்கு 82 வயதாகிறது. ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிக வயதுடைய நபர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றால் டெனால்டு டிரம்ப்தான் அது, அவருக்கு தற்போது 78 வயதாகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும் டொனால்ட் டிரம்ப் உள்ளார்.

இத்தனை பெருமைகளுக்கு இடையே, அமெரிக்க அதிபராக இருந்த காலத்திலேயே இரண்டு முறை குற்றச்சாட்டு நடவடிக்கைகளை எதிர்கொண்டவர் என்ற பட்டத்தையும் அவரே பெறுகிறார். ஆனால், இரண்டு வழக்குகளிலும் அவர் விடுவிக்கப் பட்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது உக்ரைன் உதவியை நாடியதாக ஒரு குற்றச்சாட்டும், பிறகு 2021-ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் நிறைவடையும் போது இரண்டாவது குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொண்டிருந்தார்.

குற்றச்செயலுக்காக தண்டனை பெற்று அதிபராக பதவியில் அமரும் முதல் நபராகவும் டெனால்ட் டிரம்ப் இருப்பார். இந்த ஆண்டு தொடக்கத்தில், குற்றச்செயல் ஒன்றில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பளித்தது. ஆனால், இன்னும் தண்டனை விதிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா ஜனவரி 20, 2025 அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் கோலாகலமாக நடைபெற உள்ளது.