தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்
மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது தான் மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில்- ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. எனவே தமிழ்நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 -இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1957-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.
ஆட்சிமொழிக் குழு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்து வதற்குத் தமிழக அரசு ஆட்சிமொழிக் குழு ஒன்றை 1957-ஆம் ஆண்டில் அமைத்தது. இக்குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அலுவலகங்களில் விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. இந்த நடைமுறைகளை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே இக்குழுவின் பணிகள் அனைத்தையும் தமிழ் வளர்ச்சித் துறை என்றத் தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றிட அரசு முடிவு செய்தது.
தமிழ் வளர்ச்சி இயக்ககத் தோற்றம்
தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரவலாகவும் முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில் அரசு தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறைத் தலைமை அலுவலகத்தை 1971-ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தமிழ்வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ் வளர்ச்சி இயக்குநரை துறைத் தலைமை அலுவலராகக் கொண்டு செயல்படும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் சென்னையில் அமைந்துள்ளது. மாநகராட்சியாக உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகங்களும் பிற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களும் அமைந்துள்ளன.
தமிழ் வளர்ச்சித் துறையின் தலையாய பணி ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகும். இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
துறைத்தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆய்வு செய்கிறார். தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள், ஆகியவற்றின் துறைத் தலைமை அலுவலகங்களையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆய்வு செய்கிறார்.
தமிழ் வளர்ச்சி இயக்குநரால் ஆய்வு செய்யப்பெறும் துறைத் தலைமை அலுவலகங்கள் நீங்கலாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளின் மண்டல, மாவட்ட, சார்நிலை அலுவலகங்களைத் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர்களும், மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்களும் ஆய்வு செய்கின்றனர்.
ஆட்சிமொழித் திட்டம் தொடர்பாக அரசு அலுவலர்களும் பணியாளர்களும் நன்கு அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கமும் நடத்தப் பெறுகின்றன. ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடத்துவதற்கு ரூ. 30,000 மும் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்து வதற்கு ரூ. 20,000 மும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
ஆட்சிமொழித் திட்டத்தைப் பின்பற்றக் கூடிய வகையில் அரசு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையானத் தமிழ்ச் சொற்களைத் தொகுத்து ஆட்சிச் சொல்லகராதி என்ற நூலினைத் தயாரித்து அச்சிட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கப்பெறுகின்றது. இவ்வகராதி தேவைக்கேற்ப புதிக்கியும், புதியச் சொற்கள் சேர்க்கப்பட்டும் வெளியிடப் பெறுகிறது.
அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களைத் தொகுத்து அந்தந்தத் துறைகளுக்குரியனவாக 75 சிறப்புச் சொல்லகராதிகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது இவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக வெளியிடப்பட உள்ளது.
அரசுத்துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், இணையங்கள் ஆகியவற்றில் தமிழில் குறிப்புகள், வரைவுகள் நன்கு எழுதப்படுவதற்குத் துணை புரியும் வகையில் மாதிரி வரைவுகள் என்ற நூல் அச்சிடப்பட்டு அதன்படிகள் விலையேதுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
புதிதாகப் பயன்பாட்டிற்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஊடகங்களின் பயன்பாட்டிற்கு அளிக்கும் வகையில் சொல்வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இன்றியமையாத சில ஆணைகள் மட்டும் இப்பகுதியில் சுட்டிக்காட்டப் பெறுகிறது.
அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.
அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.
பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பொதுத்துறை நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971 உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மைய, மற்றும் பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் கடிதப் போக்குவரத்துகள் தமிழிலேயே அமைதல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.
அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு ஆணை யிட்டுள்ளது. பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.
அலுவலக வரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.
அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்களின் அளவு இடம் பெற வேண்டுவது தொடர்பாகவும் ஆணையிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றம் பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.
ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இவை போன்று பல அரசாணைகளை அரசு பிறப் பித்துள்ளது.
ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இத்துடன் தமிழ் வளர்ச்சிக்கான சில திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
தமிழ்மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில் பல திட்டங்கள் தமிழ் வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப் பெறுகின்றன.
விருதுகள்
தமிழ்மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில் தொண்டாற்றிய தமிழறிஞர் களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப் படுகிறது. திருவள்ளுவர் திருநாள் மற்றும் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுத் தொகை ஒரு இலட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் படுகிறார்கள்.
திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படும் விருதுகள்
திருவள்ளுவர் விருது
பாரதியார் விருது
பாரதிதாசன் விருது
திரு.வி.க. விருது
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது
பேரறிஞர் அண்ணா விருது
பெருந்தலைவர் காமராசர் விருது
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கப்படும் விருதுகள்
தமிழ்த்தாய் விருது
கபிலர் விருது
உ.வே.சா. விருது
கம்பர் விருது
சொல்லின் செல்வர் விருது
ஜி.யு.போப் விருது
உமறுப்புலவர் விருது
முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது
இளங்கோவடிகள் விருது
தமிழ்ச் செம்மல் விருது
விழாக்கள்
உலகத் தாய்மொழி நாள் 21.02.2014-ஆம் நாளன்று முதன்முதலாகச் சென்னையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம், கருத்தரங்கம் இடம்பெற்றன. சித்திரைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சிறந்த நூல்களுக்குப் பரிசு
இத்திட்டத்தின்கீழ் புதுக்கவிதை, மரபுக் கவிதை. புதினம், சிறுகதை, நாடகம், திறனாய்வு, பயண இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட 33 வகைப்பாடுகளில் நூல்கள் தெரிவு செய்யப்படுகின்றன. தெரிவு செய்யப்பெற்ற நூலாசிரியர்களுக்குப் பரிசுத் தொகையாக ரூ.30,000/-மும், சான்றிதழும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பரிசுக் தொகையாக ரூ.10,000/-மும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
நூல்கள் வெளியிட நிதியுதவி
தமிழில் சிறந்த நூல்கள் வெளியிடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் நூலாசிரியர் களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படுகிறது.
அரசு அச்சக மதிப்பீட்டின்படி நூலின் அச்சுச் செலவில் 50 விழுக்காடு தொகை அல்லது ரூ. 50,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகை நூலாசிரியருக்கு நிதியுதவியாக இரு தவணையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற ஆண்டு வருமானம் ரூ. 50,000/- க்குள் இருக்க வேண்டும்.
திருக்குறள் முற்றோதல் பரிசு
மாணவப் பருவத்தில் குறள் கருத்துகள் பசுமரத்தாணி போல் மனதில் பதிவதால் ஏற்படும் நன்மைகளைக் கருதி, 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகை ரூ.10,000/- வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 50 மாணவ மாணவியர்களுக்குக் குறள் ஒப்பித்தல் பரிசுத்தொகை வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
இலக்கியப் பயிற்சிப் பட்டறை
துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஆர்வமுள்ள இளம் எழுத்தாளர்களுக்குக் கவிதை, கட்டுரைப் பயிற்சியும் பேச்சாளர்களுக்குப் பேச்சுப் பயிற்சியும் ஒரு வார காலத்திற்கு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 200 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 20 இலட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
நூல்கள் நாட்டுடைமை
தமிழ் மொழிக்குப் பெருமையும் வளமும் சேர்க்கும் வகையிலும் தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கிலும் மறைந்த தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் மரபுரிமையருக்குப் பரிவுத் தொகைகள் வழங்கப்படுகின்றன.
தமிழறிஞர்களுக்கு நிதியுதவி
தமிழுக்குப் பணியாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்ற நோக்கத்தில் 58 வயது நிறைந்த ஆண்டு வருவாய் 36,000-க்குக் குறைவாக உள்ள தமிழறிஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் திங்கள்தோறும் ரூ.2000/-வீதம் நிதியுதவியும், ரூ.100/- மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது. அவர்தம் மரபுரிமையருக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழறிஞர்களுக்கு நிதியுதவி
தமிழ் மொழிக்கு ஏற்றமளிக்கும் வகையில் தொண்டு புரிந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் மறைவுக்குப் பின் அவர்தம் மரபுரிமையர் களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் தமிழறிஞர் களுக்கு வாழ்நாள் முழுவதும் திங்கள்தோறும் ரூ.3000/-நிதியுதவியும் ரூ.100/- மருத்துவப்படியும் அவர்களின் மரபுரிமையர்களுக்குத் திங்கள்தோறும் ரூ.1500/-நிதியுதவியும் ரூ.100/- மருத்துவப்படியும் வழங்கப் படுகிறது.
எல்லைக் காவலர்களுக்கு நிதியுதவி
தமிழக எல்லையைக் காக்கப் போராடிய வர்களைப் போற்றும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் திங்கள்தோறும் ரூ.4000/- நிதியுதவியும், ரூ.100/- மருத்துவப் படியும் அவர்களின் மரபுரிமையர்களுக்கு ரூ.2000/- நிதியுதவியும், ரூ.100/- மருத்துவப் படியும் வழங்கப்பட்டு வருகிறது.
கட்டடணமில்லாத பேருந்து பயணச் சீட்டு
தமிழறிஞர்களுக்கும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும், விருது பெற்ற விருதாளர்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.
இவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சிக் காகவும் தமிழ் இலக்கியத்திற்காகவும் தொண்டாற்றியவர்களுக்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவான் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.