ந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தடுப்பூசி போட தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதங்களில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 2.05 கோடி ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 85,000 சோதனைகள் செய்யப்படு கின்றன. மொத்த பரிசோதனைகளில் 78 சதவீத சோதனைகள் அரசு பரிசோதனை நிலையங்களில் செய்யப்பட்டு வருகின்றன.

மாநில அளவில் கோவிட் மருத்துவமனை களிலும் கோவிட் சிறப்பு மையங்களிலும் சேர்த்து 80,284 படுக்கைகள் உள்ளன. இதில் 32,102 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இதில் சுமார் 7,000 படுக்கைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளன. 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. டோஸிலிசுமாப், ரெம்டெசிவீர், இனாக்ஸ்பிரின் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவுக்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையில் 20 சதவீதமான ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு இந்த ஆண்டு தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 37.8 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நோய்த் தொற்று சதவீதம் 4.55 சதவீதமாகவும் இறப்போர் விகிதம் 1.38 சதவீதமாகவும் இருக்கிறது. அரசு ஊழியர்கள், அலுவலர்கள் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். போதுமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் இருப்பில் இருக்கின்றன. பொதுமக்கள் உடனடியாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

c

Advertisment

முக கவசங்கள் இன்றியும் அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாது குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தியதே தொற்று அதிகரிக்கக் காரணம் என தமிழக அரசு கூறியுள்ளது. வங்கிகள், பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததால், பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சில அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தினமும் குறைந்தது 90,000 ஆர்.டி. - பிசிஆர் சோதனைகளைச் செய்ய வேண்டும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், கூடுதல் சோதனைகளைச் செய்ய வேண்டும். முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறைந்தது 30 பேருக்கு சோதனைகளைச் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொற்றின் வீரியத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளிலோ, கவனிப்பு மையங்களிலோ சேர்த்து கவனிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், காவல், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், "மக்களிடம் தடுப்பூசி குறித்த நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை 37,80,000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து 54,85,720 தடுப்பூசிகள் வந்துள்ளன. களப்பணி ஆற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அடுத்த இரு வாரங்களுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டுமென்றும் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் கூட்டம் கூடும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அந்த அறிக்கையின் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள்

கொரோனா வைரஸின் புதிய அறிகுறி களை மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது:

முதல் அலையின்போது இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. தற்போது 2-வது அலையில் உடல்சோர்வு, உடல்வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை புதிய அறிகுறிகளாக உள்ளன. முதல் அலையைவிட தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது. ஆனால், உயிரிழப்பு குறைவாக உள்ளது. கடந்த முறை 60 வயதுக்கு மேற்பட்டோர் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இளைஞர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் அதிகம் தென்படுவது இல்லை. வயதானவர் களுக்கு மட்டுமே வைரஸ் அறிகுறிகள் அதிகமாக உள்ளன. கடந்த முறை காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் கொரோனா வைரஸை எளிதில் கண்டறிய முடிந்தது. இந்த முறை இளைஞர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாததால் வைரஸ் நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் எழுகிறது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில மருத்துவர்கள் கூறியதாவது:

ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோயாளி குணமடைந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் சி.டி. ஸ்கேனில் அவர்களின் நுரையீரலில் 80 சதவீதம் அளவுக்கு தொற்று இருப்பது தெரிய வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை காணப்படுகிறது. எனவே, ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் நோயாளிகளை தனிமையில் வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கொரோனாவால் மனச்சோர்வு, மறதி நோய் ஆபத்து சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மனச்சோர்வு, மறதிநோய், மனநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர். ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உளவியல் அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதிலி-ருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதும் இதில் அடக்கம். ஆனால், கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலோ அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளிலோ அனுமதிக்கப் பட்டவர்களுக்கு இதைவிட அதிகமான அபாயம் உள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் நேரடியாக மூளையில் தாக்கத்தை செலுத்துவதும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான மன அழுத்தம் இருப்பதும் இதற்கான ஒருங்கிணைந்த காரணங்களாக உள்ளன.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து லட்சம் நோயாளிகளின் மின்னணு மருத்துவ தரவை ஆய்வு செய்தனர். அப்போது கீழுள்ள காரணங்கள் உள்பட பொதுவான 14 உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தனர்: மூளை ரத்தக்கசிவு, பக்கவாதம், பார்கின்சன், குய்-லின்-பார் நோய்க்குறி, மறதிநோய், மனநோய், மனநிலை கோளாறுகள், இவற்றில் பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்னையாக உள்ளது. மேலும் இவை மிகவும் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுபவம் சார்ந்த மன அழுத்தத்தினாலேயே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர்.

இதை தவிர்த்து பக்கவாதம் மற்றும் மறதிநோய் போன்றவற்றிற்கு உடலில் வைரஸ் ஏற்படுத்தும் நேரடி தாக்கமோ, பொதுவாக தொற்றுகளுக்கு எதிராக உடல் ஆற்றும் எதிர்வினையோ காரணமாக இருக்கலாம். எனினும், கோவிட்-19 நோய்த்தொற்றானது பார்கின்சன் அல்லது குய்லின்-பார் நோய்க்குறியின் அபாயத்தை அதிகரிக்கும் காரணியாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இது முன்னோட்ட ஆராய்ச்சி ஆக மேற்கொள்ளப்பட்டதால், இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு இணை நோய்கள் ஏற்பட்டதற்கு கொரோனாதான் காரணமா என்பதை ஆராய்ச்சியாளர் களால் உறுதிபட தெரிவிக்க முடிய வில்லை. ஏனெனில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு பின்னர் பக்கவாதத்தாலோ, மனஅழுத்தத்தாலோ பாதிக்கப் பட்டதற்கு கொரோனா காரணமாக இல்லாமலும் இருக்கலாம். எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்ட குழுவை காய்ச்சல் மற்றும் மற்ற சுவாசம் சார்ந்த பிரச்னைகள் கொண்ட நோயாளிகளின் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழுவினருக்கே மற்ற குழுவினரை விட மூளை சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது தெரிய வந்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி

இரண்டு சுற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்பது உண்மை தான். ஆனால், இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. இதனால்தான் எஃபிகஸி தரவு ஆய்வு செய்யப்படுகிறது, இது தடுப்பூசி எத்தனை சதவீதம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது. எந்தவொரு தடுப்பூசி உற்பத்தியாளரும் இதுவரை 100% செயல் திறன் இருப்பதான தரவை முன்வைக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின், 80 சதவிகித செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது அதைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு கொரோனா ஏற்பட 20 சதவிகித வாய்ப்பு உள்ளது. கோவிஷீல்டின் செயல்திறன் 70% எனக் கூறப்படுகிறது. கோவிஷீல்டின் செயல்திறன் இரண்டு டோஸ்களின் இடைவெளியிலும் மாறுகிறது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் சற்று குறைவான செயல்திறனும் இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் செயல்திறன் அதிகமாகவும் உள்ளது.

தடுப்பூசிக்குப் பிறகு, உங்களுக்குக் கொரோனாவின் தீவிரம் அதிகம் இருக்காது. உயிருக்கு ஆபத்து ஏற்படாது. லேசான அல்லது அறிகுறி இல்லாத கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது.

அதாவது, பாதுகாப்புக் கவசம் இல்லாமல் இருப்பது, பாதுகாப்புக் கவசம் பயன்படுத்துவது இவை இரண்டில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நிச்சயமாகப் பாதுகாப்பு கவசத்தைத் தான் தேர்ந்தெடுப்பீர்கள். எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

எளிமையாகக் கூற வேண்டுமானால், நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட வுடன், உங்கள் உடலி-ல் மெமரி செல்கள் உருவாகின்றன, கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு போராட வேண்டும் என்பதை இவை நினைவில் கொள் கின்றன. வைரஸ் உங்களைத் தாக்கிய வுடன், அவை உடனடியாக வேலை செய்யத் தொடங்குகின்றன. எனவே, தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போதும் தனி நபர் இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்.

இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள் கொரோனா தடுப்பூசி மூலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு விஷயம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும், தொடர் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேரம் செல்ல செல்ல, புதிய முடிவுகள் வரலாம். இந்த கால அவகாசங்களும் மாறும். தடுப்பூசி பூஸ்டர் டோஸ் அல்லது கூடுதல் டோஸ் தேவையா என்பது குறித்தும் விவாதம் நடைபெறுகிறது.