ஜூன்.15 அன்று ஒவ்வொரு ஆண்டும், சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், முந்தைய ஆண்டில் இதழ்களிலும், இணையதளங்களிலும் அரசியல், சமூகம் - பண்பாடு மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் வெளியான கட்டுரைகளில் தலா மூன்றினைத் தேர்வுசெய்து, அவற்றை எழுதிய கட்டுரையாளர்களுக்கு சின்னகுத்தூசி விருதும் வழங்கி கவுரவிக்கப் படுகிறது.

அதன்படி, இந்த எட்டாவது ஆண்டில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை கலையரங்கத்தில் விருது வழங்கும் விழா, ஜூன் 15-இல் நடை பெற்றது.இந்த விழாவிற்கு திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு முன்னிலை வகிக்க, மூத்த வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்டு வரவேற்புரை வழங்கிய நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால், ""ஐயா சின்னகுத்தூசி வாழ்ந்த காலத்திற்கு நாங்கள் திரும்பிச் செல்வதற்கு, அவருடனான நினைவுகள் மட்டுமே பாலமாக இருக்கின்றன.

cc

அவருடைய நினைவைப் பேசாத நாட்களில்லை. அவருடைய காலத்திற்கே திரும்பிச் சென்றுவிடலாமா என்கிற எண்ணமெல்லாம் வரும். அப்படி, அவருடனான நினைவுகளை இந்த விழாவின் மூலமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்'' எனக்கூறி அனைவரையும் வரவேற்றார்.

Advertisment

cc

சின்னகுத்தூசி வாழ்ந்த சிறிய அறையை அவருடன் பகிர்ந்துகொண்டவரான வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் பேசுகையில், ""சின்னகுத்தூசி அவர்கள் கட்டுரை எழுதும்போது, ஒரு சிறிய விஷயம் கிடைத்தால்கூட அதை முன்னும்பின்னுமாக ஆராய்ந்து, அதை சிறப்பாக எழுதக் கூடியவர். பாமரருக்கு பாமரராகவும், எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்களாகவும் தன் எழுத்தை மாற்றக் கூடியவர் அவர்'' என நினைவைப் பகிர்ந்து பேசி அமர்ந்தார்.

இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கியமான நிகழ்வான சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருதுகள் வழங்கப் பட்டன. பொதுவுடைமை இயக்கக் கவிஞரான கே.ஜீவபாரதி வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.1 லட்சமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். கட்டுரையாளர்கள் முனைவர் கே.செல்வகுமார் அரசியல் பிரிவிலும், கோ.ஒளிவண்ணன் சமூகம் - பண்பாடு தொடர்பான கட்டுரைக்காகவும், எஸ்.பாலகணேஷ் பொருளாதாரக் கட்டுரைக்காகவும் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருது மற்றும் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Advertisment

விருதுகளை கவிப்பேரரசு வைரமுத்து வழங்கினார்.

இதேநாளில் புனே ஸ்ரீபாலாஜி சொசைட்டி கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கான அந்தஸ்தைப் பெற்றது. அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்து, வேந்தராக பொறுப்பேற்கவிருக்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான கர்னல் டாக்டர்.பாலசுப்பிரமணியம், ""தமிழகத்தின் தலைமைக் கவிஞர் நம் கவிப்பேரரசு. அவர் வந்து அவர் கையால் விருது கொடுப்பது சிறப்பானது.

சின்னகுத்தூசி மிகப்பெரிய அரசியல் அறிஞர். அவரது கட்டுரைகள் எல்லாமே அரசியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்தான். அவரது கட்டுரைகளில் நிறைய தகவல்கள் இருக்கும். அதிலே உண்மை இருக்கும்.

அவருடைய கட்டுரைகளுக்காகவே நான் முரசொலியைப் படிப்பேன். விரும்பிப் படிப்பேன். அவர் என்றைக்கு எழுதுவதை நிறுத்தினாரோ அதிலிருந்து நான் படிப்ப தில்லை. அவரைப்போல் எழுதுகிறவர்கள் குறைந்துவிட்டார்கள். இங்கே இருக்கும் மாணவர்களும் இளைஞர்களும் எழுத வேண்டும். நாளைய உலகம் இளைஞர்களான உங்கள் கைகளில்தான். நான் சாமானிய மான ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். எதையாவது சாதிக்க வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்தேன். பட்டாளத்தில் சேர்ந்தேன். அங்கும் நிறைய படித்தேன். நான் கல்லூரி தொடங்கியபோது கையில் காசில்லை. தன்னம்பிக்கை மட்டும்தான் இருந்தது. ஓயாது உழைத்தேன். இன்று கல்லூரிகளை நடத்துகிறேன். முயன்றால் முடியும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு. வெற்றியைத் தேடுங்கள்'' என்றார் உற்சாகமாக.

இறுதியாக விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, அரசியலைத் தொடாமல் முழுக்க முழுக்க இலக்கிய உரையாகவே தன் உரையை ஆக்கிக் கொண்டார். தன் உரையில் அவர்...

""சின்னகுத்தூசி பெருமை என்னவென்று நான் யோசித்துயோசித்து கண்டுபிடித்த ஒரு செய்தி, அவர் பற்றற்றவர் என்பதுதான்.

ஒருவன் அறிவாளியாக இருப்பது பயிற்சியால் வந்துவிடும். சொற்பொழிவு என்பது நாப்பழக்கம். சித்திரம் என்பது கைப்பழக்கம்.

உறங்காமலிலிருப்பது படித்ததலின் மேலிருக்கும் வேட்கை. ஆனால், பற்றற்றவனாக இருப்பது பயிற்சியினால் முடியாது. உயிர் ஏற்கனவே அதற்கு தயாரிக்கப்பட்டிருந்தால் ஒழிய ஒருவன் பற்றற்றவன் ஆகமுடியாது.'' என்றார். இனிதாக விழா நிறைவடைந்தது.

நன்றி : நக்கீரன்

தொகுப்பு : ச.ப.மதிவாணன்

படங்கள் : ஸ்டாலின், அசோக் & குமரேஷ்