மிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரை அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தபோது, ​​1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். ஆகஸ்ட் 25, 2023 அன்று மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின் விரிவாக்கத்துடன், 30,992 அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளில் சுமார் 18.50 லட்சம் மாணவர்கள் இந்த முயற்சியின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இந்நிலையில், ‘ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவு படுத்தப்படும்’என்று கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisment

cm

மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர், உணவு சுவையாக இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.

தினமும் நேரம் தவறாமல் காலை உணவு சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Advertisment

இதே போல ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.

இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளன்று முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, கீழச்சேரி அடுத்த மப்பேடு கூட்டு சாலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) சார்பில் ரூ. 3.81 கோடியில் 8 புறநகர் பேருந்துகள், 2 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகள் என, 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.