சென்னை பெருநகரம், முற்காலத்தில் மதராசு பட்டிணம் என்று அழைக்கப் பட்டது. இது தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர் பெண்ணாறு நதிக்கும் நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்துள்ள பகுதியாகும். முற்கால சென்னை மாகாணத்தின் தலைநகர் காஞ்சிபுரம் ஆகும். தொண்டை மண்டலம் கி.மு. 2-வது நுற்றாண்டில் காஞ்சிபுர சோழ வம்சத்தை சேர்ந்த தொண்டைமான் இளந்திரையன் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. இப்பகுதியானது குறும்பர் இன மக்களின் பூர்வீக வசிப்பிடத்தை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது.

இளந்திரையனுக்குப் பிறகு இப்பகுதி யானது சோழ இளவரசன் இளங்கிள்ளி என்பவரால் ஆட்சி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்குப் பின்னர் வடக்கு பகுதியிலிருந்து ஊடுருவிய ஆந்திர சாதவாகன இனத்தின் இரண்டாம் புளூமாலி ஆதிக்கத்தால் தொண்டை மண்டல சோழ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இவர்கள் கட்டுப்பாட்டி-லிருந்த இப்பகுதியை கண்காணிப்பதற்கு தலைமை பிரதிநிதிகள் நியமிக்கப் பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த பப்பசுவாமி என்பவர் இப்பகுதியை ஆண்ட முதல் பல்லவர் எனவும், இவர் காஞ்சிபுரம் எல்லையைக் கொண்ட சாதவாகனர்களின் தலைமைப் பிரதிநிதி எனவும் கருதப்படுகிறார்.

cc

Advertisment

சாதவாகனாகளின் கீழ் இயங்கிய பல்லவ பிரதிநிதிகள், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தன்னிச்சை அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களாக மாறினர்.

மூன்றாவது நுற்றாண்டின் தொடக்கத் திலிருந்து 9-ஆம் நுற்றாண்டின் இறுதிவரை பல்லவர்கள் இப்பகுதி யின்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இதன் இடைப்பட்ட காலத்தில் சிறிது காலம் களப்பிரர்கள் ஆதிக்கமும் இருந்தது. மீண்டும் பல்லவர்கள், முதலாம் ஆதித்திய சோழனின் தலைமையிலான சோழ அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு கி.மு. 879-ஆம் ஆண்டில் சோழர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. கி.மு. 1264-ஆம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆதிக்கத்தால் சோழர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பாண்டியர்களின் அரை நுற்றாண்டு ஆட்சிக்கு பின்னர் டெல்லி சுல்தானின ஆட்சியின் நீட்சியாக பாமின் அரசின் கில்ஜி வம்சத்தில் வந்த வருவாய் பணிகள் உருவாக்கத்தின் முன்னோடியாய் விளங்கிய அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின்கீழ் இப்பகுதி இருந்தது.

1361-ஆம் ஆண்டில், விஜயநகர மன்னரின் குமாரர்களாகிய இரண்டாம் குமார கம்பண்ணா மற்றும் முதலாம் புக்கர் ஆகியோர்களால் இப்பகுதி கைப்பற்றப் பட்டு தொண்டைமண்டலம் விஜயநகர பேரரசின் ஆட்சிக்குட் பட்டது.

விஜயநகர் ஆட்சியாளர்களால் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளை சுதந்திரமாக ஆள்வதற்கு நாயக் என்றழைக்கப்படும் தலைமைப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். அப்போதைய சென்னை நகரத்தின் பொறுப்பாளராக இருந்த மூன்றாம் வேங்கடா என்பவரின் தலைமையின்கீழ் இயங்கிய தமர்லா வெங்கடாபதி நாயக் ஒரு செல்வாக்குமிக்கத் தலைவராக இருந்தார். 1639-ஆம் ஆண்டில் கூவம் ஆற்றுக்கும் எழும்பூர் ஆற்றுக்கும் இடைப்பட்ட கடல் முகத்துவாரத்தை அடையக்கூடிய ஒரு சிறிய நிலப்பகுதி ஆங்கிலேயருக்கு வணிக நோக்கத்திற்காக வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பகுதியில் வணிக நோக்கங்களுக்காக புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. வெங்கடபதி நாயக்கரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த கடற்கரை பகுதிகளான வடக்கில் பழவேற்காடு முதல் போர்ச்சுக்கீசிய குடியேற்றப்பகுதியான சாந்தோம் வரை புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் அவரது தந்தை சென்னநாயக் நினைவாக சென்னப்பட்டினமாக உருவெடுத்தது.

மதராசபட்டினம் என்று அழைக்கப் படும் பழைய பகுதி இதன் வடக்கே அமைந்துள்ளது. பின்னர், இதன் இடைப்பட்ட வடக்குப் பகுதிகளில் விரைவாக புதிய குடியேற்றங்கள் மற்றும் வீடுகள் உருவாக்கப்பட்டு மேற்படி இரு நகரங்களும் கிட்டத்தட்ட ஒரே நகரமாக மாறியது. குடியேற்றத்தின் அதிகாரப்பூர்வ மையமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் பட்டினம் என்ற பெயரையே ஒருங்கிணைந்த நகரத்திற்கு பயன்படுத் தினர். ஜெனரல் மிர் ஜும்லா தலைமை யிலான கோல்கொண்டா படைகள் 1646-இல் சென்னையைக் கைப்பற்றிய துடன் சென்னை மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றியுள்ள பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1687-ஆம் ஆண்டில் கோல்கொண்டா வீழ்ச்சிக்குப் பின்னர், இப்பகுதி டெல்லியிலுள்ள முகலாய பேரரசர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.

சென்னையில் ஆங்கில நிறுவனம் அமைக்க முகலாய பேரரசர்களால் உரிமம் வழங்கப்பட்டது. பதினேழாம் நுற்றாண்டின் இறுதியில், கவர்னர் களின் ஆட்சியின்கீழ் சென்னை படிப்படியாக வளர்ச்சியடைந்தது. கவர்னர் எலியேல் (1687-92) ஆட்சியின்போது, சென்னை நகரத்தின் மேயர் பதவியும் மற்றும் மாநகராட்சி அமைப்பும் உருவாக்கப்பட்டது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். 1693-ஆம் ஆண்டில், உள்ளூர் நவாப்புகளால் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் நகரங்கள் ஆங்கில நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 1698-இல் தாமஸ்பிட் சென்னை ஆளுநராக பொறுப்பேற்று பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து பதவி யிலிருந்து வந்தார். இக்காலகட்டத்தில் வர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியதோடு சென்னை செல்வம் கொழிக்கும் நகரமாகவும் விளங்கியது.

இதே காலகட்டத்தில் முக்கிய நிகழ்வு சென்னை புறநகர் பகுதிகள் தாவுத்கான் தலைமையில் முற்றுகையிடப்பட்டு, ஆங்கிலேயர்களால் கூடுதல் புறநகர்ப் பகுதிகள் கையகப்படுத்தப்பட்டதாகும். 1708-ஆம் ஆண்டில் திருவொற்றியூர், வியாசர்பாடி, கத்திவாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சாத்தாங்காடு ஆகிய பகுதிகள் ஆங்கிலேயருக்கு இலவச பரிசாக வழங்கப்பட்டன.

1735-ஆம் ஆண்டில், சிந்தாதிரிபேட்டை யும், 1742-ஆம் ஆண்டில் வேப்பேரி, பெரம்பூர் மற்றும் பெரியமேடு ஆகிய பகுதிகளும் ஆங்கிலேயருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நிக்கோலஸ் மோர்ஸ் 1744 முதல் 1746 வரை ஆளுநராக இருந்தார்.

அவரது காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாக இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டது. தென்னிந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே யான மேலாதிக்கத்திற்கான தொடர்ச்சி யான போராட்டம் இதுவே ஆகும். சென்னை 1744-ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப் பட்டது. ஆனால் ஐஎன்-லா-சேப்பலின் சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக சென்னை 1749-இல் ஆங்கிலேயரால் மீட்டெடுக்கப்பட்டது.

ஜார்ஜ் பிகோட் 1755 முதல் 1763 வரையிலான காலப்பகுதிக்கான ஆளுநராக இருந்தார். இக்காலக் கட்டத்தில் கம்பெனியானது வர்த்தக கழகங்கள், தமக்கென தனிமைப்படுத்தப் பட்ட நகரங்கள், கோட்டைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் சக்தி கொண்ட பரந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தும் ஒரு அதிகாரம் கொண்ட வர்த்தக நிறுவனமாக மாறியது. 1767-ஆம் ஆண்டில் சார்லஸ் போச்சியர் ஆளுனரானார். அவரது காலத்தில் ஹைதர் அலி மைசூர் பேரரசை கைப்பற்றினார். மேலும் நிஜாமுடன் கைகோர்த்து சென்னை நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1761-இல் ஹைதர் அலி மற்றும் கம்பெனிகாரர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. இவ்வுடன்படிக்கைபடி இவ்விருவரும் பரஸ்பரம் தாங்கள் கைப்பற்றிய இடங்களை விட்டு கொடுத்தனர். நவாப்புகள் ஒரு பெரிய இராணுவத்தை பராமரிக்க போதிய வருவாய் இல்லாததால், கர்நாடகத்தின் ஆளுமை சென்னை அரசாங்கத்தின் பொறுப்பானது. 1763-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பெறப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் சென்னை ஜாகீர் என்ற இராணுவ பராமரிப்புத் தளமாக அழைக்கப்பட்டது. 1781-இல் லார்ட் மகர்ட்னி சென்னை அரசாங்கத்தின் பொறுப்பேற்றார்.

இவரது காலத்தில் சென்னை ஒரு முக்கிய கடற்படைத் தளமாக மாறியது. 1790-ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் மேடோஸ் ஆளுநராக பதவி ஏற்றார்.

தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி பாதுகாப்பான நிலையை அடைந்தது. இதர வெளிநாட்டு சக்திகளின் அதிகாரங்கள் நீக்குதல் மற்றும் உள்ளுர் பிரதேசத்தின் வரம்புகளை வரன்முறைப்படுத்தல் ஆகியவை அரசாங்கத்திற்கு உறுதிப்பாட்டினை அளித்ததோடு வணிக வளர்ச்சியின் சகாப்தத்திற்கும் வழிவகுத்தன. 1792-ஆம் ஆண்டில், ஏற்பட்ட உடன்படிக்கையின்படி முகமது அலி கர்நாடகத்தின் முழு நிர்வாகப் பொறுப்புக்களை ஒப்படைத்து அதற்கு பதிலாக ஓய்வூதியம் பெற்றுக் கொண்டார். இந்த காலக்கட்டத் தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வு மைசூர் யுத்தம் ஆகும். 1799-இல் திப்பு சுல்தான் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கர்நாடகம் பிரிட்டன் வசமானது.

இவ்வாறு தென்னிந்தியாவில் ஆங்கிலே யரின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப் பட்டது. பல நூற்றாண்டுகளாக சிதறிக்கிடந்த கிராமங்கள் மற்றும் அதன் எல்லைகள் பிரிட்டன் வருகைக்குப் பின்னர் ஒரே அலகுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டன. 1939-40-இல் இந்த நகரத்தின் நில வடிவமைப்பும் பரப்பளவும் 19-ஆம் நுற்றாண்டின் தொடக்கத்திலே ஏற்பட்டது. 1803 முதல் 1827 வரையிலான காலப்பகுதி, நிறுவனங் களின் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்தது.

சர் எட்வாட் எலியட் என்பவர் அக்காலத்தில் சென்னையின் முக்கிய ஆளுநராக இருந்தார். அவர் 1814-ஆம் ஆண்டில் மன்ரோவை சென்னை மாகாணத்தின் நீதித்துறை ஆணையத்தின் தலைவராக நியமித்தார். நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்கள் இந்நீதி ஆணைக்குழுவினால் செய்யப்பட்டன. சர் தாமஸ் மன்ரோ 1820-ஆம் ஆண்டில் ஆளுநராகி, 1827 வரை அப்பதவியில் தொடர்ந்தார். இவர் தன்னால் இயன்ற அளவு கல்வியறிவை பெருக்க முயற்சி மேற்கொண்டார். இவர் சென்னையில் ஆங்கிலக் கல்வியை தொடங்கினார் . மேலும் இவரால் பொதுக்கல்வியை மேம்படுத்தவும் நேரடியாக கண்காணிக்கவும் ஒரு பொதுக்கல்வி வாரியம் நிறுவப்பட்டது. 19-ஆம் நுற்றாண்டின் முதல் பாதியில் சென்னை நகரம் அடைந்த முக்கிய முன்னேற்றம் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான நிறுவனங்கள் அமைக்கப்பட்டதாகும்.

20-ஆம் நூற்றாண்டில் சென்னை முதல் ஆளுநர் லார்ட் அம்ப்த்தில் (1901-06) என்பவர் ஆவர். 1906-1911 வரை சர் ஆர்த்தர் லா என்பவரும், 1912-1919 வரை லார்ட் பெண்ட்லாண்டு என்பவரும் ஆளுநர் பதவியை வகித்தனர். இந்த காலக்கட்டத்தின் முக்கிய நிகழ்வாக 1906-இல் உருவாக்கப்பட்ட சென்னை மின்சார வழங்கல் கழகம் மற்றும் 1907-இல் உருவாக்கப்பட்ட இந்தியன் வங்கியும் ஆகும். 1934 மற்றும் 1936-ஆம் ஆண்டுகளில் சிறிது காலத்திற்கு சர் எம்.டி.உஸ்மான் சாகிப் மற்றும் சர். கே. வெங்கட்டா ரெட்டி நாயுடு ஆகிய இரண்டு இந்தியர்கள் சென்னை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1937-இல் சி. இராஜகோபாலச்சாரி அவர்களின் அமைச்சரவை இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் இருந்தது. நிர்வாகத்தில் ஆளுநர் செல்வாக்கு மற்றும் அதிகாரம் கணிசமாக குறைக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15-இல் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றனர். எனவே ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு செய்ததை விளக்கும் ஒரு நினைவுச்சின்னமாக சென்னை திகழ்கிறது.

சென்னை மாநகராட்சி

ஐரோப்பாவுக்கு வெளியில் பிரிட்டிஷா ரால் ஏற்படுத்தப்பட்ட பழமையான மாநகராட்சியாக விளங்குகிறது.

1687-ஆம் ஆண்டு. முகலாய பேரரசு தனது உச்சகட்டத்தில் இருந்த நேரம். மாமன்னரான ஔரங்சீப் இந்தியாவின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகள் திருமலை நாயக்கரின் பேரனான சொக்கநாத நாயக்கரின் கீழ் இருந்தன. தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை, கிழக்கிந்திய கம்பெனியின் பரபரப்பான வர்த்தக மையமாக இயங்கிக் கொண்டிருந்தது.

பிற்காலத்தில் யேல் பல்கலைக்கழகத்தை நிறுவ உதவியவர்களில் ஒருவரான எலிஹுயேல் அந்தத் தருணத்தில் புனித ஜார்ஜ் கோட்டையின் தலைவராக இருந்தார். அப்போது கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த ஜோசையா சைல்ட் சென்னை நகர நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நினைத்தார்.

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பரில் 28-ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை யிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் ஜோசையா சைல்ட். அப்படி ஒரு நிர்வாக அமைப்பு உருவானால் தன்னுடைய அதிகாரம் குறையும் எனக் கருதியதாலோ என்னவோ, யேல் இதனைப் பெரிதாக விரும்பவில்லை.

இருந்தபோதும் ஜோசையா பின்வாங்க வில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ்.

சென்னை மாநகராட்சி உருவாவதற்கு முன்பாக, புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநரே கோட்டையில் உள்ளவர்கள், கோட்டையைச் சுற்றி வசிப்பவர்களின் விவகாரத்தை முடிவு செய்துவந்தார். ஸ்ட்ரேஷாம் மாஸ்டர் ஆளுநராக இருந்த காலத்தில் வரி விதிக்கும் முறையும் அமலுக்கு வந்துவிட்டது. வரி விதிப்பில் ஏற்பட்ட தகராறுகள், தொடர்ந்து நகரம் வளர்ந்து வந்ததால் ஏற்பட்ட செலவுகள் ஆகியவற்றின் காரணமாக முறையான ஒரு நகர நிர்வாகத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மன்னரின் பிரகடனம் 1688 செப்டம்பர் 29-ஆம் தேதி அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத் திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர்.

முதல் ஆல்டர்மென்களில் மூன்று பேர் இந்தியர்களாக இருந்தார்கள். மூன்று பேர் புனித ஜார்ஜ் கோட்டையின் நிர்வாகியாக இருந்த ஆங்கிலேயர்கள், ஒருவர் பிரஞ்சு வர்த்தகர், 2 பேர் போர்ச்சுகீசியர்கள்.

அப்போது புனித ஜார்ஜ் கோட்டை கவுன்சிலின் இரண்டாவது நிலையில் இருந்த நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மேயரின் பதவிக் காலம் ஓராண்டுதான். ஆனால், ஆல்டர்மென்கள் ஆயுட்காலத்திற்கும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

1727-இல் ஆல்டர்மென்களின் எண்ணிக்கை 9ஆகக் குறைக்கப்பட்டது. 1746லிருந்து 1749வரை சென்னை பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது பிறகு மீண்டும் பிரகடனம் வெளியிடப்பட்டது. அப்போது நியமிக்கப்பட்ட ஆல்டர்மென்களில் ஒருவராக ராபர்ட் கிளைவும் இருந்தார்.

சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டைக்குள், தற்போது புனித மேரி தேவாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி என்பது நிறுவப்பட்டதிலிருந்து தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தாலும், மாநகராட்சியின் கவுன்சிலும் மேயர் பதவியும் 1801 -இல் ஒழிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக மண்டல ஆணையர்களும் அவர்களுக்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டனர். பிறகு மீண்டும் 1919-இல் தான் கவுன்சிலும் அதற்கு ஒரு தலைவர் பதவியும் நிறுவப்பட்டது. அப்போது நகரத்திற்கு 50 கவுன்சிலர்கள் இருப்பார்கள் என முடிவுசெய்யப்பட்டது. இதில் 30 பேர் தேர்வுசெய்யப்படுவார்கள். முதல் தலைவராக நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் தேர்வானார். இவர்தான் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்த முதல் இந்தியர். இவர் 1923 வரை அந்தப் பதவியில் இருந்தார்.

1933 -ஆம் ஆண்டின் நகர முனிசிபல் சட்டத்தின்படி, தலைவர் பதவியின் பெயர் மேயர் என மீண்டும் மாற்றப்பட்டது. அப்போது கவுன்சிலின் தலைவராக இருந்த குமாரராஜா முத்தைய்யா செட்டியாரின் பரிந்துரையின்பேரில், சென்னை மாகாண பிரதமராக இருந்த பொப்பிலி ராஜா இதனைச் செய்தார். மேயர் பதவிக்கான ஆடைகள், சின்னம், நடைமுறைகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. மேயர் பதவிக்கான நாற்காலியும் செய்யப்பட்டது. சென்னை மாகாண சட்டமன்றத்தின் தலைவரது நாற்காலியைப் போலவே இந்த நாற்காலியும் வடிவமைக்கப்பட்டது.

1936-இல் முனிசிபல் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்த்தப்பட்டது. 1970-களில் கவுன்சில் கலைக்கப் படும்வரை இந்த எண்ணிக்கையே நீடித்தது.

மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் தேர்வு இவ்வாறு இருந்ததென்றால், அதிகாரிகள் மட்டத்தில் தலைவர் என்ற பெயரில் ஒரு ஐசிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். 1919-இல் இந்தப் பதவி ஆணையர் என்று மாற்றப்பட்டது. தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தப் பதவியில் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் தற்போதைய கட்டடம் ஜி.எஸ்.டி. ஹாரிஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பி. லோகநாத முதலியாரால் 1913-இல் கட்டப்பட்டது. 1880 முதல் 1884வரை பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராயாக இருந்த ரிப்பன் பிரபு, உள்ளாட்சி முறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில் பல நகராட்சிகளும் மாவட்ட போர்டுகளும் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக அந்தக் கட்டடத்திற்கு ரிப்பனின் பெயரே சூட்டப்பட்டது. இந்த மாளிகையை அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு திறந்துவைத்தார். இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஏழரை லட்ச ரூபாயும் நான்கு ஆண்டுகளும் ஆயின. 1944-இல் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த ஜே.பி.எல். ஷெனாயின் காலத்தில், செப்டம்பர் 29-ஆம் தேதியை சென்னை மாநகராட்சியின் துவக்க நாளாக கொண்டாடும் வழக்கம் உருவானது.

1970 - களில் மாநகராட்சி கலைக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் வெகுநாட்களாக நடைபெறவில்லை. 1996-இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது மேயர் பதவி மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாறியது. அதன்படி மு.க. ஸ்டாலின் மேயராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

தற்போது, சென்னை மாநகராட்சி 200 கவுன்சிலர்களுடன் இயங்குகிறது. மேயர்கள் நேரடியாக மக்களால் தேர்வுசெய்யப்படும் முறை மாற்றப்பட்டு, மீண்டும் கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் முறை கொண்டுவரப் பட்டிருக்கிறது.