* காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்துள்ளது.

*காவிரி நடுவர் மன்ற உத்தரவில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், இறுதி தீர்ப்பில் 14.75 டிஎம்சியை குறைத்து, கர்நாடகத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

*காவிரி தொடர்பாக 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் அரசியல் ஏற்பாட்டையோ, இந்திய இறையாண்மையையோ தொடர்புபடுத்தவில்லை. மற்றொரு புறம் இந்த இரு ஒப்பந்தங்களும் பொதுமக்களின் நலனைப் பெரிய அளவில் உள்ளடக்கியுள்ளன. இதுபோன்ற சூழலில் இரு ஒப்பந்தங்களும் காலாவதியாகவும் இல்லை வழக்கொழியவும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் 363-வது பிரிவு பொருந்தாது.

Advertisment

*இந்த விவகாரம் தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்த பிறகு தமிழகத்தில் உள்ள பாசனப் பகுதிகள் தொடர்பாக நடுவர் மன்றம் தெரிவித்ததைதவறு என குறிப்பிட முடியாது. தமிழகத்தில் உள்ள வீடு, தொழிற்சாலை ஆகியவற்றின் தண்ணீர் தேவை தொடர்பாக நடுவர் மன்றத்தின் அணுகுமுறையில் எவ்விதத் தவறும் இல்லை. அனைத்து மாநில மக்களின் குடிநீர் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

cavery

*காவிரிப் படுகையில் அல்லாத புனல் மின் திட்டங்களுக்கு நீர் வழங்க வேண்டும் என்ற கேரளத்தின் நிலைப்பாட்டை நடுவர் மன்றம் மறுத்தது சரியே. கேரளத்தின் மொத்த தேவைக்கும்30 டிஎம்சி நீரை வழங்கிய நடுவர் மன்றத்தின் உத்தரவில் உடன்படுகிறோம். இதேபோல, 43 ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதியைக் கொண்டுள்ள புதுச்சேரி, 2-வது பருவ சாகுபடிக்கு உரிமை பெற்றுள்ளது என்ற நடுவர் மன்றத்தின் கருத்திலும் உடன்படுகிறோம். எனவே, புதுச்சேரிக்கு அளிக்கப்படும் 7 டிஎம்சி நீரின் அளவில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை.

தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி

*தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதை அனுமானமாகக் கருதி காவிரி நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை. நிலத்தடி நீர் பயன்பாட்டில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தற்போதைய தண்ணீர் பங்கீட்டில் 10 டிஎம்சி தண்ணீரை கணக்கில் கொள்ள வேண்டும். காவிரிப் படுகையின் மூன்றில் ஒரு பங்கு பகுதியை மட்டுமே பெங்களூரு கொண்டிருப்பதாகக் கூறியும், 50 சதவீத குடிநீர் தேவையை நிலத்தடி நீரைக் கொண்டு ஈடு செய்ய முடியும் எனக் கருதியும், பெங்களூரு நகரின் வீடு, தொழிற்சாலை பயன்பாட்டுத் தேவைக்கான நீரை நடுவர் மன்றம் கணிசமாகக் குறைத்துள்ளது. குடிநீர் தொடர்பான அடிப்படை கொள்கையை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை. நதிகளுக்கு எந்த மாநிலங்களும் உரிமை கோர முடியாது.

*பெங்களூரு தற்போது அடைந்துள்ள உலகத்தர அந்தஸ்தை கருத்தில் கொண்டு கர்நாடகத்துக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் அளிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நடுவர் மன்றம் வழங்கிய 10 டிஎம்சி நீரின் அளவில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. எனவே, கர்நாடகத்துக்கு மொத்தம் கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் அளிக்க உத்தரவிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கர்நாடகம் - தமிழக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டுலு நீரளவு நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடகம் திறக்க வேண்டும். தமிழகம் 10 டிஎம்சியை நிலத்தடி நீரில் இருந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

*மேலும், நடுவர் மன்றத்தின் பரிந்துரைகள், உத்தரவுகள் ஆகியவற்றுக்கு உள்பட்டு திறக்க வேண்டிய நீரை தற்போதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு திறந்துவிடும் வகையில் 1956-ஆம் ஆண்டு சட்டம் 6(ஏ) பிரிவின் கீழ் திட்டத்தை (காவிரி மேலாண்மை வாரியம்) (பிப். 16-ஆம் தேதியிலிருந்து) 6 வாரங்களுக்கு உருவாக்க வேண்டும். கர்நாடகத்தின் மேல்முறையீட்டு மனு பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிற மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை......

*1974 - மதராஸ் பிரெசிடென்சிக்கும் மைசூர் அரசாட்சிக்கும் இடையே 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் காலாவதியானது.

*1990 மே - காவிரி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

*ஜூன் 2 - காவிரி நடுவர் மன்றம் அமைக்க அரசாணை பிறப்பிப்பு.

*ஜூன் - தமிழகத்துக்கு 205 டிஎம்சி அளிக்க நடுவர் மன்றம் உத்தரவு; தடுக்க கர்நாடகம் அவசர சட்டம் பிறப்பிப்பு; உச்சநீதிமன்றம் ரத்து; கர்நாடகம் ஏற்க மறுப்பு.

*2002 செப். 8 - பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம் கூடி, தமிழகத்துக்கு 0.8 டிஎம்சி நீர் அளிக்க உத்தரவு.

*2007 பிப். 5 - 17 ஆண்டுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றம் இறுதி உத்தரவை வெளியிட்டது. (1892, 1924-இல் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும்)

*2012, செப். 19 - காவிரி நதி நீர் ஆணையத்தின் 7-வது கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடி, தமிழகத்துக்கு 0.8 டிஎம்சி திறக்க உத்தரவு.

*செப். 28 - கர்நாடகம் மறுப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.

*2013, மார்ச் - 19 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு.

*மே 10 - காவிரி மேற்பார்வைக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

*2015 நவ. 18 - காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பற்றாக்குறையால் நீர் திறக்க கர்நாடகம் மறுப்பு.

*2017 ஜூலை 14 - தமிழகத்துக்கான நீரில் 192 டிஎம்சியில் இருந்து 132 டிஎம்சியாக குறைக்க கர்நாடகம் வாதம்.

*செப். 20 - தீர்ப்பு ஒத்திவைப்பு.

*2018 பிப். 16 - இறுதி தீர்ப்பு அறிவிப்பு - தமிழகத்துக்கு

மொத்தம் 404.25 டிஎம்சி ஆண்டுதோறும் வழங்க உத்தரவு. முன்பு 419 டிஎம்சியாக இருந்தது.