 அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு போட்டி.

asiangames இப்போட்டி முதன்முறையாக 1951-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

 ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு அதிகமான பதக்கங்கள் தடகளத்தில் தான் கிடைத்திருக்கின்றன. இதில் இதுவரை 70 தங்கம், 73 வெள்ளி, 76 வெண்கலம் என மொத்தம் 219 பதக்கங்கள் வந்துள்ளன.

 தங்க மங்கை என்று அழைக்கப்படும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆசிய விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற இந்தியர் ஆவார்.

Advertisment

 அவர் 4 தங்கமும், 7 வெள்ளியும் கைப்பற்றி இருக்கிறார்.

 1986-ஆம் ஆண்டு பி.டி. உஷா சியோல் ஆசிய விளையாட்டில் மட்டும் 4 தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றார்.

 1990-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் ஆண்கள் கபடி முதல்முறையாக அறிமுகம் ஆனது.

Advertisment

 ஒவ்வொரு முறையும் இந்திய அணியே தங்கம் (6 தங்கம்) வென்றிருக்கிறது.

 பெண்கள் பிரிவில் 2010-ஆம் ஆண்டு கபடி கொண்டு வரப்பட்டது. இதிலும் இந்தியாவுக்கே முதல் தங்கம் கிடைத்தது.

 ஆசிய விளையாட்டு போட்டியின் அசைக்க முடியாத அணியாக சீனா திகழ்கிறது. ஆசிய விளையாட்டின் வரலாற்றில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து அதிக பதக்கங்கள் வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தில் சீனா உள்ளது.

 சீனா இதுவரை 1,342 தங்கம், 901 வெள்ளி, 655 வெண்கலம் என மொத்தம் 2,898 பதக்கங்களை வென்றுள்ளது.

 ஜப்பான் மற்றும் தென்கொரியா முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.

 கடந்த முறை 345 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை பிடித்தது.

18-வது ஆசிய விளையாட்டு போட்டி

 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரங்களில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ஆம் தேதி வரை 16 நாட்கள் நடைபெற்றது. இந்தோனேஷியா ஆசிய விளையாட்டை நடத்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1962-ஆம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்து இருக்கிறது.

 ஆசிய விளையாட்டு போட்டிகள் இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.

 ஆசிய போட்டிக்கான தீபத்தை, ஒலிம்பிக் மற்றும் உலக பாட்மிண்டன் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்தோனேஷியாவை சேர்ந்த முன்னாள் பாட்மிண்டன் வீராங்கனை லூசியா பிரான்ஸிஸ்கா சுசு சுசாந்தி ஏற்றி வைத்தார்.

 தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் ஜகார்த்தா கலேரா புங் கர்னோ மைதானத்தில் நடைபெற்றன.

asiangames

 இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக போட்டி களை தொடங்கி வைத்தார்.

 இந்தோனேஷியாவின் கலாச்சாரம், கலை சிறப்புகளை பிரதிபலிக்கும் கண்ணை கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 மொத்தம் ரூ. 3.2 பில்லியன் டாலர் செலவில் போட்டிகள் நடைபெற்றன.

 இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

 தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஆக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடி, ஸ்குவாஷ், சீட்டாட்டம் (பிரிட்ஜ்) உள்ளிட்ட ஒலிம்பிக்கில் அல்லாத 8 விளையாட்டுகளும் அடங்கும்.

 தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றார்கள். இந்திய குழுவுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி சென்றார்.

 பரம எதிரிகளான வடகொரியாவும், தென்கொரியாவும், குளிர்கால ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து சென்றது சிறப்பம்சமாகும்.

ஆசிய விளையாட்டில் பதக்கம்

 இந்தியாவின் சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் 36 போட்டிகளில் பங்கேற்றனர்.

 ஆசிய விளையாட்டு போட்டியின் முதல் நாளில் 10 மீ., கலப்பு அணி ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா-

ரவிக்குமார் இணை 42 ஷாட்களில் 429.9 சராசரி எடுத்து மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. ஆசியப் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

 ஆடவர் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டம் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் 48 ஆண்டுகளுக்கு பிறகு ஆசியப் போட்டி மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுத் தந்தார்.

 ஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்ஜ் விளையாட்டில் ஆடவர் அணி மற்றும் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.

 ஈட்டி எறிதலில் 20 வயதே ஆன இந்தியாவின் இளம் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

 ஆசியப் போட்டியில் இடம்பெற்ற செபாக்டக்ராவில் முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

 ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின், ஆண்கள் துப்பாக்கி சுடுதல் டபிள் டிராப் பிரிவில், இந்தியாவின் 15 வயது வீரர் சர்துல் விகான் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டின் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

 மல்யுத்தத்தில் ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார்.

 மல்யுத்தம் மகளிர் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம், ஆசியப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் வினேஷ் போகட் பெற்றார்.

 குதிரையேற்ற பந்தயத்தில் ஈவென்டிங் தனி நபர் பிரிவில் இந்தியாவின் ஃபௌவாட் மிர்ஸா முதல் வெள்ளி பதக்கத்தை வென்றார். இந்த பிரிவில் கடந்த 1982-க்கு பின்னர் வென்ற முதல் தனிநபர் பதக்கம் இதுவாகும்.

 ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்க பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

 ஜப்பான் 205 பதக்கங்களுடன் இரண்டா வது இடத்தையும், கொரிய குடியரசு 177 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

 ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியலில் இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக இந்திய அணி 69 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பெற்றது.

 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 24 வெள்ளி பதக்கங்கள் வெல்வதும் இதுவே முதல்முறையாகும்.

 இதற்கு முன்னர் இந்திய அணி 65 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்த நிலையில் நடப்பு போட்டியில் 69 பதக்கங்களை வென்று இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

 இந்த ஆசிய விளையாட்டை பொருத்த வரையில் இந்தியாவில் இந்த முறையும் தடகள வீரர், வீராங்கனைகளே அதிக பதக்கங்களை வென்றனர்.

 22-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 2022-ஆம் ஆண்டு சீனாவின் ஹோங்சு நகரில் நடைபெறவுள்ளது.