19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு வருடம் தாமதமாக செப்டம்பர் 23, 2023 அன்று ஹாங்சோவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி அக்டோபர் 7 வரை 15 நாட்கள் நடைபெற்றது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தொடக்க விழா அணிவகுப்பில் 8-வது நாடாக வலம் வந்த இந்தியா, ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லிலினா போர்கோஹைய்ன் ஆகியோர் இணைந்து தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

இந்த முறை மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.

Advertisment

இதில் இந்தியா சார்பில் 661 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.

முதல்முறையாக பதக்க எண்ணிக்கையில் 100-ஐ கடந்து போட்டியின் முடிவில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தை பிடித்தது.

2018-இல் இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை பெற்றதே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில், ஹாங்சோவில் முதல்முறையாக பதக்க எண்ணிக்கையில் சதம் கடந்து அசத்தியுள்ளது.

Advertisment

அதேநேரத்தில், போட்டியை நடத்திய சீனா 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தம் 383 பதக்கங்களுடன் முதலிலிடத்தைப் பிடித்தது.

as

தொடர்ந்து 11-வது ஆண்டாக அந்த நாடு பதக்கப்பட்டியலில் "நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு குவாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 199 தங்கப் பதக்கங்களைத் தாண்டி, இம்முறை சீனா வீரர், வீராங்கனைகள் 201 தங்கப் பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தனர்.

ஜப்பான் 52 தங்கம், 67 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 188 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பெற்றது. கொரியா 42 தங்கம், 59 வெள்ளி, 89 வெண்கலம் என மொத்தம் 190 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.

45 நாடுகள் போட்டியில் பங்ககேற்ற நிலையில், அதில் 38 நாடுகள் பதக்கப்பட்டியலில் தங்களை பதிவு செய்தன.

குறைந்தபட்சமாக கம்போடியா, லெபனான், பாலஸ்தீனம், சிரியா ஆகியவை தலா 1 வெண்கல பதக்கத்துடன் முறையே கடைசி 4 இடங்களை பிடித்தன.

இந்தியாவை பொருத்தவரை, ஒவ்வொரு பதக்கங்களிலும் இதுவே இப்போட்டி யின் இந்தியாவின் அதிகபட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த முயற்சியின்போது பல்வேறு தேசிய, போட்டி, உலக சாதனைகளையும் இந்தியர்கள் முறியடித்தனர்.

மேலும் பலர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றனர்.

இந்த முறை துப்பாக்கி சுடுதல் (22), வில்வித்தை (9) போன்ற விளையாட்டு களில் இந்தியர்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் பதக்கங்களை குவித்தனர்.

தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு 6 தங்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்கள் கிடைத்தன.

இந்த ஆசிய விளையாட்டில் மொத்தம் 13 உலக சாதனைகளும், 26 ஆசிய சாதனைகளும், 97 போட்டி சாதனைகளும் படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதைத் தொடர்ந்து ஹாங்சோவிலுள்ள ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

அணிகளின் அணிவகுப்பில் இந்திய அணிக்கு ஆக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தலைமை தாங்கினார். அவர் தேசிய கொடியுடன் முன்செல்ல மற்ற வீரர்கள் உற்சாகமாக பின்தொடர்ந்து வந்தனர்.

இறுதியாக 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டை நடத்தும் ஜப்பானிடம், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொடியை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் இடைக்கால தலைவர் இந்தியாவின் ரனதீர் சிங் வழங்கியதுடன் போட்டி முடித்து வைக்கப்பட்டது.

ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங் களில் 2026, செப். 19-ஆம் தேதி தொடங்கி அக்.4 வரை நடைபெற உள்ளது.