இந்தியாவில் 17-வது மக்களவைக்கான கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20-ஆம் தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது.
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 8039 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 435, காங்கிரஸ் 420 தொகுதிகளில் வேட்பாளர் களை களமிறக்கியது.
தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் பாஜக-காங்கிரஸ் 273 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன.
மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 7,928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில் 724 பேர் பெண்கள் ஆவர்.
வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸை விட ஒரு கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டது இதுவே முதல்முறையாகும்.
மொத்தம் உள்ள 96 கோடி வாக்காளர் களில் பதிவான சுமார் 60 கோடி வாக்கு களை எண்ணும் பணி நடைபெற்றது.
மகத்தான இந்த தேர்தல் முடிவை இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
சென்னையில் 3 உள்பட தமிழகத்தில் 45 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது.
பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
பாரதீய ஜனதாவுக்கு அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்து உள்ளன.
குஜராத், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா மாநிலங் களிலும் மற்றும் தலைநகர் டெல்லியிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்த ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதி களையும் பாஜக கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார்.
மோடி மீண்டும் வெற்றி பெற்றதற்கு உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), நிதின் கட்காரி (நாக்பூர்) உள்ளிட்ட தலைவர்களும் வெற்றி வாகை சூடினார்கள்.
தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாரதீய ஜனதா கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தன.
அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளன. எனவே மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
முழு பெரும்பான்மையுடன், தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதலாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
மத்தியில் அவரது தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி 2-வது முறையாக அரியணை ஏறுகிறது.
இதுபோல், சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு 2 பிரதமர்கள்தான் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.
ஜவகர்லால் நேரு, 1952, 1957, 1962 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
அதன்பின்னர், அவருடைய மகள் இந்திரா காந்தி, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
அவர்களுக்கு பின்னர் மன்மோகன் சிங், அடுத்து தொடர்ந்து 2-வது தடவையாக முழு பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்றே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்த கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. இதில் காங்கிரஸ் மட்டும் 51 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இருக்கிறது.
கடந்த தேர்தலில் வெறும் 44 தொகுதி களில் மட்டுமே வெற்றிப் பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் இருந்த காங்கிரசால் இந்த தடவையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய்விட்டது.
காங்கிரஸ் கூட்டணிக்கு கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே கைகொடுத்து உள்ளன. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது.
அங்கு ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
ஆனால் அமேதி தொகுதியில் அவர், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார்.
தேசிய அளவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளையும் சாராத பிற கட்சிகள் 95 தொகுதிகளில் வெற்றிப் பெற்று உள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மே 26-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியாது.
மேலும் அன்றைய தினமே நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.
____________
தமிழகம் மற்றும் புதுச்சேரி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த அணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோல் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்தன.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன.
அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி.மு.க. தேனி தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் கடந்த 52 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிப் பெற்றுள்ளார்.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ராமநாத புரம் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் எஸ்.எம். சரிப் களம் இறக்கப்பட்டார். தராசு சின்னத்தில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
4 மாநில சட்டசபை தேர்தல்
மக்களவை தேர்தலுடன் சேர்ந்து நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. அவற்றின் விவரம் வருமாறு:
ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
அங்கு மெஜாரிட்டி பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும்.
இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது.
அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 60 இடங்களில் தேர்தல் நடந்தது.
மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது பாஜக கட்சி 33 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
அங்கு காங்கிரஸ் 3 இடங்களிலும், என்பிபி 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் வென்றது.
சிக்கிம்
சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு சிக்கிம் குடியரசு முன்னணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது.
ஆனால் அக்கட்சி தற்போது 15 இடங்களை வென்று ஆட்சியை இழந்துள்ளது. மாறாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
ஒடிசா
ஒடிசாவில் மொத்தம் 147 இடங்களில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 74 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 113 இடங்களில் வென்று மீண்டும் 5-வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அங்கு காங்கிரஸ் 9 இடங்களையும், பாஜக 22 இடங்களையும் வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் வென்றுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல்
தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக மொத்தம் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. 13 இடங்களில் வென்றதன் மூலம் சட்டசபையில் திமுக புதிய பலம் பெற்றுள்ளது.