டந்த மாதத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் ஒரே கட்ட வாக்குப்பதிவும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபைகளுக்கு நடைபெறும் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் 475 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,53,538 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா தொடர்பான சமூக இடைவெளி விதிகளை கருத்தில் கொண்டு, வாக்குபதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-இல் இருந்து 1000 ஆக குறைக்கப்பட்டது.

அனைவரும் பங்கு பெறும் மற்றும் அனைவரும் அணுகக்கூடிய தேர்தலை உறுதி செய்யும் வகையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வாக்கு வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த வாக்காளர்களுக்கு முறையான வசதிகள் வழங்கப்பட்டதை களத்தில் உள்ள பார்வையாளர்கள் உறுதி செய்தனர். விதிகளின்படி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக கடந்தன.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர் களின் முகவர்கள் முன்னிலையில் இவை சோதிக்கப்பட்டன. மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள், நேரடி ஒளிபரப்பு முறையில் கண்காணிக்கப்பட்டன.

தேர்தல் பத்திரங்கள் மீதான வழக்கு மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக புதிய தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய தடை கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போதைய விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று நீதிமன்றம் கூறினாலும், 2017-இல் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு பெரிய அரசியலமைப்பு சவால் இன்னும் நிலுவையில் உள்ளது.

Advertisment

2017-ஆம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் தாக்க-லின் போது அறிவிக்கப் பட்டது. மறைமுகாக அரசியல் கட்சி களுக்கு பணம் வழங்கும், வட்டியற்ற ஒரு அமைப்புமுறையாகும். இந்த பத்திரங் களில் நன்கொடை கொடுக்கும் நபர்களின் பெயர்களோ வாங்கும் நபர்களின் பெயர்களோ இடம் பெறாது. இந்த பத்திரங்களை வைத்திருப்பவர்கள் (அரசியல் கட்சிகள்) இதன் உரிமையாளர்களாக கருதப்படுவார்கள். இந்த பத்திரங்கள் ரூ. 1000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. ஒரு கோடி என்ற மடங்களில் விற்கப்படுகிறது. மேலும் அவற்றை விற்க அங்கீகாரம் பெற்ற ஒரே வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டுமே. நன்கொடையாளர்கள் ஒரு அரசியல் கட்சிக்கு பத்திரங்களை வாங்கலாம் மற்றும் நன்கொடை அளிக்கலாம், இது பத்திரங்களை அதன் சரிபார்க்கப்பட்ட கணக்கு மூலம் 15 நாட்களுக்குள் இணைக்க முடியும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் வாங்கக்கூடிய பத்திரங்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. ஒரு கட்சி 15 நாட்களுக்குள் எந்த பத்திரங்களையும் பணமாக்கவில்லை என்றால், எஸ்பிஐ இவற்றை பிரதமரின் நிவாரண நிதியில் வைக்கிறது. ரூ. 6534.78 கோடி மதிப்புள்ள 12,924 தேர்தல் பத்திரங்கள் 15 கட்டங்களாக மார்ச் 2018 முதல் ஜனவரி 2021 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்-லி பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் மட்டுமே மறைமுகமாக பணம் செலுத்தும் என்று கூறினார்.

ஆனால் அந்த அறிவிப்பின் அதிகாரப்பூர்வ அச்சு, நபர்கள், தனிநபர்களின் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத மற்றும் பிற அறக்கட்டளைகள் கூட தங்கள் விவரங்களை வெளியிடாமல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த திட்டத்தின் வாதம், மறைமுகமாக (anonymity) நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என்பது. 2017-ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளை வெளியிடுவதிலிருந்து கட்சிகள் விலக்கு அளித்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கட்டாய பங்களிப்பு அறிக்கைகளில் இந்த விவரங்களை வெளியிட தேவையில்லை.

x

இதன் பொருள் எந்த தனிநபர், நிறுவனம் அல்லது அமைப்பு கட்சிக்கு நிதி உதவி அளித்தது என்றும் எவ்வளவு அளித்தது என்றும் மக்கள் அறிந்து கொள்ள முடியாது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, கட்சிகள் ரூ. 20,000-க்கு மேல் பங்களித்த அனைத்து நன்கொடையாளர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டி யிருந்தது. இது தகவல் அறியும் உரிமையை மீறுகிறது. மேலும் அரசியல் வர்க்கத்தினரை கணக்கிட முடியாமல் ஆக்குகிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்றாலும் ஆளும் அரசு அதனை அறிந்து கொள்ள முடியும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கோருவதன் மூலம் இந்த தகவல்களை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நன்கொடைகளின் மூலத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் வரி செலுத்துவோர் மட்டுமே என்பதை இது குறிக்கிறது. இந்த பத்திரங்களை அச்சிடுதல், விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பாக எஸ்.பி.ஐக்கு செலுத்தப்படும் கமிஷன் ஆகியவை வரிசெலுத்தும் நபர்களிடம் இருந்து பெறப்படுகிறது என்பதை ஏ.டி.ஆர். சமீபத்திய அறிக்கை ஒன்றில் கூறியது.

நன்கொடையாளர்களின் தகவல்கள் அளிக்கப்பட வேண்டாம் என்று கூறப் பட்ட பிறகு இந்த பத்திரங்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் பாதி வருமானம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்தவை என்று ஏ.டி.ஆர். கூறியுள்ளது, (2018 - 19 நிதி ஆண்டில்). பாஜக தான் இதில் மிகப்பெரிய பயனாளி.

2017 - 18 மற்றும் 2018 - 19 காலங்களுக்கு இடையே பெறப்பட்ட 2,760.20 கோடி நன்கொடையில் ரூ. 1660.89 கோடி அல்லது 60% பங்களிப்பை பாஜகவே பெற்றுள்ளது.

பணியாளர்கள், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழுவுக்கு 2017 மே மாதம் தேர்தல் ஆணையம் சமர்பித்த அறிக்கையில், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்தது. நீதித்துறை அமைச்சருக்கு அதே மாதத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் தேர்தல் ஆணையம் இந்த திருத்தம் குறித்து மறுபரிசீலனை செய்யவும் மாற்றம் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. புதிய விதிமுறையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்பு அறிவிக்கப்படாத சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு அறிக்கையை ஆராயும்போது, அரசியல் கட்சி ஏதேனும் எடுத்துள்ளதா என்பதைக் கண்டறிய முடியாது என்று கூறியுள்ளது.

புதிய தமிழக அரசின் சவால்கள்

நீண்ட கடல் வளம், பரந்து விரிந்த காவிரி டெல்டா விளைநிலங்கள், முல்லை பெரியாறு, தாமிரபரணி, பவானி உட்பட ஏராளமான பாசன பகுதிகள், பஞ்சு உற்பத்திக்கும், பட்டு நெசவுக்கும் ஏற்ற பாரம்பரிய தொழில் நகரங்கள், சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் போன்ற நவீன தொழில் நகரங்கள் என்று தொழில்வளம், இயற்கை வளம், கடும் உழைப்பை வழங்கும் தொழிலாளர் வளம் மிகுந்தது, நமது தமிழ்நாடு.

இங்கே, விவசாயம், மருத்துவம், சுற்றுலா, சேவைத்துறை மற்றும் உற்பத்தி துறைகள் வாயிலாக, தற்போது ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு மாநிலத்தின் ஜி.டி.பி. உள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி. 2.7 பில்-லியன் டாலர். இதில் பத்தில் ஒரு பங்கை தமிழகம் தருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு பிரதான திராவிட கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆள்கின்றன. இரு பெரும் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களை பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுத் துள்ளனர். இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும், தொழில் தொடங்குவதற்கும், வாழ்வதற்கும் ஒரு அமைதியான மாநிலமாக தமிழகம் அடையாளம் காணப்படுவது, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒன்று.

பொருளாதார வளர்ச்சியில், நாட்டின் முதல் 5 இடங்களில் தமிழகமும் ஒன்று. தற்போது புதிய அரசை அமைப்பதற்காக, தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில், எளிய மக்களுக்கான, இலவச திட்டங்களை அதிகம் அறிவித்துள்ளன. குடும்பப் பெண்களுக்கு, மாதம்தோறும், ரூ. 1,500 என்றும், ரூ.1,000 வழங்குவோம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளன. இலவச எரிவாயு சிலிண்டர், இலவச வாஷிங் மெஷின் என்று பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப மகளிருக்கு, மாதம்தோறும் ரொக்கம் வழங்கும் திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூகத்தில் எழுந்தாலும், இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் அமல்படுத்த முயற்சிக்கும் திட்டமல்ல. சர்வதேச அளவில், பின்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகள் ‘யுனிவர்சல் பேசிக் இன்கம்’ (Universal basic income – UBI) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் நாட்டில், இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளன.

தங்களின் குடிமக்களில், நலிந்த பிரிவினர் வாழ்வாதாரத்துக்காகவும், வாழ்க்கைச் செலவுகளுக்காகவும், குறைந்தபட்ச பணமாக, அந்த நாடுகளின் அரசு வழங்குகிறது. அதன்படி, மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டன. உலகில், மூன்றில் ஒரு பங்கு ஏழைகள், இந்தியாவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதன்படி, ஏழைகளுக்காக, இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருவது பற்றி, புதிய அரசுகள் அக்கறைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான நிதியை எப்படி பெறுவார்கள் என்பதில்தான் நிறைய கேள்விகள் எழுகின்றன. எந்த அரசு, புதிதாக பொறுப்பேற்றாலும், முதலில், சுமார் ரூ.5 லட்சம் கோடி கடனை தாங்கிக் கொள்ள வேண்டும். கூடுதலாக, புதிய திட்டங்களுக்கான செலவினங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருடத்திற்கு நிதி திரட்ட வேண்டும்.

வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டபிறகு, புதிதாக வரி வருவாய் ஏற்படுத்துவதற்கு, மாநிலங்களுக்கு வழியில்லை. மோட்டார் வாகனங்கள் பதிவு, பத்திரப்பதிவு, மதுபான விற்பனை, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகள் வாயிலாகத்தான், மாநில வருவாயை பெருக்க முடியும்.

அதைவிட்டால், கடன் வாங்குவது, கடன் பத்திரங்கள் வெளியிடுவதுதான் மாநிலங்களுக்கு உள்ள வாய்ப்பு.

ஆனால், அதற்காக செலுத்தப்படும் வட்டி, வருங்காலத்தில், மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தும்.

ஆகவே, மாநிலத்தின் வளர்ச்சியிலும் கவனம் கொள்ள வேண்டும். மக்கள் நல திட்டங்களுக்கும் நிதி திரட்ட வேண்டும் என்றால், அதற்கு மாநிலத்தின் ஜிடிபியை அதிகரிக்கச் செய்வதே ஒரே தீர்வு. தற்போது ரூ. 18 லட்சம் கோடியாக இருக்கும் தமிழகத்தின் ஜிடிபி, ரூ. 35 லட்சம் கோடியாக அதிகரிக்கும் பட்சத்தில், தாங்கள் அறிவித்துள்ள கவர்ச்சி, கனவுத்திட்டங்களை ஒரு அரசு செய்துவிட முடியும். தற்போதுள்ள தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை, மேலும் 60 சதவீதம் அளவிற்கு அதிகரித்தால்தான், அதன் மூலம் கிடைக்கும் வரிவருவாய் மூலம் புதிய திட்டங்கள் அமலாக்கம் சாத்தியப்படும். இல்லாவிட்டால், வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியிலிருந்து இந்த செலவுகளை செய்து, வளர்ச்சிப் பணிகளை முடக்க வேண்டியிருக்கும். அல்லது தமிழ்நாடு கடன் வாங்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, அதன் மூலம் ஜிடிபி உயர்வு, அதன் வாயிலாக வரி வருவாய் உயர்வு போன்ற சாதகமான சூழ்நிலைகள் அமைய, தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கும் புதிய அரசு செய்ய வேண்டியது ஏராளம் தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தை நாடிவர இருக்கும் தொழில்நிறுவனங்கள் மத்தியில், புதிய அரசு, ஒரு ஆழமான நம்பிக்கையை விதைக்க வேண்டும். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கும், தொழில் நடத்துவதற்கும் இடைஞ்சலாக இருக்கும் சட்ட திட்டங்களை, நடைமுறைகளை எளிமையாக, வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும்.

தொழில் தொடங்குவதற்கு நிலம் வாங்குவதற்கு, அதில் கட்டிடம் கட்டுவதற்கு, டிடிசிபி, உள்ளூர் திட்ட குழுமம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. உரிய தொழில் லைசென்ஸ் பெறுவதற்கும், தடையில்லா சான்று பெறுவதற்கும், பல்வேறு அரசு துறைகளுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், தொழில் முனைவோருக்கு கால விரயம், பண விரயம், மனச் சோர்வு ஏற்படுகிறது. ஒரு தொழில் தொடங்குவதற்கு தேவையான எல்லாவிதமான அனுமதி மற்றும் லைசென்ஸ்களும் பெறுவதற்கான வசதிகளை ‘சிங்கிள் விண்டோ’ முறையில், ஒரே போர்ட்டலில் ஏற்படுத்தி தர வேண்டும். அப்போதுதான் புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

பல்வேறு மானியங்கள், சலுகைகள் வழங்கி, நாட்டின் பிற பகுதியில் உள்ள தொழில்களை குஜராத், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் ஈர்க்கின்றன. தமிழகத்தில் நமது மாநிலத்திலும் இதுபோன்று அமல்படுத்தினால், தமிழகத்தில் இயங்கிவரும் தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்வது நிறுத்தப்படும் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது. மின் மிகை மாநிலமாக உள்ளதால், எல்லா வகை தொழிற்சாலைகளுக்கும் சீரான மின் விநியோகம் தற்போது கிடைத்து வருகிறது. தற்போது அவசரகால பயன்பாட்டுக்காக மட்டுமே, பவர் ஜெனரேட்டர்கள், தொழில் நிறுவனங்களில் பயன்படுகின்றன.

அப்படியிருக்க, 125 கேவிஏக்கு மேல் பயன்பாட்டில் உள்ள ஜென்செட்டு களுக்கு, மாசுகட்டுப்பாட்டு கருவி பொறுத்த வேண்டும் என்ற அரசின் கட்டாய அறிவிப்புகள் அவசியமற்றது.

சிப்காட், சிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளை அரசு நடத்தி வருகிறது. அதில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு மானியம், சலுகைகள் வழங்கப்படுகின்றன. தனியார் நடத்தும் தொழிற்பூங்காக்களுக்கும் அதேபோன்ற சலுகைகள், மானியங்கள் வழங்க வேண்டும். தமிழகத்தில், எம்.எஸ்.எம்.இ., மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்கினாலோ, தொழிலை விரிவாக்கம் செய்தாலோ, அவற்றுக்கு மானியத்துடன் முதலீட்டு நிதி கிடைக்க அரசு உதவ வேண்டும்.

நாட்டின், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநில தொழிலாளர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றதால், வேளாண்மை தொடங்கி, கட்டுமானம் வரைக்கும் எல்லா வகையான தொழில்களும், தமிழகத்தில் ஸ்தம்பித்தன. உள்ளூர் இளைஞர்களுக்கு, போதுமான, திறன் பயிற்சி அளித்து, தமிழ்நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகளில், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான், தமிழகம், தொழில் வளர்ச்சியில், சுயசார்பு நிலையை எட்டும். அதற்கான முயற்சியில், தமிழக அரசாங்கத்துடன், கொடீசியா போன்ற பல்வேறு தொழில் அமைப்புகள் கைகோர்த்து செயல்பட ஆர்வமுடன் காத்திருக்கின்றன.

தமிழகத்தில், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தொழில் நிறுவனங்கள் குவிவதை தடுத்து, தொழில் மற்றும் வேலைவாய்ப்பை மாநிலம் முழுவதும் பரவலாக்க வேண்டும். வேளாண்மை, நெசவு, கால்நடை வளம் இல்லாத மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க உதவினால், வேலைதேடி, குறிப்பிட்ட நகரங்களில் இளைஞர்கள் குவிவதையும், குடும்பங்கள் இடம்பெயர் வதையும் கட்டுப்படுத்த முடியும். கொரோனா காலத்தில், சுற்றுலாவும், ஓட்டல், ரெஸ்டாரன்ட் தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. அதற்கு நிவாரணமாக, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள், ரெஸ்ட்டாரன்ட் தொழிலை சிறுதொழில்துறையின் கீழ் அங்கீகரித்து சலுகைகள் வழங்கின.

அதுபோன்ற ஊக்கத்தை தமிழகத்திலும் வழங்க வேண்டும்.

மகளிர் தொழில்முனைவோரை ஊக்கப் படுத்த, பதிவுத்துறை கட்டணங்களில் விலக்கு மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கலாம்.

‘ப்ளூ காலர்’ தொழிலாளர் குடும்பங்கள், வீடு வாங்க வசதியாக, புறநகர், கிராமப்புறங்களில் தனியார் – அரசு முதலீட்டில், குறைந்த விலை வீடுகளுடன் கூடிய டவுன்ஷிப் உருவாக்கலாம். அதனால், சம்பளத்தில் பாதி, வீட்டு வாடகையாக செல்வது தடுக்கப்படும். மாறிவரும் தொழில்சூழலுக்கு ஏற்ப, தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்ற வேண்டும். மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த, பதிவுத்துறை கட்டணங்களில் விலக்கு மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கலாம்.

24-வது தலைமை தேர்தல் ஆணையாளர்

நாட்டின் 24-வது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார். இப்பதவியில் இருந்த சுனில் அரோரா, 2021 ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் தனது பணிக் காலத்தை நிறைவு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையராக கடந்த 2019 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் சுஷில் சந்திரா பணியாற்றி வந்தார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வரம்பு நிர்ணய ஆணையத்தில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் இவர் உறுப்பினராக இருந்து வருகிறார். வருமானவரித்துறை யில் சுமார் 39 ஆண்டுகளாக, பல பதவிகளை வகித்துள்ளார். 2016 நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நேரடி வரி வாரியத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

நேரடி வரி வாரிய தலைவராக இருந்ததால், சட்டப்பேரவை தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத பணத்தை கண்டறிவதில் சுஷில் சந்திரா முக்கிய பங்காற்றினார். இவரது தொடர் கண்காணிப்பால் சமீபத்திய தேர்தல்களில் பணம், மது, இலவச பொருட்கள், போதைப் பொருட்களின் பறிமுதல் கணிசமாக அதிகரித்தது. தூண்டுதல் இல்லாத தேர்தலை இவர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை சரிபார்ப்பதில் சுஷில் சந்திரா சிறப்பு கவனம் செலுத்தினார். வேட்பாளர்கள் வேட்பு மனுவில் குறிப்பிடாத சொத்துக்கள் மற்றும் கடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஒரே மாதிரியான முறையை கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றினார். 2019-ஆம் ஆண்டு நடந்த 17-வது மக்களவை தேர்தல் மற்றும் இதர மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் புதுமையான தகவல் தொழில்நுட்ப விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் வசதியை கொண்டு வந்தததில் சுஷில் சந்திராவின் பங்களிப்பு தனிச்சிறப்பானது.

கோவிட் சூழலில் பீகார், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தியது, மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வசதியை நீட்டித்தது, கோவிட் நோயாளிகள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தியது ஆகியவற்றில் சுஷில் சந்திரா முன்னணியில் செயல்பட்டார்.