12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ஆம் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெற்றது.
இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றில் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
மான்செஸ்டரில் இந்தியா-நியூசிலாந்து அணி களுக்கு இடையே நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
எட்ஜ்பாஸ்டனில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எனும் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
இதனால் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் அளிக்கப்பட்டது. அதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை காட்டிலும் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசிய அணி என்ற ஐசிசி விதிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை என்ற ஆதங்கம் இருந்தது.
44 ஆண்டு கால இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு இதன் மூலம் நனவானது.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டரிகள் அடிப்படையில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தத் தொடரின் ஆட்ட நாயகனாக 578 ரன்கள் மற்றும் 2 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
உலகக் கோப்பையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா 648 ரன்கள் எடுத்து முதலிடம் பெற்றார்.
மேலும் ஒரு உலகக் கோப்பை போட்டியில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா படைத்தார்.
இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி யவர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 27 விக்கெட்டுகள் முதலிடம் பெற்றார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 31 சதங்கள் அடிக்கப்பட்டன. அவற்றில் 7 சதங்கள் இந்திய வீரர்கள் எடுத்ததாகும்.
இந்த தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக படைத்தார். இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் சாதனையை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் போல்ட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக படைத்தார்.