பாடல்: 31
"பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேறொட்ட காவலனே.''
பொருள்: சமுத்திரத்தை வற்றச்செய்து, மாமரமாய் மாறிய சூரபத்ம அரக்கனை இரண்டாகப் பிளந்து, ரத்தம் குபுகுபுவென கொட்டுமாறும், கிரௌஞ்ச மலையை துளைக்குமாறும் வேலைப் பாய்ச்சிய வேலாயுதா; மெய் எனப்படும் பொய்யாகிய இந்த உடலெனும் இந்த வீட்டில் மீண்டும் நான் குடியேறிவிடாதபடி செந்தாமரை மலரைவிடச் சிவந்த உன் பாதவீட்டில் எனக்கு அடைக்கலம் தந்தருள்வீர்.
இறைவனின் வீடு!
இறைவனின் வீடு என்பது எது?
அதுதான் மனிதர்கள் பிறப்பிக்கும் பேரின்ப வீடு.
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள்
எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம்; பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
(ஔவையார், தனிப்பாடல் திரட்டு
பாடல் எண்: 64)
பிறருக்கு கொடுக்கும் குணம், தீய வழியில் செல்லாமல் சேர்க்கும் பொருள். எப்போதுமே ஒருமித்த கருத்துடைய காதலர் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது; இவையெல்லாம் இன்பம். பரம் பொருளாகிய இறைவனை நினைத்து ஈதல், ஈட்டல், காதல் ஆகிய இம் மூன்றையும் விட்டு இறைவனிடம் இரந்து பெறுதலே பேரின்பமாகும் என்கிறார் ஔவையார்.
ஆசைகளை அறுத்துவிட்டு, ஆசைகளை அறுத்துவிடச் சொல்லி, பிறவி இனி வேண்டாம் என இறைவனின் காலடியைச் சரணடைவது மட்டுமே, உடலான வீட்டில் மீண்டும் புகாமலிருக்க வழி.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (குறள்:10)
மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வைக்கும் பிறவிக்கடலாகிய பெரிய துன்பத்தைக் கடக்க; பகவானின் பாதமலர்த் திருவடியை பற்றுவதே தீர்வு. மற்றவர்கள் பிறவித் துன்பக் கடலிலேயே அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பர்.
என்கிறார் திருவள்ளுவர்.
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் என்கிறார் அருணகிரியார்.
பதைக்கப் பதைக்க
வதைக்கும் கண்கள்!
பாடல்: 32
"கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
துளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற வென்னை யெந்தாள்வந் திரட்சிப்பையே.''
பொருள்: கிளைகள் விட்டுத் தோன்றிய சூரபத்மனது மார்புடன், கிரௌஞ்ச மலையையும் ஊடுருவித் துளைத்த வேலாயுதம் கொண்டவேலவா; முற்றும் துறந்தவர்களின் மனதை வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கக்கூடிய கண்களைக் கொண்ட பெண்களால்; நொந்து தவிக்கிற என்னை எப்பொழுது நீ ஆட்கொள்வாய்?
தவத்தைக் கெடுத்த அழகி!
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி
பட்டம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். பெரும் ஞானரிஷிகள் வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும். ஆனால் விஸ்வாமித்திரர் கடும் கோபக்காரர். அரிச்சந்திர ராஜாவின் சத்தியம் தவறாமையை உலகறியச் செய்ய, அரிச்சந்திரனை பெரும்பாடு படுத்தியவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரருக்கு கடுமையான கோபம் வசிஷ்டர்மீது. தன்னை அவர் வணங்கு வதில்லை வசிஷ்டர் என்பதால், வசிஷ்டருக்கு சாபம் கொடுக்க நினைத்தார். ஆனால் அவரின் எண்ணத்தை அறிந்த இறைவன் அந்த எண்ணத்தையே மாற்றினார். அதன்விளைவாக விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி என்கிற பட்டம் கொடுத்து பாராட்டினார் வசிஷ்டர்.
தவத்திலும், கோபத்திலும், சாபத்திலும் வலியவரான விஸ்வாமித்திரர் ஒருமுறை கடும் தவம் மேற்கொண்டிருந்தார். அந்தத் தவத்தின் உஷ்ணம் இந்திரனைச் சுட்டது.
அவ்வளவு வலிய தவம். இதனால் திடுக்கிட்டுப் போன இந்திரன் இந்திரலோகத்தைக் கைப்பற்றத்தான் விஸ்வாமித்திரர் இந்தத் தவத்தை மேற்கொள்கிறார் என நினைத்தார். அதனால் இந்திரலோகத்தின் அரசவை நடன மாதுவான மேனகையை அழைத்து, நீ விஸ்வாமித்திரத்திரரின் தவத்தைக் கலைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
இதையடுத்து பூலோகத்தில் விஸ்வாமித்திரர் தவம் மேற்கொண்டிருந்த வனத்திற்கு வந்தாள் மேனகை. முனிவரின் முன் வளைய வந்தாள்; நடனமும் ஆடினாள்.
அவளின் பேரழகு கண்டு பெருமூச்சிவிட்டார் முனி. அவளின் ஆளை விழுங்குவது போன்ற ஈர்க்கும் விழிகள், முனியை காமவெப்பத் தில் தள்ளியது. தவவெப்பத்தை தள்ளி வைத்துவிட்டு, காமவெப்பத்தில் குளிர் காய முடிவெடுத்தார். மேனகையை அந்த இடத்தில்யே காந்தர்வ மணம் புரிந்து கொண்டார்.
பற்றறுத்த விஸ்வாமித்திரரை இல்லறப் பற்றில் சேர்த்த ஆற்றலும், அழகும் வாய்ந்த தாக இருந்தது மேனகையின் கண்கள்.
இப்படி கடுமையான தவம் மேற்கொள்ளும் தவசிகளைக்கூட பெண்களின் கண்கள் வதைத்துவிடும்.
"பண்டறியேன் கூற்றென் பதனை; இனியறிந்தேன்
பெண்டகையால் மேரமர்க் கட்டு.'' (குறள்: 1083)
எம வேதனை என்பதை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. இப்போது தெரிந்துகொண்டேன்; பெண் என்கிற அழகிய வடிவத்துடன்கூடிய துயரம் (காம வேதனை) ஏற்படுத்தக்கூடிய கண்களைக் கொண்டதே எம வேதனை.
"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.'' (குறள்: 1084)
குற்றமற்ற இந்த அழகிய பெண்ணின் இயல்புக்கு விரோதமாக அவளுடைய கண்கள் அமைந்திருக்கிறது; காண்போரின் உயிரைக் கவர்ந்துவிடுகிறது அந்தக் கண்கள்.
-இப்படியாக பெண்களின் கண்களுடைய வலிமையை, ஆண்களை வலுவிழக்கச் செய்யும் பெண்ணின் கண்களைப் பற்றிச் சொல்லியுள்ளார் திருவள்ளுவர்.
காமத்தில் கரைகண்டவராக இருந்து, பக்தியில் கரைகண்டவரான அருணகிரியார் அதானால்தான்...
"துறந்தோர் உள்ளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்''
என்று பாடினார்.
அவன் பெயர் சொல்!
பாடல்: 33
"முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமா ளவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே.''
பொருள்: பிறவிக் கடல் கடத்தல் என்பது அத்தனை எளிதல்ல; அது முடிவற்றது. தன்மானத்திற்கே சோதனை உண்டாக்கி, வாழ்க்கையை வதைக்கக் கூடியது வறுமை. அசுரர் கூட்டத்தையே அழித்து; தன் பக்தர் களுக்கு நன்மையே செய்கிற வெற்றிவேலைக் கொண்ட முருகப்பெருமானின் பெயரை வணங்கி உச்சரிப்பவர்; பிறவிக் கடலை கடக்க முடியும், வறுமையின் துயரத்திலிருந்து மீள முடியும்.
முருகனிடம் அவ்வை சொன்ன கொடுமை!
வனத்தின் வழியே வந்துகொண்டிருந்த ஔவையார், ஒரு மரத்தில் பழுத்துத் தொங்கிய நாவற்பழங்கள் சிலவற்றை உண்ண விரும்பி, தன் கைத்தடியால் பறிக்க முயன்றார்; முடியவில்லை. அப்போது மாடுமேய்க்கும் சிறுவன் வேடத்தில், மரத்தின்மேல் அமர்ந்திருந்த முருகப்பெருமான், என்ன பாட்டி! பழம் வேண்டுமா? சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக் கேட்டார்.
வெய்யிலில் காய்ந்ததுதான் சுட்ட பழமோ!
என எண்ணிய ஔவை, சுடாத பழமாக பறித்துப் போடப்பா என்றார்.
முருகன் மரத்தை உலுக்க நாவற்பழங்கள் மணலில் கொட்டியது. மணற்துகளை நீக்கு வதற்காக பழங்களை எடுத்து ஊதினார் ஔவை.
என்ன பாட்டி! பழம் சுடுதா? என முருகன் கேட்க... தன்னைத் தமிழால் மடக்கிய சிறுவன் முருகனே என உணர்ந்தார். ஔவைக்கு தன் சுயரூபம் காட்டிய முருகன், சில கேள்விகளைக் கேட்க, அதற்கு ஔவை பதில் சொன்னார்.
"கொடியது எது? என முருகன் கேட்டதற்கு....
கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிதே இளமையில் வறுமை....''
(ஔவையார் தனிப்பாடல்)
எனத் தொடர்ந்து பாடுவார் ஔவை.
சக்திவாய்ந்த, நீண்ட வேலினைக் கொண்ட
வனே... கொடியது எது? என்று கேட்கிறாய்...
கொடியதிலும் கொடியது வறுமையே.
அந்த வறுமையிலும் கொடியது இளமையில் வறுமையே என முருகனிடம் ஔவை சொன்னார்.
பசிக்கு உண்டு, உடலினை உறுதி செய்யவேண்டிய இளமையில், கல்வி உள்ளிட்ட கலைகளைக் கற்கவேண்டிய இளமையில், உண்ண ஏதுமின்றி வறுமையில் உழல்வது எத்தகைய கொடூரம்? அதனால் தான் வறுமையிலும் கொடியது- "இளமையில் வறுமை' என்றார் ஔவை.
வறுமை அவ்வளவு கொடியது. அது ஒழுக்கமான மனிதர்களையும் ஒழுங்கீனமாக்கிவிடும் தன்மையுடையது.
"இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.'' (குறள்: 1041)
ஒருவனை வறுமை துன்பப்படுத்து வதைப்போல துன்பப்படுத்தக் கூடியது எதுவென்றால்; அவனுக்கு எந்தப் பொருளும் இல்லாதபடி துயரப்படுத்தும் அந்த வறுமையேதான்.
-என வள்ளுவர் சொல்லியுள்ளார்.
எதற்கும் நிகரான இன்னொன்று இருக்கக்கூடும். ஆனால் துயரப்படுத்தும் வறுமைக்கு நிகர் அந்த துயரப்படுத்தும் வறுமையே என தெய்வப்புலவர் வள்ளுவர் சொல்லியதன்மூலம் வறுமை எத்தனை பெரிய துன்பம் என்பதை உணரமுடியும்.
"இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.'' (குறள்: 1042)
ஒருவன் இப்பிறவியின் இன்பத்தையும், மறுபிறப்பு வேண்டும் என்கிற எண்ணத்தையும் இலாமல் செய்யும்படி; அவன் செய்த பாவம்தான் வறுமை என்ற பெயரில் அவனை வந்தடைகிறது என்கிறார் வள்ளுவர்.
பிறவித்துயரமும், வாழ்க்கையின் வறுமையும் தாங்க முடியாதது என்பதாலேயே முருகப் பெருமானின் பெயரை வணங்கி உச்சரிப்பவர்; பிறவிக் கடலை கடக்க முடியும், வறுமையின் துயரத்திலிருந்து மீள முடியும் என்று தேற்றுதல் செய்கிறார் அருணகிரியார்.
கண்வலை- கவலை!
பாடல்: 34
"பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்வழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.''
பொருள்: காமத்தில் சிக்குண்டவனின் உயிரைத் திருகிப் பருகி பசியைத் தணித்துக்கொள்ளும்; கூர்வாய்ந்த வேலைப் போன்ற கண்களுடைய பெண்கள் வீசுகிற கண் வலையில் என் மனது கட்டுண்டு கிடக்கிறது. கிரௌஞ்ச மலையை துகள்களாக்கி அழித்த கந்தனே! என்னிடமிருந்து தப்பிய, எவருக்கும் எட்டாத, ஞான வித்தையை எனக்கு அருள்வாயாக.
"அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மட மகள்
கண் வலைப் படூஉம் கானலானே.''
(குறுந்தொகை: நெய்தல்: பாடியவர்- ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்: பாடல் எண்: 184)
மயிலின் தோகையில் இருக்கும் கண் போன்ற அழகிய மென்மையான கூந்தலைக் கொண்டவளாகிய அவள், மீன் பிடிக்கப் பயன்படுத்தும் நுண்ணிய வலையை வைத்துள்ள பரதவர் மகள். அவள் வாழ்கின்ற கடற்கரையோர சிற்றூருக்குச் செல்பவர்கள்,
அவளின் கண்வலையில் சிக்கிக்கொள்வார்கள். என் மனமும் அவளின் கண்வலையில் சிக்கி, அவளின் ஊரின் சோலையிலேயே தங்கிவிட்டது. தான் அரிந்த ஒன்றை இல்லவே இல்லை எனப் பொய்யாகச் சொல்லும் குணம் பெரியோர்களிடம் இருப்பதில்லை. எனவே என் பேச்சை நம்பு; அவள் வசிக்கிற சிற்றூருக்கு போகாதே!
-இப்படியாக இளம்பெண்ணின் கண் வலையில் தன் மனம் சிக்கிக் கொண்டு;
அங்கேயே இருப்பதாக தன் நண்பனிடம் சொல்லும் தலைவன் "நீ அவளுடைய ஊருக்குப் போகாதே' என எச்சரிக்கவும் செய்கிறான்.
இந்தப் பாடல் தலைவியின் கண்களுடைய அழகைச் சொல்வதற்காக, மறைபொருளாகச் சொல்லப்பட்டாலும்கூட, பெண்ணின் கண்வலையில் எளிதில் சிக்கிவிடுவது;
அதனால் காதல் மற்றும் காமத்தால் அவதியுறுவது என்பதைச் சொல்கிறது.
பெண்களின் கண்வலையில் சிக்குண்டிருக்கும் தனது மனதை மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல. அதனால்தான், அதிலிருந்து மீளுவதற்கு முருகப் பெருமானிடம் "ஞான வித்தையை அருளச் சொல்லிக் கேட்கிறார்' அருணகிரிநாதர்.