உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பிறந்தது திருநெல்வேலியில் வருடம் 1950. அப்பாவுக்கு ஒன்பதாவது கடைசிப் பிள்ளை. புதுமைப்பித்தன் சொல்வதுபோல வழிச்சு ஊத்தின தோசை’. அப்பா அவரது அப்பாவிற்கு ஒரே ஆண்பிள்ளை. தாத்தா அந்தக் காலத்து பி.ஏ. பத்திரப்பதிவில் மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்துடன் துணைப்பதிவாளராக இருந்தவர். சைவ சித்தாந்தங்களில் வல்லவர். புண்ணியராற்றுப்படை’ என்ற சைவசமய நூல் உட்பட நிறைய எழுதியிருக்கிறார். அப்பா ஒரே பிள்ளை என்பதால் செல்லமாக வளர்ந்தவர். தாத்தாவின் சொத்துக்களுக்கு ஏக ஆண்வாரிசு என்பதால் பண்ணையார்போல வாழ்ந்திருக்கிறார். எனக்கு முந்திய அண்ணன்கள் மூவரும் பெரிதாகப் படிக்கவில்லை. நான் கொஞ்சம் படிக்கிறவனாக இருந்ததால் நானும் செல்லமாகவும் சுதந்திரமாகவும் வளர்ந்தேன். அப்பா யாரையுமே கண்டிக்கமாட்டார். கொஞ்சம் கண்டித்து வளர்த்திருந்தால் படிப்பில் நல்ல உயரங் களுக்குப் போயிருப்பேன். ஆனால் கவிதைப் பக்கம் ஒதுங்கியிருக்கவே மாட்டேன்.
“கலாப்ரியா என்னும் பெயரில் மிகப்பெரும் வாழ்க்கையே இருக்கிறதே. பெயருக்கான சிறப்புக்காரணம் குறித்து கூறுங்கள்.
நிறைய முறை சொன்னதுதான். சுருக்கமாகச் சொன்னால் (சசி)கலா மேல் பிரியம் அதனால் கலாப்ரியாவானேன். சசி என்னுடைய சிறுவயதுத் தோழி. ஒருதலையாக விரும்பினேன். காதலை நேரடியாகச் சொல்லிவிடமுடியாத காலம் அது. சொல்ல நினத்துச் சொல்லாமலேயே விட்டு, முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நீலகண்டத்திலேயே வைத்து எனக்கு நானே விஷமேற்றிக்கொண்டே கழித்தேன். எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும் என்று காலத்தையே கடந்துவிட்டேன். அவளறியாமலே அவள் என் எழுத்துக்களின் காரணியாக இருந்திருக்கிறாள்.
உங்களுக்கு வாசிப்பு பழக்கம் எவ்வாறு உருவானது? நீங்கள் வாசித்த முதல் நூல் நினைவில் இருக்கிறதா?
சிறுவர் கதைகளில் ஆர்.வி, வாண்டுமாமாவை வாசிக்கிற எட்டு பத்து வயதிலேயே வாசிப்புப் பழக்கம் தொற்றிவிட்டது. உருப்படியான முதல் நூல் என்றால் ஆர்.கே.நாராயணன் எழுதிய சுவாமியும் சினேகிதர்களும் (தமிழ் மொழிபெயர்ப்பு) நூலைச் சொல்லலாம். என் அண்ணன் தி.க.மீனாட்சிசுந்தரம் நல்ல வாசிப்பாளர். அப்பொழுதெல்லாம் திருமணங்களுக்கு நூல்களைப் பரிசளிக்கும் காலம். என் பெரிய அண்ணன் திருமணத்திற்கு சுமார் 41 நூல்கள் பரிசாக வந்துள்ளன. ஜீவாவின் (நாரண துரைக்கண்ணன்) உயிரோவியம், ராதாமணாளனின் பொற்சிலை, அண்ணாவின் சிறுகதைகள், கலைஞரின் பெரிய இடத்துப் பெண்- குறுநாவல்- மு.வ நூல்கள் என நிறைய நூல்கள் வீட்டில் இருந்தன. படித்திருக்கிறேன் லைப்ரரிக்கும் செல்வேன். அருகில் இருந்த வண்ணதாசன் வீடே ஒரு பெரிய லைப்ரரிதான் .
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/13/kalapriyan1-2025-12-13-15-24-17.jpg)
நீங்கள் எழுதிய முதல் கவிதை? உங்கள் முதல் கவிதை எதில் வெளியானது?
1968-69 களில் எழுத ஆரம்பித்துவிட்டேன். பாரதிதாசன், கலைஞர் பாதிப்பில் தமிழ் வாழ்த்துக் கவிதைகளே அதிகமும் எழுதினேன். 18 வயதில் காதலில் விழுந்ததால் காதலியைப் பாடுகிற காதல் கவிதைகள் எழுதினேன். அண்ணா இறந்த சமயம் இரங்கற்பா ஒன்று எழுதி அஞ்சலி ஊர்வல முடிவில் ஒரு மாணவர் பாடினார். அதுவே கவிதை முதலில் அரங்கேறிய சம்பவம். அச்சில் வந்த முதல் கவிதை என்னுடைய மேட்டு நிலம்’ கசடதபற இலக்கிய இதழில் வந்தது.
உங்கள் முதல் கவிதை புத்தகம் வெளியானபோது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
முதல் கவிதை தொகுப்பு ஷவெள்ளம்’ 1973 ஜனவரியில் வண்ணதாசனால் பதிப்பிக்கப்பட்டது. கைக்கு அடக்கமான குட்டித் தொகுப்பு. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நகுலன், தி.ஜானகிராமன், ஞனக்கூத்தன், சிற்பி, புவியரசு போன்ற பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பாராட்டினார்கள். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
உங்கள் கவிதை உலகத்திற்குள் “சசி”என்னும் பெயருக்கு மட்டும் இனிப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறதே? அதற்கான காரணம்?
ஆரம்ப காலத்தில் அவள் பெயரில் ஒரு நாளைக்கு ஒரு கவிதையாவது எழுதிவிடுவேன். ஷகலா நானூறு’ என்று நானூறு கவிதைகள் எழுதிய நோட்டு தொலைந்துபோயிற்று அப்படி ஒரு பித்து நிலையில் அலைந்தேன். ஆனால் அவற்றில் பலவற்றைப் பொதுத் தளத்தில் கவிதையாக மாற்றியும் உள்ளேன். உதாரணமாக ஷபிரிவுகள்’ என்ற கவிதை. அதை ஒரு காதல் கவிதையாகவே எழுதினேன். பின்னர் அதிலுள்ள காதலையும் காதலியையும் மறைத்துவிட்டேன். அந்தப் பெயர் ஒரு கோபுர நிழல்போல எப்போதாவது வெயில் உச்சிக்கு ஏறுகிறபோது மட்டும் சற்றே மறைந்துகொள்ளும். தமிழ்க்கவிதையில் காட்சிகளைச் சித்திரமாகத் தீட்டிக்காட்டும் திறன் மிகுந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து வேறுபட்டு காட்சிப்படிமங்களில் வசீகரித்து பார்வையாளன் என்பதி லிருந்து விடுவித்துப் பங்கேற்பாளனாகப் பலசமயங்களில் உள்ளிழுத்துக் கொண்டுவிடும் வித்தையை எப்படி புகுத்துகிறீர்கள்?
என் கவிதை மாந்தர்களும் காட்சிகளும் எல்லோருக்கும் அறிமுகமான சமூகமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள், நிறைந்திருப்பவை. என் கவியுலகமும் சாதாரணர்களின் உலகம். அவர்கள் ஏதோ கற்பனா உலகத்து மானுடர்கள் அல்ல. சாதாரண நடுத்தர வர்க்க விளிம்புநிலை மனிதர்கள். அதனால் வாசகர்கள் அவர்களை அவற்றைத் தங்களுக்கு மிக நெருக்கமாக உணர்ந்து கொள்கிறார்களாக இருக்கும். ஆனால் நான் அதையெல்லாம் வலிந்து செய்வதில்லை. ஒரு இயல்பான பதிவா கவே செய்கிறேன்
உங்களின் சொந்த வாழ்வோடு, தமிழ் சினிமா எப்படி கிளர்ச்சிகளை, உந்துதலை, பாதிப்பை உருவாக்கியது?
1950, 60, 70 களில் சினிமாதான் ஒரே பொழுதுபோக்கு. நாலணா எட்டணா தரை டிக்கெட்டும் பெஞ்சு டிக்கெட்டும் அப்போதைய சாதாரணர்களின் பட்ஜெட்டுக்குள் இருந்தன. வெள்ளிக்கிழமைதோறும் ஒரு புதுப்படம் ரிலீஸாகிவிடும்.
அதைப் பார்த்துவிட்டு வந்து அதைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அலசுவது என்பது எல்லோருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. பொழுதுபோக்கு என்பது மட்டுமல்ல திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., முரசொலி மாறன் எல்லோரும் சினிமாவைத் தங்கள் கொள்கை களுக்கான தளமாகவும் பயன்படுத்தி வந்தனர். அன்றைய இளைஞர்களான எங்களுக்கு திராவிட இயக்கம் என்பது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.
அதனால் சினிமா எங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததில் ஆச்சரியமில்லை. 1966 இல் எங்கள் 11-வது வட்ட தி.மு.க உட்கிளையாக ஆரம்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் முக்கியப் பொறுப்பாளராக இருந்ததால் பல எம்.ஜி.ஆர். ரசிகர்களுடன் அணுக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அது அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பற்றிய நேரடியான அனுபவத்தை வழங்கியது. பின்னாளில் அவர்களில் பலர் என் கவிதை, கட்டுரை மற்றும் நாவல் மனிதர்களாக வந்தார்கள்.
உங்கள் இளமைப்பருவத்து திருநெல்வேலி டவுன் வாழ்க்கைக்கும் இப்போது நீங்கள் இருக்கும் இடைகாலுக்கும் இடையே ஓடிய அரை நூற்றாண்டுகளைப் எப்படி பார்க்கிறீர் கள்?
நான் இடைகால் ஊருக்கு வந்து 47 வருடங்கள் ஆகின்றன. வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்கு தான் கழித்திருக்கிறேன். மதுரையில் ஒரு வருடம், தூத்துக்குடியில் ஒரு வருடம் போக 26 வருடங்களே நெல்லையில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருநெல்வேலி வாழ்க்கை தந்த பரந்துபட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. திருநெல்வேலி டவுண் வாழ்க்கையில், வாழ்க்கை தன் துவக்கத்தில் இருந்தது. இந்த வாழ்க்கை நமக்கு என்ன வைத்திருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருந்தது.
ஆனால் இளங்கன்று பயமறியாது என்பதுபோல அசட்டுத் துணிச்சலுடன் இருந்தேன். இடைகால் வாழ்க்கையில், இரண்டு பேரும் பணி புரிந்ததால் ஒரு பொருளாதாரப் பாதுகாப் போடு புது வாழ்க்கையைத் தொடங்கமுடிந்தது. என்றாலும் முற்றிலும் விவசாயம் சார்ந்த புது ஊர். முற்றிலும் புது மனிதர்கள் மத்தியில் வாழ்க்கை துவங்கியது. நெல்லை வாழ்க்கையின் வீரதீரங்களை சற்றே அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம். அதனைக் காட்டவேண்டிய தேவையும் இல்லை. தியேட்டர்களே கிடையாது அதனால் சினிமாக்களை விட்டு சுத்தமாக விலகின வாழ்க்கை. கிராமத்து அமைதியும் மரியாதையான மனிதர்களும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது. முதல் குழந்தை திடீரென இறந்துபோன அதிர்ச்சி இன்னும் அடக்கி வாசிக்க வைத்தது. நிறையப் புத்தகங்கள் வாங்கவும் படிக்கவும் முடிந்தது. பணி ஓய்விற்குப் பின் நிறைய உரைநடை எழுத, அதிலும் பழைய நினைவுகளை அசைபோட்டு எழுத போதுமான ஓய்வும் அமைதியும் இருந்தது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் நெல்லை வாழ்க்கையின் நினவுகளையே அதிகமும் எழுதியிருக்கிறேன்.
உங்கள் கவிதைகள் எந்தவித பூச்சின்றி அசலான மக்கள் மொழியைப் பெற காரணமாக இருந்தது எதுவென்று உணர்கிறீர்கள்?
ஏற்கெனவே சொன்னதுபோல அடித்தட்டு மக்களுடன் பழகக் கிடைத்த வாய்ப்புதான் முக்கியக் காரணம். கி.ராஜநாராயணன் என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார், எப்பா நீ பேச்சு மொழியில, உரை நடை எழுதணுமப்பா, உரைநடை உனக்கு சொகமாக் கை வருதுப்பா,”. என்று. முதலில் நான் என் கவிதைகளில்தான் பேச்சு மொழியையும் வட்டார வழக்கினையும் கையாண்டேன். பிற்பாடு உரைநடைக்குள் குறிப்பாக நினைவின் தாழ்வாரங்கள் எழுதும்போது வட்டார வழக்கினைக் கொண்டே அதன் மனிதர்களை, மனிதர்களின் வாழ்க்கையைச் சொன்னேன்.
அது இயல்பானதொரு மொழியைக் கொண்டுவந்திருக்கலாம். அதுபோக புதுமைப்பித்தன் கதைகள் தந்த பாதிப்பும் ஒரு காரணம்.
முப்பத்தைந்து வருடத்திற்கு முன் தனியார் வங்கியில் இருந்துகொண்டு “பொருநை” இதழ் எப்படி நடத்தமுடிந்தது?
அது வங்கியே நடத்திய ஹோம் மேகசீன்.
“நினைவின் தாழ்வாரங்கள்” என்ற நூல் கவித்துவமும், சுய எள்ளலும், கேலியும் கலந்து எழுதப்பட்டது. அந்த நூலை எப்படி இவ்வளவு வெளிப்படைத்தன்மையோடு எழுதமுடிந்தது?
காந்தி சொல்லுவார் என் வாழ்க்கையே என் செய்தி’ என்று. நாம் மகாத்மா இல்லையென்றாலும் ஓரளவு எல்லோருக்கும் இது பொருந்தும். என் நினைவுகளை எழுதப் புகுந்தபோது, அதில் நடந்தவற்றை ஏன் ஒளித்துச் சொல்லவேண்டுமென்று தோன்றியது. பொதுவாகவே திருநெல்வேலிக் காரர்கள் வெளிப் படையானவர்கள். ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ளும்போது கூட தங்களிடையே உள்ள ரகசியங்களைக்கூடப் பகிர்ந்துகொள்வார்கள். அதில் அழகான கேலியும் நையாண்டியும் இருக்கும். தஞ்சாவூர்க்காரர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். தஞ்சை ப்ரகாஷ் ஒளிவு மறைவின்றிப் பேசுவார். நான் அவரை சித்தப்பா என்றுதான் அழைப்பேன். நான் காதல் காதல் என்று எழுதிக்கொண்டிருந்தபோது அவர், மகனே உனக்கு பெண்கள் கூடத் தொடர்பு இருக்கா அப்படி வாய்த்ததென்றால் தவிர்க்காதே அதற்குப் பின்னால் இந்தக் காதல் என்றெல்லாம் பிதற்றமாட்டாய்,” என்று சொன்னார். நான் அவர் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. வாய்க்கவில்லை என்பதும் உண்மைதான். நான் காதலைக் கைவிடவில்லை. அப்படி ஒரு வெளிப்படைத்தன்மை இயல்பாகவே வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
காதலின் ஏக்கத்தை, தமிழ்ச் சமூகத்தின் துயரார்ந்த வாழ்வை இவ்வளவு உக்கிரத்தோடு எப்படி உங்களால் சொல்லமுடிகிறது?
உண்மையின் மொழி எப்போதுமே உக்கிரமானதுதான். நான் காதலையும் சரி, வாழ்வையும் சரி அதன் உண்மைத் தன்மையோடு சொன்னேன் அதனால் அது உக்கிரமாக வெளிப்பட்டிருக்கலாம்.
உங்களின் அற்புதமான ஞானபீடம், சுயம்வரம், எட்டயபுரம் போன்ற குறுங்காப்பியங்களுக்குப் பிறகு ஏன் அப்படியான குறுங்காப்பியங்கள் எழுதவில்லை?
எது ஒன்றையும் திரும்பத் திரும்பச் செய்பவன் நல்ல கலைஞனாக இருக்கமுடியாது. தவிரவும் ஒரே மாதிரியாக எழுதுவது வாசகனுக்கும் சரி எழுதுபவனுக்கும் சரி சோர்வைத் தரும்.
கவிதை என்பது மொழி, சமூகம் சார்ந்து இயங்கவேண்டும், அதற்கான பங்களிப்பை வழங்கவேண்டிய பொறுப்பு கவிஞனுக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. கவிதை மொழிக்கும் சமூகத்திற்கும் ஏதாவது சரியான பங்களிப்பைச் செய்யவேண்டும். ஏனெனில் கவிதையின் ஊற்றுக் கண்ணே சமூகம்தான். மொழி என்பது ஒரு சமூகக் கருவி என்பார்கள். மனிதனை மனிதனாக வாழவைப்பதே இந்த இரண்டும்தான். அதனால் இது கவிஞனின் சமூகப் பொறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
உங்களின் கவிதைக்கான பாடுபொருள், கருத்துகளை எதிலிருந்து எடுக்கிறீர்கள்?
ஒரு கவிஞன் கண்டுபிடிப்பதில்லை கவனிக்கி றான் என்பார் ழீன் காக்தே என்ற பிரெஞ்சுக் கவிஞர். அது போல என்னைச் சுற்றி நிகழும் அனைத்திலிருந்தும் நான் கவிதைக்கான கருவை எடுக்கிறேன்.
எச்சில் இலைத் தொட்டிக்குள்ஏறி விழும் தெருநாயின் லாவகம்எனக்கொரு கவிதை தரப் பார்க்கிறதுஎன்பது நான் 1970-களில் எழுதிய ஒரு கவிதை. சமீபமாக ரயில் கடந்து சென்ற பின் தண்டவாளங்களில் மாறி மாறி அமர்ந்த ஒரு சிட்டுக்குருவியைப் பார்த்ததும் எனக்கு ஏன் இப்படி? என்றொரு கேள்வி எழுந்தது. சிட்டுக்குருவி ரயில் போய்விட்டதே என்று வருத்தப்படாதே, இன்னொரு ரயில் வரும் என்று தண்டவாளங்களைச் சமாதானப்படுத்துவதாக என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒரு கவிதை பிறந்தது. ஷஷஇந்தத் தண்டவாளத்தில் கொஞ்ச நேரம்/ அந்தத் தண்டவாளத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்து/ சமாதானப்படுத்துகிறது/ ரயில் கடந்து போன தண்டவாளங்களை/ ஒரு சிட்டுக் குருவி என்று எழுதினேன். இந்தக் கவிதை பரவலான வரவேற்பைப் பெற்றது. அப்படியானால் வாசகர்களும் இப்படி ஒரு காட்சியைப் பார்த்தோ பார்க்காமலோ உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம் சக படைப்பாளி என்ற முறையில் அனைத்து படைப்பாளிகளிடமும், வாசகர்களாக இருந்தால் இப்போதுள்ள
இளைய தலைமுறைகளிடமும் நீங்கள் எல்லோருக்கும் நெருக்கமாகிவிடுகிறீர்களே? அது எப்படி உங்களால் சாத்தியமாகிறது?
நான் வளரும்போது வண்ணதாசனும், வல்லிக்கண்ணனும், நகுலனும் ஞானக்கூத்தனும், பாலகுமாரனும் என்னிடம் என் கவிதைகளிடமும் எவ்வளவு பிரியமாக இருந்தார்கள் என்று எண்ணிப் பார்ப்பேன். அது இல்லாமலும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பிரியமாய் இருப்பதுதானே முறை.
கலாப்ரியா 75 விழா மற்றும் மலர் தயாரிப்பு என அதற்காக விதை போட்டது யார்?
அந்த ஏற்பாடுகள் அனைத்துமே என் மகள் அகிலாண்டபாரதியின் ஏற்பாடுதான். மலருக்கான விதையைக் கோயில்பட்டி மாரீஸ், உதய்சங்கர் போன்றோர்கள் விதைத்தார்கள். என்னிடம் எண்கள் வாங்கி பாரதிதான் எல்லோரிடமும் கட்டுரை கேட்டுக் கடிதம் எழுதி, அலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டுரைகள் வாங்கித் தொகுத்தது எல்லாமே மகள் பாரதிதான்.
சோக பாவம் அதிகமாக இலக்கியத்தில் சொல்லப் படுகிறது என்று நினைக்கிறீர்களா? எதற்காக இலக்கியம் அதனுடன் இணைந்து செயல்படுகிறது?
ஒன்பதுவிதமான பாவங்களும் இலக்கியத்தில் சொல்லப்படுவதுண்டுதான். ஆனால் சோகம் என்பது ஆதி காலம்தொட்டே இனம்புரியாத இலக்கிய உணர்வாய்த் தொடர்வதென்னவோ உண்மைதான். தாகூரின் அனைத்துக் கவிதைகளிலும் சோகபாவம் உள்ளாடும். சோகங்களை அனுபவித்த மனிதனால்தான் அடுத்தவரின் வலிகளை உணர முடியும். கை ரேகைகள்போல சோகம் வித விதமானது. மகிழ்ச்சியின் பாவம் ஒன்றே ஒன்றுதான். மகிழ்ச்சி என்பது சோகம் போல அதிர்வலை அல்ல ஒரு அழுத்தமான நேர்கோடு. சோகத்தில் ஆறுதல் கூறும் போதுதான் உறவுகள் மேம்படுகின்றன. அதைத்தானே இலக்கியமும் செய்ய வேண்டும்.
புகைப்படங்கள், பழைய சினிமாப் பாடல்கள், மற்றும் சினிமா டிக்கெட்டுகள் உட்பட அந்தக் காலத்தை அப்படியே சேகரித்தவர் நீங்கள். சேகரித்து வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை உங்களுள் விதைத்து யார?
என் அப்பாவாகத்தான் இருக்கவேண்டும்.
அவர் பெரிய செலவாளியாக இருந்தவர். ஆனால் ஒரு பைசா செலவைக்கூட எழுதி வைத்திருக்கிறார்.
நாள்வாரியாக தான் புகைத்த சிகரெட்டுக்கான கணக்கை ஒரு பேரேட்டில் தனிப் பக்கம் ஒதுக்கி எழுதிவைத்து அந்தப் பேரேடுகளை வருடவாரியாகச் சேகரித்து வைத்திருக்கிறார். இன்றுகூட என்னிடம் அந்தப் பேரேடு ஒன்று உள்ளது.
அதுபோக டைம் காப்ஸ்யூல் மாதிரி ஃபோட்டு ஃப்ரேமுக்குள் என்றைக்கு ஃப்ரேம் போட்டாரோ (அவரே ஃபோட்டோக்களுக்கு ஃப்ரேம் போட்டுவிடுவார்) அன்றுள்ள செய்தித்தாளின் கட்டிங் ஒன்றை வைப்பார். அவரைப் போலவே நானும் பழையவற்றை சேகரித்துப் பாதுகாக்கிறேன். ஆனால் எனக்குப் பின்னால் இதை யார் பாதுகாக்கப் போகிறார்கள் என்று தெரிய வில்லை.
எழுத்திற்காக எதிர்காலத்தில் நீங்கள் செய்யப்போகும் பெரும் பணி பற்றி சொல்லுங்கள்?
அப்படி ஒன்றும் பெரிய திட்டமில்லை. தோன்றுகிறபோது செய்துகொள்ள வேண்டியதுதான். திருநெல்வேலி வட்டார வழக்குச் சொல் அகராதி ஒன்று தயாரிக்க நண்பர்களுடன் ஒரு முயற்சி மேற்கொண்டோம். அதை முடிக்க முயற்சி செய்யவேண்டும்.
இலக்கியத்திற்குள் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகள் கழித்து உங்களால் எழுதப்பட்ட முதல் நாவல் ‘வேனல்’. கொட்டகை வீட்டின் மூன்று தலைமுறையினர் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் எப்படி இந்நாவல் மூலம் உங்களால் பேசமுடிந்தது?.
நினைவின் தாழ்வாரங்கள், உருள் பெருந்தேர், ஓடும்நதி, காற்றின் பாடல் என்று நினைவும் புனைவும் கலந்து வாழ்க்கைச் சித்திரங்களை எழுதினேன். அவற்றில் நிறையக் கதாபாத்திரங்கள் தனித்தனியாக வந்துபோயினர். சில நண்பர்கள் உரிமையுடன் சொன்னார்கள் ஒரு நாவலை நீங்கள் இப்படிப் பிரித்துப் பிரித்து எழுதவேண்டாமே என்று. அப்போதுதான் ஒரு நாவல் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. சில எழுதியிராத கதாபாத்திரங்கள் நினைவில்வந்து ஆக்கிரமித் தார்கள். அதில் இருவர் சாந்தாவும் தெய்வுவும்.
அவர்களைச் சுற்றி ஒரு மூன்று தலைமுறைக் கதையை எழுத ஆரம்பித்தேன். நூறு பக்கம் வரை வந்தது. மனைவியிடம் கொடுத்துப் படிக்கச்சொல்லிக் கேட்டேன். நினைவின் தாழ்வாரங்கள் மாதிரி இருக்கு என்றார்கள். அய்யய்யோ அப்படி வரக் கூடாதே என்று அத்தனையையும் அழித்துவிட்டு வேறு எழுத ஆரம்பித்தேன். எழுத எழுத அது தன்னையே எழுதிக்கொண்டது.“வேனல் நாவலில் அந்தக் காலகட்டத்துக்குரிய சினிமா, அரசியல் சார்ந்த விஷயங்கள் மற்றும் திருநெல்வேலி வாழ்க்கையையும், வட்டாரப் பேச்சுக்களையும், சொலவடை களையும் வாசகர்களுக்கு ரசனைகளையும் வாழ்க்கை முறையையும் இயல்பாக சொல்வதற்கு எப்படி தங்களால் நாவலில் சாத்தியமானது?அந்த ஊரில்தான் நான் வாழ்ந்தேன். அந்தச் சூழலில்தான் வளர்ந்தேன். அந்த ஊரின் ஒவ்வொரு தெருவும் அதனதன் மனிதர்களுடன் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். 1967 தேர்தலின் போது ஒவ்வொரு சந்து பொந்துகளுக்குள்ளும் சென்று வாக்குச் சேகரித்தபோது பல குணாதிசயங் களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எல்லோரிடமும் பழகிப்பெற்ற அனுபவங்களை எல்லாம் நாவலுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். ஆற்றங்கரை சினிமாக் கொட்டகை என்று மக்கள் திரள் கூடும் இடங் களிலெல்லாம் பேச்சுக்களைக் கவனிப்பேன். அம்மாவும் மனைவியும் சொல்லுகிற சொலவடைகளை அடிக்கடிக் கேட்டேன். பேச்சு வழக்கில் எழுதவேண்டுமென்று கி.ரா. மாமா மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்படியே ஜீவனுள்ள உரையாடல்கள் அமைந்துவிட்டன.
வண்ணதாசன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா உங்கள் இலக்கிய நால்வர் நட்பு குறித்து கூறுங்கள்?
வண்ணதாசன் வீட்டிற்கு வண்ணநிலவனும் விக்கிரமாதித்யன் என்கிற நம்பியும் வருகிறபோதெல்லாம் என்னைக் கூப்பிட்டுவிடுவார். மூவரும் படித்த, படிக்கவேண்டிய இலக்கியப் படைப்புகள், சினிமா பற்றிப் பேசிக்கொண்டிருப் போம். என் வீடு வண்ணதாசன் வீட்டிலிருந்து ஏழு வீடுகள் தள்ளித்தான் இருந்தது. வண்ணநிலவன் என்னைத் தேடியும் வருவார். அதிகாலையில் வருவார். கையோடு கடல்புரத்தில் நாவலின் புதிய அத்தியாயங்களை எழுதி எடுத்து விடுவார். பிரமாதமாக எழுதிக்கொண்டிருந்தார். படிக்கப் படிக்க ஆச்சரியமாய் இருக்கும். அடுத்த அத்தியாயம் எப்பொழுது எழுதிக் கொண்டு வருவார் என்றிருக்கும். என்னுடையை கவிதை நோட்டுக்களைப் படித்துக் கவிதைகளைக் கொண்டாடுவார். அவர் மூன்று மைல் தொலைவில் பாளையங்கோட்டையில்தான் இருந்தார் என்றாலும் அடிக்கடி கடிதம் எழுதுவார். நம்பி பல ஊர்களுக்கும் செல்கிறவர், பலரையும் சந்திக்கிறவர்.
அங்கங்கே என் கவிதைகளைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று மகிழ்ச்சியாகச் சொல்லுவார். எங்களுக்குள் நல்ல உறவு நிலவியது. வெறும் பாராட்டுக்களைப் பேசிக்கொண்டிராமல் ஒருவருக்கொருவர் அவரவர் படைப்புகள் பற்றி ஆரோக்கியமான விமர்சனங்களைப் பரிமாறிக் கொள்வோம். அது ஒரு அழகிய நிலாக்காலமாக இருந்தது.
உங்கள் படைப்புகளில் உங்களுக்கு பிடித்தமான படைப்பு எது?
ஆயிரம் கவிதைகளாவது எழுதியிருப்பேன். அதில் பிடித்தமானது எதுவென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. எட்டயபுரம் குறுங்காவியம் எனக்கு நிறைவளித்த ஒன்று. அதுபோல் நாவலில் பெயரிடப்படாத படம் போதுமான கவனம் பெறவில்லையோ என்ற ஆதங்கம் உண்டு. உரைநடைகளில் "ஓடும் நதி', "காற்றின் பாடல்' இரண்டும் நன்றாக எழுதியிருப்பதாக பின்னர் வாசிக்கையில் தோன்றுகிறது. இருந்தாலும் என் சிறந்த கவிதை இனிமேல்தான் எழுதப்பட வேண்டும், என்று ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவா குறிப்பிடுவார். அதுதான் சரியான பார்வை என்று நினைக்கிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/kalapriyan-2025-12-13-15-24-02.jpg)